உபாகமம் 11:1-32
11 பின்பு அவர், “அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் அன்பு காட்ட வேண்டும்.+ எப்போதும் அவருடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். அவருடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
2 இன்று நான் உங்கள் பிள்ளைகளிடம் பேசவில்லை, உங்களிடம்தான் பேசுகிறேன். ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைத்தான் கண்டித்துத் திருத்தினார்.+ அவருடைய மகத்துவத்தையும்+ கைபலத்தையும்+ மகா வல்லமையையும் உங்கள் பிள்ளைகள் பார்க்கவில்லை, அதைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது.
3 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும் அவனுடைய தேசத்துக்கும் எதிராக அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும்+ அவர்கள் பார்க்கவில்லை.
4 உங்களைத் துரத்திக்கொண்டு வந்த எகிப்தின் படைகளையும் பார்வோனின் குதிரைகளையும் போர் ரதங்களையும் யெகோவா செங்கடலில் மூழ்கடித்து, ஒரேயடியாக அழித்துப்போட்டதை+ அவர்கள் பார்க்கவில்லை.
5 நீங்கள் இந்த இடத்துக்கு வந்து சேரும்வரை அவர் உங்களை எப்படியெல்லாம் வனாந்தரத்தில் வழிநடத்தினார் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லை.
6 ரூபனின் பேரன்களும் எலியாபின் மகன்களுமாகிய தாத்தானுக்கும் அபிராமுக்கும் அவர் செய்ததையும் அவர்கள் பார்க்கவில்லை. இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் பூமி பிளந்து அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் கூடாரங்களும் அவர்களோடு இருந்த எல்லா உயிர்களும் புதைந்துபோனதை+ அவர்கள் பார்க்கவில்லை.
7 யெகோவா செய்த எல்லா அற்புதங்களையும் கண்ணால் பார்த்தவர்கள் நீங்கள்தானே!
8 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலம் அடைந்து, யோர்தானைக் கடந்துபோய், அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.
9 அதோடு, உங்கள் முன்னோர்களுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த அந்தத் தேசத்தில்,+ அதாவது பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்,+ நீடூழி வாழ்வீர்கள்.+
10 நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசம், நீங்கள் விட்டுவந்த எகிப்து தேசத்தைப் போல இருக்காது. எகிப்தில் நீங்கள் விதை விதைத்து, காய்கறித் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போல உங்கள் வயல்களுக்குக் கஷ்டப்பட்டு* தண்ணீர் பாய்ச்சி வந்தீர்கள்.
11 ஆனால், நீங்கள் இப்போது சொந்தமாக்கப்போகிற தேசம் வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்.+ அது மலைகளும் சமவெளிகளும் நிறைந்த தேசம்.+
12 உங்கள் கடவுளாகிய யெகோவா எப்போதும் கவனித்துக்கொள்கிற தேசம். அதை உங்கள் கடவுளாகிய யெகோவா வருஷம் முழுக்க கண்ணுக்குக் கண்ணாகக் காத்துவருகிறார்.
13 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளுக்கு நீங்கள் அப்படியே கீழ்ப்படிந்து நடந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவருக்குச் சேவை செய்துவந்தால்,+
14 உங்கள் தேசத்தில் வசந்த காலத்திலும் சரி, இலையுதிர் காலத்திலும் சரி, தவறாமல் பருவ மழை பெய்யும்படி அவர் செய்வார்.* அதனால், உங்களுக்குத் தானியமும் புதிய திராட்சமதுவும் எண்ணெயும் ஏராளமாகக் கிடைக்கும்.+
15 உங்கள் கால்நடைகள் மேய்வதற்கு அவர் புல்வெளிகளைத் தருவார். நீங்களும் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+
16 மற்ற தெய்வங்களை வணங்க வேண்டுமென்ற தவறான ஆசை உங்கள் இதயத்தில் வந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அந்தத் தவறான வழியில் போகாதபடி கவனமாக இருங்கள்.+
17 அப்படிப் போனால், யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும். மழை பெய்யாதபடி அவர் வானத்தை அடைத்துவிடுவார்,+ நிலமும் விளைச்சல் தராது. யெகோவா கொடுக்கிற நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.+
18 இந்த வார்த்தைகளை உங்களுடைய இதயத்திலும் மனதிலும் நீங்கள் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உங்கள் கையில் ஒரு நினைப்பூட்டுதல் போலவும் நெற்றியில் ஒரு அடையாளம் போலவும் கட்டிக்கொள்ள வேண்டும்.+
19 அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.+
20 நீங்கள் அவற்றை உங்கள் வீட்டு வாசலின் நிலைக்கால்களிலும் நகரவாசல்களிலும் எழுதிவைக்க வேண்டும்.
21 அப்போது, யெகோவா உங்கள் முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தில்+ நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நீடூழி வாழ்வீர்கள்.+ இந்தப் பூமிக்கு மேலே வானம் இருக்கும்வரை உங்கள் வாழ்க்கையும் இருக்கும்.
22 நான் கொடுக்கிற இந்தக் கட்டளைகளை நீங்கள் அப்படியே கடைப்பிடித்தால், அதாவது உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி+ அவருடைய வழிகளில் நடந்து அவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டால்,+
23 இந்த ஜனங்களையெல்லாம் யெகோவா உங்கள் முன்னாலிருந்து துரத்தியடிப்பார்.+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களை நீங்கள் கைப்பற்றுவீர்கள்.+
24 உங்கள் காலடி படுகிற இடமெல்லாம் உங்களுக்குச் சொந்தமாகும்.+ வனாந்தரத்திலிருந்து லீபனோன் வரையிலும், யூப்ரடிஸ்* ஆறு வரையிலும், மேற்குக் கடல்* வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லை இருக்கும்.+
25 யாருமே உங்களை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, நீங்கள் கடந்துபோகிற தேசங்களிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உங்களை நினைத்துப் பயமும் பீதியும் அடையும்படி செய்வார்.+
26 இன்று நான் உங்கள் முன்னால் ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+
27 இன்று நான் சொல்கிறபடி உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.+
28 ஆனால் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல், நான் இன்று சொல்கிற வழியைவிட்டு விலகி முன்பின் தெரியாத தெய்வங்களைக் கும்பிட்டால், உங்களுக்குச் சாபம் வரும்.+
29 நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, கெரிசீம் மலை அடிவாரத்தில் நிற்கிறவர்களைப் பார்த்து ஆசீர்வாதத்தையும் ஏபால் மலை அடிவாரத்தில் நிற்கிறவர்களைப் பார்த்து சாபத்தையும் நீ அறிவிக்க* வேண்டும்.+
30 அந்த மலைகள் யோர்தானுக்கு மேற்கே, அரபாவில் வாழும் கானானியர்களின் தேசத்தில், கில்காலுக்கு எதிரிலுள்ள மோரேயின் பெரிய மரங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்றன.+
31 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கப்போகிறீர்கள்.+ அப்படி அதைச் சொந்தமாக்கிக்கொண்டு அங்கே குடியிருக்கும்போது,
32 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற எல்லா விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்”+ என்றார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “கால்களால்.” இங்கே, கால்களால் நீர்விசைச் சக்கரத்தை இயக்குவதையோ வாய்க்கால்களை அமைப்பதையோ குறிக்கிறது.
^ நே.மொ., “நான் செய்வேன்.” இந்த வசனத்திலும் அடுத்த வசனத்திலும் “அவர்” என்பது கடவுளைக் குறிக்கிறது.
^ அதாவது, “பெருங்கடல்; மத்தியதரைக் கடல்.”
^ அதாவது, “ஐப்பிராத்து.”
^ வே.வா., “கொடுக்க.”