எசேக்கியேல் 26:1-21
26 பதினோராம் வருஷம், முதலாம் நாளில் யெகோவா என்னிடம் இப்படிச் சொன்னார்:
2 “மனிதகுமாரனே, எருசலேம் அழிந்தபோது தீரு ஏளனமாக,+ ‘ஜனங்களின் நுழைவாசல் இடிக்கப்பட்டிருக்கிறது!+ இனி எல்லாமே எனக்கு வந்து சேரும். அவள் பாழாகிவிட்டதால் நான் பணக்காரியாக ஆகிவிடுவேன்’ என்று சொன்னாள்.
3 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீரு நகரமே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன். திரண்டு வருகிற கடல் அலைகளைப் போல உனக்கு எதிராகப் பல தேசங்களைத் திரண்டு வர வைப்பேன்.
4 அவர்கள் உன்னுடைய மதில்களை உடைத்துப்போடுவார்கள். உன் கோபுரங்களை இடித்துப்போடுவார்கள்.+ நான் உன்னுடைய மண்ணையெல்லாம் சுரண்டி எடுத்துவிடுவேன். எதுவுமே இல்லாத வெறுமையான பாறையாக உன்னை ஆக்கிவிடுவேன்.
5 கடலின் நடுவில் வெறும் மீன்வலைகளைக் காய வைக்கும் இடமாக நீ ஆவாய்.’+
‘இதை நானே சொல்கிறேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘மற்ற தேசங்கள் உன்னைச் சூறையாடுவார்கள்.
6 உன்னுடைய சிற்றூர்களில் வாழ்கிறவர்கள் வாளால் வெட்டிக் கொல்லப்படுவார்கள். அப்போது, நான் யெகோவா என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.’
7 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் தீருவுக்கு எதிராக பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை வடக்கிலிருந்து வர வைப்பேன்.+ ராஜாதி ராஜாவாகிய+ அவன் குதிரைகளோடும்+ குதிரைவீரர்களோடும் ரதங்களோடும்+ ஏராளமான போர்வீரர்களோடும் வருவான்.
8 உன்னுடைய சிற்றூர்களில் இருக்கிறவர்களை அவன் வாளால் வெட்டிப்போடுவான். உனக்கு எதிராக முற்றுகைச் சுவரை எழுப்பி, உன்னைச் சுற்றிலும் மண்மேடுகளை அமைப்பான். உனக்கு எதிராகக் கேடயங்களைச் சுவர்போல் நிறுத்துவான்.
9 இயந்திரத்தால் உன்னுடைய மதில்களை இடித்துச் சுக்குநூறாக்குவான். கடப்பாரைகளால் உன்னுடைய கோபுரங்களை உடைத்துப்போடுவான்.
10 அவன் ஏராளமான குதிரைகளோடு வந்து, உன்னைப் புழுதியால் மூடுவான். உன்னுடைய நகரவாசல்களுக்குள் நுழையும்போது அவனுடைய குதிரைப்படையும் ரதங்களின் சக்கரங்களும் எழுப்புகிற சத்தத்தில் உன் மதில்களே அதிரும். மதில்கள் இடிந்து கிடக்கிற நகரத்துக்குள் பாய்ந்து வருகிற ஆட்களைப் போல அவன் வருவான்.
11 அவனுடைய குதிரைகளின் குளம்புகள் உன்னுடைய எல்லா வீதிகளையும் மிதிக்கும்.+ அவன் உன்னுடைய ஜனங்களை வாளால் கொன்றுபோடுவான். உன்னுடைய மாபெரும் தூண்களைத் தரைமட்டமாக்குவான்.
12 அவனுடைய வீரர்கள் உன்னுடைய சொத்துகளைக் கொள்ளையடிப்பார்கள், உன்னுடைய சரக்குகளைச் சூறையாடுவார்கள்,+ உன்னுடைய சுவர்களையும் அருமையான வீடுகளையும் இடித்துப்போடுவார்கள். பின்பு, உன்னுடைய கற்களையும் மரங்களையும் மண்ணையும் கடலில் போட்டுவிடுவார்கள்.’
13 ‘நான் உன்னுடைய பாடல்களின் சத்தத்துக்கு முடிவுகட்டுவேன். இனி உன்னுடைய யாழின் இசை கேட்காது.+
14 நீ எதுவுமே இல்லாத வெறுமையான பாறையாகவும், மீன்வலைகளைக் காய வைக்கும் இடமாகவும் ஆவாய்.+ நீ மறுபடியும் கட்டப்படவே மாட்டாய். யெகோவாவாகிய நானே இதைச் சொல்லியிருக்கிறேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
15 தீருவிடம் உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ வீழ்ச்சியடைகிற சத்தத்தையும், உன்னுடைய ஜனங்கள் வாளால் வெட்டப்படுகிற சத்தத்தையும், உயிர்போகும் நிலையில் இருக்கிறவர்கள் முனகுகிற சத்தத்தையும் கேட்கும்போது தீவுகள் நடுநடுங்காதா?+
16 கடலின் தலைவர்கள் எல்லாரும் குலைநடுங்கிப்போவார்கள். தங்களுடைய சிம்மாசனத்தைவிட்டு இறங்கி, தங்களுடைய அங்கிகளையும் தையல்* வேலைப்பாடு செய்த உடைகளையும் கழற்றிவிடுவார்கள். நடுநடுங்கிக்கொண்டே தரையில் உட்கார்ந்து, அதிர்ச்சியோடு உன்னைப் பார்ப்பார்கள்.+
17 உனக்காக இந்தப் புலம்பல் பாட்டைப் பாடுவார்கள்:+
“கடல் கடந்து வந்தவர்கள் குடியேறிய நகரமே, புகழ்பெற்ற நகரமே, இப்படி அழிந்துபோனாயே!+நீயும் உன் ஜனங்களும் கடலில் செல்வாக்கோடு* இருந்தீர்களே.+உலகமே உங்களைப் பார்த்து கதிகலங்கியதே.
18 நீ வீழ்ச்சி அடையும் நாளில் தீவுகள் நடுநடுங்கும்!நீ அழியும்போது கடலின் தீவுகள் கலங்கும்!”’+
19 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘குடியிருக்கப்படாத நகரங்களைப் போல நான் உன்னைப் பாழாக்கி, பொங்கியெழும் தண்ணீரிலும் பெருவெள்ளத்திலும் மூழ்கடிப்பேன்.+
20 எல்லாரையும் போல உன்னையும் சவக்குழியில் இறக்குவேன். காலம்காலமாகவே எல்லாரும் போய்ச் சேருகிற கல்லறைக்கு உன்னை அனுப்புவேன். பல காலமாகப் பாழாய்க் கிடக்கிற இடங்களைப் போலவே உன்னையும் பாழாக்குவேன். சவக்குழியில் இறங்குகிறவர்களோடு சேர்த்து உன்னையும் நிலத்தின் அடிமட்டத்துக்கு இறக்கி அங்கேயே தங்க வைப்பேன்.+ உன்னை மனுஷ நடமாட்டமே இல்லாத இடமாக்குவேன். பின்பு, உயிர்வாழ்கிறவர்களின் உலகத்தை மேன்மைப்படுத்துவேன்.*
21 ‘நான் உன்மேல் பயங்கரமான அழிவைக் கொண்டுவருவேன். நீ இல்லாமல் போவாய்.+ அவர்கள் உன்னைத் தேடுவார்கள், ஆனால் ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டார்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”