எசேக்கியேல் 33:1-33

33  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, உன்னுடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்:+‘ஒரு தேசத்தைத் தாக்க நான் எதிரிகளை அனுப்புவதாக வைத்துக்கொள்ளலாம்.+ அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுக்காக ஒரு காவல்காரனை நியமிக்கலாம்.  அவன் எதிரிகள் வருவதைப் பார்த்ததும், ஊதுகொம்பை ஊதி, ஜனங்களை எச்சரிக்கலாம்.+  ஆனால், ஒருவன் அந்த ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டும் எச்சரிப்பை அசட்டை செய்தால்+ எதிரிகள் வந்து அவனைக் கொன்றுபோடுவார்கள். அப்போது, அவனுடைய சாவுக்கு* அவன்தான் காரணமாக இருப்பான்.+  அவன் ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டும் எச்சரிப்பை அசட்டை செய்ததால் அவனுடைய சாவுக்கு அவன்தான் காரணமாக இருப்பான். அவன் எச்சரிப்பைக் கேட்டு நடந்திருந்தால் தன்னுடைய உயிரைக் காப்பாற்றியிருப்பான்.  ஆனால், காவல்காரன் எதிரிகள் வருவதைப் பார்த்தும் ஊதுகொம்பை ஊதி ஜனங்களை எச்சரிக்காமல் இருக்கலாம்.+ அப்போது, எதிரிகள் வந்து யாரையாவது கொன்றுபோட்டால், கொல்லப்பட்டவன் தன்னுடைய குற்றத்துக்காகச் செத்தாலும், அவனுடைய சாவுக்கு நான் காவல்காரனைத்தான் பொறுப்பாளி ஆக்குவேன்.’+  மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன். என்னிடமிருந்து எச்சரிப்பு செய்தியைக் கேட்டதும் நீ அதை அவர்களிடம் சொல்ல வேண்டும்.+  பொல்லாதவன் ஒருவன் கண்டிப்பாகச் சாவான்+ என்று நான் சொல்லும்போது, கெட்ட வழியைவிட்டு அவன் திருந்துவதற்காக நீ அவனை எச்சரிக்க வேண்டும். நீ அவனை எச்சரிக்காவிட்டால், அவன் செய்த குற்றத்துக்காக அவன் செத்தாலும்+ அவனுடைய சாவுக்கு உன்னைத்தான் பொறுப்பாளி ஆக்குவேன்.  நீ பொல்லாதவனை எச்சரித்தும், அவன் கெட்ட வழியைவிட்டுத் திருந்தவில்லை என்றால், அவன் செய்த குற்றத்துக்காக அவன் சாவான்.+ ஆனால், உன்னுடைய உயிரை நீ காப்பாற்றிக்கொள்வாய்.+ 10  மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் இப்படிச் சொல்: ‘“எங்கள் குற்றங்களும் பாவங்களும் பெரிய பாரமாக இருப்பதால் நாங்கள் வாடி வதங்குகிறோமே,+ நாங்கள் எப்படி உயிர்பிழைக்க முடியும்?”+ என்று நீங்கள் கேட்கிறீர்கள். 11  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* பொல்லாதவன் சாக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதே இல்லை.*+ அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி+ உயிர்வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.+ அதனால் இஸ்ரவேல் ஜனங்களே, திருந்தி வாழுங்கள். கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி வாழுங்கள்.+ நீங்கள் ஏன் சாக வேண்டும்?”’+ 12  மனிதகுமாரனே, உன்னுடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்: ‘நீதிமான் ஒருவன் கெட்டது செய்ய ஆரம்பித்தால் அவன் அதுவரை செய்த நீதியான காரியங்கள் அவனைக் காப்பாற்றாது.+ அதேபோல், பொல்லாதவன் ஒருவன் கெட்ட வழியைவிட்டுத் திருந்தினால், அவன் அதுவரை செய்திருந்த கெட்ட காரியங்களுக்காகச் சாக மாட்டான்.+ நீதிமான் பாவம் செய்தால், அவன் அதுவரை செய்திருந்த நீதியான காரியங்களுக்காகத் தொடர்ந்து உயிர்வாழ மாட்டான்.+ 13  நீதிமான் ஒருவனிடம், “நீ கண்டிப்பாக உயிர்வாழ்வாய்” என்று நான் சொல்லும்போது, அவன் செய்த நீதியான காரியங்கள் அவனைக் காப்பாற்றும் என்று நினைத்து அவன் கெட்டது* செய்ய ஆரம்பித்தால்,+ அவன் செய்த எந்த நீதியான காரியத்தையும் நான் நினைத்துப் பார்க்க மாட்டேன். அவனுடைய குற்றத்துக்காக அவன் செத்துப்போவான்.+ 14  பொல்லாதவன் ஒருவனிடம், “நீ கண்டிப்பாகச் சாவாய்” என்று நான் சொல்லும்போது, அவன் பாவம் செய்வதை விட்டுவிட்டு நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பிக்கலாம்.+ 15  அடமானமாக வாங்கியதையும் கொள்ளையடித்ததையும் திருப்பிக் கொடுக்கலாம்.+ கெட்ட காரியம் எதையும் செய்யாமல், வாழ்வளிக்கிற சட்டதிட்டங்களின்படி நடக்கலாம். அப்போது, அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.+ அவன் சாக மாட்டான். 16  முன்பு செய்த எந்தப் பாவத்துக்காகவும் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.+ நியாயமாகவும் நீதியாகவும் நடப்பதால் அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.’+ 17  ஆனால் உன்னுடைய ஜனங்கள், ‘யெகோவா செய்வது அநியாயம்’ என்று சொல்கிறார்கள். உண்மையில், அவர்கள் செய்வதுதான் அநியாயம். 18  நீதிமான் ஒருவன் நீதியான வழியை விட்டுவிட்டு கெட்டது செய்தால் அவன் சாக வேண்டும்.+ 19  ஆனால் பொல்லாதவன் ஒருவன் கெட்டது செய்வதை விட்டுவிட்டு நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பித்தால், அவன் தொடர்ந்து உயிர்வாழ்வான்.+ 20  ஆனால் நீங்கள், ‘யெகோவா செய்வது அநியாயம்’+ என்று சொல்கிறீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, அவரவருடைய செயலுக்கு ஏற்றபடி அவரவருக்கு நான் தீர்ப்பு கொடுப்பேன்” என்றார். 21  நாங்கள் சிறையிருப்பிலிருந்த 12-ஆம் வருஷம், 10-ஆம் மாதம், ஐந்தாம் நாளில், எருசலேமிலிருந்து ஒருவன் தப்பித்து வந்து,+ “நகரம் அழிந்துவிட்டது!”+ என்று என்னிடம் சொன்னான். 22  அவன் வருவதற்கு முந்தின நாள் சாயங்காலம், நான் யெகோவாவின் சக்தியால் நிரப்பப்பட்டேன்.* காலையில் அவன் என்னிடம் வருவதற்கு முன்பு அவர் என் வாயைத் திறந்திருந்தார். அதனால், நான் மவுனமாக இல்லாமல் வாய் திறந்து பேசினேன்.+ 23  அப்போது யெகோவா என்னிடம், 24  “மனிதகுமாரனே, பாழாக்கப்பட்ட நகரத்தில் இருக்கிற ஜனங்கள்,+ ‘ஆபிரகாம் ஒரே ஆளாக இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்.+ நாம் இத்தனை பேர் இருக்கிறோம். கண்டிப்பாக இந்தத் தேசம் நமக்குத்தான் சொந்தம்’ என்று இஸ்ரவேல் தேசத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். 25  அதனால் நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிடுகிறீர்கள்,+ அருவருப்பான* சிலைகளைக் கும்பிடுகிறீர்கள், கொலைக்குமேல் கொலை செய்கிறீர்கள்.+ இத்தனையும் செய்துவிட்டு தேசத்தைச் சொந்தம் கொண்டாடுகிறீர்களோ? 26  நீங்கள் உங்களுடைய வாளை நம்புகிறீர்கள்,+ அருவருப்பான காரியங்களைச் செய்கிறீர்கள், அடுத்தவருடைய மனைவியோடு முறைகேடான உறவு வைக்கிறீர்கள்.+ இத்தனையும் செய்துவிட்டு தேசத்தைச் சொந்தம் கொண்டாடுகிறீர்களோ?”’+ என்று கேள். 27  நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* பாழாக்கப்பட்ட நகரத்தில் இருக்கிற ஜனங்கள் வாளுக்குப் பலியாவார்கள். வெட்டவெளியில் இருக்கிறவர்களை நான் காட்டு மிருகங்களுக்கு இரையாக்குவேன். கோட்டைகளிலும் குகைகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயினால் சாவார்கள்.+ 28  நான் முழு தேசத்தையும் பாழாக்கி, வெறும் பொட்டல் காடாக்குவேன்.+ அதன் ஆணவம் அடக்கப்படும். இஸ்ரவேலின் மலைகள் மனுஷ நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிப்போகும்.+ 29  ஜனங்கள் செய்த அருவருப்பான காரியங்களுக்காக+ நான் முழு தேசத்தையும் பாழாக்கி, வெறும் பொட்டல் காடாக்கும்போது,+ நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்”’ என்று சொல். 30  மனிதகுமாரனே, உன்னுடைய ஜனங்கள் சுவர்களுக்குப் பக்கத்திலும் வீட்டு வாசல்களிலும் நின்றுகொண்டு உன்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.+ அவர்கள் ஒருவரிடம் ஒருவர், ‘யெகோவா என்ன செய்தி சொல்கிறாரென்று கேட்கலாம், வாருங்கள்’ என்கிறார்கள். 31  அவர்கள் வழக்கம்போல் உன்முன் திரண்டு வந்து உட்காருவார்கள். நீ சொல்லும் வார்த்தைகளைக் கேட்பார்கள், ஆனால் அதன்படி செய்ய மாட்டார்கள்.+ அவர்களுடைய வாய் உன்னைப் புகழ்ந்துதள்ளும், ஆனால் அவர்களுடைய நெஞ்சம் அநியாயமாக லாபம் சம்பாதிக்கத்தான் துடிக்கும். 32  இதோ! நரம்பிசைக் கருவியை இனிமையாக வாசித்து, அழகான குரலில் காதல் பாட்டுப் பாடுகிறவனைப் போல நீ அவர்களுக்குத் தெரிகிறாய். அவர்கள் நீ சொல்வதைக் காதால் கேட்பார்கள், ஆனால் யாரும் அதன்படி செய்ய மாட்டார்கள். 33  நீ சொல்வது கண்டிப்பாக நடக்கும். அது நடக்கும்போது அவர்கள் நடுவில் ஒரு தீர்க்கதரிசி இருந்தார் என்று தெரிந்துகொள்வார்கள்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “இரத்தப்பழிக்கு.”
வே.வா., “கெட்டவனுடைய சாவில் நான் சந்தோஷப்படுவதில்லை.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “அநியாயம்.”
நே.மொ., “யெகோவாவின் கை என்மேல் வந்தது.”
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா