எரேமியா 38:1-28

38  ஜனங்களிடம் எரேமியா சொன்னதையெல்லாம் மாத்தானின் மகன் செப்பத்தியாவும், பஸ்கூரின்+ மகன் கெதலியாவும், செலேமியாவின் மகன் யூகாலும்,+ மல்கீயாவின் மகன் பஸ்கூரும் கேட்டார்கள்.  அதாவது, ஜனங்களிடம் எரேமியா, “யெகோவா சொல்வது இதுதான்: ‘கல்தேயர்களிடம் சரணடைகிறவர்கள் உயிர் பிழைத்துக்கொள்வார்கள்.+ ஆனால், இந்த நகரத்திலேயே இருக்கிற எல்லாரும் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ சாவார்கள்.’  யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த நகரம் நிச்சயமாகவே பாபிலோன் ராஜாவுடைய கையில் கொடுக்கப்படும். அவனுடைய படை இதைக் கைப்பற்றும்’”+ என்று சொன்னதை அந்த நான்கு அதிகாரிகளும் கேட்டார்கள்.  உடனே, அந்த அதிகாரிகள் ராஜாவிடம் போய், “இந்த மனுஷனைத் தயவுசெய்து கொன்றுவிடுங்கள்.+ இந்த நகரத்தில் மீதியிருக்கிற போர்வீரர்களிடமும் ஜனங்களிடமும் இவன் இப்படியெல்லாம் பேசி அவர்களைப் பயந்து நடுங்க வைக்கிறான். ஜனங்கள் நல்லபடியாக வாழ வேண்டுமென்று நினைக்காமல் அவர்கள் அழிந்துபோக வேண்டுமென்று நினைக்கிறான்” என்று சொன்னார்கள்.  அதற்கு ராஜா, “அவன் உங்கள் கையில் இருக்கிறான்! ராஜாவால் உங்களைத் தடுத்து நிறுத்தவா முடியும்?” என்று சொன்னார்.  அதனால் அவர்கள் எரேமியாவைப் பிடித்து, ராஜாவின் மகனாகிய மல்கீயாவின் கிணற்றுக்குள் கயிறுகளினால் இறக்கினார்கள். அந்தக் கிணறு ‘காவலர் முற்றத்தில்’+ இருந்தது. அதில் தண்ணீரே இல்லை, வெறும் சேறுதான் இருந்தது. எரேமியா அதில் மூழ்க ஆரம்பித்தார்.  எரேமியா கிணற்றுக்குள் போடப்பட்ட செய்தியை அரண்மனை அதிகாரியான* எபெத்மெலேக்+ என்ற எத்தியோப்பியர் கேள்விப்பட்டார். ‘பென்யமீன் நுழைவாசலில்’+ ராஜா உட்கார்ந்துகொண்டிருந்ததால்,  எபெத்மெலேக் அங்கே போய் ராஜாவைப் பார்த்து,  “என் எஜமானாகிய ராஜாவே, இந்த ஆட்கள் படுபாவிகள்! எரேமியா தீர்க்கதரிசியைக் கிணற்றில் தள்ளிவிட்டார்கள்! அவர் அங்கே பட்டினியினால் செத்துப்போவாரே! நகரத்தில்கூட உணவு இல்லையே!”+ என்றார். 10  அப்போது ராஜா, “நீ இங்கிருந்து 30 ஆட்களைக் கூட்டிக்கொண்டு போ. எரேமியா தீர்க்கதரிசி செத்துப்போவதற்குள் கிணற்றிலிருந்து அவரை வெளியே தூக்கிவிடு” என்றார். 11  அதனால் எபெத்மெலேக் ஆட்களைக் கூட்டிக்கொண்டு ராஜாவின் அரண்மனைக்குப் போனார். அங்கே பொக்கிஷ அறைக்குக் கீழே போய்,+ அங்கிருந்த கிழிந்த துணிகளையும் பழைய துணிகளையும் எடுத்து வந்து, கிணற்றிலிருந்த எரேமியாவிடம் கயிறுகளினால் இறக்கினார். 12  பின்பு எத்தியோப்பியரான எபெத்மெலேக் எரேமியாவிடம், “கயிறுகள் உங்கள் தோலை அறுக்காதபடி இந்தத் துணிகளைத் தயவுசெய்து உங்களுடைய அக்குள்களில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். எரேமியா அப்படியே செய்தார். 13  கிணற்றிலிருந்த எரேமியாவை அவர்கள் கயிறுகளால் வெளியே தூக்கிவிட்டார்கள். பின்பு, எரேமியா ‘காவலர் முற்றத்தில்’+ வைக்கப்பட்டார். 14  சிதேக்கியா ராஜா எரேமியா தீர்க்கதரிசியிடம் ஆட்களை அனுப்பி, யெகோவாவின் ஆலயத்திலுள்ள மூன்றாவது வாசலுக்கு வரச் சொன்னார். எரேமியா வந்ததும், “நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்க வேண்டும். எதையும் மறைக்காமல் உண்மையைச் சொல்” என்றார். 15  அதற்கு எரேமியா, “நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் என்னைக் கண்டிப்பாகக் கொன்றுவிடுவீர்கள். நான் உங்களுக்கு ஆலோசனை சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்” என்றார். 16  உடனே ராஜா எரேமியாவிடம், “நமக்கு உயிர் கொடுத்திருக்கிற உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உன்னைக் கொல்ல மாட்டேன். உன்னைக் கொல்லத் துடிக்கிறவர்களுடைய கையிலும் உன்னைக் கொடுக்க மாட்டேன்” என்று சொல்லி ரகசியமாகச் சத்தியம் செய்தார். 17  அப்போது எரேமியா சிதேக்கியாவிடம், “பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளிடம் சரணடைந்தால் உயிர்பிழைப்பாய். இந்த நகரமும் தீ வைத்துக் கொளுத்தப்படாது. நீயும் உன் குடும்பத்தாரும் தப்பித்துக்கொள்வீர்கள்.+ 18  ஆனால், அந்த அதிகாரிகளிடம் நீ சரணடையாவிட்டால் இந்த நகரம் கல்தேயர்களிடம் கொடுக்கப்படும். நகரத்தை அவர்கள் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ அவர்களுடைய கையிலிருந்து உன்னால் தப்பிக்கவே முடியாது’”+ என்று சொன்னார். 19  அதற்கு சிதேக்கியா ராஜா, “கல்தேயர்களோடு சேர்ந்துகொண்ட யூதர்களிடம் நான் சிக்கினால் அவர்கள் என்னைக் கொடூரமாக நடத்துவார்களே! அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது” என்றார். 20  ஆனால் எரேமியா அவரிடம், “நீங்கள் அவர்களிடம் சிக்க மாட்டீர்கள். யெகோவா என் மூலமாகச் சொல்வதைத் தயவுசெய்து கேட்டு நடங்கள். அப்போதுதான் உங்களுக்கு ஒன்றும் ஆகாது, நீங்கள் உயிர்பிழைப்பீர்கள். 21  நீங்கள் சரணடைய மறுத்துவிட்டால் என்ன நடக்குமென்று யெகோவா என்னிடம் சொல்லியிருக்கிறார். 22  யூதாவின் ராஜாவுடைய அரண்மனையில் மிஞ்சியிருக்கிற எல்லா பெண்களும் பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளிடம் கொண்டுபோகப்படுவார்கள்.+ அவர்கள் உங்களைப் பார்த்து,‘நீங்கள் நம்பிய ஆட்களே உங்களை ஏமாற்றிவிட்டார்களே! உங்களை வீழ்த்திவிட்டார்களே!+ உங்களுடைய காலைச் சேற்றில் சிக்க வைத்துவிட்டு, அவர்கள் மட்டும் தப்பித்துவிட்டார்களே!’ என்று சொல்வார்கள். 23  உங்கள் மனைவிகளும் மகன்களும் கல்தேயர்களிடம் கொண்டுபோகப்படுவார்கள். அந்தக் கல்தேயர்களுடைய கையிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது. பாபிலோன் ராஜா உங்களைப் பிடித்துக்கொண்டு போவான்.+ நீங்கள் செய்த குற்றத்தினால் இந்த நகரம் தீ வைத்துக் கொளுத்தப்படும்”+ என்று சொன்னார். 24  அப்போது சிதேக்கியா எரேமியாவிடம், “இந்த விஷயங்களை யாரிடமும் சொல்லாதே. சொன்னால், உன் உயிருக்கே ஆபத்து! 25  நான் உன்னிடம் பேசியதைப் பற்றி என்னுடைய அதிகாரிகள் கேள்விப்பட்டால் உடனே உன்னிடம் வந்து, ‘ராஜாவிடம் என்ன சொன்னாய்? தயவுசெய்து சொல். எங்களிடம் எதையும் மறைக்காதே. நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம்.+ ராஜா உன்னிடம் என்ன சொன்னார்?’ என்றெல்லாம் கேட்பார்கள். 26  அப்போது நீ அவர்களிடம், ‘என்னை மறுபடியும் யெகோனத்தானின் வீட்டுக்கு அனுப்பி சாகடிக்க வேண்டாம் என்றுதான் ராஜாவிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்’+ என்று சொல்” என்றார். 27  பிற்பாடு, எல்லா அதிகாரிகளும் எரேமியாவிடம் வந்து விசாரித்தார்கள். எரேமியாவும் ராஜா சொல்லச் சொன்னதை அப்படியே சொன்னார். அந்த அதிகாரிகள் அதற்குமேல் ஒன்றும் பேசாமல் போய்விட்டார்கள். ஏனென்றால், எரேமியாவும் ராஜாவும் பேசியதை அவர்கள் யாரும் கேட்கவில்லை. 28  எருசலேம் கைப்பற்றப்படும் நாள்வரை எரேமியா ‘காவலர் முற்றத்திலேயே’+ இருந்தார். எருசலேம் பிடிக்கப்பட்டபோது அவர் அங்குதான் இருந்தார்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அண்ணகரான.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா