எஸ்தர் 1:1-22

1  இந்தியாமுதல் எத்தியோப்பியாவரை* 127 மாகாணங்களை அகாஸ்வேரு* ராஜா ஆட்சி செய்துவந்தார்.+  அவர் சூசான்*+ கோட்டையிலிருந்து* ஆட்சி செய்த காலத்தில்,  அதாவது அவருடைய ஆட்சியின் மூன்றாம் வருஷத்தில், எல்லா தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு விருந்து வைத்தார். பெர்சிய,+ மேதிய+ படை அதிகாரிகளும் உயர்குடி ஜனங்களும் மாகாணங்களின் தலைவர்களும் அங்கு வந்திருந்தார்கள்.  அவர்களுக்குத் தன்னுடைய பிரமாண்டமான சாம்ராஜ்யத்தின் செல்வச் செழிப்பையும் தன்னுடைய சிறப்பையும் மேன்மையையும் 180 நாட்களாகக் காட்டிய பின்பு அவர் அந்த விருந்து வைத்தார்.  அந்த நாட்களுக்குப் பின்பு, சூசான் கோட்டையிலிருந்த பெரியோர்முதல் சிறியோர்வரை எல்லாருக்கும் தன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் ஏழு நாட்களுக்கு அவர் விருந்து கொடுத்தார்.  அங்கே பளிங்குத் தூண்களில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளி வளையங்களில், நாரிழையினாலும் உயர்தரமான பருத்தியினாலும் நீல நிற நூலினாலும் நெய்யப்பட்ட திரைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவை உயர்தரமான நூலிலும் ஊதா நிற கம்பளி நூலிலும் செய்யப்பட்ட நாடாக்களால் கட்டப்பட்டிருந்தன. அதோடு, கருஞ்சிவப்புக் கற்கள், வெள்ளை பளிங்குக்கற்கள், முத்துச்சிப்பிகள், கறுப்பு பளிங்குக்கற்கள் ஆகியவை பதிக்கப்பட்ட தளத்தின் மேல் தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள்* வைக்கப்பட்டிருந்தன.  ராஜாவின் அந்தஸ்துக்கு ஏற்ற முதல்தரமான திராட்சமது ஏராளமாகப் பரிமாறப்பட்டது. அது தங்கக் கிண்ணங்களில் பரிமாறப்பட்டது. அந்தக் கிண்ணங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தன.  பொதுவாக, விருந்துகளில் குறிப்பிட்ட அளவுக்குத் திராட்சமது குடிக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால், இந்தத் தடவை அந்த வழக்கம் பின்பற்றப்படவில்லை. அவரவர் விருப்பப்படி குடிக்கலாம் என்று அரண்மனை அதிகாரிகளிடம் ராஜா கட்டளை கொடுத்திருந்தார்.  வஸ்தி ராணியும்+ அகாஸ்வேரு ராஜாவின் அரச மாளிகையில் பெண்களுக்கு விருந்து வைத்தாள். 10  ஏழாம் நாளில், ராஜா திராட்சமதுவைக் குடித்து குஷியாக இருந்தபோது, தன்னுடைய உதவியாளர்களும் அரண்மனை அதிகாரிகளுமான மெகுமான், பிஸ்தா, அற்போனா,+ பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகிய ஏழு பேரிடம் 11  வஸ்தி ராணியைக் கூட்டிக்கொண்டு வரும்படி சொன்னார். அவள் பேரழகியாக இருந்ததால் ஜனங்களுக்கும் தலைவர்களுக்கும் அவளுடைய அழகைக் காட்டிப் பெருமைப்படுவதற்காக அவளைக் கிரீடம்* சூடி வரச் சொன்னார். 12  அரண்மனை அதிகாரிகள் வஸ்தி ராணியிடம் போய் ராஜாவின் கட்டளையைச் சொன்னபோது, தன்னால் வர முடியாது என்று அவள் பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். அதைக் கேள்விப்பட்டதும் ராஜாவுக்குக் கோபமும் ஆத்திரமும் பற்றிக்கொண்டு வந்தது. 13  அதனால், முன்பு நடந்த வழக்குகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த* நிபுணர்களிடம் அவர் கலந்துபேசினார். (இப்படி, சட்டங்களையும் வழக்குகளையும் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருந்த சட்ட வல்லுனர்கள் எல்லாருக்கும் ராஜாவின் பிரச்சினை தெரியவந்தது. 14  அவர்களில் பெர்சிய, மேதிய தலைவர்களான கர்ஷேனா, சேத்தார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகிய ஏழு பேரும்+ ராஜாவின் அந்தரங்க ஆலோசகர்களாக இருந்தார்கள். அவருடைய சாம்ராஜ்யத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார்கள். அதனால், எப்போது வேண்டுமானாலும் ராஜாவைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி இருந்தது.) 15  ராஜா அவர்களைப் பார்த்து, “அரண்மனை அதிகாரிகளிடம் இந்த அகாஸ்வேரு ராஜா சொல்லி அனுப்பிய கட்டளைக்குக் கீழ்ப்படியாத வஸ்தி ராணியைச் சட்டப்படி என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 16  அப்போது மெமுகான், ராஜாவுக்கும் தலைவர்களுக்கும் முன்னால், “அகாஸ்வேரு ராஜாவுக்கு எதிராக மட்டுமே வஸ்தி ராணி குற்றம் செய்யவில்லை.+ ராஜாவின் மாகாணங்களில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் ஜனங்களுக்கும் எதிராகக்கூட குற்றம் செய்திருக்கிறாள். 17  ராணி செய்தது எல்லா பெண்களுக்கும் தெரியவரும். அப்போது அவர்கள், ‘அகாஸ்வேரு ராஜா கூப்பிட்டபோது வஸ்தி ராணியே போகவில்லை’ என்று சொல்லி, தங்கள் கணவரை மதிக்க மாட்டார்கள். 18  ராணி செய்த குற்றத்தைப் பற்றிக் கேள்விப்படும் பெர்சிய, மேதிய தலைவர்களின் மனைவிகளும் இன்றைக்கே தங்கள் கணவரிடம் அவளைப் போல பேச ஆரம்பித்துவிடுவார்கள். இதனால், குடும்பத்தில் மதிப்பு மரியாதை ரொம்பவே குறைந்துவிடும், எரிச்சல்தான் அதிகமாகும். 19  அகாஸ்வேரு ராஜாவே, உங்களுக்கு நல்லதாகப் பட்டால், வஸ்தி இனி ஒருபோதும் ராஜாவுக்கு முன்னால் வரக் கூடாதென்று ஆணையிடுங்கள். என்றுமே மாற்ற முடியாத பெர்சிய, மேதிய சட்டங்களோடு+ சேர்த்து இதையும் எழுதி வைக்கும்படி கட்டளை கொடுங்கள். அவளைவிட நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்து ராணியாக்குங்கள். 20  ராஜாவின் ஆணையை அவருடைய சாம்ராஜ்யம் முழுவதும் உள்ள ஜனங்கள் கேள்விப்படும்போது, உயர் குடும்பத்துப் பெண்களிலிருந்து சாதாரண குடும்பத்துப் பெண்கள்வரை எல்லாரும் தங்கள் கணவருக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்” என்று சொன்னார். 21  மெமுகான் சொன்ன ஆலோசனை ராஜாவுக்கும் தலைவர்களுக்கும் பிடித்திருந்தது. அதன்படியே ராஜா செய்தார். 22  “குடும்பத்தில் கணவர்தான் எஜமானாக இருக்க வேண்டும், வீட்டில் அவருடைய தாய்மொழிதான் பேசப்பட வேண்டும்” என்று கடிதம் எழுதி எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பினார்.+ அந்தந்த மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களிலும் அந்தந்த ஜனங்களின் மொழிகளிலும் அதை எழுதி அனுப்பினார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “கூஷ்வரை.”
இவர், மகா தரியுவின் மகனான முதலாம் சஷ்டா எனக் கருதப்படுகிறார்.
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையிலிருந்து.”
அதாவது, “திவான்கள்.”
வே.வா., “தலைப்பாகை.”
வே.வா., “ஆழமாகப் புரிந்து வைத்திருந்த.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா