மத்தேயு எழுதியது 25:1-46

25  பின்பு அவர், “பரலோக அரசாங்கம் விளக்குகளை எடுத்துக்கொண்டு+ மணமகனைப்+ பார்க்க போன பத்துக் கன்னிப்பெண்களைப் போல் இருக்கிறது.  அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்கள், ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள்.+  புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளைக் கொண்டுபோனார்கள், ஆனால் எண்ணெயைக் கொண்டுபோகவில்லை.  புத்தியுள்ளவர்களோ தங்கள் விளக்குகளோடு குப்பிகளில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.  மணமகன் வரத் தாமதித்ததால், அவர்கள் எல்லாரும் அசந்து தூங்கிவிட்டார்கள்.  நடுராத்திரியில், ‘இதோ, மணமகன் வருகிறார்! அவரைப் பார்க்கப் புறப்பட்டுப் போங்கள்’ என்ற சத்தம் கேட்டது.  அப்போது, அந்தக் கன்னிப்பெண்கள் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளைத் தயார்படுத்தினார்கள்.+  புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம், ‘எங்களுடைய விளக்குகள் அணையப்போகின்றன, உங்களிடம் இருக்கிற எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள்’ என்று கேட்டார்கள்.  அதற்குப் புத்தியுள்ளவர்கள், ‘எங்களுக்கும் உங்களுக்கும் எண்ணெய் போதாமல் போய்விடலாம். அதனால், விற்கிறவர்களிடம் போய் நீங்களே அதை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள். 10  ஆனால், அவர்கள் அதை வாங்கப் போனபோது மணமகன் வந்துவிட்டார்; தயாராக இருந்த கன்னிப்பெண்கள் அவரோடு திருமண விருந்தில் கலந்துகொள்ள வீட்டுக்குள் போனார்கள்,+ கதவும் மூடப்பட்டது. 11  அதன் பின்பு, மற்ற ஐந்து கன்னிப்பெண்களும் அங்கே வந்து, ‘எஜமானே! எஜமானே! கதவைத் திறங்கள்!’+ என்றார்கள். 12  அதற்கு அவர், ‘நிஜமாகச் சொல்கிறேன், நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார். 13  அதனால், விழிப்புடன் இருங்கள்;+ ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.+ 14  பரலோக அரசாங்கம், தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போகிற ஒருவரைப் போல் இருக்கிறது. அவர் போவதற்கு முன்பு, தன்னுடைய அடிமைகளைக் கூப்பிட்டுத் தன் உடைமைகளை அவர்களிடம் ஒப்படைத்தார்.+ 15  அவனவனுடைய திறமைக்கு ஏற்றபடி,+ ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவனுக்கு இரண்டு தாலந்தும், மற்றொருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார். 16  ஐந்து தாலந்தை வாங்கியவன் உடனே போய், அவற்றை வைத்து வியாபாரம் செய்து, இன்னும் ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். 17  அதேபோல், இரண்டு தாலந்தை வாங்கியவனும் இன்னும் இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். 18  ஒரேவொரு தாலந்தை வாங்கியவனோ புறப்பட்டுப் போய், தன் எஜமான் கொடுத்த பணத்தை குழிதோண்டிப் புதைத்து வைத்தான். 19  ரொம்பக் காலத்துக்குப் பிறகு, அந்த அடிமைகளுடைய எஜமான் திரும்பி வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.+ 20  ஐந்து தாலந்தை வாங்கியவன் அவர் முன்னால் வந்து, இன்னும் ஐந்து தாலந்தைக் காட்டி, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் ஐந்து தாலந்தை ஒப்படைத்தீர்கள்; இதோ பாருங்கள், நான் இன்னும் ஐந்து தாலந்தைச் சம்பாதித்திருக்கிறேன்’+ என்று சொன்னான். 21  அதற்கு அவனுடைய எஜமான், ‘சபாஷ்! உண்மையுள்ள நல்ல அடிமையே, நீ கொஞ்சக் காரியங்களில் உண்மையுள்ளவனாக இருந்தாய்; அதனால், நிறைய காரியங்களைக் கவனித்துக்கொள்ள உன்னை நியமிப்பேன்.+ உன் எஜமானோடு சேர்ந்து நீயும் சந்தோஷப்படு’+ என்று சொன்னார். 22  அடுத்து, இரண்டு தாலந்தை வாங்கியவன் அவர் முன்னால் வந்து, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் இரண்டு தாலந்தை ஒப்படைத்தீர்கள்; இதோ பாருங்கள், நான் இன்னும் இரண்டு தாலந்தைச் சம்பாதித்திருக்கிறேன்’+ என்று சொன்னான். 23  அதற்கு அவனுடைய எஜமான், ‘சபாஷ்! உண்மையுள்ள நல்ல அடிமையே, நீ கொஞ்சக் காரியங்களில் உண்மையுள்ளவனாக இருந்தாய்; அதனால் நிறைய காரியங்களைக் கவனித்துக்கொள்ள உன்னை நியமிப்பேன். உன் எஜமானோடு சேர்ந்து நீயும் சந்தோஷப்படு’ என்று சொன்னார். 24  கடைசியாக, ஒரு தாலந்தை வாங்கியவன் அவர் முன்னால் வந்து, ‘எஜமானே, நீங்கள் கறாரானவர்,* மற்றவர்கள் விதைத்ததை அறுவடை செய்கிறவர், மற்றவர்கள் புடைத்ததைச் சேகரிக்கிறவர் என்றெல்லாம் எனக்குத் தெரியும்.+ 25  அதனால் நான் உங்களுக்குப் பயந்து, நீங்கள் கொடுத்த தாலந்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தேன். இதோ, உங்கள் தாலந்து’ என்று சொன்னான். 26  அதற்கு அவனுடைய எஜமான், ‘பொல்லாத அடிமையே, சோம்பேறியே,* நான் மற்றவர்கள் விதைத்ததை அறுவடை செய்கிறவன் என்றும், மற்றவர்கள் புடைத்ததைச் சேகரிக்கிறவன் என்றும் உனக்குத் தெரிந்திருந்ததுதானே? 27  அப்படியானால், என்னுடைய பணத்தை நீ வட்டிக் கடைக்காரர்களிடமாவது கொடுத்து வைத்திருக்க வேண்டும்; நான் திரும்பி வந்ததும் எனக்குச் சேர வேண்டியதை வட்டியோடு வாங்கியிருப்பேனே’ என்று சொன்னார். 28  பின்பு அவர் தன் வேலைக்காரர்களிடம், ‘அவனிடம் இருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்து வைத்திருப்பவனிடம் கொடுங்கள்.+ 29  இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றிருப்பான்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.+ 30  ஒன்றுக்கும் உதவாத இந்த அடிமையைத் தூக்கி வெளியே இருட்டில் வீசிவிடுங்கள். அங்கே அவன் அழுது அங்கலாய்ப்பான்’ என்று சொன்னார். 31  மனிதகுமாரன்+ தன்னுடைய மகிமையில் எல்லா தேவதூதர்களோடும் வரும்போது,+ தன் மகிமையான சிம்மாசனத்தில் உட்காருவார். 32  எல்லா தேசத்தாரும் அவர் முன்னால் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் ஒரு மேய்ப்பன் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர்களை அவர் பிரிப்பார். 33  செம்மறியாடுகளைத்+ தன் வலது பக்கத்தில் நிறுத்துவார், வெள்ளாடுகளையோ தன் இடது பக்கத்தில் நிறுத்துவார்.+ 34  பின்பு, ராஜா தன் வலது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். 35  ஏனென்றால் நான் பசியாக இருந்தேன், எனக்குச் சாப்பிடக் கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், குடிக்கக் கொடுத்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரித்தீர்கள்;+ 36  உடையில்லாமல் இருந்தேன், எனக்கு உடை கொடுத்தீர்கள்.+ நோயாளியாக இருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள். சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’+ என்று சொன்னார். 37  உடனே, நீதிமான்களாகிய அவர்கள், ‘எஜமானே, நீங்கள் எப்போது பசியாக இருப்பதைப் பார்த்துச் சாப்பிடக் கொடுத்தோம், தாகமாக இருப்பதைப் பார்த்துக் குடிக்கக் கொடுத்தோம்?+ 38  நீங்கள் எப்போது அன்னியராக இருப்பதைப் பார்த்து வரவேற்று உபசரித்தோம், உடையில்லாமல் இருப்பதைப் பார்த்து உடை கொடுத்தோம்? 39  எப்போது உங்களை நோயாளியாகப் பார்த்தோம் அல்லது சிறையில் வந்து பார்த்தோம்?’ என்று கேட்பார்கள். 40  அதற்கு ராஜா, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியவர்களான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்’+ என்று சொல்வார். 41  பின்பு, அவர் தன்னுடைய இடது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு விலகி,+ பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் தயார்படுத்தப்பட்டுள்ள,+ என்றென்றும் அணையாத நெருப்புக்குள் போய் விழுங்கள்.+ 42  ஏனென்றால் நான் பசியாக இருந்தேன், நீங்கள் எனக்குச் சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், குடிக்க எதுவும் தரவில்லை. 43  அன்னியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரிக்கவில்லை; உடையில்லாமல் இருந்தேன், உடை கொடுக்கவில்லை; நோயாளியாகவும் சிறைக்கைதியாகவும் இருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்று சொல்வார். 44  அப்போது அவர்கள், ‘எஜமானே, நீங்கள் பசியாகவோ தாகமாகவோ அன்னியராகவோ உடையில்லாதவராகவோ நோயாளியாகவோ சிறைக்கைதியாகவோ இருப்பதைப் பார்த்து நாங்கள் எப்போது உங்களுக்குப் பணிவிடை செய்யாமல் இருந்தோம்?’ என்று கேட்பார்கள். 45  அதற்கு அவர், ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியவர்களான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ அதை எனக்கே செய்யவில்லை’+ என்று சொல்வார். 46  இவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்,+ ஆனால் நீதிமான்கள் நிரந்தரமான* வாழ்வைப் பெறுவார்கள்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

விவேகமும்: இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை புத்தியோடு நடந்துகொள்வதைக் குறிக்கிறது. அதாவது, ஆழமான புரிந்துகொள்ளுதல், முன்யோசனை, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நடைமுறை ஞானம் ஆகியவற்றோடு நடந்துகொள்வதைக் குறிக்கிறது. இதே கிரேக்க வார்த்தை மத் 7:24; 25:2, 4, 8, 9 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதி 41:33, 39-ல் யோசேப்பைப் பற்றிச் சொல்லும்போது இதே வார்த்தையை செப்டுவஜன்ட் பயன்படுத்தியுள்ளது.

புத்தியுள்ளவர்கள்: வே.வா., “விவேகமுள்ளவர்கள்.”​—மத் 24:45-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் “விவேகமும்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

தங்கள் விளக்குகளைத் தயார்படுத்தினார்கள்: அநேகமாக, விளக்குகள் நன்றாக எரிவதற்காகத் திரிகளை வெட்டிவிடுவது, எண்ணெய் ஊற்றுவது போன்ற வேலைகள் செய்வதைக் குறிக்கிறது.

விழிப்புடன் இருங்கள்: இதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “தூங்காமல் இருப்பது.” ஆனால், நிறைய வசனங்களில், “கவனமாக இருப்பது; ஜாக்கிரதையாக இருப்பது” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்தேயு இந்த வார்த்தையை மத் 24:43; 25:13; 26:38, 40, 41 ஆகிய வசனங்களில் பயன்படுத்தியிருக்கிறார். விழிப்பாக இருப்பதற்கு ‘தயாராக இருப்பது’ அவசியம் என்பதை மத் 24:44-ல் அவர் காட்டியிருக்கிறார்.​—மத் 26:38-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

விழித்திருங்கள்: இயேசு எந்த நாளில் அல்லது நேரத்தில் வருவார் என்பது சீஷர்களுக்குத் தெரியாது. அதனால், அவர்கள் ஆன்மீக ரீதியில் விழித்திருக்க வேண்டும் என்று இயேசு வலியுறுத்தியிருந்தார். (மத் 24:42; 25:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்) அதே அறிவுரையை இயேசு இந்த வசனத்திலும் மறுபடியும் மத் 26:41-லும் சொல்லியிருக்கிறார். மத் 26:41-ல், ஆன்மீக ரீதியில் விழித்திருக்க வேண்டும் என்பதை, தொடர்ந்து ஜெபம் செய்வதோடு சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கிறார். இதேபோன்ற அறிவுரைகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதிலும் இருக்கின்றன; உண்மைக் கிறிஸ்தவர்கள் ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் கவனமாகவும் இருப்பது எவ்வளவு அவசியம் என்பது இதிலிருந்து தெரிகிறது.—1கொ 16:13; கொலோ 4:2; 1தெ 5:6; 1பே 5:8; வெளி 16:15.

விழிப்புடன் இருங்கள்: ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் பத்துக் கன்னிப்பெண்களைப் பற்றிய உவமை சொல்லும் செய்தி.​—மத் 24:42; 26:38-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

தாலந்தும்: கிரேக்க தாலந்து என்பது காசு அல்ல, அது ஒரு எடையாக இருந்தது; அது பணமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஒரு கிரேக்க வெள்ளி தாலந்து 20.4 கிலோ எடையுள்ளதாக இருந்தது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 6,000 திராக்மாவுக்கு அல்லது ரோம தினாரியுவுக்குச் சமமாக இருந்தது. கிட்டத்தட்ட 20 வருஷ வேலைக்காக ஒரு சாதாரண கூலியாளுக்குக் கொடுக்கப்பட்ட கூலியாக இருந்தது.​—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

பணத்தை: நே.மொ., “வெள்ளியை.” அதாவது, “பணமாகப் பயன்படுத்தப்பட்ட வெள்ளியை.”

நீங்கள் கொடுத்த தாலந்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தேன்: பைபிள் காலத்தைச் சேர்ந்த ஊர்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் விவசாயிகளும் நிறைய பொக்கிஷங்களையும் காசுகளையும் கண்டெடுத்திருக்கிறார்கள்; இப்படிப்பட்ட பொருள்களை மண்ணில் புதைத்து வைக்கும் வழக்கம் அன்று இருந்ததற்கு இது அத்தாட்சி அளிக்கிறது.

வட்டிக் கடைக்காரர்களிடமாவது . . . வட்டியோடு: கி.பி. முதல் நூற்றாண்டில், இஸ்ரவேலிலும் சுற்றுப்புற தேசங்களிலும் வட்டிக் கடைக்காரர்கள், அதாவது கடன் கொடுக்கிறவர்கள், பிரபலமானவர்களாக இருந்தார்கள். ஏழைகளாக இருந்த மற்ற யூதர்களுக்குக் கடன் கொடுத்தால் வட்டி வாங்கக் கூடாது என்று திருச்சட்டம் இஸ்ரவேலர்களுக்குச் சொன்னது (யாத் 22:25). ஆனால், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களிடம் அநேகமாக வியாபாரத்துக்காக வட்டி வாங்க அது அனுமதித்தது (உபா 23:20). வட்டிக் கடைக்காரர்களிடம் பணத்தைக் கொடுத்து சேமித்து வைப்பதும் அதற்கு வட்டி வாங்குவதும் இயேசுவின் காலத்தில் சகஜமாக இருந்ததென்று தெரிகிறது.

அழுது அங்கலாய்ப்பார்கள்: நே.மொ., “பற்களை நறநறவென்று கடிப்பார்கள்.” இந்த வார்த்தைகள், மன வேதனை, பரிதவிப்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதைக் குறிக்கின்றன. ஒருவேளை, கண்டபடி பேசுவதையும், வன்முறையில் இறங்குவதையும்கூட குறிக்கலாம்.

அழுது அங்கலாய்ப்பான்: மத் 8:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மனிதகுமாரனுக்கு: வே.வா., “ஒரு மனிதனின் மகனுக்கு.” இந்த வார்த்தை சுவிசேஷப் புத்தகங்களில் கிட்டத்தட்ட 80 தடவை வருகிறது. இயேசு தன்னைப் பற்றிச் சொல்லும்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்; அநேகமாக, தான் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த உண்மையான மனிதர் என்பதை வலியுறுத்தினார். அதோடு, ஆதாமுக்குச் சரிசமமான ஒரு மனிதராக இருந்ததையும், மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இருந்ததையும் வலியுறுத்தினார். (ரோ 5:12, 14, 15) இதே வார்த்தை இயேசுவை மேசியாவாகவும், அதாவது கிறிஸ்துவாகவும்கூட, அடையாளம் காட்டியது.—தானி 7:13, 14; சொல் பட்டியலைப் பாருங்கள்.

தன் வலது பக்கத்தில் . . . தன் இடது பக்கத்தில்: சில சந்தர்ப்பங்களில் வலது பக்கம், இடது பக்கம் ஆகிய இரண்டுமே மதிப்பையும் அதிகாரத்தையும் குறித்தன. (மத் 20:21, 23) ஆனால், எப்போதுமே வலது பக்கம்தான் மிகவும் மதிப்புக்குரிய இடமாக இருந்தது. (சங் 110:1; அப் 7:55, 56; ரோ 8:34) ஆனால், வலது பக்கமும் இடது பக்கமும் நேர்மாறான நிலைகளைக் குறிப்பதை இந்த வசனமும் மத் 25:34, 41 வசனங்களும் காட்டுகின்றன. அதாவது, ராஜாவின் வலது பக்கத்தில் இருப்பது அவரால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் இருப்பதையும், அவருடைய இடது பக்கத்தில் இருப்பது அவரால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் இருப்பதையும் காட்டுகின்றன.

உலகம் உண்டானதுமுதல்: ‘உண்டானது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை எபி 11:11-ல் “கர்ப்பமானாள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இங்கே ‘உலகம் உண்டானது’ என்று சொல்லப்படும்போது, ஆதாம், ஏவாளுடைய பிள்ளைகள் கருவில் உருவானதையும் பிறந்ததையும் குறிப்பதாகத் தெரிகிறது. இயேசு ‘உலகம் உண்டானதை’ ஆபேலோடு சம்பந்தப்படுத்திப் பேசினார். அநேகமாக, மீட்பைப் பெறத் தகுதிபெற்றிருந்த முதல் மனிதர் ஆபேல்தான். அவருடைய பெயர் “உலகம் உண்டானதுமுதல்” வாழ்வின் சுருளில் எழுதப்பட்டிருந்தது.—லூ 11:50, 51; வெளி 17:8.

அரசாங்கத்தை: வே.வா., “ராஜ்யத்தை.” பைபிளில் இந்த வார்த்தை வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது “ஒரு அரசர் ஆட்சி செய்யும் இடத்தை அல்லது நாட்டை,” “அரசதிகாரத்தை,” அல்லது “ஆட்சிப்பகுதியை” குறிக்கிறது. “ஒரு அரசருடைய ஆட்சியின் கீழ் இருப்பதையும்” குறிக்கிறது. இந்த வசனத்தில், கடவுளுடைய ஆட்சியின் கீழ் நன்மைகளை அல்லது ஆசீர்வாதங்களைப் பெறுவதையும், அவருடைய ஆட்சிப்பகுதியில் சந்தோஷமாக வாழ்வதையும் குறிப்பதாகத் தெரிகிறது.

சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்: இதற்கான கிரேக்க வினைச்சொல்லின் அடிப்படை அர்த்தம், (பெரும்பாலும், உறவுமுறையின் காரணமாக) ஒரு வாரிசு தன் உரிமையைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, தகப்பனிடமிருந்து மகன் பரம்பரைச் சொத்தைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. (கலா 4:30) ஆனால் இந்த வசனத்திலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள பெரும்பாலான மற்ற வசனங்களிலும், கடவுளிடமிருந்து எதையோ ஒன்றை ஆசீர்வாதமாகப் பெற்றுக்கொள்வதைப் பொதுப்படையாகக் குறிக்கிறது.—மத் 19:29; 1கொ 6:9, அடிக்குறிப்பு.

உடையில்லாமல் இருந்தேன்: வே.வா., “போதிய உடையில்லாமல் இருந்தேன்.” இதற்கான கிரேக்க வார்த்தை ஜிம்னோஸ். இது, “அரைகுறையாக உடுத்தியிருப்பதை; வெறும் உள்ளாடைகளோடு இருப்பதை” அர்த்தப்படுத்தலாம்.

உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

சகோதரர்களாகிய: ‘சகோதரர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் பன்மை வடிவம், ஆண்களை மட்டுமல்லாமல் பெண்களையும் குறிக்கலாம்.

உண்மையாகவே: கிரேக்கில், ஆமென். இது, ஆமன் என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பு. இதன் அர்த்தம், “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே.” ஒரு விஷயத்தை, வாக்குறுதியை, அல்லது தீர்க்கதரிசனத்தைச் சொல்வதற்கு முன்பு இயேசு அடிக்கடி இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். இப்படி, அவர் சொல்லவந்த விஷயம் முழுக்க முழுக்க உண்மை என்பதையும் நம்பகமானது என்பதையும் வலியுறுத்திக் காட்டினார். “உண்மையாகவே” அல்லது ஆமென் என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தியதுபோல் வேறு யாரும் பயன்படுத்தியதாக வேறெந்தப் புனித நூலும் சொல்வதில்லை. தான் சொல்லவரும் விஷயம் நம்பகமானது என்பதை இன்னும் அதிகமாக வலியுறுத்துவதற்காக இயேசு இந்த வார்த்தையை அடுத்தடுத்து இரண்டு தடவை சொல்லியிருக்கிறார் (ஆமென் ஆமென்); யோவான் சுவிசேஷம் முழுவதிலும் அந்தப் பதிவுகளை நாம் பார்க்கலாம்.—யோவா 1:51.

அழிக்கப்படுவார்கள்: நே.மொ., “வெட்டப்படுவார்கள்.” இதற்கான கிரேக்க வார்த்தை கோலாசிஸ். மரத்திலுள்ள தேவையில்லாத கிளைகளை “வெட்டியெறிவதை” அல்லது “அறுத்துப்போடுவதை” அது குறிக்கிறது. இப்படி ‘நிரந்தரமாக அழிக்கப்படுபவர்களுக்கு’ உயிர்த்தெழுதல் இருக்காது.

மீடியா

தானியங்களைத் தூற்றுவது
தானியங்களைத் தூற்றுவது

ஒரு விவசாயி தூற்றுவாரியைப் பயன்படுத்தி, பதரும் தானியமும் கலந்த கலவையைக் காற்றில் அள்ளி வீசுவார். அப்போது, தானிய மணிகள் தரையில் விழுந்துவிடும், ஆனால் லேசான பதர் காற்றில் பறந்துவிடும். எல்லா தானியத்தையும் முழுமையாகப் பிரித்தெடுக்கும்வரை விவசாயி இப்படிச் செய்துகொண்டே இருப்பார்.