மத்தேயு எழுதியது 6:1-34

6  பின்பு அவர், “மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக+ அவர்கள் முன்னால் நீதியான செயல்களைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், உங்கள் பரலோகத் தகப்பனிடமிருந்து உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது.  அதனால், நீங்கள் தானதர்மம் செய்யும்போது+ வெளிவேஷக்காரர்களைப் போலத் தம்பட்டம் அடிக்காதீர்கள். மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக ஜெபக்கூடங்களிலும் தெருக்களிலும் அவர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள்.+ உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது.  நீங்களோ தானதர்மம் செய்யும்போது, உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குக்கூட தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.  இப்படி, மற்றவர்களுக்குத் தெரியாத விதத்தில் நீங்கள் தானதர்மம் செய்யும்போது, எல்லாவற்றையும்* பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்.+  நீங்கள் ஜெபம் செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போல்+ இருக்கக் கூடாது; ஏனென்றால், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக+ அவர்கள் ஜெபக்கூடங்களிலும் முக்கியமான தெருக்களின் முனைகளிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது.  நீங்களோ ஜெபம் செய்யும்போது உங்கள் உள்ளறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, யாராலும் பார்க்க முடியாத உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்யுங்கள்.+ அப்போது, எல்லாவற்றையும்* பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்.  நீங்கள் ஜெபம் செய்யும்போது உலகத்தாரைப் போலச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்; நிறைய வார்த்தைகளைச் சொல்லி ஜெபம் செய்தால் கடவுள் கேட்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.  அவர்களைப் போல் இருக்காதீர்கள்; நீங்கள் கேட்பதற்கு முன்பே உங்களுக்கு என்னென்ன தேவை என்பது உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.+  அதனால், நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்:+ ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர்+ பரிசுத்தப்பட வேண்டும்.+ 10  உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்.+ உங்களுடைய விருப்பம்*+ பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.+ 11  இன்றைக்குத் தேவையான உணவை எங்களுக்குக் கொடுங்கள்;+ 12  எங்கள் கடனாளிகளை* நாங்கள் மன்னித்ததுபோல் எங்கள் கடன்களை* எங்களுக்கு மன்னியுங்கள்.+ 13  சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள்,+ பொல்லாதவனிடமிருந்து*+ எங்களைக் காப்பாற்றுங்கள்.’* 14  மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்.+ 15  மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.+ 16  நீங்கள் விரதம் இருக்கும்போது,+ வெளிவேஷக்காரர்களைப் போல் முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்ளாதீர்கள்; தாங்கள் விரதம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களுடைய முகத்தை அவலட்சணமாக வைத்துக்கொள்கிறார்கள்.+ உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது. 17  நீங்களோ விரதம் இருக்கும்போது உங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்; 18  அப்போது, நீங்கள் விரதம் இருப்பது மனுஷர்களுக்குத் தெரியாது, ஆனால் எல்லாவற்றையும்* பார்க்கிற உங்கள் தகப்பனுக்குத் தெரியும். அதனால், எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார். 19  பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள்.+ ஏனென்றால், இங்கே பூச்சியும்* துருவும் அவற்றை அழித்துவிடும்; திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். 20  அதனால், பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்;+ அங்கே பூச்சியோ துருவோ அவற்றை அழிக்காது;+ திருடர்களும் திருடிக்கொண்டு போக மாட்டார்கள். 21  உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும். 22  கண்தான் உடலுக்கு விளக்கு.+ உங்கள் கண் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்;+ 23  ஆனால், உங்கள் கண் எல்லாவற்றையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால்,+ உங்கள் முழு உடலும் இருளாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் ஒளி உண்மையில் இருளாக இருந்தால், அது எப்பேர்ப்பட்ட இருளாக இருக்கும்! 24  யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான்;+ அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது.+ 25  அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை+ நிறுத்துங்கள்.+ உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் அதிக முக்கியம், இல்லையா?+ 26  வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்;+ அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா? 27  கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியை கூட்ட முடியுமா?+ 28  உடைக்காகவும் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பாருங்கள்;* அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; 29  ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த சாலொமோன்கூட+ இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை. 30  விசுவாசத்தில் குறைவுபட்டவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும் காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்குக் கொடுக்க மாட்டாரா? 31  அதனால், ‘எதைச் சாப்பிடுவோம்?’ ‘எதைக் குடிப்போம்?’ ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள்.+ 32  இவற்றையெல்லாம் பெறுவதற்கு உலகத்தார்தான் அலைந்து திரிகிறார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும். 33  அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும்* முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.+ 34  நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்.+ நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்”* என்றார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

உண்மையாகவே: கிரேக்கில், ஆமென். இது, ஆமன் என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பு. இதன் அர்த்தம், “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே.” ஒரு விஷயத்தை, வாக்குறுதியை, அல்லது தீர்க்கதரிசனத்தைச் சொல்வதற்கு முன்பு இயேசு அடிக்கடி இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். இப்படி, அவர் சொல்லவந்த விஷயம் முழுக்க முழுக்க உண்மை என்பதையும் நம்பகமானது என்பதையும் வலியுறுத்திக் காட்டினார். “உண்மையாகவே” அல்லது ஆமென் என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தியதுபோல் வேறு யாரும் பயன்படுத்தியதாக வேறெந்தப் புனித நூலும் சொல்வதில்லை. தான் சொல்லவரும் விஷயம் நம்பகமானது என்பதை இன்னும் அதிகமாக வலியுறுத்துவதற்காக இயேசு இந்த வார்த்தையை அடுத்தடுத்து இரண்டு தடவை சொல்லியிருக்கிறார் (ஆமென் ஆமென்); யோவான் சுவிசேஷம் முழுவதிலும் அந்தப் பதிவுகளை நாம் பார்க்கலாம்.—யோவா 1:51.

தானதர்மம்: கிரேக்கில், ஏலீமோசாயினே. “இரக்கம்,” “இரக்கம் காட்டுதல்” ஆகியவற்றுக்கான கிரேக்க வார்த்தைகளோடு இது சம்பந்தப்பட்டிருக்கிறது. ஏழைகளின் கஷ்டத்தைப் போக்குவதற்காக இலவசமாகக் கொடுக்கப்படும் பணத்தை அல்லது உணவைக் குறிக்கிறது.

வெளிவேஷக்காரர்களை: கிரேக்கில், ஹிப்போக்ரிட்டஸ். கிரேக்க (பிற்பாடு, ரோம) மேடை நடிகர்களைக் குறிப்பதற்காக இந்த வார்த்தை ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது; ஒலிபெருக்கிபோல் செயல்படுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த பெரிய முகமூடிகளை இவர்கள் அணிந்திருந்தார்கள். பிற்பாடு இந்த வார்த்தை, உள்ளுக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக இருப்பவர்களைக் குறிக்கும் உருவகமாகப் பயன்படுத்தப்பட்டது; அதாவது, தன்னுடைய உண்மையான எண்ணங்களை அல்லது குணங்களை மறைப்பதற்காகப் பாசாங்கு செய்கிறவர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்த வசனத்தில், யூத மதத் தலைவர்களை ‘வெளிவேஷக்காரர்கள்’ என்று இயேசு குறிப்பிட்டிருக்கிறார்.—மத் 6:5, 16.

தம்பட்டம் அடிக்காதீர்கள்: நே.மொ., “உங்களுக்கு முன்னால் எக்காளம் ஊதாதீர்கள்.” இது மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும். அநேகமாக, இது அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் தான் செய்யும் தானதர்மங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என்று அர்த்தப்படுத்துகிறது.

உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது: வே.வா., “அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீருவார்கள்; அவர்களுக்கு முழு பலன் கிடைக்கும்.” இதற்கான கிரேக்க வார்த்தையாகிய ஏப்பேக்கோ, ‘முழுமையாகப் பெற்றுவிட்டதை’ அர்த்தப்படுத்துகிறது. இது அடிக்கடி வியாபார ரசீதுகளில் பயன்படுத்தப்பட்டது; ‘முழுமையாகச் செலுத்திவிட்டதை’ குறிப்பதற்காக அப்படிப் பயன்படுத்தப்பட்டது. மனுஷர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வெளிவேஷக்காரர்கள் தானதர்மம் செய்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே மற்றவர்கள் அவர்களுடைய தானதர்மத்தைப் பார்த்து அவர்களைப் புகழ்ந்து பாராட்டினார்கள். அதனால், அவர்கள் ஏற்கெனவே எல்லா பலனையும் பெற்றுவிட்டதையும், கடவுளிடமிருந்து எந்தப் பலனையும் எதிர்பார்க்க முடியாததையும் இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டின.

உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குக்கூட தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்: இது, மிகவும் விவேகமாக அல்லது ரகசியமாக ஒன்றைச் செய்வதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு அணி. வலது கைக்கு இடது கை நெருக்கமாக இருப்பதுபோல் தங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களிடம்கூட இயேசுவின் சீஷர்கள் தங்களுடைய தானதர்மங்களைப் பற்றி விளம்பரப்படுத்தக் கூடாது. உயிருக்கு உயிரான நண்பர்களிடம்கூட அதைப் பற்றிச் சொல்லக் கூடாது.

சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்: வே.வா., “உளறாதீர்கள்; வீணாகப் பிதற்றிக்கொண்டே இருக்காதீர்கள்.” யோசிக்காமல் ஜெபம் செய்யக் கூடாதென்று இயேசு தன் சீஷர்களை எச்சரித்தார். ஏதோவொன்று வேண்டுமென்று திரும்பத் திரும்பக் கேட்கக் கூடாதென்று அவர் சொல்லவில்லை. (மத் 26:36-45) ஆனால், உலகத்தாரை (அதாவது, யூதர்கள் அல்லாத மற்ற தேசத்தாரை) போல, மனப்பாடம் செய்த வார்த்தைகளை யோசிக்காமல் “திரும்பத் திரும்ப” ஒப்பிப்பது தவறு என்றுதான் சொன்னார்.

உங்கள் பரலோகத் தகப்பனுக்கு: நே.மொ., “உங்கள் தகப்பனுக்கு.” சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில், “உங்கள் தகப்பனாகிய கடவுளுக்கு” என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகளில், “உங்கள் தகப்பனுக்கு” என்று சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள்: இந்த வார்த்தை, இயேசு பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த நபர்களைக் குறிக்கிறது; முன்பு அவர் குறிப்பிட்ட வெளிவேஷக்காரர்களிலிருந்து அந்த நபர்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக இயேசு அதைப் பயன்படுத்தினார்.—மத் 6:5.

இப்படி: அதாவது, “‘சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும்’ பழக்கம் உள்ளவர்களைப் போல் இல்லாமல்.”—மத் 6:7.

எங்கள் தகப்பனே: “எங்கள்” என்ற பன்மை சுட்டுப்பெயரைப் பயன்படுத்தி ஜெபம் செய்வதன் மூலம், மற்றவர்களுக்கும் கடவுளோடு நெருங்கிய பந்தம் இருக்கிறது என்பதையும், அவர்களும் கடவுளுடைய குடும்பத்தின் பாகமாக இருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்வதை நாம் காட்டுகிறோம்.—மத் 5:16-ன் ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பெயர்: அதாவது, “கடவுளுடைய தனிப்பட்ட பெயர்.” எபிரெயுவில் יהוה (தமிழில், ய்ஹ்வ்ஹ்) என்று கொடுக்கப்பட்டுள்ள நான்கு மெய்யெழுத்துக்கள் தமிழில் “யெகோவா” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படுகிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இந்தப் பெயர் எபிரெய வேதாகமத்தில் 6,979 தடவையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் 237 தடவையும் வருகிறது. (கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு இணைப்பு A5-ஐயும் இணைப்பு C-ஐயும் பாருங்கள்.) பைபிளில் “பெயர்” என்பது சிலசமயங்களில் அந்த நபரையும், அவர் எடுத்திருக்கும் பெயரையும், தன்னைப் பற்றி அவர் விவரிக்கும் எல்லாவற்றையும்கூட குறிக்கும்.

பரிசுத்தப்பட வேண்டும்: வே.வா., “புனிதமாகக் கருதப்பட வேண்டும்.” படைக்கப்பட்ட எல்லாருமே, அதாவது மனிதர்களும் சரி, தேவதூதர்களும் சரி, கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்வதை இது குறிக்கிறது. ஏதேன் தோட்டத்தில் முதல் மனித ஜோடி கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போன சமயத்திலிருந்து அவருடைய பெயருக்கு வந்திருக்கும் மாபெரும் களங்கத்தைப் போக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதையும் குறிக்கிறது.

தகப்பனை: ‘தகப்பன்’ என்ற வார்த்தை சுவிசேஷப் புத்தகங்களில் 160 தடவைக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது; இங்குதான் அது முதன்முதலில் வருகிறது. யெகோவாவை இயேசு இங்கு ‘தகப்பன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இயேசு இந்த வார்த்தையைப் பயன்படுத்திய விதத்தைப் பார்க்கும்போது, யெகோவாவைத் தகப்பன் என்று சொல்வதன் அர்த்தம் மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்; ஏனென்றால், எபிரெய வேதாகமத்தில் ‘தகப்பன்’ என்ற வார்த்தை ஏற்கெனவே யெகோவாவுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தது. (உபா 32:6; சங் 89:26; ஏசா 63:16) யெகோவாவின் பழங்கால ஊழியர்கள் சிறப்பான பல பட்டப்பெயர்களைப் பயன்படுத்தி அவரை விவரித்தார்கள் அல்லது அழைத்தார்கள். உதாரணத்துக்கு, “சர்வவல்லமையுள்ள கடவுள்,” “உன்னதமான கடவுள்,” ‘மகத்தான படைப்பாளர்’ போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இயேசு, எல்லாரும் சகஜமாகப் பயன்படுத்திய எளிமையான வார்த்தையைத்தான், அதாவது ‘தகப்பன்’ என்ற வார்த்தையைத்தான், அடிக்கடி பயன்படுத்தினார். கடவுளுக்குத் தன் வணக்கத்தாரோடு இருக்கும் நெருங்கிய பந்தத்தை இது சிறப்பித்துக் காட்டுகிறது.—ஆதி 17:1; உபா 32:8; பிர 12:1.

இன்றைக்குத் தேவையான உணவை: “ரொட்டி” என்பதற்கான கிரேக்க வார்த்தை இங்கே ‘உணவு’ என்று கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய வசனங்களில், “ரொட்டி” என்பதற்கான எபிரெய வார்த்தையும் கிரேக்க வார்த்தையும் உணவைத்தான் குறிக்கின்றன. கடவுளுக்குச் சேவை செய்கிறவர்கள், ஏராளமான உணவுப்பொருள்களை அள்ளித் தரும்படி கடவுளிடம் கேட்காமல், அந்தந்த நாளுக்குத் தேவையான உணவைக் கொடுக்கும்படி நம்பிக்கையோடு கேட்கலாம் என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். கடவுள் அற்புதமாக மன்னாவைத் தந்தபோது இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த கட்டளையை இது நமக்கு ஞாபகப்படுத்துகிறது; ஒவ்வொருவரும் “அந்தந்த நாளுக்குத் தேவையானதை” எடுத்துக்கொள்ள வேண்டுமென்று அவர் கட்டளை கொடுத்தார்.—யாத் 16:4.

கடன்களை: இங்கே கடன்கள் என்பது பாவங்களைக் குறிக்கிறது. ஒருவர் இன்னொருவருக்கு எதிராகப் பாவம் செய்யும்போது, அவருக்குக் கடன்படுகிறார் அல்லது அவருக்கு ஒன்றைச் செய்ய கடமைப்பட்டிருக்கிறார். அதனால், அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒருவர் கடவுளுடைய மன்னிப்பைப் பெற வேண்டுமென்றால், தன்னுடைய கடனாளிகளை, அதாவது தனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை, அவர் மன்னித்திருக்க வேண்டும்.—மத் 6:14, 15; 18:35; லூ 11:4.

மன்னியுங்கள்: இதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “விட்டுவிடுங்கள்.” ஆனால், மத் 18:27, 32 ஆகிய வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளபடி, “கடனை ரத்து செய்யுங்கள்” என்றும் அது அர்த்தப்படுத்தலாம்.

சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள்: நே.மொ., “எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதீர்கள்.” சிலசமயங்களில், கடவுள் ஏதோவொரு காரியத்தைச் செய்வதாக பைபிள் சொல்லும்போது, அதை அவர் வெறுமனே அனுமதிக்கிறார் என்று அர்த்தப்படுத்துகிறது. (ரூ 1:20, 21) அதனால், கடவுளே மக்களைச் சோதித்து அவர்களைப் பாவம் செய்ய வைப்பதாக இயேசு இங்கே சொல்லவில்லை. (யாக் 1:13) சோதனையைத் தவிர்க்க அல்லது சகித்துக்கொள்ள உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்ய வேண்டுமென்றுதான் தன் சீஷர்களை உற்சாகப்படுத்துகிறார்.—1கொ 10:13.

குற்றங்களை: ‘குற்றம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தையை, ‘தவறான பாதையில் அடியெடுத்து வைப்பது’ (கலா 6:1) அல்லது தவறு செய்வது என்று மொழிபெயர்க்கலாம். கடவுளுடைய நீதியான தராதரங்களுக்கு இசைவாக நேர்வழியில் நடக்காததை இது குறிக்கிறது.

விரதம்: அதாவது, “குறிப்பிட்ட சமயத்துக்கு எந்த உணவும் சாப்பிடாமல் இருப்பது.” (சொல் பட்டியலைப் பாருங்கள்.) விரதம் இருக்கும்படி இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுக்கவே இல்லை. இந்தப் பழக்கத்தை அடியோடு தவிர்க்க வேண்டுமென்றும் சொல்லவில்லை. திருச்சட்டத்தைக் கடைப்பிடித்த நேர்மையான யூதர்கள், யெகோவாவுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி, விரதம் இருந்து, பாவம் செய்வதைவிட்டு மனம் திருந்தியதைக் காட்டினார்கள்.—1சா 7:6; 2நா 20:3.

அவர்கள் தங்களுடைய முகத்தை அவலட்சணமாக வைத்துக்கொள்கிறார்கள்: வே.வா., “அவர்கள் தங்களுடைய முகத்தை அசிங்கமாக்குகிறார்கள் (அடையாளம் தெரியாதபடி ஆக்குகிறார்கள்).” முகம் கழுவாமலோ தலை வாராமலோ இருப்பதன் மூலமும், தங்கள் தலைகளில் சாம்பலைத் தூவுவதன் அல்லது தடவுவதன் மூலமும் அவர்கள் இப்படிச் செய்திருக்கலாம்.

உங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்: பொதுவாக, விரதம் இருந்தவர்கள் முகம் கழுவவோ தலை வாரவோ இல்லை. அதனால், தங்களையே வருத்திக்கொள்வதுபோல் மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளக் கூடாதென்று இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்னார்.

கண்தான் உடலுக்கு விளக்கு: ஒருவருடைய கண் நல்ல நிலைமையில் இருக்கும்போது அது அவருடைய உடலுக்கு விளக்குபோல் இருக்கிறது; அதாவது, இருளில் வெளிச்சம் தரும் விளக்கைப் போல இருக்கிறது. எல்லாவற்றையும் பார்க்கவும் உணரவும் அது அவருக்கு உதவுகிறது. இங்கே “கண்” என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.—எபே 1:18.

ஒரே விஷயத்தின் மேல் கவனமாக: வே.வா., “தெளிவாக; ஆரோக்கியமாக.” கிரேக்கில், ஹேப்ளஸ். இதன் அடிப்படை அர்த்தம், “ஒருமுகமாக; எளிமையாக.” ஒரே மனதோடு இருப்பதை அல்லது ஒரே விஷயத்துக்கு முழு ஈடுபாடு காட்டுவதை அது குறிக்கலாம். பார்வையை ஒருமுகப்படுத்தும் திறன் நம்முடைய கண்ணுக்கு இருந்தால்தான், அது நல்ல நிலைமையில் இருக்கிறதென்று சொல்ல முடியும். நம்முடைய அடையாளப்பூர்வமான கண் ஒரே விஷயத்தின் மேல், அதுவும் சரியான விஷயத்தின் மேல், “கவனமாக இருந்தால்” (மத் 6:33), நம்முடைய மொத்த சுபாவமுமே மெருகேறும்.

ஒரே விஷயத்தின் மேல் கவனமாக: வே.வா., “தெளிவாக; ஆரோக்கியமாக.” கிரேக்கில், ஹேப்ளஸ். இதன் அடிப்படை அர்த்தம், “ஒருமுகமாக; எளிமையாக.” ஒரே மனதோடு இருப்பதை அல்லது ஒரே விஷயத்துக்கு முழு ஈடுபாடு காட்டுவதை அது குறிக்கலாம். பார்வையை ஒருமுகப்படுத்தும் திறன் நம்முடைய கண்ணுக்கு இருந்தால்தான், அது நல்ல நிலைமையில் இருக்கிறதென்று சொல்ல முடியும். நம்முடைய அடையாளப்பூர்வமான கண் ஒரே விஷயத்தின் மேல், அதுவும் சரியான விஷயத்தின் மேல், “கவனமாக இருந்தால்” (மத் 6:33), நம்முடைய மொத்த சுபாவமுமே மெருகேறும்.

பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால்: நே.மொ., “கெட்டதாக இருந்தால்; பொல்லாததாக இருந்தால்.” கண்களில் ஏதாவது கோளாறு இருந்தால் அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியாது. அதேபோல், பொறாமையோடு பார்க்கும் கண்களால் உண்மையிலேயே முக்கியமான விஷயத்தின்மேல் கவனம் செலுத்த முடியாது. (மத் 6:33) அப்படிப்பட்ட கண் திருப்தி அடையாது, பேராசை பிடித்ததாக இருக்கும், அதன் கவனம் சிதறியிருக்கும், அது மோசம்போக்கும். அப்படிப்பட்ட கண் உள்ளவர்கள் விஷயங்களைத் தவறாக மதிப்பிடுவார்கள், சுயநலமாக வாழ்வார்கள்.—மத் 6:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அடிமையாக இருக்க: இதற்கான கிரேக்க வினைச்சொல், அடிமையாக வேலை செய்வதைக் குறிக்கிறது. பொதுவாக, ஒரு அடிமை ஒரே எஜமானுக்குத்தான் சொந்தமானவராக இருப்பார். ஒரு கிறிஸ்தவர் சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்துகொண்டு, அதேசமயத்தில் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய முழு பக்தியைச் செலுத்த முடியாது என்பதைத்தான் இயேசு இங்கே சொன்னார்.

செல்வத்துக்கும்: ‘செல்வம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, மேமோனாஸ் (செமிட்டிக் வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது). இதை ‘பணம்’ என்றும் மொழிபெயர்க்கலாம். இங்கே ‘செல்வம்’ ஒரு எஜமானாக அல்லது ஒருவித பொய் தெய்வமாக உருவகப்படுத்திக் காட்டப்படுகிறது. ஆனாலும், இந்த வார்த்தை ஏதோவொரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயராகப் பயன்படுத்தப்பட்டதற்கு எந்தவொரு நம்பகமான அத்தாட்சியும் இல்லை.

உயிருக்காகவும் . . . உயிரும்: கிரேக்கில், சைக்கீ. சில பைபிள்களில் இது “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனத்தில் இது உயிரைக் குறிக்கிறது. இங்கே ‘உயிர்’ என்ற வார்த்தையும் ‘உடல்’ என்ற வார்த்தையும் சேர்ந்து, முழு நபரையும் குறிக்கிறது.

கவலைப்படுவதை நிறுத்துங்கள்: இந்தக் கட்டளையிலுள்ள கிரேக்க வினைச்சொல்லின் காலத்தை வைத்துப் பார்க்கும்போது, ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் ஒரு செயலை நிறுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ‘கவலை’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஒருவருடைய மனதில் சலனத்தை ஏற்படுத்தி, அவருடைய கவனத்தைத் திசைதிருப்பி, அவருடைய சந்தோஷத்தைப் பறிக்கும் உணர்வைக் குறிக்கலாம். இதே வார்த்தைதான் மத் 6:27, 28, 31, 34 ஆகிய வசனங்களிலும் வருகிறது.

தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியை: “நொடி” என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு, “முழம்.” இயேசு இங்கே பயன்படுத்திய வார்த்தை ஒரு குறுகிய அளவு (நே.மொ., “ஒரு முழங்கை” அளவு) தூரத்தைக் குறித்தது; அதாவது, சுமார் 44.5 செ.மீ. (17.5 அங்.) தூரத்தைக் குறித்தது. (சொல் பட்டியலில் “முழம்” என்ற தலைப்பையும், இணைப்பு B14-ஐயும் பாருங்கள்.) இயேசு அநேகமாக, வாழ்க்கையை ஒரு பயணத்துக்கு ஒப்பிட்டுப் பேசினார். கவலைப்படுவதால் யாராலும் தன் வாழ்நாள் பயணத்தில் கொஞ்ச தூரத்தைக்கூட கூட்ட முடியாது என்பதைத்தான் அவர் சொல்லவந்தார்.

காட்டுப் பூக்கள்: இதற்கான கிரேக்க வார்த்தை, மணிப்பஞ்சு (anemone) என்ற பூவைக் குறிக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், இது லில்லிப் பூவைப் போன்ற பல விதமான பூக்களையும் குறிக்கலாம். உதாரணத்துக்கு, ட்யுலிப், ஹையசின்த், ஐரிஸ், க்ளேடியோலஸ் போன்ற பூக்களையும் குறிக்கலாம். இயேசு அந்தப் பகுதியில் வளர்ந்த பல காட்டுப் பூக்களைப் பொதுப்படையாக குறிப்பிட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்; அதனால், இது “காட்டுப் பூக்கள்” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படுகிறது. இதுவே உண்மையாகவும் இருக்கலாம்; ஏனென்றால், இது காட்டுச் செடிகளோடு சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டிருக்கிறது.—மத் 6:30; லூ 12:27, 28.

கவனித்துப் பாருங்கள்: இதற்கான கிரேக்க வினைச்சொல், “நன்றாக அல்லது முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்” என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.

விசுவாசத்தில் குறைவுபட்டவர்களே: இயேசு தன் சீஷர்களைத்தான் இப்படிச் சொன்னார். அவர்களுடைய நம்பிக்கை அவ்வளவு பலமாக இல்லாததை அவர் சுட்டிக்காட்டினார். (மத் 8:26; 14:31; 16:8; லூ 12:28) அவர்களுக்கு விசுவாசமே இல்லாததை அல்ல, விசுவாசம் குறைவாக இருந்ததையே அவருடைய வார்த்தைகள் காட்டின.

இல்லாமல்போகும் காட்டுச் செடிகளுக்கே: “இல்லாமல்போகும்” என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு, “அடுப்பில் போடப்படும்.” இஸ்ரவேலில் வெயில் அதிகமாக இருக்கும் கோடைக் காலத்தில், செடிகள் இரண்டே நாட்களில் வாடி வதங்கிவிடும். காய்ந்துபோன மலர்த்தண்டுகளும் புற்களும் வயல்களிலிருந்து எடுத்துவரப்பட்டு, அடுப்பை எரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.

எப்போதுமே . . . முதலிடம் கொடுங்கள்: இதற்கான கிரேக்க வினைச்சொல் தொடர்ந்து நடக்கும் செயலைக் குறிக்கிறது; “தேடிக்கொண்டே இருங்கள்” என்றும் இதை மொழிபெயர்க்கலாம். இயேசுவின் உண்மையான சீஷர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குக் கொஞ்சக் காலம் மட்டும் முதலிடம் கொடுத்துவிட்டு, பிறகு மற்ற காரியங்களுக்குக் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடக் கூடாது. தங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்துக்குத்தான் அவர்கள் எப்போதுமே முக்கியத்துவம் தர வேண்டும்.

நீதிநெறிகளுக்கும்: கடவுளுடைய நீதிநெறிகளுக்கு முதலிடம் தருகிறவர்கள் அவருடைய விருப்பத்தை உடனடியாகச் செய்கிறார்கள்; கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்கிறார்கள். இயேசுவின் இந்தப் போதனை, பரிசேயர்களுடைய போதனைக்கு நேர்மாறாக இருந்தது. அவர்களுடைய சொந்த நீதிநெறிகளைத்தான் அவர்கள் பின்பற்றினார்கள்.—மத் 5:20.

நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்: எந்தவொரு விஷயத்தையும் சரியாகத் திட்டமிட்டுச் செய்யும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதி 21:5) ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று ஒருவர் தேவையில்லாமல் கவலைப்பட்டால், கடவுளோடு அவருக்கு இருக்கும் பந்தம் ரொம்பவே பாதிக்கப்படலாம். அந்த நபர் கடவுளுடைய ஞானத்தைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாகத் தன்னுடைய சொந்த புத்தியை நம்ப ஆரம்பித்துவிடுவார்.—நீதி 3:5, 6.

மீடியா

முதல் நூற்றாண்டு ஜெபக்கூடம்
முதல் நூற்றாண்டு ஜெபக்கூடம்

கலிலேயா கடலின் வடகிழக்கே சுமார் 10 கி.மீ. (6 மைல்) தூரத்தில் இருக்கும் காம்லா என்ற இடத்தில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெபக்கூடம் இருக்கிறது. அதில் காணப்படும் சில அம்சங்களை இந்தப் படம் சித்தரிக்கிறது. இது, பழங்காலத்தில் ஒரு ஜெபக்கூடம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்ய உதவுகிறது.

காட்டுப் பூக்கள்
காட்டுப் பூக்கள்

‘காட்டுப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பார்க்கும்படி’ இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். பைபிள் மொழிபெயர்ப்புகளில் “காட்டுப் பூக்கள்” என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் கிரேக்க வார்த்தை ட்யுலிப், ஹையசின்த், ஐரிஸ், க்ளேடியோலஸ் போன்ற பல விதமான பூக்களைக் குறித்திருக்கலாம். இயேசு ஒருவேளை மணிப்பஞ்சு (anemone) என்ற பூவை மனதில் வைத்துச் சொல்லியிருக்கலாம் என்று சில அறிஞர்கள் நம்புகிறார்கள். ஆனால், லில்லிப் பூவைப் போன்ற பூக்களை இயேசு பொதுப்படையாகக் குறிப்பிட்டிருக்கலாம். இங்கு காட்டப்பட்டிருப்பது ஒரு வகையான மணிப்பஞ்சு (Anemone coronaria). இந்தப் பூக்கள் இன்று இஸ்ரவேலில் பொதுவாகக் காணப்படுகின்றன. நீலம், இளம் சிவப்பு, ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களிலும் இவை காணப்படுகின்றன.