யாத்திராகமம் 33:1-23

33  பின்பு யெகோவா மோசேயிடம், “எகிப்திலிருந்து நீ கூட்டிக்கொண்டு வந்த ஜனங்களோடு இங்கிருந்து கிளம்பிப் போ. ‘உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்’ என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த இடத்துக்குப் போ.+  நான் என் தூதரை உங்களுக்கு முன்னால் அனுப்பி+ கானானியர்கள், எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் எல்லாரையும் துரத்திவிடுவேன்.+  பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு நீங்கள் போங்கள்.+ ஆனால், நான் உங்களோடு வர மாட்டேன். ஏனென்றால், நீங்கள் பிடிவாதமான ஜனங்கள்;+ உங்கள் பிடிவாதத்தைப் பார்த்து வழியில் நான் உங்களை அழித்தாலும் அழித்துவிடலாம்”+ என்றார்.  இந்தக் கடுமையான வார்த்தைகளைக் கேட்டபோது ஜனங்கள் அழுது புலம்ப ஆரம்பித்தார்கள். யாருமே நகைகளைப் போட்டுக்கொள்ளவில்லை.  யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நீங்கள் பிடிவாதமான ஜனங்கள்.+ நான் நினைத்தால் உங்கள் நடுவில் வந்து ஒரே நொடியில் உங்களை அழிக்க முடியும்.+ அதனால், உங்களை என்ன செய்யலாம் என்று நான் முடிவுசெய்யும் வரையில், நகைகளைப் போட்டுக்கொள்ளாமல் இருங்கள்’” என்றார்.  அதனால், ஓரேப் மலையில் கூடியிருந்த சமயத்திலிருந்து இஸ்ரவேலர்கள் நகைகளைப் போட்டுக்கொள்ளவில்லை.  அப்போது, மோசே தன் கூடாரத்தைப் பிரித்து முகாமுக்கு வெளியே கொஞ்சத் தூரத்தில் அமைத்தார். அதை அவர் சந்திப்புக் கூடாரம் என்று அழைத்தார். யெகோவாவிடம் விசாரிப்பதற்காக+ ஜனங்கள் முகாமுக்கு வெளியிலிருந்த அந்தச் சந்திப்புக் கூடாரத்துக்குப் போய் வந்தார்கள்.  மோசே அந்தக் கூடாரத்துக்குப் போகும்போதெல்லாம் ஜனங்கள் அவரவர் கூடார வாசலில் எழுந்து நிற்பார்கள். அவர் அந்தக் கூடாரத்துக்குள் நுழையும்வரை அவரையே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.  மோசே அந்தக் கூடாரத்துக்குள் நுழைந்தவுடன், மேகத் தூண்+ இறங்கி வந்து கூடார வாசலில் நிற்கும். கடவுள் மோசேயுடன் பேசுவார்.+ 10  கூடார வாசலில் மேகத் தூண் நிற்பதை ஜனங்கள் பார்க்கும்போது, ஒவ்வொருவரும் அவரவர் கூடார வாசலில் எழுந்து நின்று தலைவணங்குவார்கள். 11  ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதுபோல் யெகோவா மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசுவார்.+ மோசே முகாமுக்குத் திரும்பிப்போன பிறகு, அவருடைய உதவியாளரும் ஊழியரும் நூனின் மகனுமாகிய யோசுவா,+ சந்திப்புக் கூடாரத்திலேயே இருப்பார். 12  மோசே யெகோவாவிடம், “‘இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ’ என்று சொல்கிறீர்கள். ஆனால், என்னோடு யாரை அனுப்புவீர்கள் என்று இன்னும் சொல்லவில்லையே. அதோடு, ‘உன்னை* எனக்கு நன்றாகத் தெரியும்,* நீ எனக்குப் பிரியமானவன்’ என்று சொன்னீர்கள். 13  நான் உங்களுக்குப் பிரியமானவனாக இருந்தால், தயவுசெய்து உங்கள் வழிகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.+ அப்போதுதான் நான் உங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும், எப்போதும் உங்களுக்குப் பிரியமானவனாக இருக்க முடியும். இந்தத் தேசத்தார் உங்களுடைய சொந்த ஜனங்கள் என்பதையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்”+ என்றார். 14  அதற்கு அவர், “நான் உன்னோடு வருவேன்,+ உனக்கு ஓய்வு தருவேன்”+ என்றார். 15  அப்போது மோசே, “நீங்கள் எங்களோடு வரவில்லையென்றால், இங்கிருந்து எங்களைப் போகச் சொல்லாதீர்கள். 16  நீங்கள் என்மேலும் உங்களுடைய ஜனங்கள்மேலும் பிரியமாக இருக்கிறீர்கள் என்று எப்படித் தெரியும்? நீங்கள் எங்களோடு வந்தால்தானே தெரியும்?+ அப்போதுதானே நானும் உங்கள் ஜனங்களும் இந்தப் பூமியிலுள்ள மற்ற எல்லாரையும்விட விசேஷமானவர்களாக இருப்போம்?”+ என்று கேட்டார். 17  அப்போது யெகோவா மோசேயிடம், “இந்தத் தடவையும் நீ கேட்கிறபடி செய்கிறேன். ஏனென்றால், நீ எனக்குப் பிரியமானவன். உன்னை* எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார். 18  அதற்கு மோசே, “தயவுசெய்து உங்கள் மகிமையை எனக்குக் காட்டுங்கள்” என்றார். 19  ஆனால் அவர், “நான் உன் முன்னால் கடந்துபோவேன். அப்போது, நான் எவ்வளவு நல்லவர் என்று நீ பார்ப்பாய். யெகோவா என்ற என் பெயரைப் பற்றி உன் முன்னால் அறிவிப்பேன்.*+ யாருக்குக் கருணை காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்குக் கருணை காட்டுவேன். யாருக்கு இரக்கம் காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்”+ என்றார். 20  அதோடு, “நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. ஏனென்றால், என்னைப் பார்க்கிற எந்த மனுஷனும் உயிரோடு இருக்க முடியாது” என்றார். 21  பின்பு யெகோவா, “இதோ, என் பக்கத்தில் ஒரு இடம் இருக்கிறது. இந்தப் பாறையின் மேல் நின்றுகொள். 22  என் மகிமை கடந்துபோகும்போது, உன்னை இந்தப் பாறையின் குகையில் வைப்பேன். நான் கடந்துபோகிற வரைக்கும் என் கையால் உன்னை மறைத்துப் பாதுகாப்பேன். 23  அதன்பின் என் கையை எடுத்துவிடுவேன், நீ என் பின்பக்கத்தைப் பார்ப்பாய். ஆனால், என் முகத்தைப் பார்க்க மாட்டாய்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “உன் பெயரை.”
வே.வா., “நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.”
வே.வா., “உன் பெயரை.”
வே.வா., “நான் எப்படிப்பட்டவர் என்று சொல்வேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா