யாத்திராகமம் 8:1-32
8 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ பார்வோனிடம் போய் இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு.+
2 அவர்களை அனுப்பாமல் பிடிவாதம் பிடித்தால், நான் உன் தேசம் முழுக்க தவளைகளை வர வைத்துத் தண்டிப்பேன்.+
3 நைல் நதி முழுக்க தவளைகளாக இருக்கும். அவை அங்கிருந்து வந்து உன் அரண்மனையிலும் உன் படுக்கை அறையிலும் உன் படுக்கையிலும் உன்னுடைய ஊழியர்களின் வீடுகளிலும் உன் ஜனங்கள்மேலும் அடுப்புகளிலும் மாவு பிசைகிற பாத்திரங்களிலும் ஏறிக்கொள்ளும்.+
4 உன்மேலும் உன் ஜனங்கள்மேலும் உன் ஊழியர்கள் எல்லார்மேலும் அந்தத் தவளைகள் ஏறிக்கொள்ளும்”’” என்றார்.
5 பின்பு யெகோவா மோசேயிடம், “ஆறுகள்மேலும் கால்வாய்கள்மேலும் குளங்கள்மேலும் கோலை நீட்டி, எகிப்து தேசமெங்கும் தவளைகளை வர வைக்கும்படி நீ ஆரோனிடம் சொல்” என்றார்.
6 உடனே, எகிப்தின் நீர்நிலைகள்மேல் ஆரோன் தன்னுடைய கோலை நீட்டினார். அப்போது, தவளைகள் நதியிலிருந்து வந்து எகிப்து தேசமெங்கும் நிறைந்தன.
7 ஆனால், மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திர சக்தியால் அதேபோல் செய்தார்கள். அவர்களும் எகிப்து தேசத்தில் தவளைகளை வர வைத்தார்கள்.+
8 அதன்பின், மோசேயையும் ஆரோனையும் பார்வோன் வரவழைத்து, “நான் உங்களுடைய ஜனங்களை அனுப்பத் தயார். போய் யெகோவாவுக்குப் பலி செலுத்துங்கள். ஆனால், இந்தத் தவளைகள் என்னைவிட்டும் என் ஜனங்களைவிட்டும் போய்விட வேண்டுமென்று யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள்”+ என்றான்.
9 அப்போது மோசே பார்வோனிடம், “நான் எப்போது கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டுமென்று நீங்களே சொல்லுங்கள். அதன்பின், உங்களையும் உங்களுடைய ஊழியர்களையும் ஜனங்களையும் வீடுகளையும்விட்டுத் தவளைகள் போய்விடும், அவை நைல் நதியில் மட்டும்தான் இருக்கும்” என்றார்.
10 அதற்கு அவன், “நாளைக்கு வேண்டிக்கொள்” என்றான். உடனே மோசே, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன். எங்கள் கடவுளாகிய யெகோவாவைப் போல் வேறு யாரும் இல்லை என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+
11 உங்களையும் உங்களுடைய வீடுகளையும் ஊழியர்களையும் ஜனங்களையும்விட்டுத் தவளைகள் போய்விடும். அவை நைல் நதியில் மட்டும்தான் இருக்கும்”+ என்றார்.
12 பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடமிருந்து புறப்பட்டுப் போனார்கள். தவளைகளை பார்வோனைவிட்டுப் போக வைக்கும்படி மோசே யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார்.+
13 மோசே கேட்டபடியே யெகோவா செய்தார். வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயின.
14 ஜனங்கள் அவற்றைக் குவியல் குவியல்களாகக் குவித்தார்கள், தேசமெங்கும் நாற்றம் அடித்தது.
15 தவளைகள் எல்லாம் ஒழிந்துவிட்டதை பார்வோன் பார்த்தபோது, யெகோவா சொல்லியிருந்தபடியே, அவன் இதயம் இன்னும் இறுகிப்போனது.+ அவர்கள் பேச்சை அவன் கேட்கவே இல்லை.
16 அப்போது யெகோவா மோசேயிடம், “கோலை நீட்டி நிலத்திலுள்ள புழுதியை அடிக்கும்படி ஆரோனிடம் சொல். அப்போது, எகிப்து தேசமெங்கும் இருக்கிற புழுதியெல்லாம் கொசுக்களாக* மாறும்” என்றார்.
17 அப்படியே அவர்கள் செய்தார்கள். ஆரோன் தன் கையிலுள்ள கோலை நீட்டி நிலத்திலுள்ள புழுதியை அடித்தார். அப்போது, கொசுக்கள் வந்து மனிதர்களையும் மிருகங்களையும் சூழ்ந்துகொண்டன. எகிப்து தேசமெங்கும் இருந்த புழுதியெல்லாம் கொசுக்களாக மாறின.+
18 அந்தக் கொசுக்கள் மனிதர்களையும் மிருகங்களையும் சூழ்ந்துகொண்டன. மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திர சக்தியால் அதேபோல் கொசுக்களை வர வைக்கப் பார்த்தார்கள்,+ ஆனால் முடியவில்லை.
19 அப்போது அவர்கள் பார்வோனிடம், “கடவுளுடைய சக்தியால்* மட்டும்தான் இதைச் செய்ய முடியும்!”+ என்றார்கள். ஆனால், யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. அவர்கள் பேச்சை அவன் கேட்கவே இல்லை.
20 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ விடியற்காலையில் எழுந்து, பார்வோனைப் போய்ப் பார். அவன் நைல் நதிக்கு வருவான். நீ அவனிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு.
21 நீ என்னுடைய ஜனங்களை அனுப்பாவிட்டால், உன்மேலும் உன் ஊழியர்கள்மேலும் ஜனங்கள்மேலும் வீடுகள்மேலும் கொடிய ஈக்களை* வர வைப்பேன். எகிப்தியர்களுடைய வீடுகளில் அந்த ஈக்கள் மொய்க்கும். அவர்கள் நிற்கிற தரைகளையும்கூட அவை மூடிவிடும்.
22 ஆனால் அந்த நாளில், என் ஜனங்கள் வாழ்கிற கோசேன் பிரதேசத்தை மட்டும் நான் ஒன்றும் செய்ய மாட்டேன். அங்கு ஈக்களே வராது.+ அப்போது, யெகோவாவாகிய நான் இந்தத் தேசத்தில் இருக்கிறேன் என்று நீ தெரிந்துகொள்வாய்.+
23 என்னுடைய ஜனங்களுக்கும் உன்னுடைய ஜனங்களுக்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டுவேன். நாளைக்கு இந்த அதிசயம் நடக்கும்”’ என்று சொல்” என்றார்.
24 யெகோவா அப்படியே செய்தார். பார்வோனுடைய அரண்மனையிலும் அவனுடைய ஊழியர்களின் வீடுகளிலும் எகிப்து தேசம் முழுவதிலும் கொடிய ஈக்கள் படையெடுத்து வந்தன.+ தேசமே அந்த ஈக்களால் பாழானது.+
25 கடைசியில், மோசேயையும் ஆரோனையும் பார்வோன் வரவழைத்து, “இந்தத் தேசத்திலேயே உங்கள் கடவுளுக்குப் பலி செலுத்துங்கள்” என்றான்.
26 ஆனால் மோசே, “நாங்கள் அப்படிச் செய்வது சரியல்ல. ஏனென்றால், எங்களுடைய கடவுளான யெகோவாவுக்கு நாங்கள் செலுத்தும் பலி எகிப்தியர்களுக்கு அருவருப்பாக இருக்கும்.+ அவர்கள் அருவருப்பாக நினைக்கிற பலியை அவர்களுடைய கண் முன்னால் நாங்கள் செலுத்தினால், எங்கள்மேல் கல்லெறிய மாட்டார்களா?
27 எங்கள் கடவுளான யெகோவா சொன்னது போலவே, நாங்கள் மூன்று நாள் பயணம் செய்து வனாந்தரத்தில் அவருக்குப் பலி செலுத்துவோம்”+ என்றார்.
28 அப்போது பார்வோன், “சரி, உங்கள் கடவுளான யெகோவாவுக்கு வனாந்தரத்தில் பலி செலுத்த உங்களை அனுப்புகிறேன். ஆனால், ரொம்பத் தூரம் போய்விடாதீர்கள். எனக்காக உங்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்”+ என்றான்.
29 அதற்கு மோசே, “நான் இப்போதே போய், யெகோவாவிடம் வேண்டிக்கொள்கிறேன். நாளைக்கு இந்தக் கொடிய ஈக்கள் பார்வோனாகிய உங்களையும் உங்களுடைய ஊழியர்களையும் விட்டுப் போய்விடும். ஆனால், நீங்கள் மறுபடியும் எங்களை ஏமாற்றக் கூடாது.* யெகோவாவுக்குப் பலி கொடுப்பதற்காக ஜனங்களை அனுப்பாமல் இருக்கக் கூடாது”+ என்றார்.
30 அதன்பின் மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டுப் போய், அந்தக் கொடிய ஈக்களைப் போக வைக்கும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார்.+
31 மோசே கேட்டுக்கொண்டபடியே யெகோவா செய்தார். பார்வோனையும் அவனுடைய ஊழியர்களையும் ஜனங்களையும்விட்டு அந்தக் கொடிய ஈக்கள் போய்விட்டன. ஒன்றுவிடாமல் எல்லாமே போய்விட்டன.
32 ஆனாலும், பார்வோனுடைய இதயம் மறுபடியும் இறுகிப்போனது, இஸ்ரவேல் ஜனங்களை அவன் அனுப்பவில்லை.
அடிக்குறிப்புகள்
^ இதற்கான எபிரெய வார்த்தை, எகிப்தில் பொதுவாகக் காணப்பட்ட கொசுவைப் போன்ற ஒருவித பூச்சியைக் குறிக்கிறது.
^ நே.மொ., “விரலால்.”
^ இவை ஒருவகையான கடிக்கும் ஈக்கள்.
^ வே.வா., “எங்களோடு விளையாடக் கூடாது.”