ரூத் 3:1-18

3  ஒருநாள், அவளுடைய மாமியார் நகோமி அவளிடம், “என் மகளே, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது என் கடமை இல்லையா?+  போவாஸ் நம்முடைய சொந்தக்காரர்,+ அவருடைய வேலைக்காரப் பெண்களோடுதான் நீ இவ்வளவு நாட்கள் வேலை செய்தாய். அவர் இன்றைக்குச் சாயங்காலம் களத்துமேட்டில் பார்லியைத் தூற்றிக்கொண்டிருப்பார்.*  நீ குளித்துவிட்டு, கொஞ்சம் வாசனை எண்ணெயைப் பூசிக்கொள். பின்பு, நல்ல உடையைப் போட்டுக்கொண்டு களத்துமேட்டுக்குப் போ. அவர் சாப்பிட்டுக் குடிக்கும்வரை அவருடைய கண்ணில் படாதே.  அவர் எங்கே படுக்கிறார் என்பதைப் பார்த்து வைத்துக்கொள். பின்பு, நீ போய் அவருடைய பாதத்தை மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிவிட்டு கால்மாட்டில் படுத்துக்கொள். அதற்குமேல் நீ செய்ய வேண்டியதை அவர் உனக்குச் சொல்வார்” என்றாள்.  அதற்கு அவள், “நீங்கள் சொல்கிறபடியெல்லாம் செய்கிறேன்” என்றாள்.  பின்பு, அவள் களத்துமேட்டுக்குப் போய்த் தன்னுடைய மாமியார் சொன்னபடியெல்லாம் செய்தாள்.  இதற்கிடையில், போவாஸ் சாப்பிட்டார், குடித்தார், சந்தோஷமாக இருந்தார். பின்பு, தானியக் குவியலின் ஓரத்தில் படுத்துத் தூங்கினார். கொஞ்ச நேரம் கழித்து, ரூத் சத்தமில்லாமல் வந்து, அவருடைய பாதத்தை மூடியிருந்த போர்வையை ஒதுக்கிவிட்டு கால்மாட்டில் படுத்துக்கொண்டாள்.  நடுராத்திரி அவர் குளிரில் நடுங்கியதால் எழுந்து உட்கார்ந்தார். அப்போது, கால்மாட்டில் ஒரு பெண் படுத்திருந்ததைப் பார்த்தார்.  உடனே அவர், “யார் நீ?” என்று கேட்டார். அதற்கு அவள், “நான் உங்களுடைய வேலைக்காரி ரூத். தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.* என்னை மீட்கும் உரிமையுள்ளவர்+ நீங்கள்தான்” என்று சொன்னாள். 10  அப்போது அவர், “என் மகளே, யெகோவா உன்னை ஆசீர்வதிக்கட்டும்! இதுவரை நீ காட்டிய அன்பைவிட*+ இப்போது காட்டுகிற அன்பு மேலானது. ஏனென்றால், நீ ஒரு பணக்கார வாலிபனையோ ஏழை வாலிபனையோ தேடிப்போகவில்லை. 11  பயப்படாதே, என் மகளே. நீ கேட்டுக்கொண்டபடியே உனக்குச் செய்வேன்.+ நீ ரொம்ப நல்ல பெண் என்பது இந்த ஊருக்கே தெரியும். 12  நான் உன்னை மீட்டுக்கொள்ளும் உரிமையுள்ளவன்தான்.+ ஆனால் அந்த உரிமை இன்னொருவனுக்கும் இருக்கிறது, அவன்தான் என்னைவிட உனக்கு நெருங்கிய சொந்தக்காரன்.+ 13  இந்த ராத்திரி இங்கேயே இரு, அவன் உன்னை மீட்டுக்கொள்கிறானா இல்லையா என்று காலையில் பார்ப்போம். அப்படி அவன் உன்னை மீட்டுக்கொண்டால்,+ நல்லது! இல்லாவிட்டால், நானே உன்னை மீட்டுக்கொள்கிறேன். இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!* காலைவரை இங்கேயே படுத்திரு” என்று சொன்னார். 14  அதனால், பொழுது விடியும்வரை அவள் அவருடைய கால்மாட்டிலேயே படுத்திருந்தாள். பின்பு, யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இருட்டோடு இருட்டாகவே எழுந்துகொண்டாள். அப்போது அவர், “களத்துமேட்டுக்கு ஒரு பெண் வந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது” என்று சொன்னார். 15  பின்பு அவளிடம், “நீ போர்த்தியிருக்கிற சால்வையை விரித்துப் பிடி” என்று சொன்னார். அவள் விரித்துப் பிடித்தபோது, ஆறு படி* பார்லியை அதில் போட்டு அவள் தலையில் தூக்கி வைத்தார். அதன் பிறகு, அவர் நகரத்துக்குள் போனார். 16  ரூத் தன்னுடைய மாமியாரிடம் வந்துசேர்ந்தாள். அப்போது நகோமி, “மகளே, நீ போன காரியம் என்ன ஆனது?”* என்று கேட்டாள். போவாஸ் தனக்குச் செய்த எல்லாவற்றையும் அவள் சொன்னாள். 17  அதோடு, “‘உன் மாமியாரிடம் வெறுங்கையோடு போகாதே’ என்று சொல்லி, இந்த ஆறு படி பார்லியையும் கொடுத்தார்” என்று சொன்னாள். 18  அதற்கு நகோமி, “மகளே, என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இன்றைக்கு இந்தக் காரியத்தை முடித்துவிட்டுதான் அவர் மறுவேலை பார்ப்பார்” என்று சொன்னாள்.

அடிக்குறிப்புகள்

தூற்றுவது என்றால் தானியங்களைப் பதரிலிருந்து பிரித்தெடுப்பதற்குக் காற்றடிக்கும் திசையில் அள்ளி வீசுவது.
நே.மொ., “என்னை உங்களுடைய போர்வையால் மூடுங்கள்.”
நே.மொ., “மாறாத அன்பைவிட.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
ஒருவேளை, “ஆறு சியா அளவு,” அதாவது, “சுமார் 20 கிலோ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “நீ யார்?”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா