லேவியராகமம் 21:1-24

21  பின்பு யெகோவா மோசேயிடம், “குருமார்களாகச் சேவை செய்கிற ஆரோனின் மகன்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘தங்களுடைய ஜனத்தில் இறந்துபோன ஒருவனுக்காக யாருமே தங்களைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+  ஆனால் இரத்த சொந்தங்கள் இறந்துபோனால், அதாவது அம்மா, அப்பா, மகன், மகள், சகோதரன்,  அல்லது கல்யாணமாகிப் போகாத* சகோதரி இறந்துபோனால் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளலாம்.  தங்களுடைய ஜனத்தில் ஒருவனைக் கல்யாணம் செய்த பெண்ணுக்காக யாரும் துக்கம் அனுசரித்து தங்களையே களங்கப்படுத்தக் கூடாது.  குருமார்கள் மொட்டை போட்டுக்கொள்ளவோ,+ குறுந்தாடி வைத்துக்கொள்ளவோ, உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+  அவர்கள் கடவுளுடைய பெயரைக் களங்கப்படுத்தாமல்+ அவருக்கு முன்னால் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ அவர்கள் யெகோவாவுக்கு உணவைப் படைப்பதால், அதாவது அவருக்குத் தகன பலிகளைச் செலுத்துவதால், பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+  குருமார்கள் கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமானவர்களாக இருப்பதால் அவர்கள் ஒரு விபச்சாரியையோ+ கற்பைப் பறிகொடுத்த பெண்ணையோ விவாகரத்தான பெண்ணையோ+ கல்யாணம் செய்யக் கூடாது.  அவர்கள் உங்களுடைய கடவுளுக்கு உணவைப் படைப்பதால் நீங்கள் அவர்களைப் புனிதமானவர்களாக நினைக்க வேண்டும்.+ உங்களைப் புனிதப்படுத்துகிற யெகோவாவாகிய நான் பரிசுத்தமானவர்.+ அதனால், நீங்கள் அவர்களைப் பரிசுத்தமானவர்களாக நினைக்க வேண்டும்.  குருவானவரின் மகள் விபச்சாரம் செய்தால், தனக்கு மட்டுமல்ல தன் அப்பாவுக்கும் அவமானத்தைக் கொண்டுவருகிறாள். அவள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+ 10  குருமார்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் குருவானவர் அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதாலும்,+ பரிசுத்த உடைகளைப்+ போட்டிருப்பதாலும், இறந்தவருக்காகத் துக்கப்பட்டு தன்னுடைய தலைமுடியை அலங்கோலமாக விடவோ உடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+ 11  இறந்தவரின் உடலுக்குப் பக்கத்தில் அவர் போகக் கூடாது.+ தன்னுடைய அப்பாவோ அம்மாவோ இறந்திருந்தாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக் கூடாது. 12  வழிபாட்டுக் கூடாரத்தைவிட்டு அவர் வெளியே போய், தன் கடவுளுடைய கூடாரத்தைக் களங்கப்படுத்தக் கூடாது.+ ஏனென்றால், அர்ப்பணிப்பின் அடையாளமாகிய கடவுளுடைய அபிஷேகத் தைலம்+ அவர் தலையில் ஊற்றப்பட்டிருக்கிறது. நான் யெகோவா. 13  அவர் ஒரு கன்னிப்பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும்.+ 14  அவருடைய ஜனத்திலிருந்துதான் அவர் பெண்ணெடுக்க வேண்டும். விதவையையோ விவாகரத்தான பெண்ணையோ கற்பைப் பறிகொடுத்த பெண்ணையோ விபச்சாரியையோ கல்யாணம் செய்யக் கூடாது. 15  அப்படிக் கல்யாணம் செய்து தன்னுடைய ஜனத்தின் மத்தியில் தன் சந்ததியைக் களங்கப்படுத்தக் கூடாது.+ ஏனென்றால், நான் அவரைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா’” என்றார். 16  பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 17  “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உன் சந்ததியில் யாருக்காவது உடல் குறைபாடு இருந்தால், அவன் கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது. 18  பார்வை இல்லாதவன், கால் ஊனமானவன், விகாரமான முகம் உள்ளவன், ஒரு கையோ காலோ நீளமாக உள்ளவன், 19  கால் எலும்போ கை எலும்போ முறிந்தவன், 20  கூன் விழுந்தவன், படு குள்ளமானவன்,* கண் கோளாறு உள்ளவன், படைநோய் உள்ளவன், படர்தாமரை நோய் உள்ளவன், அல்லது விரை சேதமடைந்தவன் கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது.+ 21  குருவாகிய ஆரோனின் சந்ததியில் யாருக்காவது குறைபாடு இருந்தால், அவன் யெகோவாவுக்குத் தகன பலிகளைச் செலுத்தக் கூடாது. அவனுக்குக் குறைபாடு இருப்பதால், கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது. 22  கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவில் பரிசுத்தமானதையும் மகா பரிசுத்தமானதையும் அவன் சாப்பிடலாம்.+ 23  ஆனாலும், அவனுக்குக் குறைபாடு இருப்பதால் அவன் திரைச்சீலைக்குப்+ பக்கத்தில் போகக் கூடாது, பலிபீடத்துக்கும்+ போகக் கூடாது. அவன் என்னுடைய வழிபாட்டுக் கூடாரத்தைக்+ களங்கப்படுத்தக் கூடாது. ஏனென்றால், நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா’”+ என்றார். 24  ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மோசே இதையெல்லாம் தெரிவித்தார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தன்னோடு இருக்கிற கன்னிப் பெண்ணாகிய.”
அல்லது, “நோஞ்சானாக இருப்பவன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா