2 ராஜாக்கள் 5:1-27

5  சீரியா தேசத்து ராஜாவின் படைத் தளபதி நாகமான் செல்வாக்குள்ளவராக இருந்தார். அவர் மூலம் சீரியாவுக்கு யெகோவா வெற்றி தந்திருந்ததால், நாகமான்மீது அவருடைய ராஜா அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். நாகமான் ஒரு மாவீரர், ஆனால் அவருக்குத் தொழுநோய்* இருந்தது.  ஒருசமயம், இஸ்ரவேல்மீது சீரியர்கள் திடீர்த் தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்து ஒரு சிறுமியைப் பிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக ஆனாள்.  அந்தச் சிறுமி தன் எஜமானியிடம், “என் எஜமான் சமாரியாவில் இருக்கிற தீர்க்கதரிசியைப்+ போய்ப் பார்த்தால் நன்றாக இருக்கும்! இவருடைய தொழுநோயை அவர் குணப்படுத்திவிடுவார்”+ என்று சொன்னாள்.  அந்த இஸ்ரவேல் சிறுமி சொன்னதை ராஜாவிடம் அவர்* தெரிவித்தார்.  அப்போது சீரியா ராஜா, “உடனே புறப்பட்டுப் போங்கள்! இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்புகிறேன்” என்று சொன்னார். அதனால், 10 தாலந்து* வெள்ளியையும் 6,000 சேக்கல்* தங்கத்தையும் 10 புதிய உடைகளையும் எடுத்துக்கொண்டு நாகமான் புறப்பட்டுப் போனார்.  அவர் இஸ்ரவேலின் ராஜாவிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தார். அதில், “இந்தக் கடிதத்துடன் என் ஊழியர் நாகமானை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். அவருடைய தொழுநோயைக் குணப்படுத்துங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.  அதைப் படித்ததும் இஸ்ரவேலின் ராஜா தன் உடையைக் கிழித்துக்கொண்டு, “உயிரைக் கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் நான் என்ன கடவுளா?+ இந்த ஆளுக்கு வந்திருக்கிற தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்லி இவனை என்னிடம் அனுப்பியிருக்கிறானே! நீங்களே பாருங்கள், அவன் என்னை வம்புக்கு இழுக்கப் பார்க்கிறான்” என்று சொன்னார்.  இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்ட விஷயத்தை உண்மைக் கடவுளின் ஊழியரான எலிசா கேள்விப்பட்டார். உடனே, “நீங்கள் ஏன் உடையைக் கிழித்துக்கொண்டீர்கள்? தயவுசெய்து அவரை என்னிடம் அனுப்புங்கள். இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருப்பதை அவர் தெரிந்துகொள்ளட்டும்”+ என்று சொல்லி அனுப்பினார்.  அதனால், நாகமான் தன் குதிரைகளோடும் போர் ரதங்களோடும் எலிசாவின் வீட்டு வாசலில் போய் நின்றார். 10  ஆனால் எலிசா அவரிடம் ஓர் ஆளை அனுப்பி, “நீங்கள் போய் யோர்தானில்+ ஏழு தடவை+ முங்கியெழுங்கள். அப்போது, உங்களுடைய உடல் முன்புபோல் நன்றாகிவிடும். நீங்கள் சுத்தமாவீர்கள்” என்று சொல்லச் சொன்னார். 11  அதைக் கேட்டு நாகமான் பயங்கர கோபமடைந்து, அங்கிருந்து புறப்பட்டார். “அவர் என்னுடைய பக்கத்தில் வந்து நின்று, தன்னுடைய கடவுளான யெகோவா பெயரைச் சொல்லி வேண்டுவார்; தொழுநோய் இருக்கிற இடத்தில் கையை அப்படியும் இப்படியும் அசைத்துக் குணப்படுத்துவார் என்று நினைத்துதான் இங்கே வந்தேன். 12  இஸ்ரவேலில் ஓடுகிற அத்தனை ஆறுகளும் தமஸ்குவில்+ ஓடுகிற ஆப்னாவுக்கும் பர்பாருக்கும் ஈடாகுமா? நான் அவற்றில் முங்கியெழுந்து குணமாக முடியாதா?” என்று சொல்லிவிட்டுக் கோபத்துடன் கிளம்பிப் போனார். 13  அப்போது அவருடைய ஊழியர்கள் அவரிடம், “தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி வேறு ஏதாவது கஷ்டமான காரியத்தைச் செய்யச் சொல்லியிருந்தால், நீங்கள் செய்திருக்க மாட்டீர்களா? ‘ஆற்றில் முங்கியெழுங்கள், சுத்தமாவீர்கள்’ என்றுதானே உங்களிடம் சொன்னார்? இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே” என்று சொன்னார்கள். 14  உடனே நாகமான் உண்மைக் கடவுளின் ஊழியர் சொன்னபடி+ யோர்தான் ஆற்றுக்குப் போய், ஏழு தடவை முங்கியெழுந்தார். அப்போது, அவருடைய உடல் ஒரு சின்னப் பிள்ளையின் உடல் போல ஆனது.+ அவர் தொழுநோய் நீங்கி சுத்தமானார்.+ 15  பின்பு நாகமான் தன்னுடைய ஊழியர்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு உண்மைக் கடவுளின் ஊழியரைப் பார்க்கப் போனார்.+ அவரிடம், “இஸ்ரவேலின் கடவுள்தான் உண்மையான கடவுள். அவரைத் தவிர உலகத்தில் வேறு கடவுளே இல்லை என்பதை இப்போது தெரிந்துகொண்டேன்.+ தயவுசெய்து இந்த அடியேன் தரும் அன்பளிப்பை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். 16  அதற்கு எலிசா, “நான் சேவை செய்கிற யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இதை நான் வாங்க மாட்டேன்”+ என்று சொன்னார். நாகமான் எவ்வளவோ வற்புறுத்தியும் எலிசா வாங்க மறுத்துவிட்டார். 17  கடைசியில் நாகமான், “சரி, இங்கிருந்து இரண்டு கோவேறு கழுதைகள்* சுமக்கிற அளவுக்கு மண்ணை எடுத்துக்கொண்டு போக அடியேனுக்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள். இனிமேல் யெகோவாவைத் தவிர வேறெந்தக் கடவுளுக்கும் தகன பலியோ வேறெந்தப் பலியோ கொடுக்க மாட்டேன். 18  ஆனால், அடியேன் செய்கிற ஒரேவொரு காரியத்தை மட்டும் யெகோவா மன்னிக்க வேண்டும். ரிம்மோன் கோயிலுக்கு* போய் என் எஜமான் மண்டிபோட்டு வழிபடும்போது, நான் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும்; அப்போது, நானும் அங்கே மண்டிபோட வேண்டியிருக்கும். இப்படி ரிம்மோன் கோயிலில் நான் மண்டிபோடும்போது, அடியேனை தயவுசெய்து யெகோவா மன்னிப்பாராக” என்று சொன்னார். 19  அதற்கு எலிசா, “சமாதானமாகப் போங்கள்” என்று சொன்னார். நாகமான் அங்கிருந்து கிளம்பி கொஞ்சத் தூரம் போனதும், 20  உண்மைக் கடவுளின் ஊழியரான எலிசாவின்+ ஊழியன் கேயாசி,+ ‘சீரியாவிலிருந்து நாகமான்+ கொண்டுவந்த அன்பளிப்பை வாங்கிக்கொள்ளாமல் என் எஜமான் இப்படி அனுப்பிவிட்டாரே. நாகமான் பின்னால் ஓடிப்போய் எதையாவது வாங்காமல் விடமாட்டேன், இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை’* என்று சொல்லிக்கொண்டான். 21  நாகமானின் ரதத்தைப் பிடிக்க கேயாசி வேகமாக ஓடினான். பின்னால் யாரோ ஓடிவருவதைப் பார்த்ததும் நாகமான் தன்னுடைய ரதத்திலிருந்து இறங்கினார். கேயாசியிடம், “என்ன விஷயம், ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார். 22  அதற்கு கேயாசி, “பிரச்சினை ஒன்றுமில்லை. எஜமான்தான் என்னை உங்களிடம் அனுப்பிவைத்தார். ‘தீர்க்கதரிசிகளின் மகன்களில் இரண்டு இளைஞர்கள் இப்போதுதான் எப்பிராயீம் மலைப்பகுதியிலிருந்து வந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்க தயவுசெய்து ஒரு தாலந்து வெள்ளியும் இரண்டு புது உடைகளும் கொடுங்கள்’+ என்று சொல்லி அனுப்பினார்” என்றான். 23  அப்போது நாகமான், “அதற்கென்ன, இரண்டு தாலந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி ரொம்பவே வற்புறுத்தினார்.+ பின்பு, இரண்டு தாலந்து வெள்ளியையும் இரண்டு புது உடைகளையும் இரண்டு மூட்டைகளில் கட்டி தன்னுடைய ஊழியர்கள் இரண்டு பேரிடம் கொடுத்தார். அவர்கள் அந்த மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு முன்னால் போக, பின்னால் கேயாசி போனான். 24  ஓபேலுக்கு* வந்ததும், கேயாசி அந்த மூட்டைகளை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் போனதும், 25  தன்னுடைய எஜமானிடம் போய் நின்றான். அப்போது எலிசா, “எங்கே போய்விட்டு வருகிறாய், கேயாசி?” என்று கேட்டார். அதற்கு அவன், “அடியேன் எங்கேயும் போகவில்லையே”+ என்று சொன்னான். 26  அப்போது எலிசா, “உன்னைச் சந்திக்க ரதத்திலிருந்து அவர் இறங்கியது எனக்குத் தெரியாதென்று நினைத்தாயா? வெள்ளியையோ உடைகளையோ ஒலிவத் தோப்புகளையோ திராட்சைத் தோட்டங்களையோ ஆடுமாடுகளையோ வேலைக்காரர்களையோ வேலைக்காரிகளையோ வாங்கிக்கொள்வதற்கான காலமா இது?+ 27  நாகமானுக்கு வந்த தொழுநோய்+ உன்னையும் உன்னுடைய வம்சத்தையும் என்றென்றும் தொற்றிக்கொள்ளும்” என்று சொன்னார். அப்போதே அவனுக்குத் தொழுநோய் தொற்றியது, அவனுடைய உடல் வெண்பனியைப் போல் ஆனது;+ உடனே அவன் அங்கிருந்து போனான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தோல் நோய்.”
அநேகமாக, நாகமானைக் குறிக்கலாம்.
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்குகள்.
நே.மொ., “வீட்டுக்கு.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
சமாரியாவில் இருந்த இடம். ஒரு குன்றாகவோ கோட்டையாகவோ இருந்திருக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா