Skip to content

குடும்ப ஸ்பெஷல்

பாசத்தைக் காட்டுவது எப்படி?

பாசத்தைக் காட்டுவது எப்படி?

 காலம் போகப்போக, சில கணவன்-மனைவிக்கு இடையில் பாசம் குறைந்துகொண்டே போகிறது. உங்களுடைய வாழ்க்கையிலும் இதுதான் நடக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யலாம்?

 நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை

 திருமண பந்தம் பலப்பட பாசம் காட்டுவது ரொம்பவே முக்கியம். நம்முடைய உடல்நலத்தைக் கட்டிக்காப்பதற்கு, சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதும் எப்படி முக்கியமோ, அப்படித்தான் திருமண பந்தத்தைக் கட்டிக்காப்பதற்குப் பாசம் காட்டுவது முக்கியம். கல்யாணமாகி பல வருஷங்கள் ஆகியிருந்தால்கூட, தன்மேல் அன்பும் அக்கறையும் இருப்பதைத் தன்னுடைய துணை தொடர்ந்து வெளிக்காட்ட வேண்டும் என்று எல்லாரும் விரும்புவார்கள்.

 உண்மையான அன்பு சுயநலமாக நடந்துகொள்ளாது. உண்மையான அன்பு மற்றவர்களுடைய சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும். அதனால், ஒரு அன்பான துணை தனக்குத் தோன்றும்போது மட்டும் பாசத்தைக் காட்ட மாட்டார். தன்னுடைய துணைக்கு எப்போது பாசம் தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு அந்தச் சமயத்திலும் பாசத்தைக் காட்ட முயற்சி செய்வார்.

 பொதுவாகக் கணவர்களைவிட மனைவிகள்தான் பாசத்துக்கு அதிகமாக ஏங்குவார்கள். ஒரு கணவர் தன் மனைவிமேல் உயிரையே வைத்திருக்கலாம். ஆனால், வெறுமனே காலையிலோ ராத்திரியிலோ உடலுறவு வைத்துக்கொள்வதற்கு முன்போ பாசம் காட்டினால், கணவருக்கு நிஜமாகவே தன்மேல் பாசம் இருக்கிறதா என்ற சந்தேகம் மனைவிக்கு வந்துவிடும். அதனால், எல்லா சமயத்திலும் உங்களுடைய பாசத்தை வெளிக்காட்டுங்கள்.

 நீங்கள் செய்ய வேண்டியவை

 பாசமாகப் பேசுங்கள். “ஐ லவ் யூ,” “என் உயிரே நீதான்/நீங்கதான்” போன்ற வார்த்தைகளைச் சொன்னால் உங்கள் துணைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

 பைபிள் ஆலோசனை: “இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது.”​—மத்தேயு 12:34.

 டிப்ஸ்: உங்கள் பாசத்தை வார்த்தைகளில் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள், எழுதியும் கொடுங்கள். உதாரணத்துக்கு, கார்டு எழுதிக் கொடுங்கள், அல்லது இ-மெயிலிலோ ஃபோனிலோ மெசேஜ் அனுப்புங்கள்.

 பாசத்தை வெளிக்காட்டுங்கள். கட்டியணைப்பதன் மூலமோ, முத்தம் கொடுப்பதன் மூலமோ, வெறுமனே கைகளைக் கோர்த்துக்கொள்வதன் மூலமோகூட உங்கள் துணையின் மீது உங்களுக்கு உண்மையான பாசம் இருப்பதைக் காட்டலாம். மென்மையான ஸ்பரிசம்... கனிவான பார்வை... ஆகியவற்றின் மூலமும், அவ்வப்போது பரிசு கொடுப்பதன் மூலமும் உண்மையான அக்கறையைக் காட்டலாம். அதுமட்டுமல்ல, பைகளைத் தூக்கிக்கொள்வது... கதவைத் திறந்துவிடுவது... பாத்திரங்களைக் கழுவுவது... துணி துவைப்பது... அல்லது ஏதாவது சமைத்துக் கொடுப்பது... போன்ற உதவிகளை உங்கள் மனைவிக்குச் செய்யலாம். இதையெல்லாம் அவர்கள் வெறும் உதவியாகப் பார்க்க மாட்டார்கள், உங்கள் பாசத்தின் வெளிக்காட்டாகப் பார்ப்பார்கள்!

 பைபிள் ஆலோசனை: “உங்களுடைய சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் அன்பு காட்ட வேண்டும்.” ​1 யோவான் 3:18.

 டிப்ஸ்: கல்யாணத்துக்கு முன்பு எந்தளவு அன்பையும் பாசத்தையும் காட்டினீர்களோ அதேபோல் இப்போதும் காட்டுங்கள்.

 உங்கள் துணையோடு சேர்ந்து நேரம் செலவிடுங்கள். நீங்கள் இரண்டு பேரும் தனியாக நேரம் செலவிடும்போது உங்கள் திருமண பந்தம் பலப்படும். அதோடு, உங்கள் துணையோடு சேர்ந்து நேரம் செலவிடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவர் புரிந்துகொள்வார். ஆனால், பிள்ளைகள் இருந்தாலோ நிறைய வேலைகள் இருந்தாலோ உங்களுக்கென்று நேரத்தை ஒதுக்குவது பெரும்பாடாக இருக்கலாம். அப்படியென்றால், கொஞ்ச நேரமாவது நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து செலவிட முயற்சி செய்யலாம்; உதாரணத்துக்கு, நீங்கள் இரண்டு பேர் மட்டும் ‘வாக்கிங்’ போய்விட்டு வரலாம்.

 பைபிள் ஆலோசனை: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”​—பிலிப்பியர் 1:10.

 டிப்ஸ்: பிஸியாக இருக்கும் சில தம்பதிகள், தனியாக நேரம் செலவிடுவதற்காக வாரத்தில் ஒரு நாளை அல்லது வாரயிறுதி நாட்களை அவ்வப்போது ஒதுக்குகிறார்கள்.

 உங்கள் துணையைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். பாசத்தை எதிர்பார்க்கும் விஷயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். அதனால், ஒருவருக்கு ஒருவர் எப்படிப் பாசம் காட்ட வேண்டும்... இன்னும் அதிக பாசம் காட்ட வேண்டுமா... என்றெல்லாம் நீங்களும் உங்கள் துணையும் கலந்துபேசுங்கள். துணையின் தேவையைத் தெரிந்துகொண்ட பிறகு, அதைப் பூர்த்திசெய்ய கடினமாக முயற்சி செய்யுங்கள். நிலையான திருமண வாழ்க்கைக்குப் பாசத்தை வெளிக்காட்டுவது அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 பைபிள் ஆலோசனை: “அன்பு . . . சுயநலமாக நடந்துகொள்ளாது.”​—1 கொரிந்தியர் 13:4, 5.

 டிப்ஸ்: பாசம் காட்டும்படி உங்கள் துணையை வற்புறுத்தாதீர்கள். ‘என்னோட கணவர்/மனைவி என்மேல இன்னும் பாசமா நடந்துக்க நான் என்ன செய்யலாம்?’ என்று யோசியுங்கள்.