Skip to content

யெகோவாவின் சாட்சிகள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை?

தவறான கருத்துகள்

  தவறான கருத்து: இயேசுவை நம்பாததால்தான் யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை.

 உண்மை: நாங்கள் கிறிஸ்தவர்கள். இயேசு கிறிஸ்து மூலமாக மட்டுமே மீட்புக் கிடைக்கும் என்று நம்புகிறோம்.—அப்போஸ்தலர் 4:12.

  தவறான கருத்து: கிறிஸ்மஸ் கொண்டாடக் கூடாதென்று சொல்லிக் கொடுத்து குடும்பங்களில் பிரிவினையை ஏற்படுத்துகிறீர்கள்.

 உண்மை: குடும்பங்கள்மீது எங்களுக்கு ஆழ்ந்த அக்கறை இருக்கிறது; பைபிளைப் பயன்படுத்தி குடும்ப பந்தத்தைப் பலப்படுத்தவே நாங்கள் உதவுகிறோம்.

  தவறான கருத்து: கிறிஸ்மஸ் சீஸனில் தாராள குணத்தைக் காட்டுகிற சந்தோஷத்தையும், உலக சமாதானம் மற்றும் மனிதர்களுடைய பிரியத்தை அனுபவிக்கிற சந்தோஷத்தையும் நீங்கள் இழந்துவிடுகிறீர்கள்.

 உண்மை: நாங்கள் ஒவ்வொரு நாளுமே தாராள குணத்தைக் காட்டுவதற்கும், சமாதானமாக இருப்பதற்கும் முயற்சியெடுக்கிறோம். (நீதிமொழிகள் 11:25; ரோமர் 12:18) உதாரணத்திற்கு, எங்களுடைய சபைக் கூட்டங்களை நாங்கள் நடத்துகிற விதமும், நாங்கள் பிரசங்கிக்கிற விதமும் “இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று இயேசு சொன்ன அறிவுரைக்கு இசைவாகவே இருக்கிறது. (மத்தேயு 10:8) அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தின் மூலமாகத்தான் பூமியில் உண்மையான சமாதானம் வருமென்ற நம்பிக்கையைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.—மத்தேயு 10:7.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை?

  •   இயேசு தன்னுடைய மரண நாளைத்தான் அனுசரிக்கச் சொன்னார், பிறந்த நாளை அல்ல.—லூக்கா 22:19, 20.

  •   இயேசுவின் அப்போஸ்தலர்களும் ஆரம்பகால கிறிஸ்தவர்களும் கிறிஸ்மஸ் கொண்டாடவில்லை. “கி.பி. 243-க்குப் பின்புதான் கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆரம்பிக்கப்பட்டது” என நியு கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. அதாவது, கடைசி அப்போஸ்தலர் இறந்து நூறு ஆண்டுகளுக்கும்மேல் ஆன பிறகே ஆரம்பிக்கப்பட்டது.

  •   இயேசு டிசம்பர் 25-ல் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; அவர் பிறந்த தேதி பைபிளில் பதிவுசெய்யப்படவில்லை.

  •   கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் புறமத பழக்கவழக்கங்களும் சம்பிரதாயங்களும் வேரூன்றியிருப்பதால், இதைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்.—2 கொரிந்தியர் 6:17.

கிறிஸ்மஸ் கொண்டாடுவதை ஏன் பெரிய பிரச்சினையாக்குகிறீர்கள்?

 கிறிஸ்மஸ் கொண்டாட்டம் புறமதத்திலிருந்து ஆரம்பமாயிருக்கிறது என்றும், பைபிள் அதை ஆதரிப்பதில்லை என்றும் தெரிந்துகொண்ட பிறகுகூட நிறைய பேர் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள். அவர்கள் ஒருவேளை இப்படிக் கேட்கலாம்: கிறிஸ்மஸ் விஷயத்தில் ஊர் உலகத்தோடு ஒத்துப்போக வேண்டியதுதானே? ஏன் இதை இவ்வளவு பெரிய பிரச்சினையாக்குகிறீர்கள்?

 “சிந்திக்கும் திறனை” பயன்படுத்தி நன்கு யோசிக்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (ரோமர் 12:1, 2) சத்தியத்தின் மதிப்பை அது நமக்குக் கற்றுத்தருகிறது. (யோவான் 4:23, 24) மற்றவர்களுக்கு எங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புவது உண்மைதான், அதற்காக பைபிள் நியமங்களை நாங்கள் விட்டுக்கொடுப்பதில்லை—ஊர் உலகத்தின் வெறுப்பைச் சம்பாதித்தாலும்கூட!

 ‘கிறிஸ்மஸ் கொண்டாடப்போவதில்லை’ என்று தனிப்பட்ட விதத்தில் நாங்கள் தீர்மானம் எடுத்தாலும், இந்த விஷயத்தில் மற்றவர்கள் எடுக்கிற தீர்மானத்தை நாங்கள் மதிக்கிறோம். அவர்களுடைய கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை.