Skip to content

யெகோவாவின் சாட்சிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்களா?

யெகோவாவின் சாட்சிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்களா?

 ஆம், பேரழிவு சமயங்களில் யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் நிவாரண உதவி அளிக்கிறோம். யெகோவாவின் சாட்சிகளுக்கும், சாட்சிகளாக இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி அளிக்கிறோம். “எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும், முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய வேண்டும்” என்று கலாத்தியர் 6:10-ல் உள்ள பைபிள் அறிவுரைக்கு இசைவாகச் செயல்படுகிறோம். அதுமட்டுமல்ல, பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிற மனோபலத்தையும் ஆன்மீக பலத்தையும் கொடுக்க முயற்சிகள் எடுக்கிறோம்.—2 கொரிந்தியர் 1:3.

அமைப்பு

 பொதுவாக, பேரழிவுக்குப் பின்பு, அந்தப் பகுதியிலுள்ள சபைகளின் மூப்பர்கள், தங்களுடைய சபையைச் சேர்ந்த எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா, அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்றெல்லாம் தெரிந்துகொள்ள அவர்களைத் தொடர்புகொள்கிறார்கள். அதன்பின், தாங்கள் கேட்டு தெரிந்துகொண்ட தகவல்களையும், தங்களுடைய முதற்கட்ட நிவாரணப் பணிகளையும் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் கிளை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துகிறார்கள்.

 நிவாரணப் பணிகளுக்காக ஆகும் செலவுகளை அங்குள்ள சபைகளால் சமாளிக்க முடியாமல்போனால், தேவையான நிவாரண உதவிகளை அளிக்க யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவினர் ஏற்பாடு செய்கிறார்கள். முதல் நூற்றாண்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டதைப் போலவே இது இருக்கிறது. (1 கொரிந்தியர் 16:1-4) நிவாரண வேலைகளை ஒழுங்கமைப்பதற்கும் நிவாரணப் பணிகளைச் செயல்படுத்துவதற்கும் பேரழிவு நடந்த நாட்டிலுள்ள கிளை அலுவலகம் நிவாரணக் குழுக்களை நியமிக்கிறது. மற்ற பகுதிகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகளும் தங்களுடைய நேரத்தையும் வளங்களையும் கொடுத்து உதவி செய்கிறார்கள்.—நீதிமொழிகள் 17:17.

நிதி

 யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகிற நன்கொடைகள் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. (அப்போஸ்தலர் 11:27-30; 2 கொரிந்தியர் 8:13-15) பணத்தை எதிர்பார்க்காமல் வேலை செய்கிற வாலண்டியர்கள் இந்த நிவாரணப் பணியில் ஈடுபடுவதால், நிவாரண உதவித் தொகை முழுவதும் நிவாரணப் பணிக்கே செலவிடப்படுகிறது, நிவாரணப் பணியாளர்களுக்கு அல்ல. கிடைக்கிற எல்லா நன்கொடைகளையும் நாங்கள் மிகக் கவனமாகப் பயன்படுத்துகிறோம்.—2 கொரிந்தியர் 8:20.