Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

மிகுதியாக இருப்பது பற்றாக்குறையை ஈடுகட்டுகிறது

மிகுதியாக இருப்பது பற்றாக்குறையை ஈடுகட்டுகிறது

அக்டோபர் 1, 2020

 200-க்கும் அதிகமான நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் கடவுளைப் பற்றி சொல்லித் தருகிறார்கள்; மக்களுக்கு உதவியும் செய்கிறார்கள். ஆனால், அதில் சுமார் 35 நாடுகளில் இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் அவர்களுக்கு ஆகும் செலவுகளுக்குத் தேவையான நன்கொடைகள் கிடைக்கின்றன. அப்படியென்றால், மற்ற நாடுகள் அவர்களுடைய செலவுகளை எப்படிக் கவனித்துக்கொள்கிறார்கள்?

 உலகம் முழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் கடவுளை வணங்குவதற்கும் பிரசங்க வேலை செய்வதற்கும் தேவையான எல்லாவற்றையும் ஆளும் குழு பார்த்துக்கொள்கிறார்கள். அதனால், நன்கொடைகளை கவனமாக கணக்கிட்டு தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்துகிறார்கள். ஒரு கிளை அலுவலகத்துக்கு அதன் தேவைகளைவிட அதிகமான நன்கொடைகள் கிடைக்கும்போது என்ன செய்கிறார்கள்? அவர்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பின்பற்றுகிறார்கள். அந்தக் கிறிஸ்தவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக ‘அவர்களிடம் மிகுதியாக இருந்ததைக் கொடுத்து பற்றாக்குறையை ஈடுகட்டினார்கள்.’ (2 கொரிந்தியர் 8:14) அதேபோல், இன்றும் கிளை அலுவலகங்கள் அவர்களிடம் மிகுதியாக இருக்கும் தொகையைப் பற்றாக்குறை இருக்கும் நாடுகளுக்கு கொடுக்கிறார்கள்.

 இப்படி மற்ற கிளை அலுவலகங்கள் தங்களுக்கு உதவி செய்வதைப் பார்த்து சகோதரர்கள் என்ன நினைக்கிறார்கள்? உதாரணத்துக்கு, டான்ஸானியாவில் இருக்கும் மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர் 150 ரூபாயைவிட குறைவான பணத்தை வைத்துதான் ஒரு நாளை ஓட்டுகிறார்கள். அதனால், மற்ற கிளை அலுவலகங்கள் கொடுத்த நன்கொடையை வைத்துதான் அங்கிருக்கும் மெஃபிங்கே சபையின் ராஜ்ய மன்றத்தை புதுப்பித்தார்கள். அந்தச் சபையில் இருந்தவர்கள் இப்படி எழுதினார்கள்: “எங்களோட ராஜ்ய மன்றத்த புதுப்பிச்சதுக்கு அப்புறம் கூட்டங்களுக்கு வரவங்களோட எண்ணிக்க ரொம்ப அதிகமாயிருக்கு. யெகோவாவோட அமைப்புக்கும் உலகம் முழுசும் இருக்கிற சகோதரர்கள் செஞ்ச உதவிக்கும் நாங்க ரொம்ப நன்றியோட இருக்கோம். ஏன்னா, அவங்களாலதான் இந்த அழகான இடத்துல யெகோவாவ நாங்க சந்தோஷமா வணங்குறோம்.”

 கொரோனா தொற்றுநோயால் இலங்கையில் இருக்கும் சில சகோதரர்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். இமாரா ஃபெர்னான்டோவும் அவருடைய மகன் ஈனோஷும் இப்படிதான் கஷ்டப்பட்டார்கள். மற்ற நாடுகளிலிருந்து வந்த நன்கொடைகள் மூலம் இவர்களுக்கு உதவி கிடைத்தது. நன்றி சொல்வதற்காக அவர்கள் ஒரு கார்டை செய்து அதில், ”இந்த கஷ்டமான காலத்துலயும் எங்க மேல அன்பு காட்டி எங்களுக்கு உதவி செஞ்ச சகோதரர்களுக்கு ரொம்ப நன்றி. இவ்ளோ பெரிய குடும்பத்துல நாங்களும் ஒருத்தரா இருக்குறத நினைக்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த கடைசி நாட்கள்ல எல்லா சகோதர சகோதரிகளுக்கும் தொடர்ந்து யெகோவா உதவி செய்யணும்னு நாங்க ஜெபம் செஞ்சிகிட்டே இருக்கோம்“ என்று எழுதினார்கள்.

இமாரா மற்றும் ஈனோஷ் ஃபெர்னான்டோ

 சகோதர சகோதரிகள் எங்கே வாழ்ந்தாலும் சரி, தங்களிடம் இருப்பதை வைத்து மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஈனோஷும்கூட நன்கொடை கொடுப்பதற்காக ஒரு சின்ன உண்டியலைச் செய்து அதில் பணத்தைச் சேமித்து வைக்கிறான். இதே மாதிரியான தாராள குணத்தை மெக்சிகோவில் வாழும் க்வாடெலூபா அல்வேரெஸ் என்ற சகோதரி காட்டியிருக்கிறார். அங்கு இருக்கும் நிறைய பேருக்கு நிலையான ஒரு வருமானம் இல்லை. அல்லது ரொம்பக் குறைவான கூலிதான் கிடைக்கிறது. ஆனாலும் இந்தச் சகோதரி தன்னால் முடிந்த நன்கொடையைக் கொடுக்கிறார். “யெகோவா ரொம்ப நல்லவரு. மாறாத அன்ப காட்டுறவரு. இத நினைக்கும்போது என் மனசுல நன்றி பொங்குது. நான் கொடுக்குற நன்கொட மத்தவங்க கொடுக்குற நன்கொடைகளோட சேர்ந்து தேவையில இருக்குற சகோதர சகோதரிகளுக்கு கண்டிப்பா உதவி செய்யும்” என்று அவர் எழுதினார்.

 தேவையில் இருக்கும் இடங்களுக்குப் பண உதவி செய்யும் கிளை அலுவலகங்கள் அதைச் சந்தோஷத்தோடு செய்கின்றன. பிரேசில் கிளை அலுவலக குழுவில் சேவை செய்யும் சகோதரர் ஆன்தெனே கார்வாலு இப்படிச் சொல்கிறார்: ”பல வருஷங்களா எங்களுக்கு தேவையான பண உதவி மத்த நாடுகள்கிட்ட இருந்துதான் கிடச்சுது. இந்த உதவியினால ஊழிய வேலைய அதிகமா செய்ய முடிஞ்சுது. பிரஸ்தாபிகளோட எண்ணிக்கையும் ரொம்பவே அதிகமாயிருக்கு. இப்போ எங்களோட பொருளாதார நிலமை மாறியிருக்குறதுனால, தேவையில இருக்குற மத்த சகோதர சகோதரிகளுக்கு எங்களால உதவி செய்ய முடியுது. பிரேசில்ல இருக்குற சகோதரர்கள் உலக முழுசும் நடக்குற பிரசங்க வேலைக்கு என்னென்ன உதவி தேவப்படுதுனு பார்த்து அவங்களால முடிஞ்ச உதவிய செய்றாங்க.“

 தேவையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்? உலகளாவிய வேலைக்கு நன்கொடை கொடுப்பதன் மூலம் இதைச் செய்யலாம். ஆனால், கிளை அலுவலகங்களுக்கு நேரடியாக பணத்தை அனுப்ப மாட்டோம். அதற்குப் பதிலாக, சபைகளில் இருக்கும் ”உலகளாவிய வேலை“ என்ற பெட்டியில் பணத்தைப் போடலாம். இல்லையென்றால், இன்டர்நெட்டில் donate.dan124.com மூலமாகவும் அனுப்பலாம். நீங்கள் கொடுக்கும் எல்லா நன்கொடைகளுக்கும் ரொம்ப நன்றி.