Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சபைக் கூட்டங்கள்

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சபைக் கூட்டங்கள்

ஜூன் 26, 2020

 பொது இடங்களில் ஒன்றுகூடி வருவதை உலகம் முழுவதுமுள்ள நிறைய அரசாங்கங்கள் தடை செய்திருக்கின்றன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று அவை சட்டம் போட்டிருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில் உறுதியாக இருக்கிறார்கள். அதேசமயத்தில், பாதுகாப்பாகக் கூட்டங்களை நடத்துகிறார்கள். அதற்காக, ஜூம் செயலி போன்ற வீடியோ கான்ஃபரன்ஸ் செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

 பாதுகாப்போடும் தவறாமலும் கூட்டங்களை நடத்துவதற்காக, நன்கொடை பணத்தை வைத்து சபைகளுக்காக ஜூம் கணக்குகளை வாங்க ஆளும் குழு ஒப்புதல் அளித்தது. வீடியோ கான்ஃபரன்ஸ் கணக்குகள் வாங்க 1100-1500 ரூபாயோ ($15-$20) அதற்கும் அதிகமாகவோ செலவு செய்ய முடியாத சபைகளுக்கு இந்த முடிவு ரொம்பவே கைகொடுத்திருக்கிறது. முன்பு அந்த சபைகள் இலவச செயலிகளை அடிக்கடி பயன்படுத்தி வந்தன. ஆனால், அந்த செயலிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர்தான் கனெக்ட் செய்ய முடியும், அவை அந்தளவு பாதுகாப்பானவையும் கிடையாது. இப்போது அமைப்புக்குரிய ஜூம் கணக்குகளை வைத்திருக்கும் எல்லா சபைகளாலும், சுலபமாக செட்டிங் செய்துகொண்டு கூட்டங்களைப் பாதுகாப்பாக நடத்த முடிகிறது. அதோடு, ஒவ்வொரு கூட்டத்திலும் இன்னும் நிறைய பேரால் கலந்துகொள்ள முடிகிறது. இதுவரை 170-க்கும் அதிகமான நாடுகளில் உள்ள 65,000-க்கும் அதிகமான சபைகள் இந்தக் கணக்குகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன.

 இந்தோனேஷியாவில் சூலாவேசியின் வடக்கிலுள்ள மானாடோவில் இருக்கும் கைராகி சபை, இலவச செயலியைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு அமைப்புக்குரிய ஜூம் கணக்கைப் பயன்படுத்த ஆரம்பித்தது. அதைப் பற்றி சகோதரர் ஹாடி சான்டோசோ இப்படிச் சொல்கிறார்: “இப்பெல்லாம் ஒவ்வொரு கூட்டத்துக்கும் நிறைய தடவை லாகின் செய்ற பிரச்சினை இல்ல. அதனால எலெக்ட்ரானிக் கருவிகள பயன்படுத்த தெரியாத சகோதர சகோதரிகளாலகூட தொல்லை இல்லாம கூட்டங்கள்ல கலந்துக்க முடியுது.”

 ஈக்குவடாரில், குயாகுவிலுள்ள கையாகேன்ஸ் ஓஸ்டே சபையின் மூப்பரான லெஸ்டர் ஜிஜான் ஜூனியர் இப்படிச் சொல்கிறார்: “நிறைய சகோதர சகோதரிகள் வசதி இல்லாதவங்க. அதனால, முழு சபையும் கூட்டங்கள்ல கலந்துக்க வசதியா ஜூம் லைசன்ஸ் வாங்குறது சில சபைகளுக்கு நினைச்சுக்கூட பார்க்க முடியாத விஷயம். இப்போ, அமைப்போட ஜூம் கணக்கு இருக்குறதுனால, லிமிட் தாண்டி போயிடுவோமோனு பயப்படாம எவ்ளோ பேர வேணாலும் கூட்டங்களுக்கு கூப்பிட முடியுது.”

 ஜாம்பியாவில் லுஸாகாவிலுள்ள நிகிவெரேரே வட சபையின் மூப்பரான ஜான்சன் மவான்சா இப்படிச் சொல்கிறார்: “அமைப்போட ஜூம் கணக்குனால நம்ம சகோதர சகோதரிகளோட இன்னும் நெருக்கமாயிட்ட மாதிரி இருக்கு, யெகோவா நம்மமேல எவ்ளோ அன்பும் அக்கறையும் காட்டுறாருனும் புரியுது. இதத்தான் நிறைய சகோதர சகோதரிகள் திரும்பத் திரும்ப சொல்றாங்க.”

 நிவாரண வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்திலிருந்துதான் அமைப்புக்குரிய இந்தக் கணக்குகள் வாங்கப்படுகின்றன. அந்தப் பணம் எப்படிக் கிடைக்கிறது? உலகளாவிய வேலைக்காக மனப்பூர்வமாகக் கொடுக்கப்படும் நன்கொடைகளிலிருந்து கிடைக்கிறது. பெரும்பாலும் donate.dan124.com வெப்சைட் மூலம் இந்த நன்கொடைகள் கொடுக்கப்படுகின்றன. நீங்கள் தாராளமாகக் கொடுக்கும் நன்கொடைகளுக்காக நன்றி சொல்கிறோம். உங்கள் நன்கொடைகள், உலகம் முழுவதும் நடக்கிற மற்ற நிவாரண வேலைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.—2 கொரிந்தியர் 8:14.