Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதுமைக்கும் சாவுக்கும் காரணம்

முதுமைக்கும் சாவுக்கும் காரணம்

மனிதர்கள் சாக வேண்டும் என்று கடவுள் நினைக்கவே இல்லை. முதல் ஜோடியான ஆதாமும் ஏவாளும் பரிபூரணமாக, அதாவது எந்தக் குறையுமே இல்லாத மனதோடும் உடலோடும், படைக்கப்பட்டார்கள். அவர்களால் இன்றுவரை உயிர் வாழ்ந்திருக்க முடியும். எப்படிச் சொல்லலாம்? ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தைப் பற்றி ஆதாமிடம் யெகோவா சொன்ன விஷயத்தை வைத்து சொல்லலாம்.

ஆதாமிடம் கடவுள், “[அந்த] மரத்தின் பழத்தை நீ . . . சாப்பிட்டால், . . . கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என்று சொன்னார். (ஆதியாகமம் 2:17) ஆதாம் வயதாகி சாக வேண்டும் என்று கடவுள் நினைத்திருந்தால், இந்தக் கட்டளையை அவர் கொடுத்ததில் அர்த்தமே இல்லாமல் போயிருக்கும். அந்த மரத்தின் பழத்தைச் சாப்பிடாமல் இருந்தால், தனக்கு சாவே வராது என்று ஆதாமுக்குத் தெரிந்திருந்தது.

மனிதர்கள் சாக வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பமே இல்லை

அந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால்தான் உயிர்வாழ முடியும் என்ற நிலையில் ஆதாமும் ஏவாளும் இல்லை. ஏனென்றால், அந்தத் தோட்டத்தில் இன்னும் எத்தனையோ மரங்கள் இருந்தன. (ஆதியாகமம் 2:9) அந்த மரத்தின் பழத்தை அவர்கள் சாப்பிடாமல் இருந்திருந்தால், தங்களுக்கு உயிர் கொடுத்தவருக்குக் கீழ்ப்படிதலைக் காட்டியிருப்பார்கள். அதோடு, மனிதர்களுக்கு வழிகாட்ட கடவுளுக்கு இருக்கும் உரிமையை மதித்து நடந்திருப்பார்கள்.

ஆதாமும் ஏவாளும் ஏன் இறந்துபோனார்கள்?

ஆதாமும் ஏவாளும் ஏன் இறந்துபோனார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, நம் எல்லாருடைய வாழ்க்கையையும் பாதித்திருக்கிற ஒரு சம்பவத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கெட்ட எண்ணம்பிடித்த பிசாசாகிய சாத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தி ஒரு பொய்யைச் சொன்னான். பைபிள் இப்படிச் சொல்கிறது: “கடவுளாகிய யெகோவா படைத்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட பாம்பு மிகவும் ஜாக்கிரதையானதாக இருந்தது. அது அந்தப் பெண்ணிடம், ‘தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?’ என்று கேட்டது.”—ஆதியாகமம் 3:1.

அதற்கு ஏவாள், “‘தோட்டத்தில் இருக்கிற மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம். ஆனால், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தை நாங்கள் சாப்பிடக் கூடாது என்றும், தொடக் கூடாது என்றும் கடவுள் சொல்லியிருக்கிறார். மீறினால் நாங்கள் செத்துப்போவோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்’ என்றாள். அப்போது அந்தப் பாம்பு அவளிடம், ‘நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள். நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்’ என்று சொன்னது.” இப்படி, முதல் மனித ஜோடியிடம் யெகோவா பொய் சொன்னது போலவும், ஒரு நல்ல விஷயத்தை அனுபவிக்க முடியாதபடி செய்துவிட்டது போலவும் சாத்தான் பேசினான்.—ஆதியாகமம் 3:2-5.

அவன் சொன்னதை ஏவாள் நம்பிவிட்டாள். அவள் அந்த மரத்தையே உற்றுப் பார்த்தாள். அந்த மரத்தின் பழம் அழகாகத் தெரிந்தது! அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆசையாக இருந்தது. அதனால், அதைப் பறித்துச் சாப்பிட்டாள். “பிறகு, தன் கணவனோடு இருந்தபோது அவனுக்கும் கொஞ்சம் கொடுத்தாள், அவனும் சாப்பிட்டான்” என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 3:6.

ஆதாமிடம் கடவுள், “[அந்த] மரத்தின் பழத்தை நீ . . . சாப்பிட்டால், . . . கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என்று சொன்னார்.​—ஆதியாகமம் 2:17

தன்னுடைய அருமைப் பிள்ளைகள் வேண்டுமென்றே தனக்குக் கீழ்ப்படியாமல்போனதைப் பார்த்தபோது கடவுளுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! அவர் ஆதாமிடம், ‘நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் மண்ணுக்குப் போவாய். . . . நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்’ என்று சொன்னார். (ஆதியாகமம் 3:17-19) அதனால், “ஆதாம் மொத்தம் 930 வருஷங்கள் வாழ்ந்தபின் இறந்துபோனான்.” (ஆதியாகமம் 5:5) ஆதாம் பரலோகத்துக்கோ வேறு ஒரு இடத்துக்கோ போகவில்லை. யெகோவா அவனை மண்ணிலிருந்து உருவாக்குவதற்கு முன்பு எப்படி அவன் எங்குமே இல்லையோ, அப்படித்தான் இறந்த பிறகும் எங்குமே இல்லாமல் போய்விட்டான். அவன் உருவாக்கப்பட்ட மண்ணைப் போலவே உயிர் இல்லாதவனாக ஆகிவிட்டான். ஆம், மண்ணோடு மண்ணாகிவிட்டான்!

நமக்கு எப்படிப் பாவம் வந்தது?

ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனதால், பரிபூரணமான வாழ்க்கையையும் என்றென்றும் வாழும் வாய்ப்பையும் இழந்துவிட்டார்கள். அவர்களுடைய பாவம் அவர்களோடு நின்றுவிடவில்லை. அது ஒரு நோய்போல் அவர்களுடைய சந்ததிகளையும் தொற்றிக்கொண்டது. ரோமர் 5:12 இப்படிச் சொல்கிறது: “ஒரே மனிதனால் [ஆதாமினால்] பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”

பாவமும் மரணமும், ‘எல்லா ஜனங்கள்மேலும் இருக்கிற முக்காடு’ என்றும், ‘எல்லா தேசத்தாரையும் மூடியிருக்கிற கம்பளி’ என்றும் பைபிள் வர்ணிக்கிறது. (ஏசாயா 25:7) அவற்றிலிருந்து மனிதர்களால் தப்பிக்கவே முடிவதில்லை. பைபிள் சொல்வதுபோல், ‘ஆதாமினால் எல்லாரும் சாகிறார்கள்.’ (1 கொரிந்தியர் 15:22) அப்படியென்றால், அப்போஸ்தலன் பவுல் கேட்டது போலவே, ‘மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் நம்மைக் காப்பாற்றுவார்?’ என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லையா? உண்மையில், யாராவது நம்மைக் காப்பாற்ற முடியுமா?—ரோமர் 7:24.