Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

கிறிஸ்துவின் படைவீரனாக இருப்பதில் தீர்மானமாக இருந்தேன்

கிறிஸ்துவின் படைவீரனாக இருப்பதில் தீர்மானமாக இருந்தேன்

தோட்டாக்கள் என்னைச் சுற்றி பறந்தது. நான் மெதுவாக வெள்ளை கைக்குட்டையைக் காட்டினேன். துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருந்த படைவீரர்கள், நான் ஒளிந்திருந்த இடத்தைவிட்டு வெளியே வரும்படி கத்தினார்கள். உயிர் பிழைப்பேனா மாட்டேனா என்ற சந்தேகத்தில், மெதுவாக அவர்கள் பக்கத்தில் போனேன். நான் எப்படி இந்தச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டேன்?

அது 1926-ஆம் வருஷம்! கிரீஸ் நாட்டில் இருக்கும் கரிட்ஸா என்ற சிறிய கிராமம். என் அப்பா அம்மா கடின உழைப்பாளிகள். அவர்களுக்கு மொத்தம் 8 பிள்ளைகள். நான் 7-வது பிள்ளையாக இந்த உலகத்தில் அடியெடுத்து வைத்தேன்.

நான் பிறப்பதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பு, என் அப்பா அம்மா, ஜான் பெப்பாரிஸஸ் என்ற பைபிள் மாணாக்கரைச் சந்தித்தார்கள். அப்போது யெகோவாவின் சாட்சிகள், பைபிள் மாணாக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர், வைராக்கியமுள்ள ஒரு யெகோவாவின் சாட்சி, சரியான வாயாடியும்கூட! பைபிளைப் பயன்படுத்தி அவர் நன்றாக நியாயங்காட்டிப் பேசியது என் அப்பா அம்மாவுக்குப் பிடித்துப்போனதால், எங்கள் கிராமத்தில் நடந்த பைபிள் மாணாக்கர்களின் கூட்டத்துக்கு அவர்கள் போக ஆரம்பித்தார்கள். என் அம்மாவுக்கு யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. அவருக்குப் படிப்பறிவு இல்லையென்றாலும், பொருத்தமான எல்லா சமயங்களிலும் தனக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்வார். ஆனால், என் அப்பா மற்றவர்களின் குறைகளையே பார்த்ததால், கூட்டங்களுக்குப் போவதை படிப்படியாக நிறுத்திவிட்டார்.

எனக்கும் என்கூட பிறந்தவர்களுக்கும் பைபிள்மீது மரியாதை இருந்தது. ஆனால், வளர வளர நாங்கள் விளையாட்டுத்தனமாகவே இருந்தோம். 1939-ல், ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. அப்போது எங்கள் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம், எங்களை உலுக்கியது. எங்கள் பக்கத்து வீட்டில் என்னுடைய பெரியப்பா பையன் நிக்கெலெஸ் ஸாரஸ் குடியிருந்தார். அவர் அப்போதுதான் ஞானஸ்நானம் எடுத்திருந்தார். ராணுவத்தில் சேரும்படி கிரேக்க ராணுவம் அவரைக் கட்டாயப்படுத்தியது. ஆனால் அவர் ராணுவ அதிகாரிகளிடம், “நான் கிறிஸ்துவோட படைவீரன், என்னால சண்டை போட முடியாது!” என்று தைரியமாகச் சொன்னார். அப்போது அவருக்கு 20 வயதுதான்! ராணுவ நீதிமன்றம் அவரை விசாரித்து, 10 வருஷ சிறைத்தண்டனை கொடுத்தது. நாங்கள் எல்லாரும் ஆடிப்போய்விட்டோம்!

1941-ன் ஆரம்பத்தில், பிரிட்டன் படையும் மற்ற ராணுவ வீரர்களும் கிரீசுக்குள் நுழைந்தார்கள். அப்போது, நிக்கெலெஸ் சிறையிலிருந்து விடுதலையானார். அங்கிருந்து அவர் கரிட்ஸாவுக்குத் திரும்பி வந்தார். அப்போது என்னுடைய பெரிய அண்ணன் இலியெஸ், அவரிடம் பைபிளைப் பற்றி சரமாரியாக கேள்விகள் கேட்டார். அவர்கள் பேசுவதை நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு, இலியெசும், நானும், என்னுடைய தங்கை எஃப்மோர்ஃபியெவும் பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தோம். யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து தவறாமல் கூட்டங்களில் கலந்துகொண்டோம். அதற்கு அடுத்த வருஷம், நாங்கள் 3 பேரும் எங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுத்தோம். பிறகு, என்கூட பிறந்த மற்ற 4 பேரும் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள்.

1942-ல், கரிட்ஸா சபையில் மொத்தம் 9 இளம் சகோதர சகோதரிகள் இருந்தோம். எங்களுக்கு அப்போது 15-லிருந்து 25 வயதுதான்! கடும் சோதனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால், எங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காக, முடிந்தபோதெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பைபிள் படித்தோம், ராஜ்ய பாடல்களைப் பாடினோம், ஜெபம் செய்தோம்.

கரிட்ஸாவில் டிமெட்ரியஸ் மற்றும் அவருடைய நண்பர்கள்

உள்நாட்டுப் போர்

இரண்டாம் உலகப் போர் முடியும் சமயத்தில், கிரேக்க அரசாங்கத்துக்கு எதிராக கிரேக்க கம்யூனிஸ்ட்டுகள் கலகம் செய்தார்கள். அதனால், பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் கிராமங்களுக்கு வந்து, தங்களோடு சேர்ந்துகொள்ளும்படி மக்களைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் எங்கள் கிராமத்தில் சோதனை செய்தபோது, என்னையும், ஆன்டோனியோ சூக்காரிசையும், இலியெசையும், கடத்திக்கொண்டு போனார்கள். நாங்கள் கிறிஸ்தவர்கள் என்றும், நடுநிலைமை வகிப்பவர்கள் என்றும் சொல்லி அவர்களிடம் கெஞ்சினோம். ஆனால், எங்கள் கிராமத்திலிருந்து 12 மணி நேர பயணத் தூரத்திலிருந்த ஒலிம்பஸ் மலைவரை அவர்கள் எங்களை நடக்க வைத்து கூட்டிக்கொண்டு போனார்கள்.

கொஞ்ச நாட்களிலேயே, கொரில்லாக்களின் தொகுதியில் சேரச் சொல்லி ஒரு கம்யூனிஸ்ட் அதிகாரி எங்களுக்கு உத்தரவு போட்டார். உண்மைக் கிறிஸ்தவர்கள் மற்றவர்களோடு போர் செய்ய மாட்டார்கள் என்று நாங்கள் விளக்கினோம். அதைக் கேட்டதும் அந்த அதிகாரிக்குப் பயங்கர கோபம் வந்தது. அதனால், அவர் எங்களை ஜெனரலுக்கு முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார். அந்த ஜெனரலிடமும் நாங்கள் அதையே திரும்பச் சொன்னதும், “அப்படீனா, காயம்பட்டிருக்கிற எல்லாரையும் கழுதைமேல் வைச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோங்க” என்று சொன்னார்.

அதற்கு நாங்கள், “அரசாங்க ராணுவ அதிகாரிங்ககிட்ட நாங்க மாட்டிக்கிட்டா என்ன செய்றது? அவங்க எங்களையும் போராளிங்கனு நினைச்சிடுவாங்களே” என்று சொன்னோம். “அப்படீனா, போர்முனையில இருக்கிறவங்களுக்கு பிரெட் கொண்டுபோய் கொடுங்க” என்று அவர் சொன்னார். அதற்கு, “நாங்க கழுதைங்களோட இருக்குறத பார்த்து, ராணுவ அதிகாரிங்க எங்கள போர்க்களத்துக்கு ஆயுதங்களை கொண்டுபோகச் சொன்னா, என்ன செய்றது?” என்று கேட்டோம். அவர் ரொம்ப நேரம் யோசித்த பிறகு, “சரி, நீங்க ஆடுகள கவனிச்சுக்கோங்க. இந்த மலையிலயே தங்கி ஆடுகள மேய்ச்சிட்டிருங்க” என்று சொன்னார்.

அப்போது உள்நாட்டுப் போர் தீவிரமாக இருந்ததால், ஆடுகளைக் கவனித்துக்கொள்வதில் தவறு இல்லை என்று எங்களுடைய மனசாட்சி சொன்னது. இலியெஸ் வீட்டுக்கு மூத்த மகன் என்பதால், விதவையான எங்கள் அம்மாவை கவனித்துக்கொள்வதற்காக, ஒரு வருஷத்துக்குப் பிறகு அவரை விடுதலை செய்தார்கள். ஆன்டோனியோவுக்கு உடம்பு ரொம்ப முடியாமல் போனதால், அவரையும் விடுதலை செய்தார்கள். என்னை மட்டும் கைதியாக அங்கேயே வைத்துக்கொண்டார்கள்.

அதே சமயத்தில், கிரேக்க அரசாங்கம் கம்யூனிஸ்ட்டுகளை சுற்றிவளைத்துக் கொண்டிருந்தது. என்னைக் கைதியாகப் பிடித்துவைத்திருந்த அந்த கம்யூனிஸ்ட்டுகள், பக்கத்து நாடான அல்பேனியாவுக்கு மலைகள் வழியாகத் தப்பித்து ஓடினார்கள். எல்லையை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று கிரேக்க ராணுவ வீரர்கள் எங்களைச் சுற்றிவளைத்தார்கள். அப்போது, அந்தக் கலகக்காரர்கள் பயந்துபோய் தப்பித்து ஓடிவிட்டார்கள். கீழே சாய்ந்து கிடந்த ஒரு மரத்துக்குப் பின்னால் நான் ஒளிந்துகொண்டேன். அப்போதுதான், நான் ஒளிந்திருந்த அந்த இடத்தைவிட்டு வெளியே வரும்படி அந்த ராணுவ வீரர்கள் கத்தினார்கள். இதைப் பற்றித்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன்.

அந்தக் கம்யூனிஸ்ட்டுகள் என்னைக் கைதியாகப் பிடித்துவைத்திருந்ததை அந்த ராணுவ வீரர்களிடம் சொன்னேன். அதைப் பற்றி விசாரிக்க, வெரோயா என்ற நகரத்துக்குப் பக்கத்திலிருந்த ராணுவ முகாமுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். அது, பைபிள் காலங்களில் இருந்த பெரோயா நகரம்! அங்கே, ராணுவ வீரர்களுக்கு பதுங்கு குழிகளைத் தோண்டும்படி என்னிடம் சொன்னார்கள். நான் மறுத்ததால், குற்றவாளிகள் கடுங்காவலில் வைக்கப்பட்டிருந்த மாக்ரானிஸோஸ் என்ற திகிலூட்டும் தீவுக்கு என்னைக் கொண்டுபோகும்படி படைத் தலைமை அதிகாரி உத்தரவு போட்டார்.

திகிலூட்டும் தீவு

தண்ணீர் இல்லாத, மங்கிய, வறட்சியான மாக்ரானிஸோஸ் குன்று ஏட்டிக்கா கரையோரத்தில் அமைந்திருந்தது. ஏதன்சிலிருந்து இது சுமார் 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் இருந்தது. அந்தத் தீவின் நீளம் வெறும் 13 கி.மீ. தான்! (8 மைல்) அதன் அதிகபட்ச அகலம் வெறும் 21/2 கி.மீ. தான்! (11/மைல்) ஆனால், 1947-லிலிருந்து 1958 வரை கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள், ஏராளமான யெகோவாவின் சாட்சிகள் என எல்லாரையும் சேர்த்து 1,00,000-க்கும் அதிகமான சிறைக்கைதிகள் அங்கே இருந்திருக்கிறார்கள்.

1949-ன் ஆரம்பத்தில் நான் அங்கே போனபோது, அங்கிருந்த சிறைக்கைதிகள் பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். குறைவான பாதுகாப்பு இருந்த முகாமில், நூற்றுக்கணக்கான மற்ற ஆட்களோடு என்னையும் வைத்திருந்தார்கள். துணியாலான ஒரு கூடாரத்தின் தரையில்தான் நாங்கள் தூங்கினோம். அந்தக் கூடாரத்தில் 10 பேர்தான் இருக்க முடியும். ஆனால், நாங்கள் 40 பேர் அதில் தூங்கினோம். அசுத்தமான தண்ணீரைக் குடித்தோம், பெரும்பாலும் பயறு வகைகளையும், கத்திரிக்காய்களையும்தான் சாப்பிட்டோம். அங்கே எப்போதுமே காற்றும் புழுதியுமாக இருந்ததால், வாழ்க்கை ரொம்பவே கஷ்டமாக இருந்தது. சில கைதிகள் அடிக்கடி பாறைகளை உடைக்க வேண்டியிருந்தது. அதனால், உடலளவிலும் மனதளவிலும் அவர்கள் ரொம்பவே வேதனைப்பட்டார்கள். அதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆனால், நல்லவேளை எங்களுக்கு அந்த வேலை கொடுக்கப்படவில்லை!

நாடு கடத்தப்பட்ட மற்ற யெகோவாவின் சாட்சிகளோடு மாக்ரானிஸோஸ் தீவில்

ஒருநாள், கடற்கரையில் நடந்துபோய்க் கொண்டிருந்தபோது, மற்ற முகாமிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேரைப் பார்த்தேன். நாங்கள் சந்தித்துக்கொண்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மற்றவர்கள் எங்களைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக ரொம்ப ஜாக்கிரதையாகச் சந்தித்துக் கொண்டோம். மற்ற கைதிகளுக்குப் பிரசங்கிக்கும்போதும் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தோம். அவர்களில் சிலர், பிற்பாடு யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். அப்படிப் பிரசங்கித்ததும், இதயப்பூர்வமாக ஜெபம் செய்ததும், ஆன்மீக ரீதியில் பலமாக இருப்பதற்கு எங்களுக்கு உதவியது.

கடுமையான தண்டனை

பத்து மாத “மறுவாழ்வுக்கு” பிறகு, ராணுவ சீருடையைப் போடும்படி ராணுவ அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். நான் மறுத்ததால், அந்த முகாமின் தலைமை அதிகாரியிடம் என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அவரிடம், “நான் கிறிஸ்துவின் படைவீரனாக மட்டும்தான் இருப்பேன்” என்று எழுதிக்கொடுத்தேன். அவர் என்னை மிரட்டிவிட்டு, தனக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த அதிகாரியிடம் என்னை ஒப்படைத்தார். அந்த அதிகாரி, மத உடை அணிந்திருந்த ஒரு கிரேக்க தலைமை பிஷப்! அவருடைய கேள்விகளுக்கு நான் பைபிளிலிருந்து தைரியமாகப் பதில் சொன்னதைப் பார்த்து, “இவனை இழுத்துக்கிட்டு போங்க, இவன் ஒரு மதவெறியன்” என்று கோபமாகக் கத்தினார்.

அடுத்த நாள் காலையில், ராணுவ சீருடையைப் போடச்சொல்லி மறுபடியும் எனக்கு உத்தரவு போட்டார்கள். நான் மறுத்ததால், முஷ்டியால் குத்தினார்கள், லத்தியால் அடித்தார்கள். பிறகு, அந்த முகாமிலிருந்த மருத்துவமனைக்கு என்னைக் கூட்டிக்கொண்டுபோய், என்னுடைய எலும்புகள் உடையவில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு என்னுடைய கூடாரத்தில் கொண்டுபோய் விட்டார்கள். தொடர்ந்து 2 மாதங்களுக்கு இப்படிச் செய்தார்கள்.

விசுவாசத்தை நான் விட்டுக்கொடுக்காததால், ராணுவ வீரர்கள் வேறு விதமாக முயற்சி செய்தார்கள். என் கைகளைப் பின்னால் கட்டிவிட்டு, கயிறால் காட்டுமிராண்டித்தனமாக என் பாதத்தில் அடித்தார்கள். அந்த வலியிலும், இயேசு சொன்ன இந்த விஷயத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தேன்: “மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும், உங்களைத் துன்புறுத்தும்போதும் சந்தோஷப்படுங்கள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதியுங்கள், ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும்; உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் அப்படித்தான் துன்புறுத்தினார்கள்.” (மத். 5:11, 12) இப்படி அடிப்பதை நிறுத்தவே மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, நான் மயங்கிவிட்டேன்.

மயக்கம் தெளிந்தபோது, கடும் குளிர் நிறைந்த சிறைச்சாலை அறையில் நான் இருந்தேன். சாப்பாடு, தண்ணீர், போர்வை என எதுவுமே அங்கே இல்லை. ஆனாலும், நான் மன அமைதியோடு இருந்தேன். பைபிள் சொல்வதுபோல, “தேவசமாதானம்,” என்னுடைய ‘இதயத்தையும் யோசனைகளையும்’ காத்தது. (பிலி. 4:7, அடிக்குறிப்பு) அடுத்த நாள், ஒரு ராணுவ வீரர், எனக்கு சாப்பாடும் தண்ணீரும் ‘கோட்டும்’ கொடுத்தார். பிறகு, இன்னொரு ராணுவ வீரர், அவருடைய உணவுப்பொருள்களைக் கொடுத்தார். யெகோவா என்னை அக்கறையாகக் கவனித்துக்கொண்டதை என்னால் உணர முடிந்தது.

என்னைத் திருத்தவே முடியாது என்று அதிகாரிகள் நினைத்தார்கள். அதனால், ஏதன்சிலிருந்த ராணுவ நீதிமன்றத்துக்கு என்னைக் கொண்டுபோனார்கள். அங்கே எனக்கு 3 வருஷ சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது; மாக்ரானிஸோஸ் தீவுக்குக் கிழக்கே சுமார் 50 கி.மீ. (30 மைல்) தூரத்திலிருந்த யாரோஸ் கியாரோஸ் தீவுக்கு நான் அனுப்பப்பட்டேன்.

‘உங்களை நம்பலாம்’

யாரோசிலிருந்த சிறை, சிவப்பு நிற செங்கற்களால் கட்டப்பட்ட மிகப் பெரிய சிறையாக இருந்தது. அங்கே 5,000-க்கும் அதிகமான அரசியல் கைதிகள் இருந்தார்கள். கிறிஸ்தவ நடுநிலைமையைக் காத்துக்கொண்டதற்காக சிறையில் போடப்பட்ட 7 யெகோவாவின் சாட்சிகளும் அங்கே இருந்தார்கள். கடும் தடையுத்தரவு இருந்தாலும், பைபிள் படிப்பதற்காக நாங்கள் 7 பேரும் ரகசியமாகக் கூடினோம். தெரியாமல் கொண்டுவரப்பட்ட காவற்கோபுர பத்திரிகைகளும் எங்களுக்குத் தவறாமல் கிடைத்தன. நாங்கள் அதை எங்கள் கைப்பட நகலெடுத்து பிற்பாடு ஆராய்ச்சி செய்து படித்தோம்.

ஒருநாள் நாங்கள் ரகசியமாகப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சிறைக்காவலர் எங்கள்மேல் தடுக்கி விழுந்துவிட்டார்; எங்களிடமிருந்த பிரசுரங்களையும் பிடுங்கிக்கொண்டார். பிறகு, நாங்கள் துணைக் காப்பாளரிடம் கொண்டுபோகப்பட்டோம். எங்களுடைய தண்டனைக் காலம் நிச்சயம் நீட்டிக்கப்படும் என்று நினைத்தோம். ஆனால், அந்தத் துணைக் காப்பாளர், “நீங்க யாருனு எங்களுக்குத் தெரியும். நீங்க உறுதியா இருக்குறத நாங்க மதிக்கிறோம். உங்கள நம்பலாங்கிறதும் எங்களுக்குத் தெரியும். நீங்க உங்க வேலைக்குத் திரும்பவும் போகலாம்” என்று சொன்னார். அதுமட்டுமல்ல, எங்களுக்குச் சுலபமான வேலைகளையும் கொடுத்தார். எங்கள் இதயம் நன்றியால் பொங்கியது. கிறிஸ்தவ நடுநிலைமையோடு இருந்தால், சிறையில்கூட யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடியும்!

நாங்கள் நடுநிலைமையோடு இருந்ததால், இன்னும் நிறைய பலன்கள் கிடைத்தன. அந்தச் சிறைச்சாலையில் கணித பேராசிரியர் ஒருவரும் கைதியாக இருந்தார். அவர் எங்களுடைய நல்ல நடத்தையைக் கவனித்த பிறகு, நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி கேட்டார். 1951-ல் நாங்கள் விடுதலையானபோது, அவரும் விடுதலையானார். பிறகு, அவர் யெகோவாவின் சாட்சியாக ஞானஸ்நானம் எடுத்தார், முழுநேர ஊழியராகவும் ஆனார்.

நான் இன்னும் படைவீரன்தான்

என்னுடைய மனைவி ஜேனட்டோடு

நான் விடுதலையான பிறகு, கரிட்ஸாவிலிருந்த என்னுடைய வீட்டுக்குப் போனேன். பிற்பாடு, எங்கள் கிராமத்திலிருந்த நிறைய பேரோடு நானும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்பர்னுக்குக் குடிமாறினேன். அங்கே ஜேனட் என்ற ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவ சகோதரியைச் சந்தித்தேன்; பிறகு, அவரைக் கல்யாணம் செய்துகொண்டேன். எங்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் பிறந்தார்கள். பைபிள் சொல்கிற மாதிரி அவர்களை வளர்த்து ஆளாக்கினோம்.

இப்போது எனக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. இருந்தாலும், இன்னும் ஒரு மூப்பராகச் சேவை செய்கிறேன். கடந்த காலத்தில் ஏற்பட்ட உடல் காயங்களால், சில நேரங்களில் என்னுடைய உடம்பும் பாதமும் வலிக்கும். முக்கியமாக ஊழியத்துக்குப் போய்விட்டு வந்த பிறகு ரொம்ப வலிக்கும். இருந்தாலும், ‘கிறிஸ்துவின் படைவீரனாக’ இருப்பதற்கு நான் எப்போதும் தீர்மானமாக இருக்கிறேன்.—2 தீ. 2:3.