Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

நன்றியோடு இருப்பது

நன்றியோடு இருப்பது

மற்றவர்கள் நமக்கு செய்யும் உதவிகளுக்கு நாம் நன்றியோடு இருந்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதனால், நம் அன்றாட வாழ்க்கையில் இந்தக் குணத்தை காட்ட வேண்டும்.

நன்றியோடு இருப்பது சந்தோஷமாக இருக்க எப்படி உதவும்?

மருத்துவ துறை என்ன சொல்கிறது

ஹார்வர்ட் மென்டல் ஹெல்த் லெட்டர் என்ற புத்தகத்திலுள்ள ஒரு கட்டுரை இப்படி சொல்கிறது: “சந்தோஷமாக இருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நன்றியோடு இருக்கும் ஒருவர் வாழ்க்கையில் கிடைக்கும் நல்ல அனுபவங்களை ரசிப்பார், பிரச்சினைகளைத் தைரியமாக சமாளிப்பார், மற்றவர்களோடு நல்ல நட்பை வளர்ப்பார், ஆரோக்கியமாகவும் நம்பிக்கையான மனப்பான்மையோடும் இருப்பார்.”

பைபிள் என்ன சொல்கிறது

நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. “நன்றியுள்ளவர்களாய் இருங்கள்” என்று அப்போஸ்தலர் பவுல் எழுதினார். அவரும் நன்றியோடு நடந்துகொள்வதில் சிறந்த முன்மாதிரியாக இருந்தார். உதாரணத்துக்கு, அவர் சொன்ன செய்தியை மற்றவர்கள் நன்றாக கேட்டதற்காக அவர் “இடைவிடாமல் கடவுளுக்கு நன்றி” சொன்னார். (கொலோசெயர் 3:15; 1 தெசலோனிக்கேயர் 2:13) நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் வெறுமனே “தேங்க் யூ” என்று எப்போதாவது சொன்னால் மட்டும் போதாது. நாம் எப்போதுமே நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால், நமக்கு பொறாமை, கோபம் போன்ற குணங்கள் வந்துவிடும். அதனால், மற்றவர்கள் நம்மைவிட்டு விலகி போய்விடுவார்கள். அதோடு, நம் சந்தோஷத்தையும் இழந்துவிடுவோம்.

நம்மை படைத்த கடவுள் நன்றியோடு நடந்துகொள்வதில் நமக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார். சாதாரண மனிதர்களிடமே அவர் நன்றியோடு நடந்துகொள்கிறார். “உங்களுடைய உழைப்பையும் தமது பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் அல்ல” என்று எபிரெயர் 6:10 சொல்கிறது. அதாவது, நன்றி மறப்பதை அநீதியாக, அநியாயமாக நம் படைப்பாளர் கருதுகிறார்.

“எப்போதும் சந்தோஷமாக இருங்கள். எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்.”1 தெசலோனிக்கேயர் 5:16, 18.

நன்றியோடு இருப்பது மற்றவர்களோடு நமக்கு இருக்கும் நட்பை வளர்க்க எப்படி உதவும்?

நம் அனுபவம் என்ன காட்டுகிறது

நமக்கு யாராவது ஒருவர் அன்பளிப்பு கொடுத்தாலோ உதவி செய்தாலோ அல்லது நம்மிடம் அன்பாக பேசினாலோ நாம் அவர்களுக்கு மனதார நன்றி சொல்வோம். அப்போதுதான், நாம் அவர்களை உயர்வாக மதிக்கிறோம் என்றும் நன்றியோடு இருக்கிறோம் என்றும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். சிலசமயம் முன்பின் தெரியாதவர்கள் நமக்கு சின்ன சின்ன உதவிகளைச் செய்யலாம். ஒருவேளை அவர்கள் நமக்காக கதவை திறந்து விடலாம், அப்போது நாம் மனதார நன்றி சொல்லும்போது அவர்கள்கூட நம்மிடம் அன்பாக நடந்துகொள்வார்கள்.

பைபிள் என்ன சொல்கிறது

“கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (லூக்கா 6:38) அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை புரிந்துகொள்வதற்கு காது கேட்காத ஒரு சிறு பெண்ணின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவளுடைய பெயர் ரோஸ். அவள் தென் பசிபிக்கில் இருக்கும் வனுவாட்டு என்ற தீவில் வாழ்கிறாள்.

அவள், யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் கூட்டங்களுக்கு போனாள். ஆனால், கூட்டங்களில் சொல்லித்தரப்பட்ட எதுவுமே அவளுக்கு புரியவில்லை. ஏனென்றால், அவளுக்கும் சரி அங்கு இருந்தவர்களுக்கும் சரி சைகை மொழி தெரியாது. சைகை மொழி தெரிந்த ஒரு கணவன்-மனைவி அந்த சபையை சந்தித்தபோது ரோசுக்கு உதவி செய்ய சைகை மொழி வகுப்புகளை ஆரம்பித்தார்கள். இந்த உதவிக்காக ரோஸ் ரொம்ப நன்றியுள்ளவளாக இருந்தாள். “என் மேல இவ்ளோ அன்பா இருக்கிற ஃப்ரென்ட்ஸ் கிடைச்சத நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று அவள் சொன்னாள். அவள் இப்படி நன்றியோடு இருப்பதையும் கூட்டங்களில் நிறைய கற்றுக்கொள்வதையும் பார்த்ததே அந்த தம்பதிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவளோடு பேசுவதற்காக மற்றவர்கள் சைகை மொழி கற்றுக்கொண்டதற்காகவும் அவள் ரொம்ப நன்றியுள்ளவளாக இருக்கிறாள். —அப்போஸ்தலர் 20:35.

“எனக்கு நன்றிப் பலியைச் செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்.”சங்கீதம் 50:23, NW.

நன்றியோடு இருக்க நாம் எப்படி கற்றுக்கொள்ளலாம்?

பைபிள் என்ன சொல்கிறது

நம் எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. பைபிள் எழுத்தாளரான தாவீது, “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்” என்று கடவுளிடம் வேண்டினார். (சங்கீதம் 143:5) தாவீது கடவுளைப் பற்றி ஆழமாக யோசித்து பார்த்தார். கடவுள் தனக்கு செய்திருந்த விஷயங்களை வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் யோசித்து பார்த்ததால்தான் தாவீதால் கடவுளுக்கு நன்றியோடு இருக்க முடிந்தது.—சங்கீதம் 71:5, 17.

அதனால்தான், பைபிளில் இந்த அருமையான ஆலோசனை கொடுக்கப்பட்டு இருக்கிறது: “உண்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, மெச்சத்தக்கவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருங்கள்.” (பிலிப்பியர் 4:8) “தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருங்கள்” என்ற வார்த்தைகளில் இருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நல்ல விஷயங்களைப் பற்றி நாம் எப்போதும் ஆழமாக யோசிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அப்படிச் செய்யும்போது நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ▪ (g16-E No. 5)

“என் வாய் ஞானமான வார்த்தைகளைப் பேசும். என் இதயம் ஆழமான விஷயங்களைத் தியானிக்கும்.”சங்கீதம் 49:3.