Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பணத்தை சிக்கனமாக செலவு செய்வது எப்படி?

பணத்தை சிக்கனமாக செலவு செய்வது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

பணத்தை சிக்கனமாக செலவு செய்வது எப்படி?

“தேவையில்லாத பொருள்களை, அதுவும் விலைகூடின பொருள்களை வாங்கியே எப்போதும் காச கரியாக்குறேன், அதற்கு காரணம், அவை தள்ளுபடி விலையில் கிடைப்பதால்தான்.”​—⁠ஆனா, a பிரேசில்.

“சில சமயம் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து அதை செய்யலாம் இதை செய்யலாம்னு என்னை கூப்பிடுவாங்க, அதுக்கெல்லாம் எக்கச்சக்கமாக காசு செலவாகும்தான். என்ன பண்றது, ஃபிரெண்ட்ஸ்கூட ஜாலியா இருக்கத்தான் எனக்கும் ஆச. ‘என்கிட்ட காசு இல்லை, அதனால வரலை’ அப்படீன்னு சொல்ல முடியுமா?”​—⁠ஜோன், ஆஸ்திரேலியா.

செலவு செய்ய போதுமான பணம் உங்களிடம் இருந்ததே இல்லை என்று நினைக்கிறீர்களா? ‘எனக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் நிறைய பாக்கெட் மணி கிடைச்சா அந்த விளையாட்டு சாமானை வாங்கிடுவேன்,’ ‘என் சம்பளம் மட்டும் கொஞ்சம் அதிகமா இருந்தா எனக்கு “தேவையான” அந்த ஷூவை வாங்கிடுவேன்’ என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம். உங்களிடம் பணம் இல்லையே என்று கவலைப்படாமல், இருக்கிற பணத்தை வைத்து சிக்கனமாக செலவுசெய்ய கற்றுக்கொள்ளுங்களேன்.

நீங்கள் பெற்றோருடன் இருக்கும் ஓர் இளைஞர் என்றால், வீட்டைவிட்டு தனியாகப் பிரிந்துபோன பிறகு பணத்தைச் சிக்கனமாக செலவு செய்வதைப் பற்றிக் கற்றுக்கொள்ளலாம் என நீங்கள் நினைக்கலாம். இது எப்படி இருக்கிறதென்றால் பாராஷூட்டை பயன்படுத்த தெரியாமல் ப்ளேனிலிருந்து கீழே குதிப்பதுபோல் இருக்கிறது. ப்ளேனிலிருந்து குதித்த பிறகு, என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஒருவேளை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், குதிப்பதற்கு முன்பே பாராஷூட்டை எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் ஓரளவு கற்றுக்கொண்டால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்!

அதேவிதமாக, உங்கள் வாழ்க்கையில் பண நெருக்கடிகளை எதிர்ப்படுவதற்கு முன்பே சிக்கனமாக செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே சரியான நேரம். ‘பணம் கேடயம்’ என்கிறார் சாலொமோன் ராஜா. (பிரசங்கி 7:12, [சங்கத் திருவுரை ஆகமம் 7:13] தமிழ் கத்தோலிக்க பைபிள்) ஆனால் நீங்கள் அதை சிக்கனமாக செலவு செய்ய கற்றுக்கொண்டால்தான் அது உங்களுக்கு கேடயமாக அதாவது, பாதுகாப்பாக இருக்கும். அப்படிச் செய்யும்போது தன்னம்பிக்கை வளரும், உங்கள் அப்பா அம்மாவின் மரியாதையையும் சம்பாதிக்க முடியும்.

சிக்கனத்தைப் படிக்க ஆரம்பியுங்கள்

வீட்டுச் செலவுகளைப் பற்றி என்றாவது உங்கள் அம்மா அப்பாவிடம் கேட்டிருக்கிறீர்களா? கரெண்ட் பில், தண்ணீர் பில் என ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் கட்டுகிறார்கள் என்று தெரியுமா? பெட்ரோல், ரேஷன், வீட்டு வாடகை, கடன்கள் இவற்றிற்கெல்லாம் எவ்வளவு செலவாகிறது என்று தெரியுமா? ‘இதையெல்லாம் தெரிந்து நான் என்ன செய்ய போகிறேன்?’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். ஆனால், இந்தச் செலவுகளில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை மனதில் வையுங்கள். அதுபோக, நீங்கள் வீட்டைவிட்டு தனியாகப் பிரிந்து போனால், இந்த எல்லா பில்களையும் செலவுகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். அதனால் இப்பொழுதே அதையெல்லாம் தெரிந்துவைத்திருப்பது நல்லது. இந்தப் பில்களில் சிலவற்றை காட்டும்படி உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள். அவர்கள் எப்படி பட்ஜெட் போடுகிறார்கள் என்பதைச் சொல்லும்போது கவனமாகக் கேளுங்கள்.

‘புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைவான்’ என்கிறது பைபிளின் ஒரு பழமொழி. (நீதிமொழிகள் 1:5) இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆனா இவ்வாறு சொல்கிறாள்: “பட்ஜெட் போட அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்தார். குடும்பத்தில் வரவுகளை ஒழுங்காக நிர்வகிப்பது ரொம்ப முக்கியம் என்பதையும் அவர் விளக்கினார்.” ஆனாவின் அம்மாவோ அவளுக்கு பயனுள்ள மற்ற விஷயங்களைச் சொல்லித்தந்தார். “நாலு கடை ஏறி இறங்கி விலைகளை ஒத்து பார்த்து, பிறகுதான் எதையும் வாங்க வேண்டும். அப்படி செய்தால்தான் காசை மிச்சப்படுத்த முடியும்” என்பதை அம்மா கற்றுத்தந்தார். அதோடு, “சொற்ப பணத்திலேயே சகலத்தையும் சமாளித்துவிடும் சாமர்த்தியசாலி என் அம்மா” என்றும் அவள் கூறுகிறாள். இப்படி கற்றுக்கொண்டதால் ஆனாவிற்கு என்ன பயன்? “என் பணத்தை நானே பட்ஜெட் போடமுடியுது. இப்பல்லாம் நான் சிக்கனமா செலவு செய்றதால் தேவையில்லாத கடன் தொல்லை இருக்கிறதில்ல. அதனால் திருப்தியா நிம்மதியா இருக்கிறேன்” என்று அவள் சொல்கிறாள்.

சவால்களைக் கண்டுபிடியுங்கள்

பணத்தைச் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்று சொல்வது சுலபம், செய்வதுதான் கஷ்டம். முக்கியமாக, அப்பா அம்மாவுடன் இருக்கிற ஒருவருக்கு பாக்கெட் மணி கிடைக்கிறதென்றால் அல்லது அவரே சம்பாதிக்கிறவராக இருந்தால் இது ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால் உங்கள் பெற்றோரே கிட்டத்தட்ட எல்லா பில்களையும் கட்டிவிடுகிறார்கள். அதனால், உங்கள் இஷ்டம்போல் செலவு செய்வதற்கு உங்களிடம் போதிய பணம் கையில் இருக்கும். பணத்தைச் செலவழிப்பது உங்களுக்கு ஜாலியாக இருக்கலாம். இந்தியாவைச் சேர்ந்த பரெஷ் என்ற இளைஞன் இவ்வாறு சொல்கிறான்: “காச கரைப்பது எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல, அதில் எனக்கொரு த்ரில்.” இப்படியே உணருகிறாள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாரா என்ற இன்னொரு இளம் பெண். “பொருள்களை வாங்கி குவிப்பதில் எனக்கு கொள்ளைப் பிரியம்” என்கிறாள் அவள்.

உங்கள் நண்பர்களும்கூட அளவுக்குமீறி செலவு செய்யும்படி உங்களைத் தூண்டிவிடலாம். எலனா என்ற 21 வயது பெண் இவ்வாறு சொல்கிறாள்: “என் ஃபிரெண்ட்ஸுக்கு ஷாப்பிங் போவதே ஒரு பெரிய பொழுதுபோக்காக ஆகிவிட்டது. அவங்ககூட நான் ஜாலியாக ஷாப்பிங் போய்விட்டு வரணும்னா, காசு செலவாகுறதப் பத்தி கவலையேப்படக்கூடாது என்று என் ஃபிரெண்ட்ஸ் நினைக்கிறாங்க.”

ஃபிரெண்ட்ஸ்கூட சந்தோஷமாக இருக்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், ‘அவர்களோடு வெளியே போகும்போது என் பாக்கெட் நிறைய பணம் இருப்பதால் செலவு செய்கிறேனா? இல்ல, செலவு செய்தாக வேண்டுமே என்ற கட்டாயத்தினால் செலவு செய்கிறேனா?’ என்ற கேள்வியை உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். தங்களுடைய ஃபிரெண்ட்ஸின் மதிப்பு மரியாதையை சம்பாதிப்பதற்காக நிறைய பேர் பணத்தை செலவழிக்கிறார்கள். இந்தப் பழக்கம் பயங்கரமான பண நெருக்கடிக்குள் உங்களைத் தள்ளிவிடலாம். முக்கியமாக, உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கிறதென்றால் சொல்லவே தேவையில்லை. நிதி ஆலோசகர், ஸூஸி ஆர்மன் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “குணத்தினால் மற்றவர்களின் மதிப்பு மரியாதையை சம்பாதிக்க முயற்சி செய்யாமல் பணத்தினால் அதை சம்பாதிக்க முயற்சி செய்தால் நீங்கள் கிரெடிட் கார்டு கடன்களுக்கு இரையாகிவிடுவீர்கள்.”

கிரெடிட் கார்டின் லிமிட்டை மீறுவதற்கு பதிலாக அல்லது உங்கள் சம்பளத்தை ஒரே நாளில் தீர்த்துவிடுவதற்கு பதிலாக எலனா செய்ததுபோல நீங்களும் செய்ய முடியுமா என்று பாருங்களேன். “ஃபிரெண்ட்ஸ்கூட வெளியே போவதற்கு முன் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை முன்னாடியே கணக்குப்போடுவேன். என் சம்பளம் நேராக என் அக்கௌண்ட்டுக்கு போய்விடுவதால் எனக்கு தேவையான பணத்தை மட்டும் அதிலிருந்து எடுத்துப்பேன். அதுமட்டுல்ல, பணத்தை சிக்கனமாக செலவு செய்கிறவர்களோடுதான் ஷாப்பிங் போவேன். ஏன்னா, எதையும் பார்த்த மாத்திரத்தில் வாங்குவதற்கு அவங்க விடமாட்டாங்க, நாலு கடை ஏறி இறங்கி விலையை அலசி ஆராய்ந்த பிறகுதான் வாங்க விடுவாங்க.”​—நீதிமொழிகள் 13:20.

இல்லை என்று சொன்னால் புரிந்துகொள்ளுங்கள்

உங்களுக்கு ‘பாக்கெட் மணி’ கிடைக்காவிட்டாலும்கூட நீங்கள் சம்பாதிக்காவிட்டாலும்கூட வீட்டில் இருக்கும்போதே சிக்கனத்தைக் கற்றுக்கொள்ளலாம். சில சமயங்களில், நீங்கள் ‘காசு தாங்க’ என்றோ ‘அது வாங்கித்தாங்க,’ ‘இது வாங்கித்தாங்க’ என்றோ அப்பா அம்மாவிடம் கேட்கும்போது அவர்கள் ‘இல்லை’ என்று சொல்லலாம். ஏன் அப்படி சொல்கிறார்கள்? ஒருவேளை நீங்கள் கேட்பதை வாங்கித்தர அவர்களிடம் பணம் இல்லாததால் அப்படி சொல்லியிருக்கலாம். உங்களுக்கு அதை வாங்கித்தர அவர்களுக்கு ஆசை இருந்தாலும் ‘இல்லை’ என்று சொல்வதன் மூலம், சுய கட்டுப்பாடு காட்டுவதில் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள். ஆம், பணத்தைச் சிக்கனமாக செலவு செய்வதில் சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

சிலசமயங்களில், நீங்கள் கேட்கும் பொருளை வாங்கித் தருவதற்கு உங்கள் பெற்றோரிடம் பணம் இருந்தும் அவர்கள் ‘இல்லை’ என்று சொல்லலாம். அதனால், ‘ஏன்தான் அம்மா அப்பா இப்படி கஞ்சத்தனமாக இருக்கிறாங்களோ தெரியல?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அவர்கள் உங்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லித்தருவதற்காகவே, அதாவது, நீங்கள் கேட்கிற எல்லாவற்றையும் கொடுத்துவிட்டால் உங்களுக்கு சந்தோஷம் கிடைத்துவிடாது என்பதை புரியவைப்பதற்காகவே அவர்கள் அப்படி சொல்லியிருக்கலாம். இதைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை.”​—பிரசங்கி 5:10.

இந்த வசனம் எவ்வளவு உண்மை என்பது, கேட்பதையெல்லாம் வாங்கித்தருகிற பெற்றோருடைய பிள்ளைகளின் விஷயத்திலிருந்து தெரிகிறது. தங்களுக்கு என்னதான் கிடைத்தாலும் இப்படிப்பட்ட பிள்ளைகள் திருப்தியாக உணருவதில்லை. எவ்வளவுதான் வாங்கி கொடுத்தாலும், திருப்தியடையாமல் ‘இந்த ஒன்னு மட்டும் வாங்கி தாங்களேன்’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகள் பிற்காலத்தில் நன்றிகெட்டவர்களாக ஆகிவிடுவார்கள். ‘அடிமையை [அல்லது பிள்ளையை] இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால் (அதாவது, அவன் விருப்பப்படி எல்லாவற்றையும் கொடுத்தால்) அவன் பிற்காலத்தில் நன்றிகெட்டவனாவான்.’​—நீதிமொழிகள் 29:21, பொது மொழிபெயர்ப்பு.

காலம் பொன் போன்றது

காலம் பொன் போன்றது என்ற பழமொழி சில கலாச்சாரங்களில் சொல்லப்படுவது உண்டு. நேரத்தைச் செலவிட்டால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை இது வலியுறுத்திக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல நேரத்தை வீணாக்குவது பணத்தை வீணாக்குவதற்கு சமம் என்பதையும் காட்டுகிறது. இதே பழமொழியை பொன் காலத்தைப் போல் மதிப்புமிக்கது என மாற்றி சொன்னால்கூட உண்மையாகத்தான் இருக்கிறது. எப்படி? நீங்கள் பணத்தை வீணாக்கும்போது உண்மையில் அதைச் சம்பாதிப்பதற்குச் செலவிட்ட நேரத்தைத்தான் வீணாக்குகிறீர்கள். ஆகவே, உங்கள் பண செலவைக் குறைக்க கற்றுக்கொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தவும் கற்றுக்கொள்வீர்கள். அது எப்படி முடியும்?

எலனா சொல்வதைக் கேளுங்கள்: “என்னுடைய செலவுகளை நான் குறைக்கும்போது நிறைய சம்பாதிப்பதற்கான அவசியமும் குறையுது. பிறகு எனக்கு பொருத்தமான ஒரு பட்ஜெட்டை போட்டு அதன்படி செலவு செய்கிறேன். அதனால், எக்கச்சக்கமாக கடன் வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை, அவற்றை அடைப்பதற்கு ஓவர்டைம் செய்ய வேண்டிய அவசியமும் இருப்பதில்லை. என் நேரத்தையும் வாழ்க்கையையும் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்.” நீங்களும் அப்படியிருக்க ஆசைப்படுகிறீர்களா?

சிந்திப்பதற்கு

◼ சிக்கனமாக செலவு செய்ய கஷ்டமாக இருக்கிறதா? ஏன்?

◼பண ஆசையை நீங்கள் ஏன் தவிர்க்க வேண்டும்?​—⁠1 தீமோத்தேயு 6:9, 10.

[அடிக்குறிப்பு]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 12-ன் பெட்டி/படங்கள்]

நிறைய பணம் இருந்தால் பண நெருக்கடிகள் தீர்ந்துவிடுமா?

உங்களிடம் நிறைய பணம் இருந்தால்மட்டும் உங்களுடைய பணப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? “நிறைய சம்பாதித்தாலே நமக்கிருக்கிற பண பிரச்சினைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட முடியுமென நாம் அனைவரும் நினைக்கிறோம், ஆனால் எப்போதுமே அப்படியிருப்பதில்லை” என்கிறார் நிதி ஆலோசகரான ஸூஸி ஆர்மென்.

இந்த உதாரணத்தைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்: உங்களுக்கு காரை சரியாக ஓட்டத் தெரியவில்லை அல்லது கண்ணை மூடிக்கொண்டு ஓட்டும் பழக்கம் இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். அப்படியிருக்கையில், காரில் நிறைய பெட்ரோல் போட்டிருப்பதால் உங்களுக்கு ஆபத்து ஏற்படாது என்று நீங்கள் சொல்ல முடியுமா? போக வேண்டிய இடத்திற்கு பத்திரமாக போய்சேர முடியுமா? அதுபோலத்தான், சிக்கனமாக செலவு செய்வதும்கூட. நீங்கள் சிக்கனமாக செலவு செய்ய கற்றுக்கொள்ளவில்லை என்றால், அதிக பணம் இருந்தாலும் உங்களுக்கு பண நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும்.

[பக்கம் 13-ன் பெட்டி/படங்கள்]

செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்

போன மாதம் எவ்வளவு பணம் செலவு செய்தீர்கள்? என்னவெல்லாம் வாங்கினீர்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லையா? அப்படியென்றால் செலவுகள் உங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன் நீங்கள் அதைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதோ சில வழிகள்:

கணக்கு எழுதுங்கள். உங்களுக்கு வருகிற பணத்தையும் அது வருகிற தேதியையும் எழுதி வையுங்கள். நீங்கள் வாங்குகிற ஒவ்வொரு பொருளையும் அதன் விலையையும் எழுதி வையுங்கள். மாத இறுதியில் மொத்த வரவையும் செலவையும் கணக்கிடுங்கள். ஒரு மாதத்திற்காவது இப்படிச் செய்து பாருங்கள்.

பட்ஜெட் போடுங்கள். ஒரு பேப்பரில் கோடு கிழித்து மூன்று பகுதிகளாக பிரியுங்கள். அந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா வரவுகளையும் முதல் பகுதியில் எழுதுங்கள். திட்டமிட்டிருக்கும் செலவுகளை இரண்டாவது பகுதியில் எழுதுங்கள்; எழுதி வைத்தபடியே செலவு செய்யுங்கள். அவ்வப்போது, நீங்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருக்கிற காரியங்களுக்கு எவ்வளவு செலவிடுகிறீர்கள் என்பதை மூன்றாவது பகுதியில் எழுதுங்கள். எதிர்பாரா செலவுகளையும் எழுதி வையுங்கள்.

தேவைப்படும்போது பட்ஜெட்டில் மாற்றம் செய்யுங்கள். பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் சில செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிக பணத்தை சாப்பிடுகிறது, உங்களை கடனுக்குள் தள்ளிவிடுகிறது என்றால் உங்கள் பட்ஜெட்டில் மாற்றம் செய்யுங்கள். உங்கள் கடன்களை கட்டி முடியுங்கள். சிக்கனமாக செலவு செய்யுங்கள்.

[அட்டவணை]

இதை வெட்டியெடுத்துப் பயன்படுத்துங்கள்!

என் மாதாந்தர பட்ஜெட்

வருமானம் செலவுகளுக்கான பட்ஜெட் செலவிட்ட தொகை

‘பாக்கெட் மணி’ சாப்பாடு

part-time job துணிமணி

இதர செலவுகள் ஃபோன்

பொழுதுபோக்கு

நன்கொடைகள்

சேமிப்புகள்

மற்ற செலவுகள்

 

 

மொத்தம் மொத்தம் மொத்தம்

ரூ. ரூ. ரூ.

[படம்]

பணத்தை வீணாக்கும்போது அதை சம்பாதிக்க செலவிட்ட நேரத்தையும் சேர்த்து வீணாக்குகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்

[பக்கம் 11-ன் படம்]

பட்ஜெட் போடுவது எப்படி என்று உங்கள் பெற்றோரிடம் கேளுங்களேன்