Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடிமையா?

நான் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடிமையா?

இளைஞர் கேட்கின்றனர்

நான் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடிமையா?

இம்மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

“எஸ்எம்எஸ் அனுப்புவதென்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம், ஆசை தீர அனுப்பிக்கொண்டே இருப்பேன்! இந்த உலகில் இதைத் தவிர வேறு எதுவுமே முக்கியமல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. நான் அதற்கு அடிமையாகிவிட்டேன் என்றே சொல்லலாம்.”—ஆலன். *

“என்னுடைய ரூமில் வைக்க அம்மா ஒரு டிவி வாங்கித் தந்தார்கள், எனக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! ராத்திரி முழுக்க கொட்ட கொட்ட விழித்திருந்து டிவி பார்த்தேன். குடும்பத்தார்... நண்பர்கள் என எல்லாரையும் மறந்து டிவியே கதி என்று கிடந்தேன்.”—ட்ரீஸா.

“கொஞ்ச காலத்துக்கு... நான் எங்கே இருந்தாலும் சரி என்ன செய்துகொண்டிருந்தாலும் சரி, என்னுடைய வெப் பேஜில் யாராவது எதையாவது ‘போஸ்ட்’ செய்திருப்பார்களோ என்றே சதா யோசித்துக்கொண்டிருந்தேன். நடுராத்தியில் விழிப்பு வந்தால், உடனடியாக ‘இன்டர்நெட் முன்னாடி உட்கார்ந்திடுவேன். கொஞ்ச நேரம் கிடைத்தால்கூட, என்னுடைய ஆன்லைன் டைரியில் புதுப்புது தகவல்களை எழுதிவிடுவேன்.”—அன்னா.

இம்மூவரில் யார் ஏதோவொரு எலெக்ட்ரானிக் சாதனத்துக்கு அடிமைப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்வீர்கள்?

❑ ஆலன் ❑ ட்ரீஸா ❑ அன்னா

உங்களுடைய அப்பா-அம்மா பருவ வயதில் இருந்தபோது முக்கியமாக டிவியும் ரேடியோவும்தான் எலெக்ட்ரானிக் மீடியாவாக இருந்தன. அப்போதெல்லாம், ஃபோன் என்ற ஒன்று இருந்தாலும் அதில் பேச மட்டும்தான் முடியும்; அது ஓர் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இதெல்லாம் பழைய ஃபேஷன் என்று சொல்லத் தோன்றுகிறதா? அன்னா அப்படித்தான் சொல்கிறாள்: “என்னோட அப்பா-அம்மா சின்னப் பிள்ளைகளாக இருந்தபோது, தொழில்நுட்பம் இந்தளவுக்கு வளரவில்லை; அதனால், செல் ஃபோனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையே இப்போதுதான் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்!”

இன்று... நீங்கள் வைத்திருக்கிற கையடக்கமான ஒரு செல் ஃபோனில் என்னவெல்லாம் செய்யலாம்? யாருடன் வேண்டுமானாலும் பேசலாம், பாட்டு கேட்கலாம், படம் பார்க்கலாம், கேம்ஸ் விளையாடலாம், நண்பர்களுக்கு ஈ-மெயில் அனுப்பலாம், ஃபோட்டோ எடுக்கலாம், ஏன், இன்டர்நெட்டைக்கூட அலசலாம். கம்ப்யூட்டர், செல் ஃபோன், டிவி, இன்டர்நெட் என எல்லாமே சிறுவயதுமுதல் உங்களுக்கு அத்துப்படியாக இருப்பதால் அவற்றை எப்போதும் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லையென நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் அப்பாவும் அம்மாவும் நீங்கள் அவற்றிற்கு அடிமையாகிவிட்டதாக நினைத்து கவலைப்படலாம். அதைப் பற்றி அவர்கள் உங்களிடம் சொன்னால், ‘சுத்தப் பட்டிக்காடு’ என்று முத்திரை குத்தி அவர்கள் சொல்வதை ஒதுக்கித் தள்ளிவிடாதீர்கள். “ஒருவன் ஒரு விஷயத்தை முழுமையாய்க் கேட்பதற்கு முன்பே கருத்து சொன்னால், அது அவனுடைய முட்டாள்தனத்தைக் காட்டும்” என்று ஞானியான சாலொமோன் ராஜா சொன்னார்.—நீதிமொழிகள் 18:13, NW.

‘இதற்குப் போய் அப்பா-அம்மா கவலைப்படுகிறார்களே’ என்று நினைக்கிறீர்களா? அப்படியானால், எந்த எலெக்ட்ரானிக் மீடியாவுக்காவது நீங்கள் அடிமைப்பட்டிருக்கிறீர்களா என்பதை அறிந்துகொள்ள பின்வரும் விஷயங்களை வைத்து உங்களையே சோதித்துப் பாருங்கள்.

‘நான் அடிமைப்பட்டிருக்கிறேனா?’

அடிமைப்பட்டிருத்தல் என்பதற்கு ஓர் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு விளக்கமளிக்கிறது: “ஒரு பழக்கத்தின் தீய விளைவுகளைப் பற்றித் தெரிந்திருந்தாலும் அதை விட்டுவிட முடியாமல் அல்லது விட்டுவிட மனமில்லாமல் மிதமிஞ்சி ஈடுபடுவது.” இந்த விளக்கத்தின்படி பார்த்தால், ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மூன்று இளைஞர்களும் எலெக்ட்ரானிக் மீடியாவுக்கு அடிமைப்பட்டிருக்கிறார்கள் அல்லது அடிமைப்பட்டிருந்தார்கள் என்றே தெரிகிறது. அப்படியானால், நீங்கள்...? கீழே... என்ஸைக்ளோப்பீடியா கொடுக்கிற விளக்கம் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது; அதோடு, உங்களைப் போன்ற சில இளைஞர்கள் சொல்கிற கருத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன; அவற்றை வாசித்துவிட்டு, நீங்களும் அதுபோல் எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா அல்லது செய்திருக்கிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள். பிறகு, உங்கள் பதில்களை எழுதுங்கள்.

மிதமிஞ்சி ஈடுபடுதல். “நான் மணிக்கணக்காக உட்கார்ந்து எலெக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடுவேன். அதனால், தூக்கத்தைத் தொலைத்தேன், மற்றவர்களோடு அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். என் குடும்பத்தாரோடு ஒட்டாமல் கொள்ளாமல் விளையாட்டைப் பற்றிய யோசனையிலேயே மூழ்கியிருந்தேன்.”—ஆன்ட்ரூ.

டிவி, இன்டர்நெட், செல்போன்... போன்றவற்றிற்காக ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் செலவிடுவது சரியென நீங்கள் நினைக்கிறீர்கள்? ______

நீங்கள் எவ்வளவு நேரம் செலவிட வேண்டுமென உங்கள் அப்பா-அம்மா நினைக்கிறார்கள்? ______

எஸ்எம்எஸ் அனுப்ப, டிவி பார்க்க, எலெக்ட்ரானிக் கேம்ஸ் விளையாட, வெப் சைட்டில் படங்களையும் குறிப்புகளையும் ‘அப்லோட்’ செய்ய என ஒவ்வொரு நாளும் மொத்தம் எத்தனை மணிநேரத்தை நீங்கள் செலவிடுகிறீர்கள்? ______

நீங்கள் எழுதிய பதில்களைப் பார்த்துவிட்டு இப்போது சொல்லுங்கள்; எலெக்ட்ரானிக் சாதனங்களை நீங்கள் மிதமிஞ்சி உபயோகிக்கிறீர்களா?

❑ ஆம் ❑ இல்லை

விட்டுவிட முடியாமல் அல்லது விட்டுவிட மனமில்லாமல் இருத்தல். “நான் எப்போதும் எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டிருப்பதைப் பார்த்து, ‘நீ இதே வேலையாக இருக்கிறாய்’ என்று என் அப்பா-அம்மா சொல்கிறார்கள். ஆனால், என் வயது பிள்ளைகளோடு ஒப்பிட்டால் ‘நான் எஸ்எம்எஸ் அனுப்புவது ஒன்றுமேயில்லை.’ என் பெற்றோரோடு ஒப்பிட்டால் நான் அனுப்புவது ஜாஸ்திதான். அதற்காக, ஆப்பிளை ஆரஞ்சோடு ஒப்பிட முடியுமா? அவர்கள் வயது 40, என் வயதோ 15.”—ஆலன்.

ஏதாவதொரு எலெக்ட்ரானிக் சாதனத்தை நீங்கள் அளவுக்கதிகமான நேரம் பயன்படுத்துவதாக உங்கள் அப்பா அம்மாவோ நண்பர்களோ சொல்லியிருக்கிறார்களா?

❑ ஆம் ❑ இல்லை

அதை அளவோடு பயன்படுத்த உங்களுக்கு மனமில்லையா அல்லது அப்படிப் பயன்படுத்த உங்களால் முடியவில்லையா?

❑ ஆம் ❑ இல்லை

தீய விளைவுகள். “என்னுடைய நண்பர்கள் எப்போது பார்த்தாலும் எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள், வண்டி ஓட்டுகிற போதும்கூட அனுப்பிக்கொண்டிருப்பார்கள். அது எவ்வளவு ஆபத்தானது!”—ஜூலி.

“எனக்கு முதன்முதலில் செல் ஃபோன் கிடைத்தபோது எப்போது பார்த்தாலும் யாருக்காவது ஃபோன் செய்துகொண்டிருந்தேன் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டிருந்தேன். வேறு எதிலும் எனக்கு நாட்டம் இருக்கவில்லை. அதனால், என் குடும்பத்தாரோடு கலகலப்பாக இருக்க முடியாமல் போனது, என் நண்பர்கள் சிலரோடு வைத்திருந்த நட்பும் பறிபோனது. இப்போது என் நண்பர்கள் சிலர் அதே மாதிரி இருக்கிறார்கள்; அவர்களுடன் உட்கார்ந்து நான் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் அடிக்கடி ‘கொஞ்சம் இரு. எஸ்எம்எஸ் வந்திருக்கு, பதில் அனுப்பிடறேன்’ என்று சொல்கிறார்கள். அவர்களுடன் நான் நெருங்கிப் பழகாததற்கு அது ஒரு காரணம்.”—ஷெர்லி.

நீங்கள் எப்போதாவது வண்டி ஓட்டும்போதோ... டீச்சர் பாடம் நடத்தும்போதோ... எஸ்எம்எஸ் வாசித்திருக்கிறீர்களா அல்லது அனுப்பியிருக்கிறீர்களா?

❑ ஆம் ❑ இல்லை

உங்கள் குடும்பத்தாரோடோ நண்பர்களோடோ பேசிக்கொண்டிருக்கும்போது... ஈ-மெயில், ‘போன் கால்’ அல்லது எஸ்எம்எஸ்ஸுக்குப் பதிலளிப்பதற்காக இடையிடையே பேச்சை நிறுத்திவிடுகிறீர்களா?

❑ ஆம் ❑ இல்லை

எலெக்ட்ரானிக் சாதனங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் உங்களுக்குப் போதுமான தூக்கம் கிடைப்பதில்லையா அல்லது படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையா?

❑ ஆம் ❑ இல்லை

எல்லாவற்றிலும் அளவோடு இருக்க...

கம்ப்யூட்டர், செல்போன் என எந்த எலெக்ட்ரானிக் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தினாலும் சரி... பின்வரும் நான்கு கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்திமதியைப் பின்பற்றுங்கள்; அதோடு, செய்ய வேண்டியது... செய்யக்கூடாதது... என்ற பகுதியிலுள்ள எளிய ஆலோசனைகளையும் பின்பற்றுங்கள்; அப்படிச் செய்தால், ஆபத்தை விலைக்கு வாங்க மாட்டீர்கள், எல்லாவற்றிலும் அளவோடு இருப்பீர்கள்.

1. எப்படிப்பட்ட தகவலைப் பகிர்ந்துகொள்கிறேன்? “ஒழுக்கமான, பாராட்டுக்குரிய காரியங்களால், அதாவது உண்மையான, கண்ணியமான, நேர்மையான, சுத்தமான, விரும்பத்தக்க, மெச்சத்தக்க காரியங்களால், உங்கள் மனதை நிரப்புங்கள்.”—பிலிப்பியர் 4:8, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.

செய்ய வேண்டியது: நண்பர்களையும் குடும்பத்தாரையும் தொடர்புகொண்டு அவர்களுடன் பயனுள்ள செய்திகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 25:25; எபேசியர் 4:29.

செய்யக்கூடாதது: தீங்கு விளைவிக்கிற கிசுகிசுக்களைப் பரப்பாதீர்கள், ஆபாசமான எஸ்எம்எஸ்களையோ படங்களையோ அனுப்பாதீர்கள், அசிங்கமான வீடியோ காட்சிகளையோ நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்.—கொலோசெயர் 3:5; 1 பேதுரு 4:15.

2. எப்போது பயன்படுத்துகிறேன்? “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு.”—பிரசங்கி 3:1.

செய்ய வேண்டியது: ‘ஃபோன் செய்ய... எஸ்எம்எஸ் அனுப்ப... டிவி பார்க்க... வீடியோ கேம்ஸ் விளையாட... என ஒவ்வொன்றுக்கும் திட்டவட்டமான நேரத்தை ஒதுக்குங்கள். சபை கூட்டங்கள் போன்ற முக்கியமான சமயங்களில் அதற்கு மதிப்பு கொடுத்து உங்கள் ஃபோனை ஆஃப் செய்து வையுங்கள். அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் எஸ்எம்எஸ்ஸுக்கு நீங்கள் பதில் அனுப்பிக்கொள்ளலாம்.

செய்யக்கூடாதது: நண்பர்களுடன், குடும்பத்தாருடன் செலவிடுவதற்கு... படிப்பதற்கு... ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கு... என நீங்கள் ஒதுக்கியிருக்கிற நேரத்தில் எலெக்ட்ரானிக் சாதனங்களை உபயோகிக்காதீர்கள்.—எபேசியர் 5:15-17; பிலிப்பியர் 2:4.

3. யாருடன் சகவாசம் வைக்கிறேன்? “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்.”—1 கொரிந்தியர் 15:33.

செய்ய வேண்டியது: நல்ல பழக்கங்களை வளர்க்கும்படி உங்களை ஊக்குவிக்கிறவர்களோடு நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துங்கள்.—நீதிமொழிகள் 22:17.

செய்யக்கூடாதது: உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்; ஈ-மெயில், எஸ்எம்எஸ், டிவி, வீடியோ அல்லது இன்டர்நெட் மூலமாக நீங்கள் யாருடன் பழகுகிறீர்களோ அவர்களுடைய நெறிகளும், பேச்சும், எண்ணமும் உங்களைத் தொற்றிக்கொள்ளும்.—நீதிமொழிகள் 13:20.

4. எவ்வளவு நேரம் செலவிடுகிறேன்? ‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.’—பிலிப்பியர் 1:10.

செய்ய வேண்டியது: எலெக்ட்ரானிக் சாதனங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் எனக் குறித்து வையுங்கள்.

செய்யக்கூடாதது: நீங்கள் ஏதோவொரு எலெக்ட்ரானிக் சாதனத்தில் அதிக நேரம் செலவிடுவதாக உங்கள் நண்பர்களோ அப்பா அம்மாவோ சொன்னால் அதை அலட்சியம் செய்யாதீர்கள்.—நீதிமொழிகள் 26:12.

எலெக்ட்ரானிக் சாதனங்களை அளவோடு பயன்படுத்துவதைப் பற்றி முன்பு குறிப்பிடப்பட்ட ஆன்ட்ரூ சரியாகவே இவ்வாறு சொல்கிறான்: “எலெக்ட்ரானிக் மீடியாவைப் பயன்படுத்தும்போது ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால், அதெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். என் குடும்பத்தாரையும் நண்பர்களையும் என்னிடமிருந்து பிரிக்க தொழில்நுட்பத்திற்கு இடங்கொடுக்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.” (g11-E 01)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வேறு சில கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்பு]

^ இக்கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]

உங்கள் சகாக்கள் சொல்வது

என் அப்பா-அம்மா என்னிடம் ‘நீ எப்போது பார்த்தாலும் இப்படி செல் ஃபோனும் கையுமாக இருந்தால், ஒருநாள் உன் கைகளை செல் ஃபோனோடு சேர்த்து ஒட்ட வைக்கத்தான் போகிறோம்!’ என்று சொல்வார்கள். ஏதோ கிண்டலாகச் சொல்கிறார்கள் என்று முதலில் நினைத்தேன், ஆனால் போகப் போகத்தான் புரிந்தது அவர்கள் விளையாட்டுக்குச் சொல்லவில்லை என்பது. இப்போது நான் முன்புபோல அந்தளவுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதில்லை, அதனால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்!

இன்டர்நெட்டில் மெஸேஜ் வந்ததும் உடனுக்குடன் பார்க்கத் துடித்தேன். அதனால் நான் சரிவர ஹோம்வர்க்கும் செய்யவில்லை, பாடங்களையும் படிக்கவில்லை. இப்போது மெஸேஜ் பார்க்கிறதையெல்லாம் குறைத்துவிட்டேன்; அதனால், என் தோள் மீதிருந்த பெரிய சுமையைக் கீழே இறக்கி வைத்ததுபோல் உணருகிறேன். எதிலும் அளவோடு ஈடுபடுவதுதான் நல்லது.

[படங்கள்]

ஜோவார்னி

மரையா

[பக்கம் 18-ன் பெட்டி]

“நான் சோஷியல் நெட்வர்க்கிங்-சைட்டுக்கு அடிமைப்பட்டிருந்தேன்”

“சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் குடும்பமாக வேறொரு இடத்திற்குக் குடிமாறிப் போனோம். அப்போது என்னுடைய பழைய நண்பர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பினேன். ஃபோட்டோக்களை அனுப்புகிற வெப் சைட்டில் சேர்ந்துகொள்ளும்படி அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்களுடன் தொடர்புகொள்ள அது அருமையான வழியாகத் தெரிந்தது. முன்பின் தெரியாதவர்களிடம் அல்ல, எனக்குத் தெரிந்தவர்களிடம்தான் பேசப் போகிறேன் அதில் என்ன தப்பு இருக்கப்போகிறது என்று நினைத்தேன்.

“ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. வாரத்தில் ஒருநாள் ஆன்லைனில் போய் என் நண்பர்களுடைய படங்களைப் பார்த்து குறிப்புகளை எழுதினேன், என்னுடைய படங்களில் அவர்கள் எழுதிய குறிப்புகளை வாசித்தேன். கொஞ்ச நாட்களில் நான் அதற்குள் மூழ்கிப் போனேன். என்னை அறியாமலேயே எந்நேரமும் இந்த வெப் சைட்டில்தான் பொழுதைக் கழித்தேன். நான் எக்கச்சக்கமான நேரம் ஆன்லைனில் இருந்ததை என் நண்பர்களுடைய நண்பர்கள் கவனித்தார்கள்; அதனால், தங்களுடன் நட்பு வைத்துக்கொள்ள அவர்களும் என்னை அழைத்தார்கள். ‘இவன் ரொம்ப ஜாலி டைப்’ என்று ஒருவனை நண்பன் அறிமுகப்படுத்தி வைக்கும்போது அவனை நண்பனாக்கிக்கொள்வது சகஜம்தானே. இப்படி, எனக்கே தெரியாமல் 50 பேரை ஆன்லைனில் நண்பர்களாகிக் கொண்டேன்.

“அதன் பிறகு, எப்போது பார்த்தாலும் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். வெப் சைட்டில் இருக்கும்போதுகூட... அடுத்து எப்போது இந்த சைட்டுக்கு வருவேன், இன்னும் சில புதிய படங்களைப் ‘போஸ்ட்’ செய்வேன் என்றே யோசித்துக்கொண்டிருந்தேன். இங்கே ஒரு குறிப்பைப் படிப்பதும், அங்கே ஒரு வீடியோவை ‘போஸ்ட்’ செய்வதுமாக இருந்தேன்; இதையெல்லாம் செய்வதற்குள்ளாக நேரம் பறந்துகொண்டிருந்தது.

“கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகுதான் நான் அதற்கு அடிமைப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன். இப்போது, இன்டர்நெட்டை அளவோடு பயன்படுத்துகிறேன்; என்னைப் போலவே ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுகிறவர்களோடு நேரில் பழகி அவர்களை நண்பர்களாக்கிக்கொள்ள முயற்சி செய்கிறேன். நான் செய்வதெல்லாம் என் பழைய நண்பர்கள் சிலருக்குப் புரிவதில்லை; ஆனால் நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.”—எலென், 18.

[பக்கம் 18-ன் பெட்டி]

உங்களுடைய அப்பா அம்மாவிடம் ஏன் கேட்கக்கூடாது?

பொழுதுபோக்கைக் குறித்து உங்களுடைய அப்பா அம்மாவிடம் பேச ஆரம்பித்தீர்கள் என்றால் சிலசமயங்களில் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். சிரில் இவ்வாறு சொல்கிறாள்: “ஒரு சமயம், நான் வைத்திருந்த பாட்டு சிடி ஒன்றை அப்பா பார்த்துவிட்டு அது மோசமானதாக இருக்குமென நினைத்தார். என்னுடன் உட்கார்ந்து சிடி முழுவதையும் கேட்கும்படி அவரிடம் சொன்னேன். அவரும் சம்மதித்தார். அதன் பிறகு அது நல்ல சிடிதான் என்று அவர் சொன்னார்!”

எலெக்ட்ரானிக் சாதனங்கள் சம்பந்தமாக உங்கள் அப்பா அம்மாவிடம் நீங்கள் கேட்க விரும்புகிற ஒரு கேள்வியை இங்கே எழுதுங்கள்.

[பக்கம் 19-ன் பெட்டி]

பெற்றோரின் கவனத்திற்கு

உங்களுடைய பிள்ளை எக்கச்சக்கமான நேரத்தை இன்டர்நெட்டில் செலவிடுகிறானா, எப்போது பார்த்தாலும் எஸ்எம்எஸ் அனுப்புவதும், பெறுவதுமாக இருக்கிறானா, அல்லது உங்களைவிட MP3 ப்ளேயருடன்தான் அதிகமாக ஒட்டி உறவாடுகிறானா? அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யலாம்?

ஒரு வழி, அதை உங்கள் பிள்ளையிடமிருந்து ‘பறிமுதல்’ செய்துவிடுவதாகும். ஆனால், எல்லா எலெக்ட்ரானிக் சாதனங்களுமே மோசமானதுதான் என முடிவுகட்டிவிடாதீர்கள். சொல்லப்போனால், உங்கள் அப்பா-அம்மா பயன்படுத்தாத எலெக்ட்ரானிக் சாதனங்கள் சிலவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். எனவே, நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே உங்கள் பிள்ளையின் கையிலிருந்து அதை ‘பறிமுதல்’ செய்யுங்கள்; இல்லையென்றால், அதை எப்படிப் புத்திசாலித்தனமாக, அளவோடு பயன்படுத்தலாம் எனச் சொல்லிக்கொடுங்கள். எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?

உங்கள் பிள்ளையோடு உட்கார்ந்து, அந்தப் பிரச்சினையைக் குறித்துப் பேசுங்கள். முதலாவது, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று சொல்லுங்கள். இரண்டாவது, அவன் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். (நீதிமொழிகள் 18:13) மூன்றாவது, நடைமுறையான தீர்வு காணுங்கள். திட்டவட்டமான வரம்பு வைக்கத் தயங்காதீர்கள், அதே சமயத்தில் நியாயமாகவும் நடந்துகொள்ளுங்கள். (பிலிப்பியர் 4:5) எலன் இவ்வாறு சொல்கிறாள்: “நான் எப்போதும் எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டிருந்ததைப் பார்த்து என் அப்பா-அம்மா என்னிடமிருந்து செல்ஃபோனைப் பிடுங்கிவிடவில்லை; அதற்குப் பதிலாக சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அப்படிச் செய்தது, அவர்கள் இல்லாத சமயத்திலும்கூட, அளவுக்குமீறி எஸ்எம்எஸ் அனுப்பாதிருக்க எனக்கு உதவியிருக்கிறது.”

உங்களுடைய பிள்ளை தான் செய்வது சரி என நியாயப்படுத்தினால்? நீங்கள் கொடுத்த புத்திமதியெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆனதாக நினைத்து வருந்த வேண்டாம். பொறுமையாக இருங்கள், இதைக் குறித்து யோசிக்க உங்கள் பிள்ளைக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நீங்கள் கொடுத்த ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் அவன் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். ஹேலி என்ற பெண்ணைப் போலத்தான் நிறையப் பிள்ளைகள் இருக்கிறார்கள்; அவள் இவ்வாறு சொல்கிறாள்: “நான் கம்ப்யூட்டரே கதியென கிடப்பதாக என் அப்பா-அம்மா சொன்னபோது கோபப்பட்டேன். ஆனால், அதைப் பற்றி யோசிக்க யோசிக்க அவர்கள் சொன்னது சரியென பட்டது.”

[பக்கம் 19-ன் படம்]

எலெக்ட்ரானிக் சாதனம்—நீங்கள் அதன் அடிமையா, அது உங்கள் அடிமையா?