Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

டீனேஜ் பிள்ளைகள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க

டீனேஜ் பிள்ளைகள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க

சவால்

செல்ஃபோனை இரவு 9 மணிக்குமேல் பயன்படுத்தக் கூடாதெனச் சொல்லியிருந்தும் இந்த வாரத்திலேயே இரண்டு முறை நள்ளிரவில் உங்கள் மகளைக் கையும் களவுமாகப் பிடித்தீர்கள்! இரவு 10 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டுமெனச் சொல்லியிருந்தும், உங்கள் மகன் நேற்றிரவு வீடு திரும்பியது 11 மணிக்கு!

உங்கள் டீனேஜ் பிள்ளைகள் செய்தது தவறுதான். ஆனால், அந்தக் கட்டுப்பாடுகளை அவர்கள் மீறுவதற்கான காரணங்களை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், அடங்காப்பிடாரிகள்போல் தெரிகிற உங்கள் டீனேஜ் பிள்ளைகள் அந்தளவுக்கு மோசமானவர்கள் அல்ல.

பிரச்சினைக்கான காரணங்கள்

தெளிவான கட்டுப்பாடுகளை விதிக்காதிருப்பது. கட்டுப்பாடுகளை மீறினால் என்ன நடக்கும் என்பதைப் பார்க்க சில டீனேஜ் பிள்ளைகள் அவற்றை மீறுவார்கள். உதாரணத்திற்கு, ஒரு கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை கிடைக்கும் என்று பெற்றோர் சொல்லியிருந்தால், சொன்னபடி செய்கிறார்களா என்று பார்க்க அதை மீறுவார்கள். இவர்களை அடங்காப்பிடாரிகள் என நினைக்க வேண்டுமா? தேவையில்லை. உண்மை என்னவென்றால், பெற்றோர்கள் தாங்கள் சொன்னபடி தண்டனை வழங்காதிருந்தால் அல்லது தெளிவான கட்டுப்பாடுகளை விதிக்காதிருந்தால்தான் டீனேஜ் பிள்ளைகள் அவற்றை மீறப் பார்ப்பார்கள்.

கறாராக இருப்பது. சில பெற்றோர் சட்டங்களுக்கு மேல் சட்டங்கள் போட்டு தங்கள் டீனேஜ் பிள்ளைகளைத் திணறடிப்பார்கள். அந்தப் பிள்ளைகள் கீழ்ப்படியாமல்போகும்போது, கோபப்பட்டு இன்னுமதிகமான சட்டங்களைப் போடுவார்கள். அது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்தான் இருக்கும். பேரன்ட்/டீன் ப்ரேக்த்ரூ என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “எவ்வளவுக்கு எவ்வளவு கட்டுப்படுத்த நினைக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் டீனேஜ் பிள்ளை கட்டுக்கடங்காமல் போவான்.” இப்படி மட்டுக்குமீறி கட்டுப்படுத்தப்படுகிற பிள்ளை... அழுத்த அழுத்த உங்கள் கையைவிட்டு எகிறிப்போகிற ஸ்ப்ரிங்கைப் போல்தான் இருப்பான்.

சரியான முறையில் கண்டிப்பது நன்மையளிக்கலாம். ஆனால், கண்டிப்பது வேறு, தண்டிப்பது வேறு. பொதுவாக, “தண்டிப்பது” என்றால் ஒருவரை வேதனைப்படுத்துவது; “கண்டிப்பது” என்றால் ஒருவருக்குக் கற்றுக்கொடுப்பது. அப்படியானால், நீங்கள் விதித்த சட்டங்களைக் கடைப்பிடிக்க உங்கள் டீனேஜ் பிள்ளைக்கு நீங்கள் எப்படிக் கற்றுக்கொடுக்கலாம்?

நீங்கள் என்ன செய்யலாம்?

தெளிவாகச் சொல்லுங்கள். உங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள், கீழ்ப்படியாமல்போனால் என்ன தண்டனை விதிப்பீர்கள் என்று தெளிவாகச் சொல்லுங்கள்.—பைபிள் நியமம்: கலாத்தியர் 6:7.

ஆலோசனை: நீங்கள் விதித்திருக்கும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் பட்டியலிடுங்கள். அதன்பின், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் நிறையக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறேனா? குறைவாக விதித்திருக்கிறேனா? சில கட்டுப்பாடுகள் இனி தேவையில்லையோ? என் பிள்ளை பொறுப்பாக நடந்துகொண்டதால், சில கட்டுப்பாடுகளை நான் மாற்ற வேண்டுமோ?’

சொன்னபடி நடந்துகொள்ளுங்கள். உங்கள் டீனேஜ் பிள்ளை ஒரு கட்டுப்பாட்டை மீறியதற்காக அவனைத் தண்டிக்காமல் விட்டுவிட்டு அடுத்தமுறை அதே தவறுக்காக அவனைத் தண்டித்தீர்கள் என்றால் அவன் குழம்பிப்போய்விடலாம்.—பைபிள் நியமம்: மத்தேயு 5:37.

ஆலோசனை: “குற்றத்திற்கு” பொருத்தமான தண்டனை கொடுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் டீனேஜ் பிள்ளை நீங்கள் சொன்ன நேரத்திற்கு வீடு திரும்பவில்லை என்றால், அதைவிட சீக்கிரமாக வரவேண்டும் என்ற பொருத்தமான கட்டுப்பாட்டை விதியுங்கள்.

நியாயமானவர்களாக இருங்கள். நீங்கள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு உங்கள் டீனேஜ் பிள்ளை கீழ்ப்படியும்போது முன்பைவிட அவனுக்கு அதிக சுதந்திரத்தைக் கொடுத்து, நியாயமான பெற்றோரென நிரூபியுங்கள்.—பைபிள் நியமம்: பிலிப்பியர் 4:5.

ஆலோசனை: நீங்கள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைப் பற்றி உங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் கலந்து பேசுங்கள். ஒரு கட்டுப்பாட்டை மீறினால் என்ன தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென அவர்களிடமே கேளுங்கள். கட்டுப்பாடுகளை விதிப்பதில் அவர்களுக்கும் ஒரு பங்கு இருந்தால் அவற்றை மீற மாட்டார்கள்.

பிள்ளைகளிடம் நற்பண்புகளை வளர்த்திடுங்கள். டீனேஜ் பிள்ளையைக் கீழ்ப்படிய வைப்பது மட்டுமே உங்கள் குறிக்கோள் அல்ல, நல்லது கெட்டதைப் பகுத்துணரும் மனசாட்சியை வளர்க்க உதவுவதும் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். (“நல்ல குணங்களை வளர்த்திட...” என்ற பெட்டியைக் காண்க.)—பைபிள் நியமம்: 1 பேதுரு 3:16.

ஆலோசனை: பைபிளிலிருந்து உதவி பெறுங்கள். கண்டித்துத் திருத்துவதற்குத் தேவையான மிகச் சிறந்த ஆலோசனைகள் அதில் உள்ளன. பைபிளின் ஞானம் “அனுபவமற்றோரைப் புத்திசாலியாக்கும், இளைஞர்களுக்கு அறிவையும் சிந்திக்கும் திறனையும் கொடுக்கும்.”—நீதிமொழிகள் 1:1-4, NW. ◼ (g13-E 05)