Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாகிட்ட நெருங்கி இருக்கிறதுதான் எனக்கு சந்தோஷம்

யெகோவாகிட்ட நெருங்கி இருக்கிறதுதான் எனக்கு சந்தோஷம்

எனக்கு இப்போ 43 வயசு. என் உயரம் 1 மீட்டர்தான் (3 அடி). 9 வயசுக்கு அப்புறம் நான் வளரவே இல்ல. அதுக்கு மேல நான் வளர மாட்டேன்னு எங்க அப்பா-அம்மா புரிஞ்சிக்கிட்டாங்க. இதை நினைச்சு நான் கவலைப்படாம இருக்க என்னை ஏதாவது வேலை செய்ய சொன்னாங்க. அதனால, நான் எங்க வீட்டு முன்னாடி ஒரு பழ ஸ்டாண்டு வைச்சு பழங்கள் வித்தேன். பழங்களை அழகா அடுக்கி வைச்சிருக்கிறதை பார்த்தே நிறைய பேர் பழம் வாங்க வருவாங்க.

நான் சுறுசுறுப்பா வேலை செஞ்சதுனால மட்டும் என் பிரச்சினை சரியாயிடல. எல்லாரும் சாதாரணமா செய்ற வேலைகூட எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். உதாரணத்துக்கு, கடைக்கு போய் பொருளை வாங்குறதுகூட ரொம்ப கஷ்டமா இருக்கும். ஏன்னா, அந்த பொருளை எல்லாம் என்னைவிட 2 மடங்கு உயரமா இருக்கிற இடத்தில அடுக்கி வைச்சிருப்பாங்க. என்னை நினைச்சு எனக்கே ரொம்ப பாவமா இருக்கும். ஆனா, எனக்கு 14 வயசு இருக்கும்போது என் வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

ஒருநாள் 2 சகோதரிகள் என் கடைக்கு பழம் வாங்க வந்தாங்க. அவங்க எனக்கு பைபிள் படிப்பை பத்தி சொன்னாங்க. அதுக்கு அப்புறம் நான் அவங்ககிட்ட பைபிள் படிக்க ஆரம்பிச்சேன். என் உயரத்தை நினைச்சு கவலைப்படுறதவிட யெகோவாவை பத்தியும் அவருடைய நோக்கத்தை பத்தியும் தெரிஞ்சிக்கிறதுதான் ரொம்ப முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டேன். பைபிள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம் சங்கீதம் 73:28. அந்த வசனத்தோட ஒரு பகுதி சொல்லுது, “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே [நெருங்கி இருப்பதே] நலம்.” யெகோவாவை பத்தி தெரிஞ்சிக்கிட்டது எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது.

திடீர்னு ஒருநாள் நாங்க கோட் டீவோர்ல இருந்து பர்கினா பாஸோ என்ற இடத்துக்கு குடிமாறி போனோம். அங்க போனதுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு. கோட் டீவோர்ல நான் எப்பவும் பழ ஸ்டாண்டு முன்னாடி நிக்குறத பார்க்கிறது எல்லார்க்கும் பழகிடுச்சு. ஆனா, பர்கினா பாஸோல இருந்த மக்கள் என்னை ரொம்ப வித்தியாசமா பார்த்தாங்க. அதனால, வாரக்கணக்கா நான் வீட்டுக்குள்ளயே இருந்தேன். யெகோவாவை பத்தி தெரிஞ்சிக்கிட்டப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்னு யோசிச்சு பார்த்தேன். அதனால, எனக்கு பைபிள் படிப்பு எடுக்க யாரையாவது அனுப்புங்கனு யெகோவாவின் சாட்சிகளோட கிளை அலுவலகத்துக்கு எழுதுனேன். நானினு ஒரு மிஷனரி சகோதரி ஸ்கூட்டர்ல என்னை பார்க்க வந்தாங்க.

நான் இருந்த இடத்தில மண் ரோடுதான். சாதாரணமாவே, அந்த ரோட்டுல எல்லாரும் வழுக்கி விழுவாங்க. அதுவும் மழை காலத்துல சொல்லவே வேண்டாம், ரோடெல்லாம் சேரும் சகதியுமா இருக்கும். எனக்கு பைபிள் படிப்பு எடுக்க வரும்போது நானி நிறைய முறை ஸ்கூட்டர்ல இருந்து கீழ விழுந்திருக்காங்க. இருந்தாலும், தொடர்ந்து எனக்கு பைபிள் படிப்பு எடுக்க வருவாங்க. ஒருநாள் அவங்க என்னை கூட்டத்துக்கு கூட்டிட்டு போறதா சொன்னாங்க. அந்த ரோட்டுல தனியா ஸ்கூட்டர்ல வர்றதே கஷ்டம், அதுவும் என்னை வைச்சுக்கிட்டு ஓட்டுறது நானிக்கு இன்னும் கஷ்டம். கூட்டத்துக்கு போனா எல்லாரும் என்னை வித்தியாசமா பார்ப்பாங்கனும் எனக்கு தெரியும். இருந்தாலும், நான் கூட்டத்துக்கு போகணும்னு தீர்மானிச்சேன். ஏன்னா, “[யெகோவாவாகிய] ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” என்ற வசனம் எனக்கு ஞாபகம் வந்தது.—சங். 73:28.

நானும் நானியும் சிலசமயம் கூட்டத்துக்கு போற வழியில சகதியில விழுந்திடுவோம். கூட்டத்துக்கு போறது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்ததுனால, நாங்க அதை பத்தியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படல. பொதுவா மக்கள் என்னை வித்தியாசமா பார்ப்பாங்க. ஆனா, ராஜ்ய மன்றத்தில எல்லாரும் என்னை சிரிச்ச முகத்தோட வரவேற்தாங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. 9 மாசத்துக்கு அப்புறம் நான் ஞானஸ்நானம் எடுத்தேன்.

எனக்கு பிடிச்ச சங்கீதம் 73:28-ல, “உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவருவேன்”னு சொல்லியிருக்கு. ஊழியம் செய்றது ரொம்ப கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும். நான் முதல் முதல்ல ஊழியத்துக்கு போன அந்த நாளை மறக்கவே மாட்டேன். சின்னவங்க பெரியவங்கனு எல்லாரும் என்னை வித்தியாசமா பார்த்தாங்க, என் பின்னாடியே வந்தாங்க; நான் நடக்கிறத பார்த்து கேலி செஞ்சாங்க. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, என்னை போலவே அவங்களும் பூஞ்சோலை பூமியில வாழணும்னு ஆசைப்பட்டேன். அதனால கேலி கிண்டல் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன்.

ஊழியம் செய்றதுக்கு உதவியா இருக்கும்னு, கையால பெடல் செய்ய முடிஞ்ச ஒரு மூணு சக்கர சைக்கிளை வாங்குனேன். மேடான இடத்தில ஊழியம் செய்ய வேண்டியிருந்தா என்கூட ஊழிய செய்றவங்க எனக்காக சைக்கிளை தள்ளுவாங்க. பள்ளமான இடங்கள்ல சைக்கிள் வேகமா போகும்போது அவங்க என்கூட சைக்கிள்ல ஏறிக்குவாங்க. ஆரம்பத்தில, ஊழியம் செய்றது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. ஆனா, போக போக அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால, 1998-ல நான் ஒரு ஒழுங்கான பயனியரா ஆனேன்.

நான் நிறைய பேருக்கு பைபிள் படிப்பு நடத்துனேன். அதுல 4 பேர் ஞானஸ்நானம் எடுத்தாங்க. என் தங்கச்சிகூட ஒரு யெகோவாவின் சாட்சியா ஆனாள். என்கிட்ட பைபிள் படிச்சவங்க முன்னேற்றம் செய்றதை பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் சோர்வா இருந்தப்போ இது எனக்கு ஆறுதலா இருந்தது. ஒருசமயம் நான் மலேரியாவால கஷ்டப்பட்டபோ, கோட் டீவோர்ல இருந்து ஒரு கடிதம் வந்தது. பர்கினா பாஸோல நான் வீட்டு வாசல்ல நின்னு பைபிள் படிப்பு நடத்துன ஒரு காலேஜ் மாணவன்தான் அந்த கடிதத்தை எழுதியிருந்தான். அந்த பைபிள் படிப்பை நான் ஒரு சகோதரர்கிட்ட கொடுத்திருந்தேன். ஆனா, அந்த மாணவன் பர்கினா பாஸோல இருந்து கோட் டீவோருக்கு குடிமாறி போயிட்டான். இப்போ அவன் ஞானஸ்நானம் எடுக்காத ஒரு பிரஸ்தாபியா ஆகிவிட்டதா அந்த கடிதத்தில எழுதியிருந்தான். அதை கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

என்னை மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்ற ஒரு அமைப்பு எனக்கு தையல் கத்துக்கொடுக்கிறதா சொன்னாங்க. அங்க இருக்கிற ஒருத்தர் நான் நல்லா வேலை செய்றதை பார்த்து, “நாங்க உங்களுக்கு சோப் செய்ய சொல்லிக்கொடுக்கணும்”னு சொன்னார். அதனால, நான் வீட்டுலயே சோப் செய்ய கத்துக்கிட்டேன். நான் தயாரிக்கிற சோப்பை நிறைய பேர் விரும்பி வாங்குவாங்க, மத்தவங்ககிட்டயும் என் சோப்பை பத்தி சொல்லுவாங்க. சோப்பு வேணுங்கிறவங்களுக்கு எல்லாம் என் மூணு சக்கர ஸ்கூட்டர்ல போய் நானே கொடுத்திட்டு வருவேன். இப்படி என் செலவுகளை சமாளிக்க முடிஞ்சுது.

2004-ல எனக்கு பயங்கரமான முதுகு வலி வந்ததுனால பயனியர் செய்றத நிறுத்திட்டேன். இருந்தாலும் நான் தொடர்ந்து ஊழியத்துக்கு போறேன்.

என் பேரை சொன்ன உடனே எல்லாருக்கும் என் சிரிச்ச முகம்தான் ஞாபகத்துக்கு வரும். நான் சோகமா இருக்க வேண்டிய அவசியமே இல்ல; ஏன்னா, யெகோவாகிட்ட நெருங்கி இருக்கிறது எனக்கு உண்மையான சந்தோஷத்தை தந்திருக்கு.—சாரா மைகா சொன்னபடி.