Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

‘கேட்டுக்கொண்டே இருங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்’

‘கேட்டுக்கொண்டே இருங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்’

‘எஜமானே, ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.’ (லூக்கா 11:1) இந்த வேண்டுகோளை விடுத்தது இயேசுவின் சீடர்களில் ஒருவர். அதற்குப் பதிலளித்தபோது இயேசு இரண்டு உவமைகளைச் சொன்னார்; கடவுள் நம் ஜெபத்தைக் கேட்க வேண்டுமென்றால் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அந்த உவமைகள் நமக்குக் கற்பிக்கின்றன. ‘என் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா?’ என நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், இயேசு சொன்ன பதிலைத் தெரிந்துகொள்ள ஆவலாய் இருப்பீர்கள்.—லூக்கா 11:5-13-ஐ வாசியுங்கள்.

முதல் உவமை, ஜெபம் செய்கிற நபர்மீது நம் கவனத்தைத் திருப்புகிறது. (லூக்கா 11:5-8) அந்த உவமையின்படி, ஒருவனுடைய வீட்டுக்கு விருந்தாளி ஒருவர் நள்ளிரவில் வருகிறார், ஆனால் அந்த விருந்தாளிக்குச் சாப்பிடக் கொடுக்க அவனிடம் ஒன்றுமே இல்லை. அதனால், நள்ளிரவு என்றுகூட பார்க்காமல் கொஞ்சம் ரொட்டியைக் கடனாக வாங்கிவர தன் நண்பருடைய வீட்டுக்கு அவசர அவசரமாகப் போகிறான், போய்க் கதவைத் தட்டுகிறான். ஆனால், அவனுடைய நண்பர் தன் பிள்ளைகளோடு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்ததால் எழுந்துவர விருப்பமில்லாதவனாக இருக்கிறார். என்றாலும், வெட்கமே இல்லாமல் அவன் விடாப்பிடியாகக் கேட்டுக்கொண்டே இருந்ததால், எழுந்துபோய், கொஞ்சம் ரொட்டியை எடுத்து அவனுக்குக் கொடுக்கிறார். *

இந்த உவமை ஜெபத்தைப் பற்றி நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது? ஜெபத்தில் நாம் விடாப்பிடியாகக் கேட்க வேண்டும் என்றே இயேசு நமக்குச் சொல்கிறார், அதாவது கேட்டுக்கொண்டே, நாடிக்கொண்டே, தட்டிக்கொண்டே இருக்க வேண்டுமெனச் சொல்கிறார். (லூக்கா 11:9, 10) இயேசு ஏன் கேட்டுக்கொண்டே இருக்கும்படி சொல்கிறார்? நம் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்க கடவுள் தயங்குகிறார் என்பதாலா? இல்லை. ரொட்டியைக் கொடுக்கத் தயங்கிய நண்பனைப் போல் இல்லாமல், விசுவாசத்துடன் நாம் செய்கிற நியாயமான ஜெபங்களுக்குப் பதிலளிக்க கடவுள் ஆர்வமாயிருக்கிறார் என்ற குறிப்பையே இயேசு இங்கு வலியுறுத்துகிறார். விடாப்பிடியாக வேண்டிக்கொள்வதன் மூலம் நம்முடைய விசுவாசத்தை நாம் வெளிக்காட்டுகிறோம். அதோடு, நமக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பதையும், கடவுளுக்குச் சித்தமானால் அதை அவர் நிச்சயம் நமக்குத் தருவார் என்று நாம் நம்புவதையும் கடவுளிடம் தெரியப்படுத்துகிறோம்.—மாற்கு 11:24; 1 யோவான் 5:14.

இரண்டாவது உவமை, ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவாமீது நம் கவனத்தைத் திருப்புகிறது. (சங்கீதம் 65:2) “உங்களில் எந்தத் தகப்பனாவது தன் மகன் மீனைக் கேட்டால், மீனுக்குப் பதிலாக அவனுக்குப் பாம்பைக் கொடுப்பாரா? அல்லது முட்டையைக் கேட்டால், தேளைக் கொடுப்பாரா?” என்று இயேசு கேட்கிறார். பதில் எல்லோருக்கும் தெரிந்ததே—பாசமுள்ள எந்தத் தகப்பனும் தன் பிள்ளைகளுக்குத் தீங்கான பொருள்களைக் கொடுக்க மாட்டார். அந்தக் கேள்விகளைக் கேட்ட பின்பு இயேசு இப்படி விளக்கினார்: ஓர் அபூரணத் தகப்பனே தன் பிள்ளைகளுக்கு ‘நல்ல பரிசுகளைக் கொடுக்கும்போது,’ பரலோகத்திலுள்ள தகப்பன் பூமியிலுள்ள தம் பிள்ளைகளுக்குத் தம் சக்தியை, அதாவது பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசை, “இன்னும் எந்தளவு கொடுப்பார்!” *லூக்கா 11:11-13; மத்தேயு 7:11.

விசுவாசத்துடன் நாம் செய்கிற நியாயமான ஜெபங்களுக்குப் பதிலளிக்க கடவுள் ஆர்வமாயிருக்கிறார்

‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவாவைப் பற்றி இயேசு இந்த உவமையில் நமக்கு என்ன கற்பிக்கிறார்? தம் பிள்ளைகளுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய ஆர்வமாயுள்ள பாசமிக்க தகப்பனாக யெகோவாவைப் பார்க்கும்படியே இயேசு நமக்குக் கற்பிக்கிறார். எனவே, யெகோவாவை வணங்குபவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரை அணுகி தங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றுகிறார்கள். தங்களுக்கு மிகச் சிறந்ததைத்தான் யெகோவா தருவார் என்று அவர்கள் அறிந்திருப்பதால், அவர் அளிக்கும் பதிலை மனதார ஏற்றுக்கொள்கிறார்கள்—தாங்கள் எதிர்பார்த்த பதிலாக இல்லாவிட்டால்கூட! * ▪ (w13-E 04/01)

பைபிள் வாசிப்பு

அப்போஸ்தலர் 11 28

^ இயேசு இந்த உவமையில் யூதர்களுடைய அன்றாட பழக்கவழக்கங்களைக் குறிப்பிட்டார். உபசரிப்பதை யூதர்கள் ஒரு புனிதமான கடமையாகக் கருதினார்கள். பொதுவாக, ஒரு குடும்பத்தார் அன்றன்றைக்குத் தேவையான ரொட்டியைத்தான் சுட்டார்கள், அதனால் அது தீர்ந்துபோகும் பட்சத்தில் கடன் வாங்குவது சகஜமாக இருந்தது. அதுமட்டுமல்ல, அவர்கள் ஏழைகளாக இருந்தால், குடும்பத்திலுள்ள எல்லோரும் ஒரே அறையில் தரையில் படுத்துத் தூங்கினார்கள்.

^ மனிதர்களைவிட யெகோவா மிகச் சிறந்தவர் என்ற குறிப்பை வலியுறுத்துவதற்காகவே இயேசு “இன்னும் எந்தளவு” என்ற சொற்றொடரை அடிக்கடி பயன்படுத்தினார்.

^ கடவுள் பதிலளிக்கும் விதத்தில் எப்படி ஜெபம் செய்வது என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 17-ஐ பாருங்கள். இந்தப் புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.