Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரின் கேள்வி

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் பெண் ஊழியர்கள் இருக்கிறார்களா?

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் பெண் ஊழியர்கள் இருக்கிறார்களா?

ஆம், உலகம் முழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் லட்சக்கணக்கான பெண் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறார்கள். இவர்களைப் பற்றி சங்கீதம் 68:11 இப்படிச் சொல்கிறது: “யெகோவா கட்டளை கொடுக்கிறார். நல்ல செய்தியை அறிவிக்கிற பெண்கள் படைபோல் ஏராளமாக இருக்கிறார்கள்.”

ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய பெண் ஊழியர்கள் செய்யும் சேவையும், மற்ற மதங்களில் அல்லது சர்ச்சுகளில் இருக்கும் பெண் ஊழியர்கள் செய்யும் சேவையும் ரொம்ப வித்தியாசமானது. எப்படி?

பொதுவாக, சர்ச்சுகளில் இருக்கும் பெண் ஊழியர்கள் தங்களுடைய சர்ச்சுகளில் அல்லது சபைகளில் இருக்கிறவர்களுக்குப் போதிக்கிறார்கள், அவர்களைத் தலைமைதாங்கியும் நடத்துகிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய பெண் ஊழியர்கள் தங்களுடைய சபைகளுக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு பைபிள் செய்தியை அறிவிக்கிறார்கள். வீடு வீடாகப் போய் அல்லது வேறு வழிகளில் இதைச் செய்கிறார்கள்.

இன்னொரு வித்தியாசம் என்னவென்றால், யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் ஆண்கள் மட்டும்தான் போதகர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அதனால், ஞானஸ்நானம் எடுத்த ஆண்கள் இருக்கும்போது பெண்கள் சபையில் போதிக்க மாட்டார்கள்.—1 தீமோத்தேயு 3:2; யாக்கோபு 3:1.

சபையில் ஆண்கள் மட்டும்தான் மூப்பர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. உதாரணமாக, ‘ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிப்பதற்காக நான் உன்னை கிரேத்தா தீவில் விட்டுவந்தேன்’ என்று தீத்துவுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (தீத்து 1:5, 6) அப்படி நியமிக்கப்படுகிற ஒவ்வொரு ஆணும் “குற்றம்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும், ஒரே மனைவியை உடையவராக இருக்க வேண்டும்” என்றும் சொன்னார். (தீத்து 1:5, 6) இதேபோல் தீமோத்தேயுவுக்கும் பவுல் இப்படிச் சொன்னார்: “கண்காணியாவதற்கு முயற்சி செய்கிற ஒருவர் சிறந்த வேலையை விரும்புகிறார். அதனால், கண்காணியாக இருப்பவர் குற்றம்சாட்டப்படாதவராகவும், ஒரே மனைவியை உடையவராகவும், . . . கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவராகவும் இருக்க வேண்டும்.”—1 தீமோத்தேயு 3:1, 2.

ஏன் ஆண்கள் மட்டும்தான் மூப்பர்களாக இருக்க வேண்டும்? பவுல் இப்படிச் சொன்னார்: “கற்றுக்கொடுப்பதற்கோ, ஆண்கள்மேல் அதிகாரம் செலுத்துவதற்கோ பெண்களை நான் அனுமதிக்க மாட்டேன்; அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஆதாம்தான் முதலில் உருவாக்கப்பட்டான், பின்புதான் ஏவாள் உருவாக்கப்பட்டாள்.” (1 தீமோத்தேயு 2:12, 13) சபையில் ஆண்கள்தான் தலைமைதாங்கி போதிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புவதை இது காட்டுகிறது.

யெகோவாவின் சாட்சிகள் எல்லாருமே தங்கள் தலைவரான இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி நடக்கிறார்கள். இயேசு “நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் போய் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தும் அறிவித்தும் வந்தார்” என்று லூக்கா எழுதினார். அதே வேலையைச் செய்ய இயேசு தன் சீஷர்களையும் அனுப்பினார். “அவர்கள் புறப்பட்டு கிராமம் கிராமமாகப் போய், அந்தப் பகுதி முழுவதும் நல்ல செய்தியை அறிவித்தார்கள்.”—லூக்கா 8:1; 9:2-6.

நம்முடைய காலத்தில் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்’ என்று இயேசு சொன்னார். இந்த வேலையை இன்று ஆண்கள், பெண்கள் என யெகோவாவின் சாட்சிகள் எல்லாருமே மும்முரமாகச் செய்துவருகிறார்கள்.—மத்தேயு 24:14.