போலி நண்பன்
போலி நண்பன்
நீங்கள் இளைஞராக இருந்தபோது உங்களுக்கு ஒரு “நண்பன்” கிடைக்கிறான். அவன் உங்களோடு இருப்பதால் மற்ற நண்பர்களும் உங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் முன்பு, உங்களைப் ‘பெரிய ஆளாக’ காட்டிக்கொள்வதற்கும் அவன் உதவி செய்கிறான். நீங்கள் ரொம்பச் சோகமாக இருக்கிற சமயங்களில் அவன் உங்களுக்கு, ஒருவிதமான “ஆறுதலை” தருகிறான். சொல்லப்போனால், நிறைய சமயங்களில் நீங்கள் அவனை நம்பிதான் இருக்கிறீர்கள்.
ஆனால், போகப்போக உங்களுக்கு அவனுடைய இன்னொரு முகம் தெரியவருகிறது. அவன் எல்லா சமயங்களிலும் உங்கள் கூடவே இருக்க வேண்டும் என்று சொல்கிறான். அவன் கூட இருந்தால் நான்கு பேர் உங்களை மதிக்க மாட்டார்கள் என்ற சூழ்நிலையிலும், அவன் ‘உங்களை விட்டு போக மாட்டேன்’ என்கிறான். உங்களை ஒரு பெரிய ஆளாக காட்டிக்கொள்ள அவன் உதவியிருந்தாலும், உங்களுடைய ஆரோக்கியத்தை அவன் கெடுத்துப் போட்டிருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களுடைய சம்பளத்திலிருந்து கொஞ்சத்தை அவன் திருடி இருக்கிறான்.
கொஞ்ச நாட்களுக்கு அவனை விட்டு எப்படியாவது விலகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் அவன் ‘உங்களை விடவே மாட்டேன்’ என்கிறான். சொல்லப்போனால், அவன் உங்கள் தலைமேல் ஏறி உட்கார்ந்துவிட்டான். ‘ஏன்டா அவன சந்திச்சோம்’ என்று நீங்கள் யோசிக்கிற நிலைமைக்கு அவன் உங்களைக் கொண்டுவந்து விடுகிறான்.
சிகரெட் பிடிப்பவருக்கும் சிகரெட்டுக்கும் இடையில் இருக்கிற உறவைப் பற்றித்தான் இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. 50 வருஷங்களாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த எர்லின் என்ற பெண் இப்படிச் சொல்கிறார்: “யாராவது என் கூட இருந்தாகூட எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்காது; ஆனா, சிகரெட் பிடிக்கும்போது எனக்கு அவ்ளோ நல்லா இருக்கும். என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட ஒரு பழைய ஃபிரெண்டு என் கூட இருக்குற மாதிரி இருக்கும். சிலசமயத்துல, அதுமட்டும்தான் ஒரு ஃபிரெண்டு மாதிரி என் கூடவே இருக்கும்.” சிகரெட் என்பது ஆபத்தான, போலியான ஒரு நண்பன் என்பதை போகப்போக எர்லின் புரிந்துகொண்டார். அறிமுகத்தில் நாம் பார்த்த விஷயங்கள் இவருக்கும் பொருந்தும். ஆனால், ஒரு விஷயத்தைத் தவிர! சிகரெட் பிடிப்பது கடவுளுக்குப் பிடிக்காது என்றும், அது உடலைக் கறைபடுத்தும் என்றும் தெரிந்தவுடன் எர்லின் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார்.—2 கொரிந்தியர் 7:1.
ஃபிராங்க் என்ற ஒருவரும் கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், சிகரெட் பிடிப்பதை விட்டுவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அப்படி முடிவு எடுத்து இரண்டு நாட்கள்கூட ஆகவில்லை, ஏற்கெனவே பிடித்துப் போட்ட சிகரெட் துண்டுகள் வீட்டில் எங்கேயாவது இருக்குமா என்று பார்க்க தவழ்ந்து போய் எல்லா இடங்களிலும் தேடி இருக்கிறார். அதைப் பற்றி ஃபிராங்க் இப்படிச் சொல்கிறார்: “பழைய சிகரெட் துண்டு இருக்கானு குப்பைலயெல்லாம் போய் தேடுறோமே, இவ்ளோ கேவலமா நடந்துக்குறோமேனு அப்பதான் மண்டையில உரைச்சது. அதுக்கு அப்பறமா, நான் சிகரெட் பக்கமே போகல.”
சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? அதற்குச் சில காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்: (1) போதைப்பொருள்களைப் போலவே புகையிலைக்கும் நம்மை அடிமையாக்கும் தன்மை இருக்கிறது. (2) நிக்கோடினை சுவாசிக்கும்போது, அது ஏழே நொடிகளில் மூளையைப் போய் சேர்ந்துவிடுகிறது. (3) சாப்பிடும்போதும் குடிக்கும்போதும் பேசிக்கொண்டிருக்கும்போதும் சோகமாக இருக்கும்போதும் என எல்லா சமயங்களிலும் சிகரெட் பிடிப்பதால் அது ஒருவருடைய வாழ்க்கையில் பின்னி பிணைந்து விடுகிறது.
இருந்தாலும், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கண்டிப்பாக நம்மால் விட முடியும். அதைத்தான் எர்லின் மற்றும் ஃபிராங்க் அவர்களின் வாழ்க்கை காட்டுகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், இதற்கு பின் வருகிற கட்டுரைகளைப் படியுங்கள். ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க அவை கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.