Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 5

“உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே” திரும்பி வந்துவிடுங்கள்

“உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே” திரும்பி வந்துவிடுங்கள்

இந்தச் சிற்றேட்டில் பார்த்த ஏதாவது ஒரு பிரச்சினையால் கஷ்டப்படுகிறீர்களா? பைபிளில் சொல்லியிருக்கிற நிறைய பேர் இதுபோன்ற பிரச்சினைகளால் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். நம் காலத்திலும் சகோதர சகோதரிகள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். யெகோவா அவர்களுக்கு உதவியதைப் போல் உங்களுக்கும் உதவுவார்!

நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று யெகோவா ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார்

நீங்கள் திரும்பிவர வேண்டும் என்று யெகோவா ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார். கவலைகளைச் சமாளிக்கவும், கோபதாபங்களை சரி செய்யவும், சுத்தமான மனசாட்சியால் கிடைக்கும் நிம்மதியைப் பெற்றுக்கொள்ளவும் அவர் உதவுவார். அப்படி உதவும்போது, சீக்கிரமாகவே சபையில் இருக்கும் எல்லாரோடும் சேர்ந்து அவரை வணங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும். அப்போது, அப்போஸ்தலன் பேதுரு காலத்தில் வாழ்ந்த சில கிறிஸ்தவர்களைப் போல் நீங்களும் இருப்பீர்கள். அவர்களுக்கு பேதுரு இப்படி எழுதினார்: “நீங்கள் வழிதவறித் திரிகிற ஆடுகளைப் போல் இருந்தீர்கள். ஆனால் இப்போது, உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே திரும்பி வந்திருக்கிறீர்கள்.”​—1 பேதுரு 2:25.

யெகோவாவிடம் திரும்பி வர வேண்டும் என்று நீங்கள் எடுக்கும் முடிவுதான் உங்கள் வாழ்க்கையிலேயே சிறந்த முடிவாக இருக்கும். ஏனென்றால், அந்த முடிவு யெகோவாவின் இதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 27:11) யெகோவாவுக்கு உணர்ச்சிகள் இருப்பதால், நாம் நடந்துகொள்ளும் விதம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கலாம் அல்லது துக்கத்தைக் கொடுக்கலாம். இருந்தாலும், தன்னை நேசிக்கும்படியோ தனக்குச் சேவை செய்யும்படியோ அவர் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. (உபாகமம் 30:19, 20) இதைப் பற்றி ஒரு பைபிள் அறிஞர் இப்படி சொல்கிறார்: “நம் இதயக் கதவை நாம்தான் திறக்க வேண்டும். நமக்காக வேறு யாரும் திறக்க முடியாது.” அன்பு நிறைந்த நெஞ்சத்தோடு அவரை வணங்கும்போது, நம்முடைய இதயக் கதவைத் திறக்கிறோம் என்று அர்த்தம். அப்படிச் செய்யும்போது, அருமையான ஒரு பரிசை நம்மால் யெகோவாவுக்குக் கொடுக்க முடியும். நாம் காட்டும் உத்தமத்தன்மைதான் அந்தப் பரிசு! அதைப் பார்த்து அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்! யெகோவா மட்டுமே நம் வணக்கத்தைப் பெறத் தகுதியானவர்! அவரை வணங்கும்போது நமக்கு அளவில்லாத சந்தோஷம் கிடைக்கும்!​—அப்போஸ்தலர் 20:35; வெளிப்படுத்துதல் 4:11.

யெகோவாவிடம் நீங்கள் திரும்பி வந்தால், உங்களுடைய ஆன்மீகப் பசி தீரும். (மத்தேயு 5:3) எப்படி? இந்த உலகத்தில் நிறைய பேர், ‘நாம் ஏன் வாழ்கிறோம்?’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் தவிக்கிறார்கள். இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை மனிதர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், மனிதர்களை யெகோவா அப்படித்தான் படைத்திருக்கிறார். அதனால், அதைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருக்குச் சேவை செய்யும்போது, வாழ்க்கையில் முழு திருப்தி கிடைக்கும்! அன்பு நிறைந்த உள்ளத்தோடு யெகோவாவை வணங்குவதைவிட வேறு எது நமக்கு அதிக திருப்தியைத் தரும்?​—சங்கீதம் 63:1-5.

நீங்கள் திரும்பி வர வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். அதனால்தான், உங்கள் கையில் இந்தச் சிற்றேட்டைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். யெகோவாவிடம் பலமுறை ஜெபம் செய்த பிறகுதான் இதை நாங்கள் தயாரித்திருக்கிறோம். இதை ஒரு மூப்பர் அல்லது சபையில் இருக்கும் ஒருவர் உங்களிடம் கொடுத்திருக்கலாம். இதிலிருக்கும் விஷயங்கள் நிச்சயம் உங்கள் மனதைத் தொட்டிருக்கும். யெகோவா உங்களை மறக்கவில்லை, உங்கள்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு இதுவே பெரிய அத்தாட்சி! யெகோவாதான் உங்களை அவரிடம் திரும்பவும் ஈர்த்திருக்கிறார்.​—யோவான் 6:44.

காணாமல் போன தன்னுடைய ஆடுகளை யெகோவா கண்டிப்பாக மறக்க மாட்டார் என்பதைத் தெரிந்துகொள்வது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! டானா என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள்: “நான் கொஞ்சம் கொஞ்சமா சபையைவிட்டு பிரிஞ்சு போயிட்டேன். ஆனா, அடிக்கடி சங்கீதம் 139:23, 24 ஞாபகத்துக்கு வரும். ‘கடவுளே, என்னை ஆராய்ந்து பார்த்து, என் இதயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். என்னைச் சோதித்துப் பார்த்து, என் மனதிலுள்ள கவலைகளைப் புரிந்துகொள்ளுங்கள். எனக்குள் தவறான எண்ணம் ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். முடிவில்லாத பாதையில் என்னை வழிநடத்துங்கள்’னு அந்த வசனங்கள் சொல்லுது. நான் இந்த உலகத்தோட பாகம் இல்லனு எனக்கு தெரிஞ்சிருந்துச்சு. சொல்லப்போனா, என்னால இந்த உலகத்தோட ஒட்டி உறவாட முடியல. நான் யெகோவாவோட அமைப்புல இருக்க வேண்டிய ஆளுனு எனக்கு புரிஞ்சிது. யெகோவா என்னை கைவிடவே இல்ல, நான்தான் அவர்கிட்ட திரும்பி போகணும்ங்குறத புரிஞ்சிக்கிட்டேன். அப்படி திரும்பி வந்தத நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன்!”

“யெகோவா என்னை கைவிடவே இல்ல, நான்தான் அவர்கிட்ட திரும்பி போகணும்ங்குறத புரிஞ்சிக்கிட்டேன்”

டானாவைப் போலவே ‘யெகோவா தரும் சந்தோஷத்தை’ நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபம் செய்கிறோம். (நெகேமியா 8:10) யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள், உங்களுக்குச் சந்தோஷம் கிடைப்பது நிச்சயம்!