Skip to content

இயேசு ஏன் இறந்தார்?

இயேசு ஏன் இறந்தார்?

பைபிள் தரும் பதில்

 மனிதர்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைப்பதற்காகவும், முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்காகவுமே இயேசு இறந்தார். (ரோமர் 6:23; எபேசியர் 1:7) படுபயங்கரமான சோதனைகள் வந்தாலும் ஒரு மனிதனால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதையும்கூட இயேசுவின் மரணம் நிரூபித்தது.—எபிரெயர் 4:15.

 ஒரேவொரு மனிதருடைய மரணம் எப்படி இத்தனை காரியங்களைச் செய்ய முடிந்தது என்பதைக் கவனியுங்கள்.

  1.   நமக்கு “பாவ மன்னிப்பு” கிடைப்பதற்காக இயேசு இறந்தார்.—கொலோசெயர் 1:14.

     முதல் மனிதனாகிய ஆதாம் பாவமே இல்லாமல் பரிபூரணமாகப் படைக்கப்பட்டான். ஆனாலும், வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனான். ஆதாம் கீழ்ப்படியாமல்போனது, அதாவது பாவம் செய்தது, அவனுடைய சந்ததியில் வந்த எல்லாரையுமே பயங்கரமாகப் பாதித்தது. ‘ஒரே மனிதன் கீழ்ப்படியாமல் போனதால் நிறைய பேர் பாவிகளாக்கப்பட்டார்கள்’ என்று பைபிள் விளக்கமளிக்கிறது.—ரோமர் 5:19.

     இயேசுவும்கூட பரிபூரணமானவராக இருந்தார், ஆனால் அவர் எந்தப் பாவமும் செய்யவில்லை. அதனால்தான், ‘நம்முடைய பாவங்களுக்குப் பிராயச்சித்த பலியாக’ அவரால் தன் உயிரைக் கொடுக்க முடிந்தது. (1 யோவான் 2:2; அடிக்குறிப்பு) ஆதாமின் கீழ்ப்படியாமையால் முழு மனிதகுலமும் பாவத்தால் கறைபட்டுப்போனது, ஆனால் இயேசுவின் மரணம் அந்தக் கறையை நீக்கிவிட்டது—அவர்மேல் விசுவாசம் வைக்கிற எல்லாரிடமிருந்தும் அதை நீக்கிவிட்டது.

     வேறு வார்த்தைகளில் சொன்னால், ஆதாம் மனிதகுலத்தைப் பாவத்திடம் விற்றுவிட்டான். இயேசுவோ, மனமுவந்து தன் உயிரைக் கொடுத்ததன் மூலம், மனிதகுலத்தைத் தனக்கென்று விலைக்கு வாங்கிக்கொண்டார். இதன் பலனாக, “யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற நீதியுள்ளவரான இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக இருப்பார்.”—1 யோவான் 2:1.

  2.   தன்மேல் “விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக” இயேசு இறந்தார்.—யோவான் 3:16.

     ஆதாம் என்றென்றும் வாழ்கிற விதத்தில் படைக்கப்பட்டாலும், அவன் செய்த பாவம் அவனுக்கு மரண தண்டனையை வரவழைத்தது. ஆதாமினால் “பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”—ரோமர் 5:12.

     அதற்கு நேர்மாறாக, இயேசுவின் மரணம் பாவத்தின் கறையை நீக்கியதோடு, அவர்மேல் விசுவாசம் வைக்கிற எல்லாரையும் மரண தண்டனையிலிருந்தும் விடுவித்தது. இதைத்தான் பைபிள் இப்படிச் சுருக்கமாகச் சொல்கிறது: “மரணத்தோடு சேர்ந்து பாவம் ராஜாவாக ஆட்சி செய்ததுபோல் நீதியின் மூலம் அளவற்ற கருணை ராஜாவாக ஆட்சி செய்வதற்காக” அளவற்ற கருணை பெருகியது; “அந்த அளவற்ற கருணை நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் முடிவில்லாத வாழ்வைத் தருகிறது.”—ரோமர் 5:21.

     உண்மைதான், இன்னமும் மனிதர்களுடைய வாழ்நாள் குறுகியதாகவே இருக்கிறது. ஆனாலும், நல்ல மனிதர்களுக்கு முடிவில்லாத வாழ்வைத் தரப்போவதாகவும், இறந்தவர்களை உயிர்த்தெழுப்பப்போவதாகவும் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்; இறந்தவர்கள்கூட இயேசுவின் தியாக மரணத்திலிருந்து நன்மையடைவதற்காக அவர் அப்படிச் செய்யப்போகிறார்.—சங்கீதம் 37:29; 1 கொரிந்தியர் 15:22.

  3.   இயேசு “சாகும் அளவுக்கு, தன்னையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்”; இப்படி, எந்தச் சோதனையிலும் ஒரு மனிதனால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதை நிரூபித்தார்.—பிலிப்பியர் 2:8.

     ஆதாமுக்குப் பரிபூரண உடலும் மனமும் இருந்தது, ஆனாலும், கடவுளுக்கு அவன் கீழ்ப்படியாமல்போனான்; ஏன்? தனக்குச் சொந்தமில்லாத ஒன்றை அடைவதற்கு அவன் ஆசைப்பட்டான். (ஆதியாகமம் 2:16, 17; 3:6) பிற்பாடு, கடவுளுடைய முக்கிய எதிரியான சாத்தான் ஒரு விவாதத்தை எழுப்பினான்; அதாவது, எந்த மனிதனும் உயிருக்கு ஆபத்து என வந்துவிட்டால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விடுவான் என்று சொன்னான். (யோபு 2:4) ஆனால், பரிபூரண மனிதரான இயேசு கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார், அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார், ஏன் அவமானப்பட்டும் வேதனைப்பட்டும்கூட இறந்துபோனார்! (எபிரெயர் 7:26) இயேசுவின் மரணம் சாத்தான் எழுப்பிய விவாதத்தை தவிடுபொடியாக்கியது; எந்தச் சோதனையிலும் ஒரு மனிதனால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டது.

இயேசுவின் மரணத்தைப் பற்றிய கேள்விகள்

  •   மனிதர்களை மீட்பதற்காக இயேசு ஏன் வேதனைப்பட்டு சாக வேண்டியிருந்தது? மரணத் தீர்ப்பை கடவுள் ஏன் ரத்து செய்யவில்லை?

     “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று கடவுளுடைய சட்டம் சொல்கிறது. (ரோமர் 6:23) கடவுள் இந்தச் சட்டத்தை ஆதாமிடமிருந்து மறைப்பதற்குப் பதிலாக, கீழ்ப்படியாமையின் தண்டனை மரணம் என்பதை அவனிடம் தெளிவாகச் சொன்னார். (ஆதியாகமம் 3:3) ஆதாம் பாவம் செய்தபோது, “பொய் சொல்ல முடியாத” கடவுள் தான் சொன்னதை நிறைவேற்றினார். (தீத்து 1:3) ஆதாம் தன் சந்ததிக்குப் பாவத்தை மட்டுமல்ல, பாவத்தின் சம்பளமான மரணத்தையும் கடத்தினான்.

     பாவம் செய்த மனிதர்களுக்கு மரண தண்டனை கிடைப்பது நியாயம்தான் என்றாலும், கடவுள் ‘அவருடைய அளவற்ற கருணையை’ அவர்கள்மேல் பொழிந்தார். (எபேசியர் 1:7) மனிதகுலத்தை மீட்பதற்காக அவர் செய்த ஏற்பாடு, அதாவது பரிபூரண பலியாக இயேசுவை அனுப்பியது, நியாயத்திலும் நியாயமான செயலாக, இரக்கத்திலும் இரக்கமான செயலாக இருந்தது.

  •   இயேசு எப்போது இறந்தார்?

     யூதர்களின் பஸ்கா பண்டிகை தினத்தன்று, ‘ஒன்பதாம் மணிநேரத்தில்,’ அதாவது பிற்பகல் மூன்று மணியளவில் இயேசு இறந்தார். (மாற்கு 15:33-37, அடிக்குறிப்பு) தற்போதைய நாள்காட்டிகளின்படி, கி.பி. 33, ஏப்ரல் 1, வெள்ளிக்கிழமை அன்று அவர் இறந்தார்.

  •   இயேசு எங்கே இறந்தார்?

     ‘மண்டையோடு என்ற இடத்தில்’ அவர் கொல்லப்பட்டார்; “எபிரெய மொழியில் அதற்கு கொல்கொதா என்று பெயர்.” (யோவான் 19:17, 18) இயேசுவின் காலத்தில், அந்த இடம் எருசலேமின் “நகரவாசலுக்கு வெளியே” இருந்தது. (எபிரெயர் 13:12) இயேசு கொல்லப்படுவதைச் சிலர் “தூரத்திலிருந்து” பார்த்தார்கள் என்று பைபிள் சொல்வதால், அந்த இடம் ஒருவேளை ஒரு குன்றின்மேல் இருந்திருக்கலாம். (மாற்கு 15:40) ஆனால், கொல்கொதா தற்போது எந்த இடத்தில் இருக்கிறதென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

  •   இயேசு எப்படி இறந்தார்?

     இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகப் பலர் நம்பினாலும், பைபிள் இப்படிச் சொல்கிறது: ‘நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பினார்.’ (அப்போஸ்தலர் 5:30, தமிழ் O.V.) இயேசுவைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட கருவியைக் குறிப்பதற்கு பைபிள் எழுத்தாளர்கள் ஸ்டவ்ரஸ், ஸைலோன் ஆகிய இரண்டு கிரேக்க வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். இந்த வார்த்தைகள் ஒரு உத்திரத்தை அல்லது ஒரே மரத்தில் செய்யப்பட்ட நேரான கம்பத்தைக் குறிப்பதாக அறிஞர்கள் பலர் நம்புகிறார்கள்.

  •   இயேசுவின் மரணத்தை எப்படி நினைவுகூர வேண்டும்?

     யூதர்கள் வருஷா வருஷம் கொண்டாடிய பஸ்கா பண்டிகையின் இரவன்று, இயேசு தன் சீடர்களுடன் சேர்ந்து எளிமையான ஓர் ஏற்பாட்டைத் தொடங்கிவைத்தார்; “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்ற கட்டளையையும் கொடுத்தார். (1 கொரிந்தியர் 11:24) அதன்பிறகு சில மணிநேரங்களில், இயேசு கொல்லப்பட்டார்.

     பைபிள் எழுத்தாளர்கள் இயேசுவை பஸ்கா பண்டிகை அன்று பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியோடு ஒப்பிட்டுப் பேசினார்கள். (1 கொரிந்தியர் 5:7) அடிமைத்தனத்திலிருந்து தாங்கள் விடுவிக்கப்பட்டதை பஸ்கா பண்டிகை இஸ்ரவேலர்களுக்கு எப்படி நினைப்பூட்டியதோ, அப்படியே பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் தாங்கள் விடுவிக்கப்பட்டிருப்பதை இயேசு கிறிஸ்துவின் மரண நினைவுநாள் கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டுகிறது. சந்திர நாள்காட்டியின்படி நிசான் 14 அன்று கொண்டாடப்பட்ட பஸ்கா பண்டிகை வருடாந்தரப் பண்டிகையாக இருந்தது; அதுபோலவே, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவின் நினைவுநாளை வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே அனுசரித்தார்கள்.

     நிசான் 14-ஆம் தேதிக்கு ஒப்பான ஒரு தேதியில் இயேசுவின் மரண நினைவுநாளை வருஷா வருஷம் லட்சக்கணக்கானோர் உலகம் முழுக்க அனுசரிக்கிறார்கள்.