Skip to content

ஒரு கிறிஸ்தவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?

ஒரு கிறிஸ்தவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?

பைபிள் தரும் பதில்

 தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்; தன்னுடைய சீஷர்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்பதை அவர் இப்படிச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். (மத்தேயு 9:12) பைபிள் ஒரு மருத்துவப் புத்தகமல்ல என்றாலும், கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களுக்கு உதவுகிற சில நியமங்களை அது கொடுக்கிறது.

உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்

 1. எனக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தரப்படும் என்று புரிந்திருக்கிறேனா? ‘யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுவதற்கு’ பதிலாக, நம்பகமான தகவல்களைத் தேடிப் பார்க்கும்படி பைபிள் அறிவுறுத்துகிறது.—நீதிமொழிகள் 14:15.

 2. அந்தச் சிகிச்சையைப் பற்றி இன்னும் ஓரிரண்டு டாக்டர்களிடம் நான் அபிப்பிராயம் கேட்க வேண்டுமா? குறிப்பாக, உங்கள் உடல்நிலை படுமோசமாக இருந்தால், ‘ஆலோசகர்கள் நிறைய பேருடைய’ கருத்துக்கள் ரொம்பவே உதவியாக இருக்கும்.—நீதிமொழிகள் 15:22.

 3. அந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளும்போது ‘இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டும்’ என்ற பைபிள் கட்டளையை மீற வேண்டியிருக்குமா?—அப்போஸ்தலர் 15:20.

 4. மருத்துவ பரிசோதனை சமயத்திலும் சிகிச்சை சமயத்திலும் ஆவியுலகத் தொடர்பு வழக்கம் ஏதாவது கடைப்பிடிக்கப்படுகிறதா? “ஆவியுலகத் தொடர்பு” வழக்கத்தை பைபிள் கண்டனம் செய்கிறது. (கலாத்தியர் 5:19-21) சிகிச்சையில் ஆவியுலகத் தொடர்பு பழக்கவழக்கம் ஏதாவது உட்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க, கீழே உள்ள இதுபோன்ற கேள்விகளைச் சிந்தித்துப் பாருங்கள்:

  •   சிகிச்சை கொடுப்பவர் ஆவியுலகத் தொடர்பு வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறாரா?

  •   தெய்வங்களின் கோபத்தால் அல்லது பில்லிசூனியத்தைப் பயன்படுத்துகிற எதிரிகளால் உங்களுக்கு அந்த நோய் வந்திருப்பதாகச் சொல்லி சிகிச்சை அளிக்கப்படுகிறதா?

  •   மருந்து தயாரிக்கும்போதோ அதைப் பயன்படுத்தும்போதோ, பலிகள் கொடுக்கப்படுகின்றனவா? மந்திரங்கள் ஓதப்படுகின்றனவா? ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட சடங்குகள் செய்யப்படுகின்றனவா? அது சம்பந்தமான பொருள்கள் உபயோகிக்கப்படுகின்றனவா?

 5. சதா என் உடல்நிலை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேனா? “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்” என்று பைபிள் அறிவுறுத்துகிறது. (பிலிப்பியர் 4:5) நியாயமானவர்களாக இருந்தீர்கள் என்றால், ஆன்மீகக் காரியங்கள் போன்ற ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ உங்களால் அதிக கவனம் செலுத்த முடியும்.—பிலிப்பியர் 1:10; மத்தேயு 5:3.