Skip to content

யூத இனப்படுகொலைக்குக் காரணம் என்ன? கடவுள் ஏன் அதைத் தடுக்கவில்லை?

யூத இனப்படுகொலைக்குக் காரணம் என்ன? கடவுள் ஏன் அதைத் தடுக்கவில்லை?

 இந்தக் கேள்விகளைக் கேட்கிற நிறைய பேர் வாழ்க்கையில் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள்; அவர்களுக்கு இதற்கான பதில்கள் மட்டுமே தேவையில்லை, மன ஆறுதலும் தேவைப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின்போது நாசிக்கள் நடத்திய யூத இனப்படுகொலை மனிதர்களுடைய கொடூர செயல்களின் உச்சமாக இருக்கிறதென வேறு சிலர் நினைக்கிறார்கள்; கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புவது அவர்களுக்கு ரொம்பவே கடினமாக இருக்கிறது.

கடவுளையும் யூத இனப்படுகொலையையும் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: இனப்படுகொலையைக் கடவுள் ஏன் அனுமதித்தார் என்று கேட்பது தவறு.

 உண்மை: விசுவாசத்தில் உறுதியாக இருந்தவர்கள்கூட கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார் என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். உதாரணமாக, ஆபகூக் தீர்க்கதரிசி கடவுளிடம் இப்படிக் கேட்டார்: “வன்முறையும், அக்கிரமும், குற்றச்செயலும், மூர்க்கத்தனமும் எல்லா இடத்திலும் பரவுவதற்கு நீர் ஏன் அனுமதிக்கிறீர்?” (ஆபகூக் 1:3, கான்டம்பரரி இங்கிலிஷ் வெர்ஷன்) இப்படியெல்லாம் கேள்வி கேட்டதற்காக ஆபகூக்கை கடவுள் திட்டவில்லை; அதற்குப் பதிலாக, எல்லாரும் வாசித்துத் தெரிந்துகொள்வதற்காக அந்தக் கேள்விகளை பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

 தவறான கருத்து: மனிதர்கள் துன்பப்படுவது பற்றி கடவுளுக்கு அக்கறையே இல்லை.

 உண்மை: அக்கிரமச் செயல்களையும் அவற்றால் விளைகிற துன்பங்களையும் கடவுள் வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16-19) நோவாவின் நாட்களில் பூமியெங்கும் நடந்த வன்முறையைப் பார்த்து அவர் “உள்ளத்தில் மிகவும் வேதனைப்பட்டார்.” (ஆதியாகமம் 6:5, 6) அப்படியானால், யூத இனப்படுகொலை நடந்ததைப் பார்த்தும்கூட அவர் ரொம்பவே வேதனைப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.—மல்கியா 3:6.

 தவறான கருத்து: யூதர்களுக்குக் கடவுள் கொடுத்த தண்டனைதான் அந்த யூத இனப்படுகொலை.

 உண்மை: முதல் நூற்றாண்டில் எருசலேம் ரோமர்களால் அழிக்கப்படுவதற்குக் கடவுள் அனுமதித்தார்தான். (மத்தேயு 23:37–24:2) ஆனால், அந்தச் சமயம் முதற்கொண்டு கடவுள் எந்த இனத்திற்குமே விசேஷ தயவைக் காட்டியதும் இல்லை, தண்டனை கொடுத்ததும் இல்லை. கடவுளுடைய கண்களில், “யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை.”—ரோமர் 10:12, தமிழ் O.V. (BSI) பைபிள்.

 தவறான கருத்து: அன்பான, சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்திருந்தால், அந்த யூத இனப்படுகொலையைத் தடுத்திருப்பார்.

 உண்மை: கடவுள் ஒருபோதும் துன்பத்திற்குக் காரணம் இல்லை, என்றாலும் சில சமயம் அதைத் தற்காலிகமாக அனுமதிக்கிறார்.—யாக்கோபு 1:13; 5:11.

யூத இனப்படுகொலையைக் கடவுள் ஏன் அனுமதித்தார்?

 மனிதர்களுடைய எல்லா துன்பங்களையும் கடவுள் என்ன காரணத்திற்காக அனுமதித்திருக்கிறாரோ அதே காரணத்திற்காகத்தான் அந்த யூத இனப்படுகொலையையும் அனுமதித்தார்; அதாவது, பூர்வகாலத்தில் எழுப்பப்பட்ட முக்கிய விவாதங்களைத் தீர்ப்பதற்காக அதை அனுமதித்தார். தற்போது இந்த உலகத்தை ஆளுவது கடவுள் அல்ல, ஆனால் பிசாசாகிய சாத்தான் என்பதை பைபிள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. (லூக்கா 4:1, 2, 6; யோவான் 12:31) யூத இனப்படுகொலையைக் கடவுள் ஏன் அனுமதித்தார் என்பதைப் புரிந்துகொள்ள பைபிளிலுள்ள இரண்டு விஷயங்கள் நமக்கு உதவலாம்.

  1.   தீர்மானங்கள் எடுக்கும் சுதந்திரத்தோடு கடவுள் மனிதர்களைப் படைத்தார். முதல் மனிதத் தம்பதியான ஆதாம் ஏவாள் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் அவர்களிடம் சொன்னபோதிலும், அவர்கள் தனக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று அவர் கட்டாயப்படுத்தவில்லை. நன்மை தீமையைத் தாங்களாகவே முடிவுசெய்ய அவர்கள் தீர்மானித்தார்கள்; அவர்கள் எடுத்த தவறான தீர்மானத்தாலும், ஆதி காலத்திலிருந்து மக்கள் எடுத்துவந்திருக்கிற தவறான தீர்மானங்களாலும்தான் மனிதகுலம் இன்று படுபயங்கர விளைவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. (ஆதியாகமம் 2:17; 3:6; ரோமர் 5:12) பழமை வாய்ந்த யூத மத நியமங்களின் அறிக்கை என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறபடி, “தீர்மானங்கள் எடுப்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதுதான் உலகத்திலுள்ள பெரும்பாலான துன்பதுயரங்களுக்கு மூலகாரணம்.” தீர்மானங்கள் எடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை மனிதர்களிடமிருந்து பறித்துவிடுவதற்குப் பதிலாக, தன்னுடைய உதவியில்லாமல் அவர்களாகவே தங்களுடைய விவகாரங்களைக் கையாளுவதற்குக் கடவுள் காலம் அனுமதித்திருக்கிறார்.

  2.   யூத இனப்படுகொலையினால் ஏற்பட்ட எல்லா சேதத்தையும் கடவுளால் ஈடுகட்ட முடியும், அதை அவர் செய்வார். அந்த இனப்படுகொலையின்போது உயிரிழந்தவர்கள் உட்பட, இறந்துபோன லட்சக்கணக்கான ஆட்களைத் திரும்ப உயிரோடு எழுப்பப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்த இனப்படுகொலை சம்பவத்திலிருந்து உயிர்தப்பிய ஆட்களின் மனதை ஆட்டிப்படைக்கிற வேதனையையும், படுபயங்கரமான நினைவுகளையும் முற்றிலும் நீக்கிவிடுவார். (ஏசாயா 65:17; அப்போஸ்தலர் 24:15) மனிதகுலத்தின்மேல் கடவுளுக்கு அன்பு இருப்பதால், அவர் நிச்சயம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.—யோவான் 3:16.

 யூத இனப்படுகொலையின்போது பலியானவர்களும் சரி, உயிர்தப்பியவர்களும் சரி, கடவுள் ஏன் தீமையை அனுமதித்திருக்கிறார், அதன் பாதிப்புகளையெல்லாம் எப்படிச் சரிசெய்யப்போகிறார் என்பதையெல்லாம் புரிந்துகொண்டதால்தான் கடைசிவரை விசுவாசமாக இருந்தார்கள், வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டார்கள்.