Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

யாத்திராகமம் 20:12—“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”

யாத்திராகமம் 20:12—“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”

 “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா a கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.”—யாத்திராகமம் 20:12, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.”—யாத்திராகமம் 20:12, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

யாத்திராகமம் 20:12-ன் அர்த்தம்

 அப்பா-அம்மாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கட்டளை கொடுத்தார். அந்தக் கட்டளையோடு சேர்த்து ஒரு வாக்குறுதியையும் கொடுத்தார். அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய அது அவர்களைத் தூண்டியது. இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த சட்டதிட்டங்களை (அதாவது, திருச்சட்டத்தை) இன்று கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றாலும், கடவுளுடைய தராதரங்கள் இன்றும் மாறவில்லை. அதனால், அந்தச் சட்டதிட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கும் நியமங்களை இன்று கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பது அவசியமாக இருக்கிறது.—கொலோசெயர் 3:20.

 நாம் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, நம் அப்பா-அம்மாவுக்கு மரியாதை காட்டும்போதும் கீழ்ப்படியும்போதும் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோம். (லேவியராகமம் 19:3; நீதிமொழிகள் 1:8) நாம் வளர்ந்து ஆளாகி குழந்தைகுட்டிகள் என்று ஆகிவிட்டால்கூட, நம் அப்பா-அம்மாமேல் தொடர்ந்து அன்பும் அக்கறையும் காட்ட வேண்டும். உதாரணத்துக்கு, அவர்களுடைய வயதான காலத்தில் அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், பண உதவியும் செய்ய வேண்டும்.—மத்தேயு 15:4-6; 1 தீமோத்தேயு 5:4, 8.

 இஸ்ரவேலர்களின் பிள்ளைகள் தங்களுடைய அப்பாவுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டியிருந்தது. குடும்பத்தில் அம்மாவுக்கும் முக்கியமான பங்கு இருந்ததை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. (நீதிமொழிகள் 6:20; 19:26) இன்றும் பிள்ளைகள் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது.

 அப்பா-அம்மாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு செய்துவிட வேண்டும் என்பதில்லை. இஸ்ரவேலில், அப்பா-அம்மாவோ வேறு யாராவதோ கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்யச் சொன்னபோது பிள்ளைகள் கீழ்ப்படியக் கூடாது என்று சொல்லப்பட்டது. (உபாகமம் 13:6-8) அதேபோல் இன்றும், கிறிஸ்தவர்கள் “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்.”—அப்போஸ்தலர் 5:29.

 அப்பா-அம்மாவுக்குக் கீழ்ப்படியும் பிள்ளைகள் கடவுள் கொடுக்கிற தேசத்தில் ‘சீரும் சிறப்புமாக நீண்ட காலம் வாழ்வார்கள்’ என்று இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தார். (உபாகமம் 5:16) ஆனால், வளர்ந்த பிள்ளைகள் தன்னுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படியாமலும் அப்பா-அம்மாவின் பேச்சைக் கேட்காமலும் இருந்தால், கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னார். (உபாகமம் 21:18-21) அந்தச் சட்டதிட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கும் நியமங்கள் இன்றுவரை மாறவில்லை. (எபேசியர் 6:1-3) நாம் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, நம்மைப் படைத்த கடவுளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். அவர் வாக்குறுதி தந்தபடியே, அவருக்கும் பெற்றோருக்கும் கீழ்ப்படிகிற பிள்ளைகள் நீண்ட காலம் வாழ்வார்கள். சொல்லப்போனால், என்றென்றும் வாழ்வார்கள்.—1 தீமோத்தேயு 4:8; 6:18, 19.

யாத்திராகமம் 20:12-ன் பின்னணி

 யாத்திராகமம் 20:12-ல் உள்ள கட்டளை, பத்துக் கட்டளைகளில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. (யாத்திராகமம் 20:1-17) அதற்கு முந்தைய கட்டளைகள் [உதாரணத்துக்கு, அவரை மட்டும்தான் வணங்க வேண்டும் போன்ற கட்டளைகள்], கடவுளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளோடு சம்பந்தப்பட்டவை. அதற்குப் பிந்தைய கட்டளைகள் [உதாரணத்துக்கு, மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது, திருடக் கூடாது போன்ற கட்டளைகள்], மற்ற மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளோடு சம்பந்தப்பட்டவை. அப்படியென்றால், “அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படியும்போது அந்த இரண்டு விதமான கடமைகளையும் நிறைவேற்றுகிறோம் என்று சொல்லலாம்.

யாத்திராகமம் 20-வது அதிகாரத்தை அடிக்குறிப்புகளோடும் இணை வசனங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18 (தமிழ் O.V. பைபிளில் வசனம் 17).