Skip to content

வாஷிங் மெஷினுக்கு அடியில் காகிதங்கள்

வாஷிங் மெஷினுக்கு அடியில் காகிதங்கள்

 சரீனா என்பவர் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆனார். அதன் பிறகு, தன்னுடைய இரண்டு மகள்களையும் யெகோவாவின் சாட்சியாக வளர்க்க முடிவு செய்தார். அதனால், ரஷ்யாவை விட்டுவிட்டு மத்திய ஆசியாவிலுள்ள தன்னுடைய தாய்நாட்டுக்குத் திரும்பினார். அவருக்கு அவ்வளவாக வசதி இல்லாததால், தன்னுடைய அம்மா, அப்பா, தம்பி, தம்பி மனைவி என எல்லாரோடும் சேர்ந்து ஒரே வீட்டில் தங்கினார். அது ஒரு ரூம் அப்பார்ட்மெண்ட்! அங்கே அவருடைய மகள்களுக்கு பைபிளை சொல்லிக்கொடுக்கக் கூடாதென்று அவருடைய பெற்றோர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். பைபிளைப் பற்றித் தங்கள் அம்மாவிடம் பேசக் கூடாதென்று அவருடைய மகள்களிடமும் சொல்லிவிட்டார்கள்.

 யெகோவாவைப் பற்றித் தன்னுடைய மகள்களுக்கு எப்படி சொல்லித்தருவது என்று சரீனா ரொம்பவே யோசித்துப் பார்த்தார். (நீதிமொழிகள் 1:8) பிறகு, ஞானம் தரும்படியும் ஏதாவது ஒரு வழியைக் காட்டும்படியும் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தார். அதன்பின், தன்னுடைய பங்கில் முயற்சியும் எடுத்தார். தன்னுடைய மகள்களை வாக்கிங் கூட்டிக்கொண்டு போக ஆரம்பித்தார். அப்படிப் போகும்போதெல்லாம், அற்புதமான படைப்புகளைப் பற்றிப் பேசினார். அதனால், அதையெல்லாம் படைத்தவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவருடைய மகள்களுக்கு வந்தது.

 பிறகு, அவர்களுடைய ஆர்வத்தை இன்னும் அதிகமாக வளர்ப்பதற்கு சரீனா ஒரு வழியைக் கண்டுபிடித்தார். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?  a புத்தகத்திலுள்ள பாராக்களையும் கேள்விகளையும் பார்த்துப்பார்த்து சின்னச் சின்னத் துண்டுக் காகிதங்களில் எழுதினார். தன்னுடைய மகள்கள் புரிந்துகொள்வதற்காக அவற்றை சில வரிகளில் விளக்கியும் எழுதினார். பிறகு அந்தக் காகிதங்களையும் ஒரு பென்சிலையும் பாத்ரூமில் இருந்த வாஷிங் மெஷினுக்கு அடியில் ஒளித்துவைத்தார். அவருடைய மகள்கள் பாத்ரூமுக்குள் வந்தபோது, அந்த பாராக்களைப் படித்து, கேள்விகளுக்குப் பதில்களை எழுதினார்கள்.

 அந்தப் புத்தகத்திலுள்ள இரண்டு அதிகாரங்களை இதேபோல் அவர்கள் படித்தார்கள். அதன் பிறகு, மூன்று பேரும் வேறொரு வீட்டுக்குக் குடிமாறிப்போனார்கள். அங்கே எந்த எதிர்ப்பும் இல்லாமல் சரீனாவால் தன்னுடைய மகள்களை வளர்க்க முடிந்தது. 2016-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் அவருடைய இரண்டு மகள்களும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். கடவுளைப் பற்றித் தங்களுக்கு சொல்லிக்கொடுக்க தங்களுடைய அம்மா புத்திசாலித்தனமாக நடந்துகொண்டதை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

a இப்போது நிறைய பேர் பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? என்ற புத்தகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.