Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனநோயால் வாடுகிறவர்களுக்கு உதவுவது

மனநோயால் வாடுகிறவர்களுக்கு உதவுவது

பைபிள் சொல்கிறது: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

இதன் அர்த்தம் என்ன?

நண்பர் ஒருவர் மனநோயால் அவதிப்படும்போது, அவருக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் நாம் குழம்பி போய்விடலாம். ஆனால், நம்மால் கண்டிப்பாக அவருக்கு உதவ முடியும்.

எப்படி உதவுவது?

“நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாக . . . இருக்க வேண்டும்.”—யாக்கோபு 1:19.

நண்பருக்கு உதவுவதற்கு ஒரு சிறந்த வழி, அவர் பேசும்போது கவனித்து கேட்பதுதான்! அவர் சொல்கிற எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள். அவர் பேசுவதை கவனிக்கிறீர்கள் என்பதை காட்டுங்கள்; கரிசனையோடு நடந்துகொள்ளுங்கள். அவர் சொல்ல வருவதை முழுமையாக கேளுங்கள். நீங்களாகவே ஒரு முடிவுக்கு வராதீர்கள். அவர் சொல்வதை கேட்டு அவரை குற்றப்படுத்திவிடாதீர்கள். சிலசமயத்தில், அவர் யோசிக்காமல் பேசிவிடலாம். பிறகு, அதை நினைத்து அவரே வருத்தப்படலாம்.​—யோபு 6:​2, 3.

“ஆறுதலாகப் பேசுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:14.

உங்கள் நண்பர் பதட்டப்படலாம். வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று நினைக்கலாம். அப்போது, என்ன சொல்வது என்றே தெரியாமல் நீங்கள் திணறலாம். ஆனாலும், அவர்மேல் உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை காட்டினால், அவருக்கு ஆறுதலாக இருக்கும்.

“உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.”—நீதிமொழிகள் 17:17.

நண்பருக்கு தேவையான உதவியை செய்யுங்கள். என்ன உதவி தேவை என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வராமல், அவரிடம் கேளுங்கள். அவருக்கு சொல்ல தெரியவில்லை என்றால், அவரோடு சேர்ந்து சில விஷயங்களை செய்யுங்கள். உதாரணத்துக்கு, அவரோடு சேர்ந்து ‘வாக்கிங்’ போகலாம், கடைக்கு போகலாம், வீட்டை சுத்தம் செய்யலாம்.​—கலாத்தியர் 6:2.

“பொறுமையாக இருங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:14.

உங்கள் நண்பர் சிலசமயத்தில் பேச விரும்ப ­மாட்டார். ஒருவேளை பேச விரும்பினால், அவர் சொல்வதை கேட்க தயாராக இருப்பதை காட்டுங்கள். சிலசமயம், அவர் சொல்கிற-செய்கிற விஷயங்கள் உங்களை காயப்படுத்தலாம். நீங்கள் அவரோடு சேர்ந்து செய்ய நினைத்த விஷயங்களை அவர் திடீரென்று மாற்றிவிடலாம். அவ்வப்போது அவர் ‘மூட்-அவுட்’ ஆகிவிடலாம். அவருடைய பிரச்சினையால்தான் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை புரிந்து, பொறுமையாக இருங்கள். அவரை தாங்கி பிடிக்கும் ஒரு சுவராக இருங்கள்.—நீதிமொழிகள் 18:24.

உங்கள் நட்பு அவருக்கு தேவை

“‘எனக்காக என் தோழி எப்போதுமே இருப்பாள்’ என்ற உணர்வை அவளுக்கு கொடுக்க ஆசைப்படுகிறேன். அவளுடைய பிரச்சினைகளுக்கு என்னிடம் தீர்வு இல்லைதான். இருந்தாலும், அவள் சொல்வதை கேட்க என் காதை கொடுத்தாலே போதும், அவளுடைய மனதில் இருக்கிற பாரத்தை இறக்கி வைத்ததுபோல் உணர்வாள்.”​—ஃபாரா, a உணவு உட்கொள்ளும் கோளாறாலும் மனப்பதற்ற நோயாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டவரின் நண்பர்.

“எனக்கு ஒரு ஃபிரண்ட் இருந்தாள். அவள் பாசக்காரி! தட்டிக்கொடுக்கிற மாதிரி பேசுவாள். ஒருதடவை, என்னை அவளுடைய வீட்டுக்கு கூப்பிட்டாள். ருசியாக சமைத்து வைத்திருந்தாள். அவளுடைய வீட்டுக்கு போனது ரொம்ப நன்றாக இருந்தது! அந்த அன்பான சூழலில் மனதில் இருப்பதை கொட்ட முடிந்தது. உண்மையிலேயே அதுதான் எனக்கு தேவைப்பட்டது!”​—ஹா-உன், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்.

“பொறுமையாக இருப்பது ரொம்ப முக்கியம். சிலசமயத்தில் என் மனைவி கோபப்படுத்தும்போது, ‘அவளுக்கு உடம்பு முடியாததால்தான் இப்படி செய்கிறாள், வேண்டுமென்றே செய்ய மாட்டாள்’ என்று சொல்லிக்கொள்வேன். இப்படி செய்வதால், அவள்மேல் கோபப்படாமல் கரிசனையோடு நடக்க முடிகிறது.”​—ஜேக்கப், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரின் கணவர்.

“சிலசமயத்தில் நான் பதட்டமாக, சோகமாக ஆகிவிடுவேன். அப்போதெல்லாம் சில விஷயங்களை செய்யவே பிடிக்காது. அதை செய்ய சொல்லி என் மனைவி கட்டாயப்படுத்த மாட்டாள். இதனால், அவளுக்கு பிடித்த விஷயங்களைக்கூட செய்ய முடியாமல் போய்விடும். அவளுடைய தியாகம்... தாராள மனம்... ஆதரவு... இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை!”​—என்ரிகோ, மனப்பதற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்.

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.