Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாவதே மேல் என்று தோன்றும்போது

சாவதே மேல் என்று தோன்றும்போது

“நான் கொஞ்சம்கூட நிம்மதி இல்லாம தவிச்சேன். அதனால, வாழ்க்கைய முடிச்சுக்கணும்னு நினைச்சேன்” என்று சொல்கிறார் பிரேசிலைச் சேர்ந்த ஆட்ரியானா.

நீங்கள் எப்போதாவது, ‘வாழ்க்கையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்’ என்று நினைத்தது உண்டா? அப்படியென்றால், ஆட்ரியானாவின் குமுறல்கள் உங்களுக்கும் புரியும். உச்சக்கட்ட கவலையிலும் சோகத்திலும் விரக்தியிலும் அவள் தவித்தாள். அவளுக்குத் தீராத மன உளைச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜப்பானைச் சேர்ந்த அலோக், உடம்பு சரியில்லாமல் இருந்த வயதான அம்மா அப்பாவைக் கவனித்துக்கொண்டார். அவர் சொல்கிறார்... “அந்த சமயத்துல எனக்கு ஆபீசுல தலைக்குமேல வேல இருந்துச்சு. போகப்போக, டென்ஷன்ல சாப்பாடுகூட இறங்கல. கொஞ்சம்கூட தூக்கமே வரல. இப்படியொரு வாழ்க்கை வாழ்றதுக்கு பேசாம செத்துப்போயிட்டா எவ்ளோ நிம்மதியா இருக்கும்னு யோசிச்சேன்.”

நைஜீரியாவைச் சேர்ந்த மார்க் என்பவர் சொல்கிறார்... “என் மனசு பாரமாவே இருந்துச்சு. நான் அழாத நாளே இல்ல. அதனால, எப்படி தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.” நல்லவேளை, மேலே நாம் பார்த்த மூன்று பேரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆனால், ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான ஆட்கள் அந்த விபரீத முடிவை எடுக்கிறார்கள்!

உதவிக்கு எங்கே போவது?

தற்கொலை செய்துகொள்கிறவர்களில் முக்கால்வாசி பேர் ஆண்கள். பெரும்பாலும், உதவி கேட்பதை அவமானமாக நினைத்துத்தான் அவர்கள் அந்தத் தவறான முடிவுக்குப் போகிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கு மருத்துவர் தேவை என்று இயேசு சொன்னார். (லூக்கா 5:31) அதனால், உங்களுக்குத் தற்கொலை எண்ணம் வந்தால், உதவி கேட்கத் தயவுசெய்து வெட்கப்படாதீர்கள். மனச்சோர்வில் அவதிப்படுகிற நிறைய பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் பலன் தந்திருக்கின்றன. மேலே நாம் பார்த்த மூன்று பேரும் மருத்துவ உதவியைப் பெற்றுக்கொண்டார்கள்; அதனால், இப்போது நன்றாக முன்னேறி வருகிறார்கள்.

மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் மருந்து மாத்திரைகளைத் தரலாம் அல்லது மனநல ஆலோசனைகளைக் கொடுக்கலாம். சிலசமயம், இந்த இரண்டு விதங்களிலுமே அவர்கள் சிகிச்சை தரலாம். அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள் சாய உறவுகள் தேவை, தூக்கி நிறுத்த தோழர்கள் தேவை. அதனால், குடும்பத்தில் இருக்கிறவர்களும் நண்பர்களும் அவர்களுக்குக் கரிசனையோடும் அனுதாபத்தோடும் பொறுமையோடும் உதவி செய்ய வேண்டும். அதேசமயத்தில், யெகோவா தேவனைப் போல ஒரு நண்பர் யாருக்குமே கிடைக்க முடியாது! அவர் பைபிளின் மூலம் அற்புதமான விதத்தில் உதவி செய்கிறார்.

நிரந்தர தீர்வு கிடைக்குமா?

மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் ரொம்பக் காலத்துக்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கலாம். அதோடு, சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு அவர்கள் தங்களுடைய வாழ்க்கைப் பாணியில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். நீங்களும் மனச்சோர்வில் வாடுகிறீர்களா? கவலைப்படாதீர்கள், மார்க்கைப் போலவே நீங்களும், இனி வாழ்வில் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். அவர் சொல்கிறார்... “உலகத்தில் இருக்கிற யாருமே, ‘எனக்கு உடம்பு சரியில்லை’னு சொல்ல மாட்டாங்கனு ஏசாயா 33:24 சொல்லுது. அந்தக் காலத்துக்காகத்தான் நான் ஆசையா காத்துக்கிட்டு இருக்கேன்.” பூமியில் நிலைமைகள் தலைகீழாக மாறும் என்றும், அப்போது ‘வேதனையே’ இருக்காது என்றும் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:1, 4) மார்க்கைப் போலவே நீங்களும் இதை நினைத்து சந்தோஷப்படுங்கள். இனி உடலிலும் மனதிலும் யாருக்கும் எந்த விதமான வலியும் இருக்காது. உங்கள் மனக்காயங்கள் நிரந்தரமாக ஆறிவிடும். முன்பு பட்ட வேதனைகள் இனி உங்கள் ‘மனதுக்கு வராது, [உங்கள்] நெஞ்சத்தையும் வாட்டாது.’—ஏசாயா 65:17.