Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரச்சினைகளை அன்பினால் சரிசெய்யுங்கள்

பிரச்சினைகளை அன்பினால் சரிசெய்யுங்கள்

“ஒருவரோடொருவர் சமாதானமாக இருங்கள்.”மாற். 9:50.

பாடல்கள்: 39, 77

1, 2. என்ன சில பிரச்சினைகளைப் பற்றி நாம் ஆதியாகம புத்தகத்தில் வாசிக்கிறோம், அதைப் பற்றி படிப்பது நமக்கு ஏன் நல்லது?

வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் எல்லாம் பைபிள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் வந்திருக்கிறது. ஆதியாகம புத்தகத்தின் முதல் சில அதிகாரங்களிலேயே எத்தனை பேருக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு காயீன் ஆபேலை கொலை செய்தான். (ஆதி. 4:3-8) லாமேக்கு தன்னை அடித்த ஒரு இளைஞனை கொலை செய்தான். (ஆதி. 4:23) ஆபிரகாமின் மேய்ப்பர்களும் லோத்துவின் மேய்ப்பர்களும் ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்தார்கள். (ஆதி. 13:5-7) ஆகார் சாராளை அற்பமாக பார்த்ததால் சாராள் ஆபிரகாமோடு சண்டைப் போட்டாள். (ஆதி. 16:3-6) இஸ்மவேல் எல்லாரோடும் சண்டைப் போட்டான், அதேபோல் மற்றவர்களும் அவனோடு சண்டைப் போட்டார்கள்.—ஆதி. 16:12.

2 இதுபோன்ற உதாரணங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதெல்லாம் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களும் நம்மை போலவே தவறு செய்யும் இயல்புள்ளவர்கள். அவர்களுக்கு வந்த பிரச்சினைகள் நமக்கு வரும்போது அவர்களில் நல்ல உதாரணங்களை எப்படி பின்பற்றலாம், கெட்ட உதாரணங்களை எப்படி தவிர்க்கலாம் என்பதை கற்றுக்கொள்கிறோம். (ரோ. 15:4) மற்றவர்களோடு சமாதானமாக இருக்கவும் கற்றுக்கொள்கிறோம்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?

3 யெகோவாவின் மக்கள் வாக்குவாதங்களை தீர்ப்பது ஏன் முக்கியம், அதை எப்படி செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, பிரச்சினைகளை தீர்க்க... யெகோவாவோடும் மற்றவர்களோடும் இருக்கும் பந்தத்தை பலப்படுத்த... நமக்கு உதவும் சில பைபிள் வசனங்களையும் பார்க்கலாம்.

நாம் ஏன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்?

4. இன்று உலகத்தில் இருப்பவர்கள் எப்படி நடக்கிறார்கள், அதன் விளைவு என்ன?

4 மனிதர்களுக்குள் சண்டை சச்சரவும் பிரிவினையும் வருவதற்கு சாத்தான்தான் முக்கிய காரணம். ஏன் அப்படி சொல்கிறோம்? கடவுளுடைய உதவி இல்லாமல் மனிதர்களே எது சரி எது தவறு என்று தீர்மானிக்க முடியும், அப்படி தீர்மானிப்பதுதான் சரி என்று ஏதேன் தோட்டத்தில் சாத்தான் சொன்னான். (ஆதி. 3:1-5) மக்கள் தங்கள் இஷ்டப்படி நடந்துகொள்வதால் இன்று எவ்வளவு பிரச்சினைகள் வருகிறது என்பதை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது. நிறையப் பேர் பெருமை பிடித்தவர்களாக, சுயநலக்காரர்களாக இருக்கிறார்கள், ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொள்கிறார்கள். அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்றெல்லாம் அவர்கள் துளியும் யோசிப்பதில்லை. இப்படி சுயநலமாக நடந்துகொள்வதால் சண்டைதான் வருகிறது. தொட்டதற்கெல்லாம் நாம் கோபப்பட்டால் மற்றவர்களோடு நமக்கு நிறைய பிரச்சினைகள் வரும் என்று பைபிள் சொல்கிறது. அதனால் நிறைய தவறுகள் செய்துவிடுவோம் என்றும் சொல்கிறது.—நீதி. 29:22.

5. சண்டை சச்சரவுகள் வரும்போது தன் சீடர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார்?

5 இயேசு, தன் சீடர்களுக்கு சமாதானமாக இருப்பதைப் பற்றியும் வாக்குவாதங்களை தவிர்ப்பதைப் பற்றியும் கற்றுக்கொடுத்தார். அப்படி நடந்துகொள்வதால் அவர்களுக்கு ஏதாவது நஷ்டம் வந்தாலும் சமாதானமாக இருக்கும்படி சொல்லிக்கொடுத்தார். உதாரணத்துக்கு பிரச்சினைகள் வரும்போது அன்பாக நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்களோடு சமாதானமாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அதோடு, கோபத்தை தவிர்க்க... பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க... எதிரிகளையும் நேசிக்க... அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.—மத். 5:5, 9, 22, 25, 44.

6, 7. (அ) பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்வது ஏன் முக்கியம்? (ஆ) என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

6 இன்று நாம் ஜெபம் செய்வதன் மூலமாக, ஊழியத்திலும் கூட்டங்களிலும் கலந்துகொள்வதன் மூலமாக யெகோவாவை வணங்குகிறோம். நம் சகோதரர்களோடு நாம் சமாதானமாக இல்லையென்றால் யெகோவா நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டார். (மாற். 11:25) யெகோவாவின் நண்பராக இருக்க வேண்டும் என்றால் நாம் மற்றவர்களை தாராளமாக மன்னிக்க வேண்டும்.லூக்கா 11:4; எபேசியர் 4:32-ஐ வாசியுங்கள்.

7 யெகோவாவை வணங்குகிற நாம் எல்லாரும் மற்றவர்களோடு சமாதானமாக இருக்க வேண்டும், ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதனால் ‘சகோதர சகோதரிகளை நான் தாராளமா மன்னிக்கிறேனா? அவங்களோட இருக்கிறது எனக்கு பிடிச்சிருக்கா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் மன்னிக்கும் விஷயத்தில் இன்னும் முன்னேற வேண்டும் என்றால் அதற்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அப்படிப்பட்ட ஜெபங்களை அவர் சந்தோஷமாக கேட்பார், நிச்சயம் உங்களுக்கு உதவியும் செய்வார்.—1 யோ. 5:14, 15.

எப்படிப்பட்ட பிரச்சினைகளை பெரிதுப்படுத்தாமல் இருக்கலாம்?

8, 9. நம் மனதை யாராவது கஷ்டப்படுத்தியிருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

8 தவறு செய்யாதவர்கள் என்று யாருமே இல்லை. அதனால் யாராவது நம் மனதை கஷ்டப்படுத்தும் விதத்தில் பேசலாம் அல்லது நடந்துகொள்ளலாம். (பிர. 7:20; மத். 18:7) அந்த சமயத்தில் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? இந்த உதாரணத்தை கவனியுங்கள்: ஒரு சகோதரி இரண்டு சகோதரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அந்த சகோதரி பேசிய விதம் ஒரு சகோதரருக்கு மட்டும் கஷ்டமாக இருந்தது. இந்த சகோதரர்கள் தனியாக இருந்தபோது புண்பட்ட சகோதரர் அந்த சகோதரி பேசிய விதத்தைப் பற்றி குறையாக சொன்னார். புண்பட்ட சகோதரரிடம் அந்த சகோதரர் ஆறுதலாக பேசினார். அந்த சகோதரி வேண்டுமென்றே அப்படி பேசியிருக்க மாட்டார் என்றும், பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அந்த சகோதரி 40 வருஷங்களாக யெகோவாவை உண்மையாக சேவித்திருக்கிறார் என்றும் சொன்னார். புண்பட்ட சகோதரர் என்ன செய்தார்? அந்த சகோதரர் சொன்னதை ஏற்றுக்கொண்டார். அந்த விஷயத்தைப் பற்றி இனிமேல் யோசிக்கவே கூடாது என்று தீர்மானித்தார்.

9 இந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யாராவது நம் மனதை கஷ்டப்படுத்தியிருந்தால் அப்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. மற்றவர்கள்மீது நமக்கு அன்பிருந்தால் நிச்சயம் அவர்களை மன்னிப்போம். (நீதிமொழிகள் 10:12; 1 பேதுரு 4:8-ஐ வாசியுங்கள்.) ‘குற்றத்தை மன்னிக்கிற’ ஒருவரை யெகோவாவுக்கு ரொம்ப பிடிக்கும். (நீதி. 19:11; பிர. 7:9) அடுத்தமுறை யாராவது உங்களை புண்படுத்தும் விதத்தில் பேசினாலோ நடந்துகொண்டாலோ உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த விஷயத்தை பெரிசுபடுத்தாம அப்படியே விட்டுடலாமா?’

10. (அ) மற்றவர்கள் தன்னிடம் குறை கண்டுபிடித்தபோது ஒரு சகோதரி எப்படி உணர்ந்தார்? (ஆ) எந்த பைபிள் வசனம் அவருக்கு ஆறுதலாக இருந்தது?

10 யாராவது நம்மைப் பற்றி குறை சொல்லும்போது அது நமக்கு கஷ்டமாக இருக்கலாம். இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்த ஒரு பயனியர் சகோதரி என்ன செய்தார் என்று கவனியுங்கள். அந்த சகோதரி செய்யும் ஊழியத்தை பற்றி சபையில் இருந்த சிலர் குறை சொன்னார்கள். அவர் நேரத்தை வீணடிப்பதாகவும் சொன்னார்கள். அதை கேட்டபோது அந்த சகோதரிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால், அவர் சபையில் இருந்த அனுபவமுள்ள சகோதரர்களிடம் ஆலோசனை கேட்டார். மற்றவர்களுடைய வீண் பேச்சையெல்லாம் கேட்டு கவலைப்படுவதற்கு பதிலாக யெகோவாவைப் பற்றி யோசிக்கும்படி அவர்கள் சொன்னார்கள், பைபிள் வசனங்களையும் காட்டினார்கள். முக்கியமாக மத்தேயு 6:1-4-ஐ வாசித்தது அந்த சகோதரிக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. (வாசியுங்கள்.) யெகோவாவை சந்தோஷப்படுத்துவதுதான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம் என்பதை அந்த வசனம் அவருக்கு ஞாபகப்படுத்தியது. அதனால் மற்றவர்கள் சொன்ன விஷயங்களை அந்த சகோதரி காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்போது அவர் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி யெகோவாவை சந்தோஷப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அவர் செய்கிறார்.

எப்படிப்பட்ட பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும்?

11, 12. (அ) நமக்கு எதிராக யாராவது தவறு செய்தால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (ஆ) பிரச்சினையை சரி செய்யும் விஷயத்தில் ஆபிரகாமிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

11 “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 3:2) நீங்கள் சொல்லிலோ செயலிலோ ஒரு சகோதரரை கஷ்டப்படுத்தியிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி இயேசு இப்படி சொன்னார்: “உங்கள் காணிக்கையைச் செலுத்த பலிபீடத்திற்கு நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மீது ஏதோ மனக்குறை இருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்திற்குமுன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனிடம் சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.” (மத். 5:23, 24) அப்படியென்றால், உங்களை புண்படுத்திய சகோதரரிடம் நீங்களே போய் பேசுங்கள். அவர் செய்த தவறை உணர்த்தும் விதத்திலோ குறை சொல்லும் விதத்திலோ பேசாதீர்கள். அதற்கு பதிலாக, அவரிடம் சமாதானமாக வேண்டும் என்ற குறிக்கோளோடு பேசுங்கள். சகோதர சகோதரிகளோடு சமாதானமாக இருப்பதுதான் நமக்கு ரொம்ப முக்கியம்!

12 வாக்குவாதம் ஏற்படும்போது கடவுளுடைய மக்கள் எப்படி சமாதானமாக இருக்கலாம் என்பதற்கு ஒரு பைபிள் உதாரணத்தை கவனியுங்கள். ஆபிரகாமுக்கும் லோத்துவுக்கும் நிறைய ஆடு, மாடுகள் இருந்தது. அவற்றை மேய்ப்பதற்கு போதுமான இடம் இல்லாததால் அவர்களுடைய மேய்ப்பர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் நடந்தது. ஆனால் ஆபிரகாம் லோத்துவோடு சமாதானமாக இருக்க விரும்பியதால் முதலில் ஒரு நல்ல இடத்தை எடுத்துக்கொள்ளும்படி அவரிடம் சொன்னார். (ஆதி. 13:1, 2, 5-9) ஆபிரகாம் நமக்கு ஒரு சிறந்த உதாரணம் இல்லையா? அவர் அப்படி தாராளமாக விட்டுக்கொடுத்ததால் எதையாவது இழந்துவிட்டாரா? இல்லவே இல்லை. இந்த சம்பவம் நடந்த உடனேயே யெகோவா ஆபிரகாமை பலமடங்கு ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்தார். (ஆதி. 13:14-17) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மற்றவர்களோடு நமக்கு இருக்கும் பிரச்சினையை நாம் அன்போடு சரிசெய்ய வேண்டும். அதனால் நமக்கு ஏதாவது நஷ்டம் வந்தாலும் யெகோவா நம்மை பலமடங்கு ஆசீர்வதிப்பார். [1]—பின்குறிப்பு.

13. ஒரு சகோதரர் கோபமாக பேசியபோது ஒரு கண்காணி எப்படி நடந்துகொண்டார், அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

13 நம்முடைய காலத்தில் நடந்த ஒரு உதாரணத்தை கவனியுங்கள். மாநாட்டு இலாக்காவில் கண்காணியாக சேவை செய்ய ஒரு சகோதரர் புதிதாக நியமிக்கப்பட்டார். அவர் மற்றொரு சகோதரருக்கு ஃபோன் செய்து அந்த இலாக்காவில் வேலை செய்ய முடியுமா என்று கேட்டார். ஆனால் அந்த சகோதரர் கோபமாக பேசி ஃபோனை வைத்துவிட்டார். ஏனென்றால், இதற்கு முன்பு அந்த இலாக்காவில் கண்காணியாக இருந்த சகோதரருக்கும் இவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அவர் அப்படி பேசியதை இந்த புதிய கண்காணி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் அவருக்கு உதவி செய்ய விரும்பியதால் ஒரு மணிநேரம் கழித்து அவர் திரும்பவும் ஃபோன் செய்தார். அவரை நேரில் பார்க்க விரும்புவதாகவும் சொன்னார். ஒரு வாரம் கழித்து அவர்கள் ராஜ்ய மன்றத்தில் சந்தித்தார்கள். யெகோவாவிடம் ஜெபம் செய்த பிறகு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு அவர்கள் பேசினார்கள். முன்பு இருந்த கண்காணியோடு அவருக்கு என்ன பிரச்சினை இருந்தது என்று அவர் சொன்னார். புதிய கண்காணி அதையெல்லாம் பொறுமையாக கேட்டார், பைபிளிலிருந்து சில வசனங்களையும் காட்டினார். இதனால் அந்த சகோதரர்கள் சமாதானமானார்கள், மாநாட்டில் ஒன்றுசேர்ந்து வேலை செய்தார்கள். அந்த புதிய கண்காணி அன்பாகவும் கனிவாகவும் பேசியதற்காக அந்த சகோதரர் ரொம்ப நன்றியோடு இருந்தார்.

எப்படிப்பட்ட பிரச்சினைகளை மூப்பர்களிடம் சொல்ல வேண்டும்?

14, 15. (அ) மத்தேயு 18:15-17-ல் உள்ள ஆலோசனையை எப்போது கடைப்பிடிக்க வேண்டும்? (ஆ) இயேசு ஏன் இந்த ஆலோசனையைக் கொடுத்தார், இதை கடைப்பிடிக்க என்ன மூன்று படிகளை செய்ய சொன்னார்?

14 சகோதர சகோதரிகளோடு பிரச்சினை வந்தால் பெரும்பாலும் அதை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் சில பிரச்சினைகளை அப்படி தீர்க்க முடியாது. மத்தேயு 18:15-17 சொல்வதுபோல் நாம் மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டும் (வாசியுங்கள்.) இந்த வசனத்தில் இயேசு சொன்ன “பாவம்” கிறிஸ்தவர்களுக்கு இடையே வரும் சின்ன சின்ன மனஸ்தாபங்களை குறிக்கவில்லை. அதை எப்படி சொல்கிறோம்? தவறு செய்த ஒருவரோடு அவருடைய சகோதரன் பேசிய பிறகு அவர் மனந்திரும்பவில்லை என்றால் ஒன்று அல்லது இரண்டு சாட்சிகளை வைத்து அவரிடம் பேச வேண்டும். அப்படியும் அவர் மனந்திரும்பவில்லை என்றால் சபையில் பொறுப்பிலுள்ள சகோதரர்களை வைத்து பேச வேண்டும். அதற்குப் பிறகும் அவர் மாறவில்லை என்றால் “அவர் உங்களுக்குப் புறதேசத்தாரைப் போலவும் வரி வசூலிப்பவரைப் போலவும் இருக்கட்டும்” என்று இயேசு சொன்னார். அப்படியென்றால், அவரை சபைநீக்கம் செய்ய வேண்டும் என்று அர்த்தம். இங்கே “பாவம்” என்பது மோசடியை... ஒருவரைப் பழித்துப் பேசுவதை... ஒருவருடைய நற்பெயரை கெடுப்பதை... குறிக்கிறது. ஆனால் விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, விசுவாச துரோகம், சிலை வழிபாடு போன்ற பெரிய பாவங்களை அது குறிக்கவில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட பாவங்களை சபை மூப்பர்களிடம் சொல்லியே ஆகவேண்டும்.

சகோதரரோடு இருக்கும் பிரச்சினையை சரிசெய்ய நிறைய தடவை அவரிடம் பேச வேண்டியிருக்கும் (பாரா 15)

15 நம் சகோதரர்களோடு இருக்கும் பிரச்சினையை அன்பாக சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு இந்த ஆலோசனையைக் கொடுத்தார். (மத். 18:12-14) இந்த ஆலோசனையை நாம் எப்படி கடைப்பிடிக்கலாம்? (1) நம் சகோதரரோடு நமக்கு பிரச்சினை வந்தால் அதை மற்றவர்களிடம் பேசுவதற்கு பதிலாக அந்த சகோதரரிடமே பேசி சரிசெய்துகொள்ள வேண்டும். அந்த பிரச்சினையை சரிசெய்ய நிறைய தடவை அவரிடம் பேச வேண்டியிருக்கலாம். ஆனாலும் அவரோடு நம்மால் சமாதானமாக முடியவில்லை என்றால் என்ன செய்வது? (2) இந்த பிரச்சினையைப் பற்றி தெரிந்த ஒரு சகோதரரை அல்லது அதிலிருக்கும் தவறை புரிந்துகொள்ள முடிந்த ஒருவரை வைத்து நாம் பேச வேண்டும். பிரச்சினை சரியானால் நாம் அந்த ‘சகோதரரை நல்வழிக்குக் கொண்டுவர’ முடியும். ஆனால் இதெல்லாம் செய்தும் எந்த பலனும் இல்லை என்றால், (3) இந்த பிரச்சினையைப் பற்றி நாம் மூப்பர்களிடம் சொல்ல வேண்டும்.

16. பிரச்சினையை சரிசெய்ய இயேசு கொடுத்த ஆலோசனை சிறந்தது, அன்பானது என்று ஏன் சொல்லலாம்?

16 மத்தேயு 18:15-17-ல் உள்ள 3 குறிப்புகளையும் நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏன்? நிறைய சமயங்களில் தவறு செய்த சகோதரர் தன் தவறை உணர்ந்துகொண்டு பிரச்சினையை சரிசெய்துகொள்கிறார். அதனால் அவரை சபைநீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. புண்பட்ட சகோதரரும் மனந்திரும்பிய அந்த சகோதரரை மன்னித்துவிடுகிறார். அப்படியென்றால், முதல் 2 படிகளை எடுப்பதற்கு முன்பே ஒருவர் மூப்பர்களிடம் போகவேண்டிய அவசியமில்லை என்பது இயேசு கொடுத்த ஆலோசனையிலிருந்து தெளிவாக தெரிகிறது. ஆனால், இந்த 2 படிகளை எடுத்த பிறகும் அந்த சகோதரர் மனந்திரும்பாமல் இருந்தால்... அவர் தவறு செய்ததற்கான அத்தாட்சிகள் தெளிவாக இருந்தால்... அதை மூப்பர்களிடம் சொல்ல வேண்டும்.

17. சமாதானமாக இருக்க நாம் கடினமாக முயற்சி செய்யும்போது என்ன நன்மைகள் கிடைக்கும்?

17 இந்த பொல்லாத உலகத்தில் இருக்கும்வரை நாம் எல்லாருமே ஏதாவது ஒருவிதத்தில் மற்றவர்களின் மனதை கஷ்டப்படுத்துவோம். அதனால்தான் யாக்கோபு இப்படி சொன்னார்: “பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்; அவன் தன்னுடைய முழு உடலையும் கடிவாளம்போட்டு அடக்க முடிகிறவனாக இருப்பான்.” (யாக். 3:2) பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டுமென்றால் ‘சமாதானமாக இருக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்ய’ வேண்டும். (சங். 34:14, NW) சகோதர சகோதரிகளோடு சமாதானமாக இருக்க தொடர்ந்து முயற்சி செய்யும்போது அவர்களுடைய நண்பர்களாக இருப்போம், எப்போதும் ஒற்றுமையாகவும் இருப்போம். (சங். 133:1-3) அதைவிட முக்கியமாக ‘சமாதானத்தின் கடவுளான’ யெகோவாவோடு நெருங்கிய நட்பை அனுபவிப்போம். (ரோ. 15:33) சகோதரர்களோடு இருக்கும் பிரச்சினையை அன்போடு சரிசெய்யும்போது நாம் எல்லாருமே ஆசீர்வாதங்களை அனுபவிப்போம்.

^ [1] (பாரா 12) யாக்கோபு ஏசாவோடு இருந்த பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்தார் (ஆதி. 27:41-45; 33:1-11); யோசேப்பு தன் சகோதரர்களோடு சமாதானமானார் (ஆதி. 45:1-15); கிதியோன் எப்பிராயீம் மனுஷர்களோடு சமாதானமாக போனார் (நியா. 8:1-3). இதுபோன்ற பைபிள் உதாரணங்களை நீங்களும் யோசித்துப் பார்க்கலாம்.