Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விவாகரத்து—நீங்கள் அறிந்திருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்

விவாகரத்து—நீங்கள் அறிந்திருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்

வீடு எவ்வளவு சேதமடைந்திருக்கிறது என்பதை அலசிப் பார்த்த பிறகு அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் ஒன்று, வீட்டை இடித்துவிட தீர்மானிக்கலாம் அல்லது திரும்பக் கட்ட முடிவு செய்யலாம்.

உங்கள் திருமணமும் இதே கட்டத்தில் இருக்கிறதா? ஒருவேளை உங்கள் துணை உங்களுக்குத் துரோகம் செய்திருக்கலாம் அல்லது அடிக்கடி சண்டைகள் வருவதால் உங்கள் உறவில் சந்தோஷம் வற்றிப் போயிருக்கலாம். அப்படியென்றால், ‘எங்களுக்குள் இருந்த அன்பு தணிந்துவிட்டது’ அல்லது ‘எங்களுக்கு பொருத்தமே இல்லை’ அல்லது ‘நாங்கள் யோசிக்காமல் திருமணம் செய்துகொண்டோம்’ என்று நீங்கள் நொந்துகொள்ளலாம். ‘விவாகரத்து தவிர வேறு வழியே இல்லை’ என்றுகூட நீங்கள் நினைக்கலாம்.

அவசரப்பட்டு முடிவு எடுப்பதற்கு முன் யோசியுங்கள். வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை விவாகரத்து தீர்த்துவிடாது. அதற்குப் பதிலாக, ஒரு விதமான பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு வேறு விதமான பிரச்சினைகளைக் கிளப்பிவிடும். டாக்டர் பிராட் சாக்ஸ் என்பவர் பதின் வயது பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தமாக தான் எழுதிய ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு எச்சரிக்கிறார்: “விவாகரத்து எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விமோசனம் தரும் என்று பிரிந்துபோகும் தம்பதிகள் கனவு காணலாம். அதாவது, புயலும் பூகம்பமுமாக இருந்த வாழ்க்கையில் திடீரென அமைதி பிறந்து நிரந்திரமாக வசந்தம் வீசும் என்று அவர்கள் கனவு காணலாம். ஆனால், திருமணத்தில் பிரச்சினைகளே வராது என எப்படி உத்தரவாதம் அளிக்க முடியாதோ அப்படியே விவாகரத்து பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்பதற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது.” எனவே, விவாகரத்து பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்ட பின் எதார்த்தமாகச் சிந்தித்து முடிவெடுப்பது அவசியம்.

விவாகரத்து—பைபிளின் கருத்து

விவாகரத்தை ஒரு சிறிய விஷயமாக பைபிள் குறிப்பிடுவதில்லை. வேறொருவரை மணந்துகொள்ளும் எண்ணத்தோடு அற்ப காரணங்களுக்காக தன் துணையை விவாகரத்து செய்வதை யெகோவா வெறுக்கிறார், அதைத் துரோகமாக கருதுகிறார் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (மல்கியா 2:13-16) திருமண பந்தம் ஒரு நிரந்திரமான பந்தம். (மத்தேயு 19:6) தம்பதிகள் கொஞ்சம் அனுசரித்து ஒருவரையொருவர் தாராளமாக மன்னித்திருந்தால் அற்ப காரணங்களுக்காக முறிந்துபோன எத்தனையோ திருமணங்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.—மத்தேயு 18:21, 22.

அதேசமயம் ஒரேவொரு காரணத்திற்காக மட்டுமே விவாகரத்து செய்து, மறுமணம் செய்துகொள்ளலாம் என்று பைபிள் சொல்கிறது; அதாவது, திருமணத்திற்கு வெளியே தாம்பத்திய உறவுகொள்ளும்போது. (மத்தேயு 19:9) எனவே, உங்கள் துணை உங்களுக்குத் துரோகம் செய்திருப்பது தெரிய வந்தால் அவரை விவாகரத்து செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது. மற்றவர்கள் தங்கள் கருத்துகளை உங்கள்மீது திணிக்கக் கூடாது, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்வதும் இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஏனென்றால், விளைவுகளை அனுபவிக்கப்போவது நீங்கள்தான். அதனால், நீங்களே முடிவெடுக்க வேண்டும்.—கலாத்தியர் 6:5.

என்றாலும், “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 14:15) அதனால், விவாகரத்து செய்ய வேதப்பூர்வமான காரணம் உங்களுக்கு இருந்தாலும், அதன் பின்விளைவுகளைக் குறித்து கவனமாய் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. (1 கொரிந்தியர் 6:12) “உடனடியாகத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதில் உட்பட்டுள்ள விஷயங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்க நேரம் தேவை, நானும் விவாகரத்து ஆனவன் என்பதால் இதை என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்” என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த டேவிட். *

நீங்கள் யோசிக்க வேண்டிய நான்கு முக்கியமான விஷயங்களைக் குறித்து இப்போது சிந்திப்போம். அப்படிச் சிந்தித்துப் பார்க்கையில், விவாகரத்து செய்துகொண்ட இந்த நபர்கள் தாங்கள் தவறான தீர்மானம் எடுத்துவிட்டதாக சொல்வதில்லை என்பதை தயவுசெய்து கவனியுங்கள். ஆனால், மணமுறிவுக்குப் பின் வரும் மாதங்களில் அல்லது வருடங்களில் பொதுவாக எழக்கூடிய பிரச்சினைகளில் சிலவற்றை இவர்களுடைய குறிப்புகள் காட்டுகின்றன.

1 பணப் பிரச்சினை

இத்தாலியைச் சேர்ந்த டான்யெல்லா என்பவருக்கு கல்யாணமாகி 12 வருடங்கள் ஆகியிருந்தன. வேலை செய்யும் இடத்தில் அவருடைய கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அப்போது அவருக்குத் தெரியவந்தது. “எனக்கு விஷயம் தெரிந்தபோது அவள் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்தாள்” என்கிறார் டான்யெல்லா.

கொஞ்ச நாட்கள் பிரிந்து வாழ்ந்த பிறகு விவாகரத்து பெற டான்யெல்லா முடிவு செய்தார். “எப்படியாவது எங்கள் திருமணத்தை காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அவர் மறுபடியும் மறுபடியும் எனக்கு துரோகம் செய்துகொண்டிருந்தார்” என்கிறார். தான் சரியான முடிவெடுத்ததாகவே டான்யெல்லா உணர்கிறார். ஆனாலும் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் இருவரும் பிரிந்த உடனேயே எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. சில சமயங்களில் இராத்திரி சாப்பிட ஒன்றுமே இருக்காது. கொஞ்சம் பால் குடித்துவிட்டு தூங்கிவிடுவேன்.”

ஸ்பெயினைச் சேர்ந்த மரியா என்பவரும் இதே போல் பண நெருக்கடிக்குள் விழுந்தார். “என்னுடைய மாஜி கணவர் எங்களுக்கு ஒரு பைசா தருவதில்லை. அவர் வாங்கிய கடன்களை அடைப்பதற்கு நான் அல்லும்பகலும் உழைக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமா, வசதியான வீட்டை விட்டு ஒரு சின்ன வீட்டுக்கு, அதுவும் பாதுகாப்பில்லாத ஒரு பகுதிக்கு குடிமாற வேண்டியிருந்தது” என்று அவர் சொல்கிறார்.

இந்த அனுபவங்கள் காட்டுகிறபடி, மண முறிவினால் பண ரீதியில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களே. பார்க்கப்போனால், விவாகரத்துக்குப் பிறகு ஆண்களின் வருமானம் 11 சதவிகிதம் உயர்வதாகவும் பெண்களின் வருமானம் 17 சதவிகிதம் குறைவதாகவும் ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஏழு வருட ஆய்வு ஒன்று தெரிவித்தது. “இதனால் சில பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள், ஏனென்றால், ஒருபக்கம் அவர்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும், ஒரு வேலையைத் தேட வேண்டும், இன்னொரு பக்கம் விவாகரத்தினால் ஏற்பட்ட மனவேதனையையும் தாங்கிக்கொள்ள வேண்டும்” என்கிறார் அந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மீகே யன்சன். விவாகரத்தில் இத்தனை விஷயங்கள் அடங்கியிருப்பதால் “விவாகரத்து செய்ய மக்கள் ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கிறார்கள்” என்று சில வக்கீல்கள் சொல்வதாக லண்டன் நாட்டின் டெய்லி டெலிகிராஃப் பத்திரிகை குறிப்பிடுகிறது.

என்ன நடக்கலாம்: நீங்கள் விவாகரத்து செய்தால் உங்கள் வருமானம் குறைந்துவிடலாம். நீங்கள் சிறிய வீட்டுக்கு குடிமாறிப் போக வேண்டியிருக்கலாம். ஒருவேளை பிள்ளைகள் உங்கள் பொறுப்பில் விடப்பட்டால் உங்களையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்வது உங்களுக்குப் பாரமாகிவிடலாம்.—1 தீமோத்தேயு 5:8.

2 பிள்ளை வளர்ப்பு பிரச்சினை

பிரிட்டனில் வசிக்கும் ஜேன் என்ற பெண் சொல்வதைக் கேளுங்கள்: “என் கணவர் எனக்குத் துரோகம் செய்துவிட்ட செய்தி என் தலையில் இடியாக இறங்கியது. அவர் எங்களைவிட்டு போக தீர்மானித்தது இன்னும் பேரிடியாக இருந்தது.” ஜேன் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தான் எடுத்தது சரியான முடிவு என்றே அவர் நினைக்கிறார். இருந்தாலும் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்கிறார்: “என் பிள்ளைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருப்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. எல்லா தீர்மானங்களையும் நானே எடுக்க வேண்டியிருந்தது.”

ஸ்பெயினிலுள்ள கிராஸ்யெலா என்பவரும் விவாகரத்தானவர், இவருடைய நிலைமையும் கிட்டத்தட்ட அதேபோல்தான். “எனக்கு 16 வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவனை பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பும் எனக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், டீன் பருவம் இரண்டுங்கெட்டான் பருவம் என்பதால் தன்னந்தனியாக அவனை வளர்ப்பது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. எத்தனையோ இரவுகளை அழுதே போக்கியிருக்கிறேன். ஒரு தாயாக என் பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை என்ற எண்ணம் என்னை வாட்டியது” என்கிறார் அவர்.

பிள்ளையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இருவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டால் அதில் இன்னொரு சிக்கல் எழலாம். அதாவது, பிள்ளைகளை வந்து பார்ப்பது, பிள்ளைகளின் தேவைகளைக் கவனித்துக்கொள்வது, அவர்களுக்குப் புத்திமதி சொல்வது போன்ற விஷயங்களில் மாஜி துணையோடு கலந்து பேச வேண்டியிருக்கலாம். அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டீன் என்ற விவாகரத்தான பெண் சொல்கிறார்: “முன்னாள் கணவருடன் சுமூகமான உறவு வைத்துக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல. எல்லாருக்குமே உணர்ச்சி போராட்டங்கள் இருப்பதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் நினைத்ததை சாதிக்க பிள்ளையை ஒரு கருவியாகப் பயன்படுத்திவிடலாம்.”

என்ன நடக்கலாம்: பிள்ளையைப் பார்த்துக்கொள்ளும் விஷயத்தில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். பிள்ளையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உங்கள் இருவருக்கும் கொடுக்கப்படுகிறது என்றால், நாம் ஏற்கெனவே சிந்தித்தபடி பிள்ளையை வந்து பார்ப்பது, பண உதவி அளிப்பது போன்ற விஷயங்களில் உங்கள் மாஜி துணை உங்கள் அளவுக்கு நியாயமாக நடந்துகொள்ளாமல் போகலாம்.

3 விவாகரத்தினால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்பு

பிரிட்டனைச் சேர்ந்த மார்க் என்பவரின் மனைவி பல முறை அவருக்குத் துரோகம் செய்துவிட்டார். “இரண்டாவது முறையும் அவள் அப்படிச் செய்தபோது என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்று அவர் சொல்கிறார். மார்க் தன் மனைவியை விவாகரத்து செய்தார். இருந்தாலும் அவள்மீது தனக்கு இன்னும் அன்பு இருப்பதை உணர்ந்தார். “அவள் செய்யும் தவறுகளை என்னிடம் வந்து சொல்லும்போது எனக்கு ஆறுதல் சொல்வதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் என் மனதை நோகடிக்கத்தான் செய்கிறார்கள். அன்பு அவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடாது” என்கிறார்.

இந்தக் கட்டுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட டேவிட்டும், தன் மனைவிக்கு இன்னொரு ஆளுடன் தொடர்பு இருப்பது தெரிந்தபோது நிலைகுலைந்துபோனார். “என்னால் அதை நம்பவே முடியவில்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் என் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் செலவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்” என்கிறார். தன் மனைவியை விவாகரத்து செய்துவிட டேவிட் முடிவு செய்தார். அதன் பிறகு அவருடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டதாக அவர் நினைத்தார். “யாருமே என்னை உண்மையில் நேசிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது. நான் திரும்ப யாரையாவது கல்யாணம் செய்தால் அவர் என்னை ஏமாற்றமாட்டார் என்று என்ன நிச்சயம். என்னால் யாரையுமே நம்ப முடிவதில்லை” என்கிறார் அவர்.

நீங்கள் விவாகரத்தானவர் என்றால், உங்களுக்கு நிச்சயம் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இருக்கும். ஒருபக்கம், ஒரே உடல் பந்தத்தில் இணைந்திருந்த துணைமீது உங்களுக்கு இன்னும் அன்பு இருப்பதாக நீங்கள் உணரலாம். (ஆதியாகமம் 2:24, NW) இன்னொரு பக்கம், நடந்ததை எண்ணி உங்களுக்குக் கோபம் கோபமாக வரலாம். ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட கிராஸ்யெலா சொல்வதாவது, “பல வருடங்கள் சென்ற பிறகும் எனக்குள் குழப்பமாக இருக்கிறது, என்னை அவர் அலட்சியப்படுத்தியதை என்னால் மறக்க முடியவில்லை. ஆதரவற்றவளாக உணர்கிறேன். மணவாழ்க்கையில் அனுபவித்த எத்தனையோ சந்தோஷமான தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. ‘“நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது” என்று அவர் அடிக்கடி சொன்னதெல்லாம் வெறும் பொய்யா? ஏன் இப்படியெல்லாம் நடந்தது?’ என்ற கேள்விகள் என்னை அலைக்கழிக்கின்றன” என்கிறார்.

என்ன நடக்கலாம்? உங்கள் துணை உங்களை மோசமாக நடத்திய விதத்தை எண்ணி அவர்மீது உங்களுக்குக் கோபமாகவும் ஆத்திரமாகவும் இருக்கலாம். சில சமயங்களில் தனிமை உங்களை வாட்டி வதைக்கலாம்.—நீதிமொழிகள் 14:29; 18:1.

4 விவாகரத்தினால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

“என் மனைவி எனக்குத் துரோகம் செய்தபோது நான் தகர்ந்துபோனேன். அந்த ஆள் என் தங்கையின் கணவர் என்பதை அறிந்தபோது அதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. செத்துப்போய்விடலாம் என்று நினைத்தேன்” என்கிறார் ஸ்பெயினைச் சேர்ந்த விவாகரத்தான ஹோசே. தாய் செய்த தவறினால் இரண்டு வயதும் நான்கு வயதும் நிறைந்த தன் மகன்கள் பாதிக்கப்பட்டதை ஹோசே கண்டார். “தங்கள் அம்மா ஏன் மாமாவுடன் இருக்கிறார்கள், நான் ஏன் அவர்களை அழைத்துக்கொண்டு அத்தையும் பாட்டியும் இருக்கிற வீட்டுக்கு வந்திருக்கிறேன் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் எங்கேயாவது வெளியே கிளம்பினால், ‘அப்பா எப்போது வீட்டுக்கு வருவீர்கள்?’ என்று கேட்பார்கள். சில சமயங்களில், ‘டாடி, எங்களை விட்டு போகாதீர்கள்’ என்றுகூட சொல்வார்கள்” என்கிறார்.

விவாகரத்து எனும் போர்க்களத்தில் எப்போதும் பிள்ளைகள்தான் பலியாகிறார்கள். ஆனால் அதை பெற்றோர் உணருவதேயில்லை. ஒருவேளை பெற்றோருக்கு ஒத்துப்போகவில்லை என்றால் அவர்கள் விவாகரத்து செய்வதுதான் “பிள்ளைகளுக்கு சிறந்ததா”? சமீப காலங்களில் அந்த எண்ணம் தவறென பேசப்படுகிறது, குறிப்பாக, கணவன் மனைவிக்கிடையே உள்ள பிரச்சினை பெரிதாக இல்லாதபோது. விவாகரத்தின் எதிர்பாரா விளைவு என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “தாங்கள் சந்தோஷமே இல்லாமல் வாழ்ந்தாலும் பிள்ளைகள் ஓரளவு திருப்தியோடு இருப்பதைப் பார்ப்பது பெற்றோருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அம்மா அப்பா தனித்தனி ரூம்களில் வசித்தாலும் குடும்பம் ஒன்றாக இருக்கும்வரை பிள்ளைகளுக்கு சந்தோஷம்தான்.”

வீட்டில் பெற்றோர் மத்தியில் நடக்கும் சண்டைகள் எல்லாம் பொதுவாக பிள்ளைகளுக்குத் தெரியும். இது அவர்களுடைய பிஞ்சு மனங்களைப் பெரிதும் பாதிக்கலாம். இருந்தாலும், விவாகரத்து செய்துவிட்டால் பிள்ளைகள் சந்தோஷமாய் இருப்பார்கள் என்று நினைப்பது தவறாகும். “கணவன்-மனைவி மத்தியில் சந்தோஷம் இல்லாவிட்டாலும் சரி, குடும்பம் என்ற அமைப்பு இருக்கும்வரை பெற்றோர் தொடர்ந்து கொடுக்கும் அளவான அறிவுரைகளை பிள்ளைகள் சுலபமாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறது” என்று மணவாழ்வை ஆதரித்து என்ற ஆங்கில புத்தகத்தில் லின்டா ஜே. வேட் மற்றும் மாகி காலகர் குறிப்பிட்டார்கள்.

என்ன நடக்கலாம்: உங்கள் முன்னாள் துணையுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக்கொள்ள உங்கள் பிள்ளையை நீங்கள் அனுமதிக்காவிட்டால் விவாகரத்து உங்கள் பிள்ளையைப் பயங்கரமாகப் பாதித்துவிடலாம்.— “நடுவில் மாட்டிக்கொண்டதைப் போல் உணர்ந்தேன்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

விவாகரத்து செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்ட நான்கு விஷயங்களைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். ஏற்கெனவே பார்த்தபடி, உங்கள் துணை உங்களுக்குத் துரோகம் செய்திருந்தால் என்ன செய்வதென்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் என்ன தீர்மானம் எடுத்தாலும் அதன் பின்விளைவுகளை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் எதிர்ப்படப்போகும் சவால்களை அறிந்து, அவற்றை சமாளிக்க தயாராய் இருங்கள்.

இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சிந்தித்த பின்பு உங்கள் மணவாழ்வை மேம்படுத்துவதே நல்லது என்ற முடிவுக்கு நீங்கள் வரலாம். அது உண்மையிலேயே சாத்தியமா? (g10-E 02)

^ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.