Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை

பணத்தால் வாங்க முடியாதவை . . .

பணத்தால் வாங்க முடியாதவை . . .

கஷ்டமோ நஷ்டமோ பொருள்களை வாங்கி குவிப்பதிலேயே இன்று மக்கள் குறியாய் இருக்கிறார்கள். இது கேட்க வேடிக்கையாக இருந்தாலும் இதுதான் உண்மை.

இப்படிப்பட்டவர்களையே விளம்பரதாரர்கள் குறிவைக்கிறார்கள். ஆடம்பர வீடு, சொகுசு கார், விலை உயர்ந்த ஆடையெல்லாம் வாழ்க்கைக்கு அத்தியாவசியம் என்பதுபோல் நினைக்க வைக்கிறார்கள். ‘காசு இல்லையா? கவலை வேண்டாம், கிரெடிட் கார்டு இருக்கே!’ என்பதுதான் அவர்களின் வஞ்சக வார்த்தைகள். கடனில் மூழ்கியிருந்தாலும் பகட்டாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அநேக மக்கள் இவர்களுடைய வலையில் சிக்கிவிடுகிறார்கள்.

ஆனால், அவர்கள் சீக்கிரம் நிஜத்தைப் புரிந்துகொள்வார்கள். த நார்ஸிஸிஸம் எப்பிடமிக் என்ற புத்தகம் சொல்கிறது: ‘பணக்காரராகக் காட்டிக்கொள்வதற்காக கிரெடிட் கார்டில் பொருள்கள் வாங்குபவர்களுக்கும், கவலையை மறக்க க்ராக் கொக்கேயினை (ஒரு வகை போதைப்பொருளை) உபயோகிப்பவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆரம்பத்தில் இரண்டுமே மலிவாக கிடைப்பதுபோல் தெரியலாம், சந்தோஷத்தையும் தரலாம். கடைசியில் பணத்தை எல்லாம் சுரண்டிவிடும், மனசோர்வில் ஆழ்த்திவிடும்.’

‘பகட்டாகக் காட்ட பொருள்களை’ வாங்கி குவிப்பது தவறென பைபிளும் ஒத்துக்கொள்கிறது. (1 யோவான் 2:16) உண்மை என்னவென்றால், பொருளாசை நம்மை ஆட்டிப்படைக்க விட்டுவிட்டால் பணத்தால் வாங்க முடியாத முக்கியமான விஷயங்களுக்குக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். என்ன முக்கியமான விஷயங்கள்?

 1. குடும்ப பிணைப்பு

தன் அப்பா வேலையே கதியாக இருப்பதாகவும் பணத்திற்கே அதிக கவனம் செலுத்துவதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது சாண்ரா * உணர்கிறாள். “எங்ககிட்ட எல்லாமே இருக்கு, தேவைக்கும் அதிகமாகவே இருக்கு. ஆனா, அப்பா எங்ககூட இல்லாததுதான் ஒரே குறை. வேலை வேலைன்னு எப்போ பார்த்தாலும் வெளியூருக்கு போயிடுவாரு. வேலை முக்கியம்தான், ஆனா குடும்பம் அதைவிட முக்கியமாச்சே” என்கிறாள் அவள்.

சிந்தித்துப் பாருங்கள்: சாண்ராவின் அப்பா பிற்காலத்தில் எதை நினைத்து வருந்தலாம்? பொருளாதார காரியங்களுக்கு அதிக கவனம் செலுத்துவது, அப்பா-மகள் பந்தத்தை எப்படிப் பாதிக்கும்? அவருடைய குடும்பத்தார் அவரிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்?

பைபிள் நியமங்கள்:

  • “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு . . . பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:10.

  • ‘பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் காய்கறி உணவே மேல்.’—நீதிமொழிகள் 15:17, பொது மொழிபெயர்ப்பு.

உண்மை இதுவே: பணத்தால் குடும்பத்தில் அன்பு பாசத்தை வாங்க முடியாது. குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடுவதோடு அன்பையும் அரவணைப்பையும் காட்டினால்தான் குடும்ப பிணைப்பு பலப்படும்.—கொலோசெயர் 3:18-21.

 2. உண்மையான பாதுகாப்பு

“நல்லா படி, கை நிறைய சம்பாதி, பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. ஒருவேளை வீட்டுக்காரரோட சம்பாத்தியம் இல்லானாலும் உன் சொந்த கால்ல நிற்க முடியும்னு என் அம்மா எப்போவும் சொல்வாங்க. அவங் வாழ்க்கையில ஒரே லட்சியம் பணம்தான். அவங்களுக்கு எப்படியாவது பணம் வந்தா போதும்” என்கிறாள் 17 வயது சாரா.

சிந்தித்துப் பாருங்கள்: எதிர்காலத்தைப் பற்றிய என்ன நியாயமான கவலைகள் உங்களுக்கு இருக்கிறது? உங்களுடைய நியாயமான கவலை எப்போது தேவையில்லாத கவலையாக மாறலாம்? பணத்தைப் பற்றிய சமநிலையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க சாராவின் அம்மா அவளுக்கு எப்படி உதவலாம்?

பைபிள் நியமங்கள்:

  • “பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள்; இங்கே பூச்சியும் துருவும் அவற்றை அரித்துவிடும், திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள்.”—மத்தேயு 6:19.

  • “நாளை உங்களுக்கு என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியாதே.”—யாக்கோபு 4:14.

உண்மை இதுவே: பாதுகாப்பான எதிர்காலத்திற்கு பணத்தைக் குவிப்பது மட்டும் போதாது. ஏனென்றால், பணம் எப்போது வேண்டுமானாலும் திருடு போய்விடலாம். பணத்தை வைத்து நோயையோ, மரணத்தையோ தடுக்க முடியாது. (பிரசங்கி 7:12) கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி தெரிந்துகொள்வதே உண்மையான பாதுகாப்பைத் தரும் என்று பைபிள் கற்பிக்கிறது.—யோவான் 17:3.

 3. மனநிறைவு

“எனக்கும் என் அக்காவுக்கும் எளிமையான வாழ்க்கை வாழ எங்க அம்மா-அப்பா சொல்லி கொடுத்தாங்க. சில நேரத்துல எங்களுக்கு அடிப்படை தேவைகள் மட்டும்தான் இருந்தது, ஆனாலும் நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம்” என்கிறாள் 24 வயது டானியா.

சிந்தித்துப் பாருங்கள்: அடிப்படை தேவைகளை மட்டும் வைத்து திருப்தியாக வாழ்வது ஏன் கடினமாக இருக்கலாம்? பண விஷயத்தில் உங்களுடைய குடும்பத்தாருக்கு நீங்கள் என்ன முன்மாதிரி வைக்கிறீர்கள்?

பைபிள் நியமங்கள்:

  • “நமக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்.”—1 தீமோத்தேயு 6:8.

  • “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத்தேயு 5:3.

உண்மை இதுவே: சந்தோஷமான வாழ்க்கைக்கு பணம், பொருள் மட்டுமே போதாது. “ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 12:15) வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொண்டால்தான் திருப்தியான வாழ்க்கையைப் பெற முடியும். உதாரணத்திற்கு:

  • நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன?

  • நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • கடவுளைப் பற்றி நான் இன்னும் அதிகமாக எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களான யெகோவாவின் சாட்சிகள் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆர்வமாய் இருக்கிறார்கள்.  

^ பாரா. 8 இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.