Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

ஊதாரியாக மாறிய ஒருவர் எப்படி யெகோவாவிடம் திரும்பி வந்தார்? அப்பாவுக்காக ஏங்கிய ஒருவர் எப்படி யெகோவா அப்பாவின் அரவணைப்பைப் பெற்றார்? அவர்கள் இருவரிடமும் கேட்டுப் பார்க்கலாம்.

“நான் யெகோவாவிடம் திரும்பிப் போக வேண்டும்.”—ஈலி கலில்

பிறந்த ஆண்டு: 1976

சொந்த நாடு: சைப்ரஸ்

முன்பு: ஊதாரி மகன்

என் கடந்த காலம்: நான் சைப்ரஸில் பிறந்தேன், ஆஸ்திரேலியாவில் வளர்ந்தேன். என்னுடைய அப்பா-அம்மா யெகோவாவின் சாட்சிகள். என் மனதில் யெகோவாமீதும் அவருடைய வார்த்தையான பைபிள்மீதும் அன்பை விதைக்க அவர்கள் எப்படியெல்லாமோ முயற்சி செய்தார்கள். ஆனால், டீன்-ஏஜை தொட்டவுடன் ஒரு அடங்காப்பிடாரியாக மாறிவிட்டேன். ராத்திரி நேரங்களில் யாருக்கும் தெரியாமல் வெளியே போய் இளவட்டங்களுடன் ஜாலியாக இருப்பேன். நாங்கள் கார் திருடுவோம், நிறைய அட்டகாசம் செய்வோம்.

முதலில் அப்பா-அம்மாவிற்குப் பயந்து எல்லாவற்றையும் ரகசியமாக செய்து வந்தேன். போகப் போக அந்தப் பயமெல்லாம் பறந்துவிட்டது. யெகோவாவை வணங்காத ஆட்களுடன் பழக ஆரம்பித்தேன். என்னைவிட வயதில் மூத்த அந்த ஆட்களோடு சேர்ந்து குட்டிச்சுவராகிவிட்டேன். ஒருநாள் என் பெற்றோரிடம், இனிமேலும் யெகோவாவின் சாட்சியாக இருக்க விரும்பவில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டேன். அவர்கள் பொறுமையோடு என்னைத் திருத்த முயற்சி செய்தார்கள். ஆனால், நான் எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் மனம் சுக்குநூறானது.

வீட்டைவிட்டு போனபிறகு, போதைப்பொருள்களை ருசிக்க ஆரம்பித்தேன். அதிலும் மாரிஹுவானாவை அதிகமாகப் பயிர்செய்து, விற்க ஆரம்பித்தேன். பெண்களோடு உல்லாசமாக வாழ்ந்தேன். நைட் க்ளப், பார்ட்டி என நேரத்தை வீணடித்தேன். போகப்போக தொட்டதற்கெல்லாம் கோபத்தில் கொதித்தேன். எனக்குப் பிடிக்காததை யாராவது சொன்னாலோ செய்தாலோ அவ்வளவுதான், எனக்குக் கோபம் தலைக்கேறிவிடும், கன்னாபின்னாவென திட்டுவேன், கைவரிசையையும் காட்டுவேன். சுருக்கமாகச் சொன்னால், எதையெல்லாம் செய்யக்கூடாது என்று அப்பா-அம்மா பைபிளிலிருந்து சொல்லிக்கொடுத்தார்களோ அதையெல்லாம் செய்தேன்.

பைபிள் என்னை மாற்றிய விதம்: போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிற ஒருவன் என் நெருக்கமான நண்பனானான். அவன் சிறுவயதிலேயே அப்பாவைப் பறிகொடுத்தவன். நாங்கள் இருவரும் விடிய விடிய பேசிக்கொண்டிருப்போம். அப்படிப் பேசும்போது சுகதுக்கங்களை என்னோடு பகிர்ந்துகொள்வான். அப்பா இல்லாமல் எப்படியெல்லாம் தவிக்கிறான் என்பதைச் சொல்வான். உயிர்த்தெழுதலைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்ததால், அதை அவனுக்குச் சொன்னேன். இயேசு பூமியில் இருந்தபோது இறந்தவர்களை உயிர்த்தெழுப்பினார், அதேபோல் எதிர்காலத்தில் இறந்தவர்களை உயிர்த்தெழுப்பப் போவதாக வாக்குக்கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் விளக்கினேன். (யோவான் 5:28, 29) “உன் அப்பாவை நீ திரும்பவும் பார்க்கலாம்! நாம எல்லாரும் பூஞ்சோலை பூமியில் சாவே இல்லாம வாழ்வோம்” என்று அவனிடம் சொல்வேன். இந்த விஷயங்களெல்லாம் அவன் மனதைத் தொட்டன.

சில நேரங்களில், திரித்துவம், கடைசி நாட்கள் பற்றியும் கேட்பான். அவனுடைய பைபிளையே வாங்கி சில வசனங்களைக் காட்டுவேன். யெகோவா, இயேசு, கடைசி நாட்கள் பற்றிய உண்மைகளை அந்த வசனங்களிலிருந்து விளக்குவேன். (யோவான் 14:28; 2 தீமோத்தேயு 3:1-5) இதையெல்லாம் அவனிடம் சொல்லச் சொல்ல எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த சத்தியம் மெல்ல மெல்ல விழித்துக்கொண்டது.

சிறுவயதில் அப்பா-அம்மா என் மனதில் சத்தியத்தை விதைக்க பட்ட பாடுகளுக்கெல்லாம் பலன் கிடைக்க ஆரம்பித்தது, ஆம், அது கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விட்டது. எப்படியென்றால், போதையில் நண்பர்களோடு ஜாலியாக இருக்கும் நேரங்களில் திடீரென யெகோவாவைப் பற்றி ஞாபகத்துக்கு வரும். என் நண்பர்களில் நிறைய பேர், கடவுளை நம்புவதாகச் சொல்வார்கள், ஆனால் எதிர்மாறாக நடந்துகொள்வார்கள். நான் அவர்களைப் போல இருக்க விரும்பவில்லை, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆம், நான் யெகோவாவிடம் திரும்பிப் போக வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை, அதைச் செய்வதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். சில காரியங்களைச் சரிசெய்வது எனக்குச் சுலபமாக இருந்தது. போதைப்பொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன், கெட்ட நண்பர்களையும் கைகழுவிவிட்டேன். ஒரு கிறிஸ்தவ மூப்பருடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால், சில விஷயங்களை மாற்றிக்கொள்வது எனக்கு மகா கஷ்டமாக இருந்தது. முக்கியமாக, கோபத்தைக் கட்டுப்படுத்துவது பெரிய போராட்டமாக இருந்தது. கொஞ்ச நாள் நல்ல பிள்ளையாக இருப்பேன். பிறகு, திரும்பவும் கோபத்தில் வெடித்துவிடுவேன். இதுபோன்ற நேரங்களில் மனதுக்கு வேதனையாக இருக்கும், “என்னைத் திருத்தவே முடியாது” என்று நொந்துகொள்வேன். என்ன செய்வதென தெரியாமல், எனக்கு பைபிள் படிப்பு எடுத்த மூப்பரிடம் போவேன். அவர் எப்போதும் பொறுமையோடும் அன்போடும் எடுத்துச் சொல்லி, ‘உன்னால் முடியும்’ என்று நம்பிக்கை அளிப்பார். ஒருநாள், விடாமுயற்சி செய்வதைப் பற்றிய ஒரு காவற்கோபுர கட்டுரையை வாசித்துக்காட்ட சொன்னார். * கோபம் வந்தால் கட்டுப்படுத்த என்னென்ன செய்யலாம் என்று லிஸ்ட் போட்டோம். அந்தக் கட்டுரையை மனதில் நிறுத்திக்கொண்டேன்; அதோடு, யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபம் செய்தேன், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை விட்டொழித்தேன். கடைசியாக, ஏப்ரல் 2000-ல் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சி ஆனேன். என் பெற்றோர் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்ததைச் சொல்லவா வேண்டும்.

நான் பெற்ற பலன்கள்: போதைப்பொருள், உல்லாசம் என கெட்ட பழக்கங்களையெல்லாம் ஒழித்துக் கட்டியதால், மனநிம்மதியோடு, சுத்தமான மனசாட்சியோடு வாழ்கிறேன். வேலை செய்தாலும்... கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போனாலும்... பொழுதுபோக்கில் ஈடுபட்டாலும்... ரொம்பச் சந்தோஷமாகச் செய்கிறேன். இப்போதுதான் என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்திருக்கிறது.

பெற்றோர் சளைக்காமல் எனக்கு உதவி செய்தார்கள், அப்படிப்பட்ட பெற்றோரைத் தந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி. “என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் எவனும் என்னிடம் வர முடியாது” என்று யோவான் 6:44-ல் இயேசு சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மை! யெகோவா என்னை அன்போடு ஈர்த்ததால்தான் அவரிடம் திரும்பி வந்திருக்கிறேன். இதை நினைக்கும்போது என் உள்ளம் நன்றியால் பொங்கி வழிகிறது.

“அப்பாவுக்காக ஏங்கினேன்.”—மார்கோ ஆன்டோன்யோ ஆல்வாரஸ் ஸோட்டோ

பிறந்த ஆண்டு: 1977

சொந்த நாடு: சிலி

முன்பு: டெத்-மெட்டல் இசைக்குழு உறுப்பினர்

என் கடந்த காலம்: தென் அமெரிக்காவின் தென்கோடிக்கு அருகே மெகல்லன் ஜலசந்தியில் அமைந்துள்ள செழிப்பான நகரம்தான் புன்ட்டா அரேனஸ். அங்குதான் நான் வளர்ந்தேன். எனக்கு ஐந்து வயது இருக்கும்போதே அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். என்னை நட்டாற்றில் தவிக்கவிட்டதுபோல் இருந்தது, அப்பாவுக்காக ஏங்கினேன்.

அம்மா, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்தார். ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு என்னையும் அழைத்துச் செல்வார். ஆனால், எனக்குக் கூட்டங்கள் என்றாலே கசக்கும், போகும் வழியில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவேன். 13 வயதானபோது கூட்டங்களுக்குப் போவதை அறவே நிறுத்திவிட்டேன்.

ஏனென்றால், எனக்கு இசையின் மீது ஆர்வம் பற்றிக்கொண்டது. எதிர்காலத்தில் பெரிய இசைக்கலைஞர் ஆகும் அளவுக்கு என்னிடம் திறமை ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். 15 வயதிலேயே, பண்டிகைகளிலும், பார்களிலும், பார்ட்டிகளிலும் ஹெவி-மெட்டல், டெத்-மெட்டல் பாடல்களை இசைத்தேன். பெரிய பெரிய இசை வித்வான்களுடன் பழகியதால் க்ளாசிக்கல் இசையிலும் என் ஆர்வத் தீ பற்றியது. எங்கள் ஊரில் இருந்த இசைப்பள்ளியில் சேர்ந்தேன். படிப்பைத் தொடர்வதற்காக 20 வயதில் சாண்டியாகோ நகரத்திற்குப் போனேன். அங்கேயும் இசைக்குழுவோடு சேர்ந்து ஹெவி-மெட்டல், டெத்-மெட்டல் இசைத்து வந்தேன்.

இசைக்குழுவினர்தான் என் குடும்பம் என்று நினைத்தேன். ஆனாலும், வாழ்க்கையில் வெறுமை ஒட்டியிருந்தது. அதைச் சமாளிக்கக் குடித்தேன், இசைக்குழு நண்பர்களோடு சேர்ந்து போதைப்பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். என்னைப் பார்த்தாலே அடாவடிக்காரன் என்று சொல்லுமளவுக்கு இருந்தேன். தாடி... கருகரு உடை... இடுப்புவரை நீண்ட கூந்தல்... இதுதான் என் அடையாளம்.

அடிக்கடி அடிதடியில் இறங்கினேன், அதனால் போலீஸிடம் மாட்டியிருக்கிறேன். போதைப்பொருள் வியாபாரிகள் சிலர் என்னிடமும் நண்பர்களிடமும் ஓயாமல் வம்பு செய்தார்கள், ஒருநாள் குடிபோதையில் அவர்களிடம் சண்டைக்குப் போனேன். அவர்கள் என்னை அடித்து நொறுக்கி, என் தாடையை பெயர்த்துவிட்டார்கள்.

ஆனால், ஒரு குடும்பமாக பழகிய என் நண்பர்களே என் இதயத்தை நோகடித்ததுதான் என்னால் தாங்கவே முடியவில்லை. என் கேர்ள் ஃப்ரெண்ட்டிற்கு என் நண்பன் ஒருவனோடு பல வருடங்களாக தொடர்பு இருந்திருக்கிறது. எல்லா நண்பர்களும் சேர்ந்து அதை என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். அது தெரிந்ததும் அப்படியே இடிந்துபோய்விட்டேன்.

திரும்பவும் புன்ட்டா அரேனஸூக்குப் போனேன். அங்கே இசையைக் கற்றுக்கொடுத்தேன், செல்லோ என்ற இசைக்கருவியை வாசிப்பதில் வித்துவானாக இருந்தேன். அதோடு, முன்பு போலவே இசைக்குழுவினரோடு சேர்ந்து ஹெவி-மெட்டல், டெத்-மெட்டல் இசையை இசைத்து பதிவு செய்து வந்தேன். ஒருநாள், சூசன் என்ற அழகான ஒரு பெண்ணைச் சந்தித்தேன். கல்யாணம் செய்யாமலே அவளோடு வாழ ஆரம்பித்தேன். சூசனுடைய அம்மாவிற்கு திரித்துவ நம்பிக்கை இருந்தது. எனக்கு அதில் நம்பிக்கையில்லை என்று தெரிந்ததும், “எது சரி?” என்று சூசன் கேட்டாள். திரித்துவம் பொய் என்று எனக்குத் தெரியும், ஆனால் பைபிளிலிருந்து எடுத்துக்காட்ட தெரியாதென அவளிடம் சொன்னேன். யெகோவாவின் சாட்சிகளால் அதை பைபிளிலிருந்து விளக்க முடியும் என்றும் சொன்னேன். இந்த விஷயத்தில் உதவி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்தேன். பல வருடங்களுக்குப் பிறகு நான் செய்த ஜெபம் அது.

சில நாட்களிலேயே ஒருவரைச் சந்தித்தேன். அவரை எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது. “நீங்கள் யெகோவாவின் சாட்சியா?” என்று அவரிடம் கேட்டேன். அவர் என்னை மேலும்கீழும் பார்த்து அப்படியே ஆடிப்போய்விட்டார். இருந்தாலும், ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது பொறுமையோடு பதில் சொன்னார். அவரைச் சந்தித்தது என் ஜெபத்திற்கு கிடைத்த பதிலென நினைத்தேன். ராஜ்ய மன்றத்திற்குப் போனேன். யாரும் என்னைப் பார்த்துவிடக் கூடாது என்று நினைத்து, கடைசி வரிசையில் உட்கார்ந்துகொண்டேன். ஆனால், சின்ன வயதில் என்னைக் கூட்டங்களில் பார்த்திருக்கிற நிறைய பேர் என்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்கள். அன்போடு வரவேற்று, அணைத்துக்கொண்டார்கள். என் மனசெல்லாம் நிறைந்துவிட்டது. என் வீட்டிற்கே திரும்ப வந்ததுபோல் இருந்தது. எனக்கு சின்ன வயதில் பைபிள் படிப்பு நடத்தியவரையும் அங்கு பார்த்தேன். அவரையே திரும்பவும் எனக்கு பைபிள் படிப்பு எடுக்கச் சொன்னேன்.

பைபிள் என்னை மாற்றிய விதம்: ஒருநாள் நீதிமொழிகள் 27:11-ஐப் படித்தேன். “என் மகனே, . . . நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” இந்த அண்டசராசரத்தையே உண்டாக்கினவரை அற்ப மனிதனால்கூட சந்தோஷப்படுத்த முடியும் என்ற உண்மை என் நெஞ்சைத் தொட்டது. இத்தனை நாள் அப்பாவுக்காக ஏங்கினேன், அந்த அப்பாதான் யெகோவா என்று உணர்ந்துகொண்டேன்!

வருடக்கணக்காக போதைப்பொருளுக்கும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாய் இருந்த நான், எப்படி யெகோவா அப்பாவைச் சந்தோஷப்படுத்த முடியும், அவருக்குப் பிடித்ததைச் செய்ய முடியும் என்று கவலைப்பட்டேன். “ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது” என்று மத்தேயு 6:24-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் என் உள்ளத்தைத் திறந்தன. மாற்றங்களைச் செய்ய போராடிக்கொண்டிருந்தபோது 1 கொரிந்தியர் 15:33-ஆம் வசனம் என் பொறியில் தட்டியது: “கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்.” கெட்ட நண்பர்களோடு பழகுவதையும், கெட்ட வழிக்கு இழுக்கும் இடங்களுக்குச் செல்வதையும் நிறுத்தினால்தான் கெட்ட பழக்கங்களை நிறுத்த முடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னை பாவம் செய்ய வைக்கும் விஷயங்களை விட்டொழிக்க வேண்டுமென்றால் நான் அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று பைபிள் சொல்வதைத் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.—மத்தேயு 5:30.

ஹெவி-மெட்டல் இசை கேட்பதையும் இசைப்பதையும் நிறுத்துவதுதான் எனக்கு கஷ்டத்திலும் கஷ்டமாக இருந்தது. சபையில் இருந்த நண்பர்கள் எனக்குக் கைகொடுத்ததால், ஒருவழியாக அதையெல்லாம் நிறுத்தினேன். போதைப்பொருள்களையும் குடியையும் அடியோடு மறந்தேன். நீளமான தலைமுடியை வெட்டி... தாடியை சிரைத்து... கருநிற உடைகளை மறந்து... ஆளே மாறிவிட்டேன். முடியை வெட்டப்போவதாக சூசனிடம் நான் சொன்னபோது அவளுக்குத் தலைகால் புரியவில்லை. “ராஜ்ய மன்றத்தில் அப்படி என்ன மாயம் செய்தார்கள்? நான் வந்து பார்க்கிறேன்” என்று சொன்னாள். அங்கு வந்து பார்த்ததும் அவளுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவளும் பைபிள் படிப்பிற்கு ஒத்துக்கொண்டாள். நாங்கள் சட்டப்படி திருமணம் செய்துகொண்டோம். 2008-ல் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சிகளாக ஆனோம். என் அம்மாவோடு சேர்ந்து நாங்களும் யெகோவாவைச் சந்தோஷமாக வழிபட ஆரம்பித்தோம்.

நான் பெற்ற பலன்கள்: அவ்வளவு காலமாக என்னைச் சுற்றி இருந்த போலியான சந்தோஷத்திலிருந்தும் வஞ்சகமான நண்பர்களிடமிருந்தும் விடுதலை கிடைத்தது. இன்னும் நான் ஒரு இசைப் பிரியன்தான், ஆனால் இப்போதெல்லாம் சரியானதைத் தேர்ந்தெடுத்து கேட்கிறேன். என்னுடைய அனுபவத்தை என் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் முக்கியமாக, இளைஞர்களுக்குச் சொல்கிறேன். அதோடு, நான் புரிந்துகொண்ட ஓர் உண்மையையும் சொல்கிறேன்: இந்த உலகில் நிறைய விஷயங்கள் நம்மைச் சுண்டி இழுக்கலாம் கடைசியில் பார்த்தால் அதெல்லாம் ‘வெறும் குப்பையாகத்தான்’ இருக்கும்.—பிலிப்பியர் 3:8.

உண்மையான சந்தோஷமும் சமாதானமும் குடிகொண்டுள்ள கிறிஸ்தவ சபையில் நம்பகமான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவா எனக்கு அப்பாவாகக் கிடைத்திருக்கிறார். (w12-E 04/01)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 14 பிப்ரவரி 1, 2000 காவற்கோபுரம் இதழில் பக்கம் 4-6-ல், “விடாமுயற்சியே வெற்றிக்கு வழி” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

“யெகோவா என்னை அன்போடு ஈர்த்ததால்தான் அவரிடம் திரும்பி வந்திருக்கிறேன்”