Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

படைப்பா பரிணாமமா?—பாகம் 3: கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஏன் நம்பலாம்?

படைப்பா பரிணாமமா?—பாகம் 3: கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஏன் நம்பலாம்?

“எல்லாத்தையும் கடவுள்தான் படைச்சார்னு நம்பினீங்கன்னா, மத்தவங்க உங்கள அறிவில்லாதவங்கன்னும், அப்பா அம்மா சொல்லிக் கொடுத்தத குழந்தைத்தனமா நம்பிகிட்டு இருக்கீங்கன்னும் நெனப்பாங்க, இல்லன்னா... மதம் உங்கள பிரெய்ன் வாஷ் செஞ்சிடுச்சுன்னு நெனப்பாங்க.”—ஜீனெட்.

 நீங்களும் ஜீனெட் மாதிரியே நினைக்கிறீர்களா? ஆம் என்றால், படைப்பைப் பற்றிய உங்கள் நம்பிக்கையைக் குறித்து உங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது என்று சொல்லலாம். உண்மைதான், மற்றவர்கள் தங்களை ஞானசூனியம் என்று நினைப்பதை யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படியானால், எது உங்களுக்கு உதவலாம்?

 நம்பிக்கைக்கு எதிர்ப்புகள்

 1. படைப்பில் நம்பிக்கை வைத்தீர்கள் என்றால், நீங்கள் அறிவியலை எதிர்க்கிறீர்கள் என்று மற்றவர்கள் நினைப்பார்கள்.

 “இந்த உலகம் எப்படிச் செயல்படுதுங்கற விளக்கத்த கண்டுபிடிச்சு சொல்றதுக்கு சோம்பேறியா இருக்கறவங்கதான் படைப்பில நம்பிக்கை வெப்பாங்கன்னு எங்க டீச்சர் சொன்னாங்க.”​—மரியா.

 நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: அப்படிச் சொல்கிறவர்களுக்குச் சில உண்மைகள் தெரிவதில்லை. கலிலீயோ, ஐசாக் நியூட்டன் போன்ற பிரபல விஞ்ஞானிகள்கூட ஒரு படைப்பாளர் இருப்பதாக நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கையும் அறிவியல்மேல் அவர்களுக்கு இருந்த பற்றும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. இன்றைய விஞ்ஞானிகளில் சிலரும்கூட, அறிவியலுக்கும் படைப்பை நம்புவதற்கும் இடையே எந்தவொரு முரண்பாட்டையும் பார்ப்பதில்லை.

 இப்படிச் செய்து பாருங்கள்: “தன் மதநம்பிக்கையைப் பற்றி” என்ற வார்த்தைகளை (மேற்கோள் குறியுடன் சேர்த்து) உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி-யிலுள்ள “தேடவும்” பெட்டியில் டைப் செய்யுங்கள்; பின்பு, படைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிற மருத்துவ மற்றும் அறிவியல் துறையினரின் அனுபவங்களை அங்கே கவனியுங்கள்; அந்த நம்பிக்கைக்கு வர எது அவர்களுக்கு உதவியது என்பதை வாசித்துப் பாருங்கள்.

 முக்கிய விஷயம்: படைப்பில் நம்பிக்கை வைப்பது உங்களை அறிவியல் எதிரியாக்கிவிடாது. சொல்லப்போனால், இயற்கையைப் பற்றி அதிகமதிகமாகத் தெரிந்துகொள்வது படைப்பில் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையைப் பலப்படுத்தவே செய்யும்.​—ரோமர் 1:20.

2. படைப்பு பற்றிய பைபிள் பதிவை நம்பினீர்கள் என்றால், மற்றவர்கள் உங்களை மதவாதி என்று சொல்வார்கள்.

 “கடவுள்தான் எல்லாத்தையும் படைச்சாருங்கற விஷயத்த நிறைய பேர் ஜோக்கா எடுத்துக்கறாங்க. ஆதியாகமப் பதிவு வெறும் கட்டுக்கதைன்னு நெனக்கறாங்க.”​—ஜாஸ்மின்.

 நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: படைப்பைப் பற்றிய பைபிள் பதிவை மக்கள் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். உதாரணத்திற்கு, பூமி சமீபத்தில்தான் படைக்கப்பட்டது என்றும், 24 மணிநேரங்களைக் கொண்ட ஆறே நாட்களில் உயிர் படைக்கப்பட்டது என்றும் சில படைப்புவாதிகள் சொல்கிறார்கள். ஆனால், இந்த இரண்டு கருத்தையுமே பைபிள் ஆதரிப்பதில்லை.

  •   “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்றுதான் ஆதியாகமம் 1:1 சொல்கிறது. பூமி பல கோடி ஆண்டுகளாக இருக்கிறது என்ற அறிவியல் கருத்தோடு இது முரண்படுவதில்லை.

  •   ஆதியாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘நாள்’ என்ற வார்த்தை, நீண்ட காலப்பகுதியைக் குறிக்கலாம். சொல்லப்போனால், ஆதியாகமம் 2:4-ல் உள்ள ‘நாள்’ என்ற வார்த்தை, படைப்பின் ஆறு நாட்களையுமே விவரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 முக்கிய விஷயம்: பைபிளிலுள்ள படைப்பு பற்றிய பதிவு அறிவியல் உண்மைகளோடு ஒத்துப்போகிறது.

 உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்

 கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நம்புவது “குருட்டு நம்பிக்கை” இல்லை. அப்படி நம்புவதற்கு, நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இதைக் கொஞ்சம் கவனியுங்கள்:

 வாழ்க்கையில் நீங்கள் பார்க்கிற ஒவ்வொன்றுமே ஒரு விஷயத்தை உங்களுக்குக் கற்றுத்தருகிறது, அதாவது வடிவம் எங்கே இருக்கிறதோ அங்கே ஒரு வடிவமைப்பாளர் இருக்கிறார் என்று கற்றுத்தருகிறது. ஒரு காமெராவை, ஒரு விமானத்தை, அல்லது ஒரு வீட்டைப் பார்க்கும்போது, கண்டிப்பாக யாரோ ஒருவர் அதை வடிவமைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள். அப்படியானால், மனிதர்களுடைய கண், வானத்துப் பறவை, பூமி போன்றவற்றைப் பார்க்கும்போது மட்டும் நீங்கள் ஏன் அந்த முடிவுக்கு வர மறுக்கிறீர்கள்?

 சிந்தித்துப் பாருங்கள்: பெரும்பாலும், பொறியியலாளர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக இயற்கையில் தாங்கள் கவனிக்கிற விஷயங்களை காப்பியடிக்கிறார்கள்; அந்தக் கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள். அப்படியானால், அந்தப் பொறியியலாளர்களையும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளையும் ஏற்றுக்கொண்டு, படைப்பாளரையும் அவருடைய மிகமிக அற்புதமான வடிவமைப்புகளையும் ஏற்றுக்கொள்ள மறுப்பது எந்த விதத்தில் நியாயம்?

விமானத்திற்கு ஒரு வடிவமைப்பாளர் இருக்கிறார், ஆனால் பறவைக்கு இல்லை என்று நினைப்பது நியாயமா?

 அத்தாட்சிகளை ஆராய உதவும் கருவிகள்

 இயற்கையில் காணப்படுகிற அத்தாட்சிகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் படைப்பில் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ளலாம்.

 இப்படிச் செய்து பாருங்கள்: உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி-யில் “தேடவும்” பெட்டியில், “யாருடைய கைவண்ணம்” என்று (மேற்கோள் குறிகளுடன் சேர்த்து) டைப் செய்யுங்கள். பின்பு, விழித்தெழு! கட்டுரைகளை க்ளிக் செய்து வாசித்துப் பாருங்கள். இயற்கையில் காணப்படுகிற எந்த அருமையான அம்சத்தைப் பற்றி ஒவ்வொரு கட்டுரையும் விளக்குகிறது என்று கண்டுபிடியுங்கள். வடிவமைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்று அந்தக் கட்டுரைகள் உங்களை எப்படி ஆணித்தரமாக நம்ப வைக்கின்றன?

 ஆழமாக ஆராய்ச்சி செய்யுங்கள்: பின்வரும் சிற்றேடுகளை வாசித்து, படைப்புக்கான அத்தாட்சிகளைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

  •  உயிர் படைக்கப்பட்டதா? (ஆங்கிலம்)

    •   பூமி கச்சிதமான இடத்தில் இருக்கிறது, உயிர் வாழ்வதற்குத் தேவையான எல்லாமே அதில் இருக்கின்றன.—பக்கங்கள் 4-10-ஐப் பாருங்கள்.

    •   இயற்கையில் நிறைய வடிவமைப்புகளைப் பார்க்க முடிகிறது.—பக்கங்கள் 11-17-ஐப் பாருங்கள்.

    •   ஆதியாகமத்தில் உள்ள படைப்பைப் பற்றிய பைபிள் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது.—பக்கங்கள் 24-28-ஐப் பாருங்கள்.

  •  உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்

    •   உயிரற்ற பொருளிலிருந்து உயிர் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.—பக்கங்கள் 4-7-ஐப் பாருங்கள்.

    •   உயிரினங்களின் வடிவமைப்பு படு சிக்கலாக இருப்பதால், அவை திடீரென்று தோன்றியிருக்க முடியாது.—பக்கங்கள் 8-12-ஐப் பாருங்கள்.

    •   ஜீன்களில் உள்ள DNA விவரம் அதிநவீன தொழில்நுட்பத்தையே விஞ்சிவிடுகிறது.—பக்கங்கள் 13-21-ஐப் பாருங்கள்.

    •   எல்லா உயிரினங்களும் ஒரே மூலத்திலிருந்து தோன்றவில்லை. பெரிய பெரிய மிருக வகைகள் திடீரென தோன்றியதற்குத்தான் புதைபடிவப் பதிவுகள் (Fossil records) அத்தாட்சி அளிக்கின்றன, படிப்படியாகத் தோன்றியதற்கு அல்ல.—பக்கங்கள் 22-20-ஐப் பாருங்கள்.

 “பூமியில இருக்கற மிருகங்க தொடங்கி பிரபஞ்சம்வரை தெரியற இயற்கையும், அதில இருக்கற ஒழுங்கும்தான் கடவுள் இருக்காருங்கறத என் மனசில ஆழமா பதிய வெக்குது.”—தாமஸ்.