Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

எதையும் தாங்கும் இதயம் எனக்கு இருக்கிறதா?

எதையும் தாங்கும் இதயம் எனக்கு இருக்கிறதா?

 எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்கிறதா? சமீபத்தில் நீங்கள் . . .

  •   அன்பானவரை மரணத்தில் இழந்திருக்கிறீர்களா?

  •   ரொம்ப காலமாக ஏதாவது நோயோடு போராடிக் கொண்டிருக்கிறீர்களா?

  •   இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

 நாம் தாங்கி நிற்போமா அல்லது துவண்டு விழுவோமா என்பதைத் தெரிந்துகொள்ள சூறாவளி மாதிரி பெரிய பிரச்சினைதான் வர வேண்டும் என்று அவசியமில்லை. தினம் தினம் நம் மனதுக்குள் எட்டிப் பார்க்கிற சின்னச் சின்ன கவலைகள் கூட நம் உடம்பை ஒரு உலுக்கு உலுக்கிவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் உங்கள் பிரச்சினை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, எதையும் தாங்கும் இதயத்தை வளர்த்துக்கொள்வது ரொம்ப முக்கியம்.

 எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

 எதையும் தாங்கும் இதயம் இருக்கிறவர்கள், வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அதை வெற்றிகரமாக சமாளிப்பார்கள். அந்தப் பிரச்சினைகள் அவர்களுக்கு எப்படிப்பட்ட வலியைக் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வருவார்கள், இன்னும் அதிக வலிமையோடு!

புயல் அடிக்கும்போது ஒரு மரம் வளைந்துகொடுத்தாலும் பின்பு எப்படி நேராக நிற்கிறதோ, அதேபோல் உங்களாலும் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர முடியும்

 எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு ஏன் தேவை?

  •   பிரச்சினைகள் வராத மனிதர்களே கிடையாது. “வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, . . .. அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை. ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:11) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நல்ல மனிதர்கள் கூட சில சமயங்களில் கஷ்டப்படுகிறார்கள், அவர்கள்மேல் எந்தத் தப்பும் இல்லையென்றாலும்.

  •   அது உங்களுக்குத்தான் நல்லது. ஒரு உயர்நிலை பள்ளி ஆலோசகர் இப்படிச் சொல்கிறார்: “முன்பை விட இப்போது நிறைய மாணவர்கள் நிலைகுலைந்து போய் என்னிடம் வருகிறார்கள். ஏனென்றால், ஒரு பரிட்சையில் அவர்கள் ­­­ஃபெயில் ஆகியிருப்பார்கள், இல்லையென்றால் சோஷியல் மீடியாவில் அவர்களை யாராவது திட்டி கமென்ட் போட்டிருப்பார்கள்.” இந்த மாதிரி சின்னச் சின்ன பிரச்சினைகளைக் கூட சரியாக சமாளிக்க தெரியாமல் இருந்தால் “மனதளவிலும் உணர்ச்சி அளவிலும் நிறைய பாதிக்கப்படுவார்கள்“என்று அவர் சொல்கிறார். a

  •   எதையும் தாங்கும் இதயம் இப்போதும் எப்போதும் உங்களுக்குக் கைகொடுக்கும். வாழ்க்கையில் வரும் ஏமாற்றங்களைப் பற்றி டாக்டர் ரிச்சர்ட் லெர்னர் இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் உங்களுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களைத் தாண்டி வர வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று குறிக்கோள் வைக்க வேண்டும். அதை அடைவதற்கு வேறு வழிகளைக் கண்டுபிடிக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.” b

 எதையும் தாங்கும் இதயத்தை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

  •   அந்தப் பிரச்சினை உண்மையிலேயே ஒரு பிரச்சினை தானா? எது பெரிய பிரச்சினை, எது சின்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க கற்றுக்கொள்ளுங்கள். “முட்டாள் சட்டென்று எரிச்சலைக் காட்டிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியசாலி அவமரியாதையைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 12:16) அதனால் எல்லா பிரச்சினைகளையுமே யோசித்து யோசித்து நீங்கள் நொந்துபோக வேண்டிய அவசியமில்லை.

     “என்னோடு ஸ்கூலில் படிக்கிற பிள்ளைகள் உப்பு சப்பு இல்லாத பிரச்சினைகளுக்குக் கூட ஓவராக சீன் போட்டு புலம்புவார்கள். இது போதாதென்று, சோஷியல் மீடியாவில் அவர்களுடைய ஃப்ரெண்ட்ஸ், ‘நீ யோசிப்பது சரிதான்’ என்று சொல்வார்கள். இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கும். அதனால் ஒன்றுமே இல்லாத சின்ன பிரச்சினையைக் கூட பெரிய பிரச்சினையாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.”—ஜோவன்.

  •   மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். “இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, நண்பனை நண்பன் கூர்மையாக்குகிறான்” என்று ஒரு பைபிள் பழமொழி சொல்கிறது. (நீதிமொழிகள் 27:17) புயல் மாதிரி பிரச்சினைகளைக் கூட வெற்றிகரமாக சமாளித்தவர்களிடமிருந்து நல்ல நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

     “மற்றவர்களிடம் பேசிப் பார்த்தால்தான் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளைக் கடந்து வந்திருக்கிறார்கள், ஆனால் இப்போது நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். பிரச்சினையைச் சமாளிக்க அவர்கள் என்ன செய்தார்கள், என்ன செய்யவில்லை என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.”—ஜூலியா.

  •   பொறுமையோடு இருங்கள். “நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 24:16) நாம் நினைத்தபடி விஷயங்கள் நடக்கவில்லை என்றால், அதை ஏற்றுக்கொள்வதற்கு நமக்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். அதனால் அப்படிப்பட்ட சமயங்களில் நாம் மனம் நொந்துபோய் விடலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் ‘மறுபடியும் எழுந்து நிற்பதுதான்’ அதாவது அதிலிருந்து மீண்டு வருவதுதான்.

     “நாம் ஒரு பிரச்சினையில் இருந்து மீண்டு வரும்போது, நம் மனதில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமாக வேண்டும். அது டக்கென்று நடக்காது. அதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். நாட்கள் போகப் போக நாம் பழையபடி சந்தோஷமாக ஆவோம் என்று நான் கற்றுக்கொண்டேன்.”—ஆன்ட்ரியா.

  •   நல்ல விஷயங்களுக்கு நன்றியோடு இருங்கள். “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:15) எவ்வளவு பெரிய பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தாலும் சரி, உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது, அதற்கு நன்றியோடு இருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் மூன்று நல்ல விஷயங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அப்படி யோசித்துப் பார்த்தால், உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

     “உங்களுக்கு அடிமேல் அடி விழும்போது, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என்று யோசிப்பது சகஜம்தான். உங்கள் பிரச்சினையைப் பற்றி மட்டுமே யோசிக்காதீர்கள். உங்களால் இப்போது என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசியுங்கள். அதற்கு நன்றியோடு இருங்கள். அப்போதுதான் எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியும்.”—சமந்தா.

  •   இருப்பதை வைத்து திருப்தியாக இருங்கள். “எந்தச் சூழ்நிலையிலும் நான் திருப்தியோடு இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (பிலிப்பியர் 4:11, அடிக்குறிப்பு) பவுலுடைய பிரச்சினைகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆனால் அதைச் சமாளிக்கிற விதத்தை அவரால் கட்டுப்படுத்த முடிந்தது. அதனால் எந்தச் சூழ்நிலையிலும் திருப்தியோடு இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானமாக இருந்தார்.

     “எனக்கு ஒரு பிரச்சினை வரும்போது, நான் எடுத்தவுடனே எப்படி நடந்துகொள்கிறேனோ அதுதான் எப்போதுமே சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. என் விஷயத்தில் இதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். எந்த மாதிரி சூழ்நிலைமை வந்தாலும் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்று நான் தீர்மானமாக இருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல, என்னை சுற்றி இருக்கிறவர்களுக்கும் நல்லது.”—மேத்யூ.

  •   ஜெபம் பண்ணுங்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்.” (சங்கீதம் 55:22) ஜெபம் என்பது ஏதோ மன அமைதிக்காக பண்ணுகிற ஒரு விஷயம் கிடையாது. அது ‘உங்கள்மேல் அக்கறை’ வைத்திருக்கிற படைப்பாளரிடம் நீங்கள் மனம்திறந்து பேசுவது.—1 பேதுரு 5:7.

     “ஜெபம் என்பது ரொம்ப முக்கியமான விஷயம். என்னுடைய பிரச்சினைகளைப் பற்றி கடவுளிடம் ஒளிவுமறைவு இல்லாமல் பேசும்போதும்... அவர் எனக்கு செய்த நல்ல விஷயங்களுக்காக நன்றி சொல்லும்போதும்... என் மனதிலிருக்கிற வேதனைகள் எல்லாம் காணாமல் போகிறது. யெகோவா எனக்கு செய்த நல்ல விஷயங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க முடிகிறது. அதனால் எந்தப் பிரச்சினையையுமே நான் தனியாக சமாளிக்க வேண்டிய அவசியமில்லை.”—கார்லோஸ்.

a தாமஸ் கெர்ஸ்டிங் எழுதிய டிஸ்கனக்டெட் என்ற புத்தகத்திலிருந்து.

b த குட் டீன்—ரெஸ்க்யுயிங் அடலசன்ஸ் ­­­­­ஃப்ரம் த மித்ஸ் ஆஃப் த ஸ்டிராம் அன்ட் ஸ்டிரெஸ் இயர்ஸ் என்ற புத்தகத்திலிருந்து.