Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 1: பைபிளை ஆராய்ந்து படியுங்கள்

பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 1: பைபிளை ஆராய்ந்து படியுங்கள்

 “நான் பைபிள படிக்க முயற்சி பண்ணுனேன். ஆனா அது அவ்வளவு பெரிய புக்கா இருக்கிறதால அத படிக்கிறது எனக்கு மலைப்பா இருந்துச்சு.”—ப்ரியானா, வயது 15.

 நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்!

 பைபிளை ஏன் படிக்க வேண்டும்?

 பைபிளைப் படிக்க வேண்டும் என்றாலே உங்களுக்கு சலிப்பாகத் தோன்றுகிறதா? ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘அதுல ஆயிரம் பக்கங்களுக்கு மேல இருக்கு... எழுத்தெல்லாம் குட்டி குட்டியா இருக்கு... ஒரு படம்கூட அதுல இல்ல... டிவி, வீடியோ மாதிரி ரசனையாவும் இல்ல...’ என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம்.

 ஆனால், இப்படி யோசித்துப் பாருங்கள்: பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பொக்கிஷப் பெட்டி உங்களுக்குக் கிடைப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க நீங்கள் ரொம்ப ஆர்வமாக இருப்பீர்கள்தானே?

 பைபிளும் ஒரு பொக்கிஷப் பெட்டி போன்றதுதான். அதில் இருக்கும் ஞானம் என்ற விலை உயர்ந்த மணிக்கற்கள் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். உதாரணத்துக்கு,

  •   நல்ல தீர்மானங்கள் எடுக்க...

  •   அப்பா அம்மாவோடு ஒத்துபோக...

  •   நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க...

  •   பிரச்சினைகளை சமாளிக்க... உங்களுக்கு உதவும்

 இந்தப் பழங்காலப் புத்தகம் நம்முடைய காலத்துக்கு ஒத்துவரும் என்று எப்படிச் சொல்லலாம்? அதற்குக் காரணம், “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:16) அப்படியென்றால், பைபிளில் இருக்கிற ஆலோசனைகள்தான் மிகச் சிறந்த ஆலோசனைகள்!

ஞானம் என்ற விலை உயர்ந்த மணிக்கற்கள் இருக்கிற பொக்கிஷப் பெட்டிதான் பைபிள்

 பைபிளை எப்படிப் படிக்க வேண்டும்?

 ஒரு வழி, பைபிளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரைப் படிப்பது. இப்படிச் செய்யும்போது பைபிளில் என்ன விஷயம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியும். பைபிளைப் படிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு வழிகளை இப்போது பார்க்கலாம்:

  •    பைபிளில், ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல்வரை இருக்கும் 66 புத்தகங்களை வரிசையாகப் படிப்பது.

  •    காலவரிசைப்படி படிப்பது. அதாவது, ஒவ்வொரு சம்பவமும் எப்போது நடந்தது என்ற வரிசைப்படி படிப்பது.

 டிப்ஸ்: இயேசு பூமியில் இருந்தபோது நடந்த முக்கியமான சம்பவங்களின் காலவரிசைப் பட்டியல், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இணைப்பு A7-ல் இருக்கிறது.

 இரண்டாவது வழி, உங்களுக்கு இருக்கிற ஒரு பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு ஒன்றைத் தேர்ந்தெடுத்து படிப்பது. உதாரணத்துக்கு,

  •    நம்பகமான ஒரு ஃப்ரெண்ட் வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், யோனத்தான் மற்றும் தாவீது பற்றிய பதிவைப் படியுங்கள். (1 சாமுவேல், அதிகாரங்கள் 18-20) தாவீதுக்கு இருந்த என்ன நல்ல குணங்கள் யோனத்தானைக் கவர்ந்திருக்கும் என்பதை அதில் பாருங்கள்.

  •    கெட்ட ஆசைகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கெட்ட ஆசைக்கு அடிபணியாமல் இருக்க யோசேப்பு என்ன செய்தார் என்ற பதிவை வாசித்துப் பாருங்கள். (ஆதியாகமம், அதிகாரம் 39) கெட்ட ஆசைக்கு அடிபணியாமல் இருக்க யோசேப்புக்கு எப்படி பலம் கிடைத்தது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

  •    ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்களா? நெகேமியாவின் பதிவைப் படியுங்கள். (நெகேமியா, அதிகாரம் 2) நெகேமியா செய்த ஜெபத்துக்கு எப்படிப் பதில் கிடைத்தது என்பதை அதில் பாருங்கள்.

 டிப்ஸ்: ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து பைபிளைப் படித்தால் உங்களுடைய கவனம் சிதறாமல் இருக்கும்.

 மூன்றாவது வழி, ஒரு பைபிள் பதிவையோ ஒரு சங்கீதத்தையோ தேர்ந்தெடுத்துப் படியுங்கள். பிறகு, அந்த விஷயங்களை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று யோசியுங்கள். வாசித்த பிறகு, உங்களையே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  •   யெகோவா ஏன் இதை பைபிளில் பதிவு செய்திருக்கிறார்?

  •   யெகோவாவுடைய சுபாவத்தைப் பற்றி அல்லது சில விஷயங்களை அவர் எப்படிச் செய்கிறார் என்பதைப் பற்றி இந்த பைபிள் பதிவு என்ன சொல்கிறது?

  •   இந்த விஷயங்களை என்னுடைய வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?

 டிப்ஸ்: பைபிள் வாசிப்பு உங்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்றால், புதிய உலக மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி பைபிளைப் பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் வீடியோக்களும் வரைபடங்களும் இன்னும் சில சிறப்பம்சங்களும் உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.