Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...

துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி?

துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி?

உங்களுக்கு நெருக்கமானவர்கள் துக்கப்படும்போது அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்திருக்கிறீர்களா? அந்தச் சமயத்தில் அவர்களுக்கு என்ன சொல்வது அல்லது என்ன செய்வது என்று நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம், அதனால் ஒன்றுமே சொல்லாமல், செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களுக்கு நம்மால் நடைமுறையான உதவிகளைச் செய்ய முடியும்.

பெரும்பாலும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களைப் போய் பார்ப்பதுதான். அவர்களிடம் சில வார்த்தைகளை பேசுவதுதான். ‘இத கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு’ போன்ற வார்த்தைகளைச் சொல்லலாம். நிறைய கலாச்சாரங்களில், கட்டிப்பிடிப்பது... கைகளைப் பிடிப்பது... போன்ற செயல்களைச் செய்கிறார்கள்; இதெல்லாம் அவர்கள்மேல் அக்கறையோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்குச் சில வழிகள். துக்கத்தில் இருப்பவர் உங்களோடு பேச விரும்பினால், காதுகொடுத்துக் கேளுங்கள், அனுதாபம் காட்டுங்கள். எல்லாவற்றையும்விட அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். அவர்களால் செய்ய முடியாத வேலைகளைச் செய்யுங்கள். உதாரணமாக சமைப்பது, பிள்ளைகளைக் கவனிப்பது, தேவைப்பட்டால் சவ அடக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்ற உதவிகளைச் செய்யுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளைவிட செய்யும் செயல்களுக்கு சக்தி அதிகம்.

கொஞ்ச நாள் கழித்து, இறந்த அன்பானவர்களைப் பற்றி பேசலாம். அவர்களுடைய நல்ல குணங்களைப் பற்றி... அருமையான அனுபவங்களைப் பற்றி... பேசலாம். இப்படிப்பட்ட உரையாடல்கள் துக்கத்தில் இருப்பவரின் முகத்தில் புன்முறுவலை பூக்க செய்யும். உதாரணமாக, பேம் என்பவருடைய கணவர் ஈயன் இறந்து ஆறு வருஷங்கள் ஆகின்றன. பேம் இப்படி சொல்கிறார்: “என் கணவர் செஞ்ச நல்ல விஷயங்கள பத்தி சிலசமயம் யாராவது என்கிட்ட சொல்வாங்க. அந்த விஷயத்தை பத்தி அப்பதான் கேள்விப்படுவேன். அத கேட்கிறப்போ என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”

துக்கத்தில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் நிறைய உதவிகளைச் செய்கிறார்கள், ஆனால் சீக்கிரத்தில் அந்த நண்பர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் மூழ்கிவிடுகிறார்கள்; துக்கத்தில் இருப்பவர்களையோ மறந்துவிடுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதனால், அவர்களை அடிக்கடி போய் பார்க்க முயற்சி செய்யுங்கள். * ரொம்ப நாள் அடக்கி வைத்திருந்த வேதனைகளைக் கொட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.

கயோரி என்ற ஜப்பானிய பெண்ணின் அம்மா இறந்துவிட்டார். அவர் இறந்து 15 மாதங்கள் கழித்து அவருடைய அக்காவும் இறந்துவிட்டார். இது அவருக்குப் பேரிடியாக இருந்தது. ஆனால், அவருக்குத் தொடர்ந்து நண்பர்களுடைய ஆதரவு கிடைத்தது. கயோரியைவிட அதிக வயதான ரிட்சுகோ என்பவர் அவரோடு நெருங்கிய நண்பரைப் போல் பழக விரும்பினார். “உண்மைய சொன்னா, எனக்கு அதுல துளிகூட இஷ்டமில்ல. யாரும் என் அம்மாவோட இடத்த பிடிக்க நான் விரும்புல. அவரோட இடத்த யாரும் பிடிக்க முடியும்னு நான் நினைக்கல. ஆனாலும், அவங்க நடந்துக்கிட்ட விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, அதனால அவங்களோட ரொம்ப நெருக்கமாயிட்டேன். ஒவ்வொரு வாரமும் நாங்க சேர்ந்தே ஊழியத்துக்கும் கூட்டத்துக்கும் போவோம். ஒன்னா சேர்ந்து டீ குடிக்க என்னை கூப்பிடுவாங்க, எனக்குச் சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பாங்க, நிறைய தடவை கடிதம் எழுதியிருக்காங்க, வாழ்த்து அட்டைகள் அனுப்பிருக்காங்க. அவங்க இப்படியெல்லாம் செஞ்சது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.”

கயோரியின் அம்மா இறந்து 12 வருஷங்கள் ஆகின்றன. கயோரியும் அவருடைய கணவரும் முழுநேரமாக கடவுளுக்குச் சேவை செய்கிறார்கள். கயோரி இப்படி சொல்கிறார்: “மம்மா ரிட்சுகோ, எப்பவும் என்மேல அக்கறையா இருக்காங்க, எங்க வீட்டுக்கு எப்போ போனாலும் அவங்கள போய் பார்த்துட்டு வருவேன்.”

தொடர்ந்து நண்பர்களுடைய உதவியைப் பெற்ற மற்றொருவர்தான் போல்லி. இவருடைய உதாரணத்தை கவனியுங்கள். இவர் சைப்ரஸில் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறார். போல்லியின் அன்பான கணவர் சோசோஸ் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருந்தார். அப்பா-அம்மா இல்லாதவர்களையும் விதவைகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டு உபசரிப்பார். அவர்களோடு நன்றாகப் பழகுவார். (யாக்கோபு 1:27) ஆனால், 53-ஆம் வயதில் ‘பிரெய்ன் டியூமரால்’ இறந்துவிட்டார். “என்கூட 33 வருஷமா வாழ்ந்த அன்பான கணவர நான் இழந்துட்டேன்” என்று போல்லி சொல்கிறார்.

துக்கப்படுகிறவருக்கு உதவிசெய்ய நடைமுறையான வழிகளைக் கண்டுபிடியுங்கள்

கணவருடைய சவ அடக்கம் முடிந்த பிறகு, போல்லி தன்னுடைய 15 வயதுடைய இளைய மகன் டேனியலோடு கனடாவுக்குக் குடிமாறி போய்விட்டார். அங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் இருப்பவர்களோடு அவர்கள் பழக ஆரம்பித்தார்கள். “எங்களோட கடந்தகால வாழ்க்கைய பத்தியோ கஷ்டமான சூழ்நிலைகள பத்தியோ புது சபைல இருந்த நண்பர்களுக்குத் தெரியாது. ஆனாலும், அவங்க எங்களோட பழகறதயோ எங்களுக்கு ஆறுதல் சொல்றதயோ உதவி செய்றதயோ நிறுத்தல. முக்கியமா என் மகன், அப்பாவ நினைச்சு ஏங்கும்போதெல்லாம் அவங்க செஞ்ச உதவிய என்னால மறக்கவே முடியாது. சபையை வழிநடத்துறவங்க டேனியல் மேல தனிப்பட்ட விதமா அக்கறை காட்டுனாங்க. அவன நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. முக்கியமா, நண்பர்களோட ஒன்னா இருக்கும்போது இல்லனா, வெளில போய் விளையாடும்போது டேனியலயும் சேர்த்துக்குவாங்க.” இப்போது அம்மாவும் மகனும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

சோகத்தில் இருப்பவர்களுக்கு உதவியும் ஆறுதலும் அளிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. பைபிளும் எதிர்காலத்தை பற்றிய அருமையான நம்பிக்கையை கொடுத்து ஆறுதல் அளிக்கிறது. (w16-E No. 3)

^ பாரா. 6 அன்பானவர்கள் இறந்த தேதியையோ மாதத்தையோ சிலர் காலண்டரில் குறித்து வைத்து, வேதனையில் தவிப்பவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.