Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒத்துப்பாருங்கள், உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்!

ஒத்துப்பாருங்கள், உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்!

நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? அப்படியானால், இந்தப் பூமியில் வாழ்கிற 200 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்களில் நீங்களும் ஒருவர். அதாவது, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற மூன்று பேரில் கிட்டத்தட்ட ஒருவர். கிறிஸ்தவ மதத்தில் இன்று ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. இருந்தாலும், அவர்களுக்குள் வித்தியாசமான கோட்பாடுகளும் மாறுபட்ட கருத்துகளும் இருப்பதால் பிளவுபட்டிருக்கின்றன. அதனால், மற்ற கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் உங்களுடைய நம்பிக்கைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கலாம். நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது உண்மையிலேயே முக்கியமா? பைபிள் என்ன சொல்கிறதோ அதை நம்ப வேண்டும் என்றால் முக்கியம்தான்.

ஆரம்பத்தில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 11:26) அப்போது, கிறிஸ்தவ நம்பிக்கை ஒன்றே ஒன்றுதான் என்பதால் கிறிஸ்தவர்கள் யாரென்று தெரிந்துகொள்வதற்கு வேறு பெயர்கள் தேவையில்லை. கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்துவைத்த இயேசு கிறிஸ்து சொன்ன போதனைகளையும் அறிவுரைகளையும் அவர்கள் ஒற்றுமையோடு பின்பற்றினார்கள். ஆனால், உங்களுடைய சர்ச் அங்கத்தினர்களும் அப்படித்தான் பின்பற்றுகிறார்களா? கிறிஸ்து கற்றுக்கொடுத்ததைத்தான் உங்களுடைய சர்ச்சும் கற்றுக்கொடுக்கிறதா? ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பியதைத்தான் உங்களுடைய சர்ச் அங்கத்தினர்களும் நம்புகிறார்களா? அதை நீங்கள் எப்படி உறுதியாகத் தெரிந்துகொள்ளலாம்? அதற்கு, பைபிளை அளவுகோலாக பயன்படுத்துவதுதான் ஒரே வழி.

இதை யோசித்துப் பாருங்கள்: வேதவசனங்களைக் கடவுளுடைய வார்த்தை என்று இயேசு கிறிஸ்து நம்பினார். அவற்றின்மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். மனித பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பைபிளின் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஆட்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (மாற்கு 7:9-13) அப்படியானால், இயேசுவை உண்மையாக பின்பற்றுகிறவர்கள் பைபிள் சொல்வதை வைத்துத்தான் எதையும் நம்புவார்கள் என்ற முடிவுக்கு வரலாம். அதனால், ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘பைபிள் சொல்ற விஷயங்களத்தான் என்னோட சர்ச்சும் சொல்லிக்கொடுக்குதா?’ இதற்குப் பதில் தெரிந்துகொள்ள பைபிள் சொல்கிற விஷயங்களையும் உங்களுடைய சர்ச் கற்றுக்கொடுக்கிற விஷயங்களையும் ஒத்துப்பாருங்கள்.

பைபிளில்தான் சத்தியம் இருக்கிறது... அந்தச் சத்தியத்தின்படிதான் கடவுளை வணங்க வேண்டும்... என்று இயேசு சொன்னார். (யோவான் 4:24; 17:17) “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை” அடையும்போதுதான் மீட்பு கிடைக்கும் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 தீமோத்தேயு 2:4) அதனால், நம்முடைய நம்பிக்கைகள் பைபிளில் உள்ள சத்தியத்தின் அடிப்படையில் இருப்பது முக்கியம். ஏனென்றால், சத்தியத்தை தெரிந்துகொள்ளும்போதுதான் நமக்கு மீட்பு கிடைக்கும்!

நம் நம்பிக்கைகளை பைபிளோடு ஒத்துப்பார்ப்பது எப்படி?

இங்கே இருக்கிற ஆறு கேள்விகளையும் அதற்கு பைபிள் தரும் பதில்களையும் கவனியுங்கள். கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்களை உங்களுடைய பைபிளில் எடுத்துப் பாருங்கள். அந்தப் பதில்களை ஆழமாக யோசித்துப் பாருங்கள். பிறகு, ‘என்னோட சர்ச்சில சொல்லிக்கொடுக்கிற விஷயங்கள் பைபிள் சொல்ற விஷயங்களோட ஒத்துப்போகுதா?’ என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

இந்தக் கேள்வி-பதில் முறையின் மூலம் உங்களுடைய நம்பிக்கைகளை ஒத்துப்பார்ப்பது உங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். இவற்றைத் தவிர உங்கள் சர்ச் சொல்லிக்கொடுக்கும் மற்ற விஷயங்களையும் பைபிளோடு ஒத்துப்பார்க்க விரும்புகிறீர்களா? பைபிளில் இருக்கும் உண்மைகளை ஆராய்ந்து பார்க்க யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்ய ஆவலோடு இருக்கிறார்கள். இலவசமாக பைபிள் படிப்பு எடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். அல்லது jw.org வெப்சைட்டிலும் நீங்கள் பார்க்கலாம். ▪ (w16-E No. 4)