Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் வாழ்க்கையை எது முடிவு செய்கிறது?

நம் வாழ்க்கையை எது முடிவு செய்கிறது?

கண்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் தங்கள் வாழ்க்கையை முடிவு செய்வதாக நிறைய பேர் நினைக்கிறார்கள். அதனால், வாழ்க்கை நன்றாக இருக்க சில விஷயங்களை அவர்கள் செய்கிறார்கள்.

மக்கள் என்ன நம்புகிறார்கள்?

ஜோசியம்: ஒருவர் பிறக்கும்போது நட்சத்திரங்கள் எந்த வரிசையில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவர்களுடைய வாழ்க்கை அமையும் என்று சிலர் நம்புகிறார்கள். அதனால், எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஜோசியத்தையும் ராசிபலன்களையும் பார்க்கிறார்கள். தங்களுக்கு எந்தக் கெடுதலும் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பரிகாரங்களையும் செய்கிறார்கள்.

வாஸ்து சாஸ்திரம்: வீட்டை அல்லது கட்டிடங்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் கட்டினால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது சிலருடைய நம்பிக்கை. *

முன்னோர்களை வழிபடுவது: முன்னோர்களையோ குலதெய்வங்களையோ வழிபட்டால் வாழ்க்கை நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். “முன்னோர்கள வழிபட்டா நானும் என் பிள்ளைகளும் இன்னைக்கும் எதிர்காலத்துலயும் நல்லா இருப்போம்னு நம்பினேன்” என்று வியட்நாமில் இருக்கிற வான் * என்ற பெண் சொல்கிறார்.

மறுஜென்மம்: பிறப்பு... இறப்பு... மறுஜென்மம்... இதுதான் வாழ்க்கையின் சுழற்சி என்று நிறைய பேர் நம்புகிறார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கிற ‘நல்லதும் கெட்டதும்’ போன ஜென்மத்தில் அவர் செய்ததற்கான விளைவு என்று நினைக்கிறார்கள்.

ஆனால், நிறைய பேர் இதை மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள். இருந்தாலும், எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் கைரேகை, ஜோசியம், ராசிபலன், ஆகியவற்றைப் பார்க்கிறார்கள்; குறியும் கேட்கிறார்கள்.

அனுபவம் என்ன காட்டுகிறது?

இதுவரை நாம் பார்த்த விஷயங்களை நம்புகிறவர்களுக்கு நிறைவான வாழ்க்கை கிடைத்திருக்கிறதா?

வியட்நாமில் வாழ்கிற ஹாவ் என்பவருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜோசியம், ஃபெங் ஷுய் ஆகியவற்றைப் பார்த்தார். முன்னோர்களையும் வழிபட்டார். எதிர்பார்த்த வாழ்க்கை அவருக்குக் கிடைத்ததா? அவரே இப்படிச் சொல்கிறார்: “வியாபாரத்துல நஷ்டம் ஆயிடுச்சு, கடன்ல மாட்டிக்கிட்டேன், அப்புறம் குடும்பத்துலயும் ஏகப்பட்ட பிரச்சினை வந்துச்சு. மொத்தத்துல ரொம்ப நொந்துபோயிட்டேன்.”

தைவானில் வாழ்கிற ச்சோமிங் என்பவர் ஜோசியம், மறுஜென்மம், விதி, ஃபெங் ஷுய், என எல்லாவற்றையும் நம்பினார். முன்னோர்களையும் வழிபட்டார். இந்த நம்பிக்கைகளைப் பற்றி நன்றாக ஆராய்ச்சி செய்த பிறகு அவர் இப்படிச் சொன்னார்: “இந்த நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் ஒண்ணோட ஒண்ணு ஒத்துப் போறதில்ல. இதெல்லாமே ரொம்ப குழப்பமா இருக்கு. ஜோசியத்துல கணிக்கிற விஷயங்களும் பெரும்பாலான சமயத்துல தப்பாதான் இருக்கு. அதுமட்டும் இல்ல, போன ஜென்மத்துல என்ன செஞ்சோங்குறதே நமக்கு ஞாபகம் இல்லாதப்போ, இப்போ எப்படி நம்மளையே மாத்திக்கிட்டு நல்லா வாழ முடியும்?”

“இந்த நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் ஒண்ணோட ஒண்ணு ஒத்துப் போறதில்ல. இதெல்லாமே ரொம்ப குழப்பமா இருக்கு.”—ச்சோமிங், தைவான்

ஹாவ், ச்சோமிங் மற்றும் சிலர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்கள். விதி, நட்சத்திரங்கள், இறந்துபோன முன்னோர்கள், மறுஜென்மம் ஆகியவை நம்முடைய வாழ்க்கையை முடிவு செய்வதில்லை என்பதைப் புரிந்துகொண்டார்கள். அப்படியென்றால், நம் வாழ்க்கை நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நல்ல கல்வியும், சொத்துப்பத்துகளும் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி நினைத்து, அதற்காக உழைக்கிறவர்களின் கனவு நனவாகி இருக்கிறதா?

^ பாரா. 5 சீனாவிலும் மற்ற ஆசிய நாடுகளிலும் இதே மாதிரியான ஒரு பழக்கம் இருக்கிறது. அதை ‘ஃபெங் ஷுய்’ என்று சொல்கிறார்கள்.

^ பாரா. 6 இந்தக் கட்டுரையிலும் அடுத்து வரும் கட்டுரைகளிலும் இருக்கிற சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 16 பைபிளில் இந்த வார்த்தைகள் கலாத்தியர் 6:7-ல் இருக்கின்றன. இதேமாதிரி ஒரு பிரபலமான பழமொழியை நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்ற பழமொழிதான் அது!