Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நல்ல மனுஷனாக வாழ்ந்தாலே வாழ்க்கை நன்றாக இருக்குமா?

நல்ல மனுஷனாக வாழ்ந்தாலே வாழ்க்கை நன்றாக இருக்குமா?

ஒரு நல்ல மனுஷனாக ஒழுக்கத்தோடு வாழ்ந்தாலே வாழ்க்கை நிறைவாக இருக்கும் என்று பல வருஷங்களாக மக்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆசியாவில் வாழ்கிற மக்கள், கன்பூசியஸ் என்ற தத்துவஞானி (கி.மு. 551-கி.மு. 479) சொன்ன ஒரு விஷயத்தை ரொம்பவே மதிக்கிறார்கள். “உனக்கு என்ன நடக்கக்கூடாது என்று நீ நினைக்கிறாயோ, அதை மற்றவர்களுக்கும் செய்யாதே” என்று சொன்னார். *

பலர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைமுறை

நிறைவாகவும் சந்தோஷமாகவும் வாழ ஒரே வழி மற்றவர்களிடம் நல்லபடியாக நடந்துகொள்வதுதான் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அதனால், மற்றவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறார்கள். நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். தங்களுடைய பொறுப்பைச் சரியாகச் செய்கிறார்கள். மனசாட்சியோடு நடந்துகொள்கிறார்கள். “நான் எப்பவுமே நேர்மையா, உண்மையா நடந்துகிட்டேனா அதுக்கான பலன் எனக்கு கண்டிப்பா கிடைக்கும்னு நம்புனேன்” என்று வியட்நாமில் இருக்கிற லின் என்ற பெண் சொல்கிறார்.

சிலர், தங்களுடைய மத நம்பிக்கையால் மற்றவர்களுக்கு நல்லது செய்கிறார்கள். தைவானில் இருக்கிற ஷூ-யூன் இப்படிச் சொல்கிறார்: “உயிரோடு இருக்கும்போது நல்லது செஞ்சா செத்ததுக்கு அப்புறம் நல்லா இருப்போம். ஒருவேள கெட்டது செஞ்சா செத்ததுக்கு அப்புறம் ரொம்ப அவஸ்த்தபடுவோம்னு எனக்கு சொல்லி கொடுத்தாங்க.”

அனுபவம் என்ன காட்டுகிறது?

மற்றவர்களுக்கு நல்லது செய்யும்போது நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது உண்மைதான்! ஆனால், எல்லா சமயத்திலும் அப்படி நடப்பதில்லை. மற்றவர்களுக்கு நல்லது செய்வதற்காகப் பாடுபட்ட நிறைய பேருடைய அனுபவம் அதைக் காட்டுகிறது. ஹாங்காங்கில் வாழ்கிற ஷூ பிங் என்ற பெண் இப்படிச் சொல்கிறார்: “மத்தவங்களுக்கு நல்லது செஞ்சா எப்பவுமே நமக்கு நல்லது நடக்கும்னு சொல்ல முடியாது. என் குடும்பத்துல இருக்கிறவங்கள நல்லா பார்த்துகிட்டேன். எல்லாருக்குமே நல்லது செஞ்சேன். ஆனா, என் கல்யாண வாழ்க்க முறிஞ்சிபோயிடுச்சு. என் கணவர் என்னையும், என் பையனையும் விட்டுட்டு போயிட்டார்.”

மதத்தில் ஈடுபாடோடு இருக்கிற எல்லாருமே நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஜப்பானில் இருக்கிற எட்சுகோ என்ற பெண் இப்படிச் சொல்கிறார்: “நான் ஒரு மதத்துல சேந்தேன். அங்க இருக்குற இளைஞர்கள் சில விஷயங்கள செய்றதுக்கு முன்னாடியிருந்து உதவி செஞ்சேன். ஆனா, அந்த மதத்துல நடக்குற சில விஷயங்கள பாத்தது அதிர்ச்சியா இருந்துச்சு. அங்க இருக்குறவங்க ஒழுக்கம் இல்லாம நடந்துகிட்டாங்க, பதவிக்காக அடிச்சிக்கிட்டாங்க, வர்ற காணிக்கைகள தப்பா பயன்படுத்துனாங்க.”

“என் குடும்பத்துல இருக்கிறவங்கள நல்லா பார்த்துகிட்டேன். எல்லாருக்குமே நல்லது செஞ்சேன். ஆனா, என் கல்யாண வாழ்க்க முறிஞ்சிபோயிடுச்சு. என் கணவர் என்னையும், என் பையனையும் விட்டுட்டு போயிட்டார்.”—ஷூ பிங், ஹாங்காங்

மத நம்பிக்கையுள்ள சிலர் மற்றவர்களுக்கு நல்லது செய்கிறார்கள். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்காதபோது நொந்துபோகிறார்கள். வியட்நாமில் இருக்கிற வான் என்ற பெண்ணுக்கும் இதுதான் நடந்தது. “இறந்துபோன முன்னோர்களுக்கு தினமும் பூ, பழம், சாப்பாடுனு எல்லாத்தயும் படைச்சேன். இப்படி செஞ்சா என் எதிர்காலம் நல்லா இருக்கும்னு நம்புனேன். மக்களுக்கும் நிறைய நல்லது செஞ்சேன். சடங்கு, சம்பிரதாயத்தையெல்லம் பல வருஷங்களா செஞ்சேன். இருந்தாலும் என் கணவருக்கு பயங்கரமான ஒரு நோய் வந்துச்சு. வெளிநாட்டில படிச்சிட்டிருந்த என் பொண்ணு சின்ன வயசுலேயே இறந்து போயிட்டா” என்று சொல்கிறார்.

வெறுமனே ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே நமக்கு நிறைவான வாழ்க்கை கிடைத்து விடாது என்பது இதிலிருந்து தெரிகிறது. அப்படியென்றால், எது நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கும்? அதைத் தெரிந்துகொள்வதற்கு நமக்கு ஒரு நல்ல வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டி நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டும். நிறைவான வாழ்க்கைக்கும் வழி காட்ட வேண்டும். அப்படியொரு வழிகாட்டியை எங்கே கண்டுபிடிப்பது?

^ பாரா. 2 கன்பூசியஸ் மதத்தின் போதனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட கடவுளைத் தேடி என்ற புத்தகத்தில் அதிகாரம் 7 பாராக்கள் 31-35-ஐ பாருங்கள். இது www.dan124.com வெப்சைட்டில் கிடைக்கும்.