Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | கணவன்-மனைவிக்காக...

பிரச்சினைகளைப் பற்றி பேசுவது எப்படி?

பிரச்சினைகளைப் பற்றி பேசுவது எப்படி?

சவால்

நீங்கள் இரண்டு பேரும் பிரச்சினையைப் பற்றி பேசி முடிக்கும்போது ரொம்ப ‘அப்செட்’ ஆகிவிடுகிறீர்களா? கவலைப்படாதீர்கள், நிலைமையை உங்களால் சரிசெய்ய முடியும். ஆனால், பேச்சுத்தொடர்பு கொள்ளும் விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சில வித்தியாசங்களை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். *

சில உண்மைகள்

பிரச்சினைக்கான தீர்வைக் கேட்பதற்கு முன்பு பிரச்சினையைப் பற்றி பேசத்தான் பெண்கள் பொதுவாக விரும்புகிறார்கள். சொல்லப்போனால், சிலசமயங்களில் பேசுவதுதான் பிரச்சினைக்குத் தீர்வே.

“என் மனசுல இருக்கிறதையெல்லாம் கொட்டித் தீர்க்கும்போதுதான்... என் கணவர் என்னை புரிஞ்சுக்கிட்டாருன்னு தெரிஞ்சுக்கும்போதுதான்... எனக்கு நிம்மதியா இருக்கும். பேசி முடிச்ச பின்னாடி... இன்னும் சொல்லப்போனா பேசி முடிச்ச சில நிமிஷத்திலேயே... எனக்கு ரொம்ப ‘ரிலாக்ஸா’ இருக்கும்”—சிர்ப்பா. *

“நான் என்ன நினைக்கிறேன்னு என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லலைன்னா எனக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. விஷயத்த அவர்கிட்ட சொன்னதுக்கு அப்புறம்தான் என் பாரத்தை இறக்கி வைச்ச மாதிரி இருக்கும்.”—ஏ-ஜின்.

“பிரச்சினையை பத்தி பேசும்போதுதான் அந்த பிரச்சினை எப்படி ஆரம்பிச்சுது... அதுக்கு ஆணி வேரு என்ன... இதையெல்லாம் என்னால அலசி ஆராய முடியுது.”—லர்டிஸ்.

ஆண்கள் எப்போதும் பிரச்சினைக்கான தீர்வைப் பற்றித்தான் யோசிப்பார்கள். பிரச்சினைகளை சரி செய்யும்போதுதான் ஆண்களுக்கு ஒருவித திருப்தி கிடைக்கிறது. பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும்போதுதான் மனைவிகள் ஏதாவது உதவி கேட்டு வருவார்கள் என்று கணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், பிரச்சினைக்கான தீர்வை மனைவிகள் உடனே ஏற்றுக்கொள்ளாதபோது கணவர்கள் குழம்பிப்போகிறார்கள். “என்னால புரிஞ்சுக்கவே முடியல... உன்னோட பிரச்சினைக்கு தீர்வு வேணாம்னா, அப்புறம் எதுக்கு அத பத்தி என்கிட்ட பேசற?” என கிரிக் என்ற கணவர் கேட்கிறார்.

ஆனால், “அறிவுரை கொடுப்பதற்கு முன்பு புரிந்துகொள்ள வேண்டும்” என்று மணவாழ்வு சிறக்க ஏழு ஆலோசனைகள் என்ற ஆங்கில புத்தகம் எச்சரிக்கிறது. “ஒரு தீர்வை சொல்வதற்கு முன்பு உங்கள் மனைவியின் கஷ்டத்தை முழுதும் புரிந்துகொண்டீர்கள்... அவர்களுக்காக நீங்களும் வருத்தப்படுகிறீர்கள்... என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். அநேக சந்தர்ப்பங்களில், பிரச்சினைக்கான தீர்வை மனைவிகள் எதிர்பார்ப்பதே கிடையாது. அவர்கள் சொல்வதை நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்” என்று அந்தப் புத்தகம் சொல்கிறது.

நீங்கள் என்ன செய்யலாம்

கணவர்களுக்கு: மனைவி சொல்வதை காதுகொடுத்து கேட்பதற்கு... அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை புரிந்துகொள்வதற்கு... பழகிக்கொள்ளுங்கள். தாமஸ் என்ற கணவர் இப்படிச் சொல்கிறார்: “சிலசமயம் என் மனைவி சொல்றத கேட்டதுக்கு அப்புறம், ‘வெறுமனே கேட்டதுனால எந்த பிரயோஜனமும் இல்லையே’னு நினைப்பேன். ஆனா என் மனைவி அதைத்தான் எதிர்பாக்குறா, நான் காதுகொடுத்து கேக்கணும்னுதான் அவ விரும்புறா.” ஸ்டீவனும் இதைத்தான் சொல்கிறார்: “என் மனைவி என்கிட்ட பேச வரும்போது அவ மனசுல இருக்கிறதையெல்லாம் சொல்ல விட்டுறுவேன், இடையில எதுவும் பேச மாட்டேன். எல்லாத்தையும் சொன்னதுக்கு அப்புறம் இப்போதான் ரொம்ப நிம்மதியா இருக்குன்னு சொல்லுவா.”

இதை செய்து பாருங்கள்: அடுத்த தடவை உங்களுடைய மனைவியிடம் ஒரு பிரச்சினையைப் பற்றி பேசும்போது, ஆலோசனை கொடுக்க வேண்டுமென்ற தூண்டுதல் வந்தால் அதை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மனைவி பேசும்போது அவளுடைய கண்ணையே பாருங்கள், அவள் என்ன சொல்கிறாளோ அதை கவனமாகக் கேளுங்கள். நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்கு அறிகுறியாக அவ்வப்போது தலையை ஆட்டுங்கள். விஷயத்தைப் புரிந்துகொள்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கு அவள் சொன்னதை இடையிடையே சுருக்கமாக திரும்பச் சொல்லுங்கள். “சிலசமயம் என் மனைவிக்கு வேண்டியதெல்லாம், அவ சொல்றத நான் புரிஞ்சுக்கிட்டேன்... அவ சொல்றத நான் ஏத்துக்கிட்டேன்-கிறதுதான்” என்று சார்லஸ் சொல்கிறார்.—பைபிள் தரும் ஆலோசனை: யாக்கோபு 1:19.

மனைவிகளுக்கு: உங்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லுங்கள். “எங்களுடைய தேவை என்னங்கறத கணவர் தெரிஞ்சுக்கணும்னு நாங்க எதிர்பாக்கலாம், ஆனா சிலசமத்துல அத அவங்ககிட்ட தெளிவா நாங்க சொல்ல வேண்டியிருக்கு” என்று எலினி சொல்கிறார். “நான் என்ன சொல்வேன்னா... ‘என் மனசுக்குள்ள ஏதோ உறுத்திக்கிட்டு இருக்கு. அத நீங்க காதுகொடுத்து கேட்கணும்னு விரும்புறேன். அதுக்காக நீங்க உடனே அத தீர்க்கணும்னு அவசியமில்ல. ஆனா அத பத்தி நான் என்ன நினைக்கிறேங்கிறத புரிஞ்சுக்கணும், அவ்வளதான்” என்கிறார் ஈனஸ்.

இதை செய்து பாருங்கள்: நீங்கள் சொல்வதை முழுவதுமாகக் கேட்பதற்கு முன்பே உங்கள் கணவர் அவசரப்பட்டு தீர்வு சொன்னால், அவருக்கு உங்கள்மேல் அக்கறையே இல்லை என்று முடிவு கட்டிவிடாதீர்கள். ஒருவேளை உங்களுடைய பாரத்தை குறைக்க அவர் முயற்சி செய்யலாம். எஸ்தர் இப்படி சொல்கிறார்: “எரிச்சல் அடையறதுக்கு பதிலா, என் கணவருக்கு என்மேல அக்கறை இருக்கு, நான் சொல்றத காதுகொடுத்து கேட்க விரும்புறார், அதேசமயத்துல எனக்கு உதவி செய்யவும் விரும்புறார்னு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவேன்.”—பைபிள் தரும் ஆலோசனை: ரோமர் 12:10.

கணவன்-மனைவிக்கு: மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ அதுபோல்தான் நாமும் மற்றவர்களை நடத்த விரும்புகிறோம். ஆனால் பிரச்சினைகளைப் பற்றி நன்றாக பேசுவதற்கு, உங்களுடைய கணவரோ மனைவியோ தங்களை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:24) “நீங்க கணவரா இருந்தால், உங்க மனைவி சொல்றத காதுகொடுத்து கேளுங்க. நீங்க மனைவியா இருந்தால், பிரச்சினைக்கு உங்க கணவர் சொல்ற பரிகாரத்தை சிலசமயத்துல காதுகொடுத்து கேளுங்க. நீங்க சமநிலையா இருந்தால்தான் ரெண்டு பேருக்கும் நல்லது” என்கிறார் மிகேல்.—பைபிள் தரும் ஆலோசனை: 1 பேதுரு 3:8. ▪ (g16-E No. 3)

^ பாரா. 4 இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லா கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் பொருந்தாமல் இருக்கலாம். ஆனாலும், இதிலுள்ள ஆலோசனைகள்... திருமணமானவர் தன்னுடைய கணவரை/மனைவியை நன்கு புரிந்துகொள்வதற்கும், அவரோடு நல்ல பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

^ பாரா. 7 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.