Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து |விசுவாசம்

விசுவாசம்

விசுவாசம்

கடவுள்பக்தி இருப்பதாகச் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால் “விசுவாசம்” என்பதற்கு அர்த்தம் தெரியாமல் திணறுகிறார்கள். விசுவாசம் என்றால் என்ன, அது ஏன் முக்கியம்?

விசுவாசம் என்றால் என்ன?

சிலர் என்ன சொல்கிறார்கள்

ஒருவருக்கு விசுவாசம் இருந்தால், எந்த அத்தாட்சியும் இல்லாமல் ஒரு விஷயத்தை அவர் அப்படியே ஏற்றுக்கொள்வார் என பலர் நினைக்கிறார்கள். உதாரணமாக, “எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்குது” என்று சொல்கிற ஒருவரைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். “அப்படி நம்புவதற்கு என்ன காரணம்?” என்று அவரிடம் கேட்டால், “அப்படித்தான் என்னை வளர்த்தாங்க” அல்லது “அப்படித்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க” என்று சொல்லலாம். இதனால், விசுவாசத்துக்கும் குருட்டுத்தனமான நம்பிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லாததுபோல் தோன்றலாம்.

பைபிள் என்ன சொல்கிறது

“விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்; பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்.” (எபிரெயர் 11:1) ஒருவருடைய எதிர்பார்ப்புகள் நிச்சயம் நடக்குமென்ற உறுதி கிடைக்க வேண்டுமென்றால், அதை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ‘எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்ற உறுதி’ என்பதற்கு கிரேக்க மொழியில் ஆழமான அர்த்தம் இருக்கிறது; இது ஒருவருக்குள் உண்டாகிற வெறும் உணர்ச்சியோ ஆசையோ கிடையாது. ஆகவே, விசுவாசம் என்பது அத்தாட்சியின் அடிப்படையில் உறுதியான நம்பிக்கை வைப்பதைக் குறிக்கிறது.

“காணமுடியாத அவருடைய [கடவுளுடைய] பண்புகள், அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன.”ரோமர் 1:20.

விசுவாசம் ஏன் தேவை?

பைபிள் என்ன சொல்கிறது

“விசுவாசமில்லாமல் ஒருவனும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது; ஏனென்றால், கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.” —எபிரெயர் 11:6.

ஏற்கெனவே பார்த்தபடி, மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததால்தான் அநேகர் கடவுளை நம்புகிறார்கள். ‘அப்படித்தான் என்னை வளர்த்தாங்க’ என்று அவர்கள் சொல்லலாம். ஆனால், கடவுள் இருக்கிறார்... அவர் அன்பு காட்டுகிறார்... என்பதை ஒருவர் உண்மையிலேயே நம்ப வேண்டுமென கடவுள் விரும்புகிறார். அதனால்தான், அவரை ஊக்கமாகத் தேடுவது அவசியமென பைபிள் வலியுறுத்துகிறது; அப்படித் தேடும்போதுதான் உண்மையிலேயே அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”யாக்கோபு 4:8.

விசுவாசத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

பைபிள் என்ன சொல்கிறது

“அறிவிக்கப்படுவதைக் கேட்டால்தான் விசுவாசம் உண்டாகும்” என்று சொல்கிறது. (ரோமர் 10:17) அப்படியானால், கடவுள்மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கு முதல்படி... கடவுளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை ‘கேட்க’ வேண்டும். (2 தீமோத்தேயு 3:16) முக்கியமான கேள்விகளுக்கு, அதாவது கடவுள் யார்? அவர் இருக்கிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி? கடவுளுக்கு உண்மையிலேயே என்மேல் அக்கறை இருக்கிறதா? எதிர்காலத்தில் கடவுள் என்ன செய்யப்போகிறார்? போன்ற கேள்விகளுக்கு, சரியான பதில்களைக் கண்டுபிடிக்க நீங்கள் பைபிளைப் படிக்க வேண்டும்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு நம்மைச் சுற்றிலும் ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன

பைபிளைப் படிக்க யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்ய ஆவலோடு காத்திருக்கிறார்கள். எங்களுடைய வெப்சைட் jw.org-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “மக்களுக்கு பைபிளை கற்றுக்கொடுக்க யெகோவாவின் சாட்சிகள் விரும்புகிறார்கள். ஆனால், எங்கள் மதத்தில் சேர வேண்டுமென நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. மாறாக, பைபிள் சொல்லும் விஷயங்களை மற்றவர்களிடம் மரியாதையோடு சொல்லுகிறோம்; தான் நம்பும் விஷயங்களை தெரிவுசெய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருப்பதால் முடிவை அவர் கையில் விட்டுவிடுகிறோம்.”

முடிவாகச் சொல்லப்போனால், உங்களுடைய விசுவாசத்துக்கு ஆதாரம் வேண்டும், பைபிளில் வாசிக்கிற விஷயங்கள் உண்மை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது, முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள். “கடவுளுடைய வார்த்தைகளை அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு, அவையெல்லாம் சரிதானா என்று தினந்தோறும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்.”—அப்போஸ்தலர் 17:11. ▪ (g16-E No. 3)

“ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.”யோவான் 17:3.