Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் ஆறு

இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
  • சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது?

  • நாம் ஏன் சாகிறோம்?

  • சாவைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது ஆறுதலளிக்குமா?

1-3. சாவைப் பற்றி மக்கள் என்ன கேள்விகள் கேட்கிறார்கள், அவற்றிற்கு வெவ்வேறு மதங்கள் எப்படிப் பதிலளிக்கின்றன?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களுடைய மனதைக் குடைந்து கொண்டிருக்கும் மிக முக்கியமான கேள்விகளே இவை. நாம் யாராக இருந்தாலும் சரி, எங்கு வாழ்ந்தாலும் சரி, இவற்றிற்கான பதில்களைத் தெரிந்துகொள்ளவே விரும்புகிறோம்.

2 இயேசு கிறிஸ்துவின் மீட்கும்பொருள் நித்திய ஜீவனுக்கான வாய்ப்பை எப்படித் திறந்து வைத்தது என்பதை முந்தைய அதிகாரத்தில் நாம் பார்த்தோம். ஜனங்கள் இனி ‘மரணமில்லாமல்’ வாழப்போகும் ஒரு காலத்தைப் பற்றி பைபிள் முன்னறிவிப்பதையும் கற்றுக்கொண்டோம். (வெளிப்படுத்துதல் 21:4) ஆனால், அந்தக் காலம் வரும்வரை நாம் எல்லாருமே இறந்துகொண்டுதான் இருப்போம். ‘உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்கள்’ என்று ஞானியான சாலொமோன் ராஜா சொன்னார். (பிரசங்கி 9:5) எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் வாழவே நாம் முயலுகிறோம். இருந்தாலும், சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது என்ற கேள்விதான் தொடர்ந்து நம் மனதில் எழும்புகிறது.

3 நமக்குப் பிரியமானவர்கள் யாராவது சாகும்போது, நாம் துக்கித்து அழுகிறோம். ‘அவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்? வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா? நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்களா? அவர்களுக்கு நாம் உதவ முடியுமா? மறுபடியும் நாம் அவர்களைப் பார்ப்போமா?’ போன்ற கேள்விகளை அச்சமயத்தில் நாம் ஒருவேளை கேட்கலாம். இந்தக் கேள்விகளுக்கு உலக மதங்கள் வெவ்வேறு விதமான பதில்களை அளிக்கின்றன. நீங்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தால் பரலோகத்திற்குப் போவீர்கள் என்றும், மோசமான வாழ்க்கை வாழ்ந்தால் நரகத்தில் வதைக்கப்படுவீர்கள் என்றும் சில மதங்கள் கற்பிக்கின்றன. இறந்தவர்கள் தங்கள் மூதாதையருடன் இருப்பதற்காக ஓர் ஆவி உலகிற்குப் போகிறார்கள் என்று இன்னும் சில மதங்கள் கற்பிக்கின்றன. வேறு சில மதங்களோ, இறந்தவர்கள் நியாயத்தீர்ப்பு செய்யப்படுவதற்காகக் கீழுலகத்திற்குச் செல்கிறார்கள் என்றும், அதன் பிறகு அவர்கள் மறுபிறவி எடுக்கிறார்கள் என்றும் கற்பிக்கின்றன.

4. சாவைக் குறித்து அநேக மதங்களில் நிலவும் பொதுவான கருத்து என்ன?

4 உடல் செத்த பிறகு நமக்குள் இருக்கிற ஏதோவொன்று தொடர்ந்து உயிர் வாழ்கிறது என்ற பொதுவான கருத்துதான் இந்த எல்லா மதப் போதனைகளிலும் உள்ளது. செத்த பிறகும்கூட பார்க்கும் திறன், கேட்கும் திறன், சிந்திக்கும் திறன் ஆகியவற்றோடு நாம் ஏதோவொரு விதத்தில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறோம் என கிட்டத்தட்ட எல்லாப் பண்டைய மதங்களும் கற்பித்தன, இன்றுள்ள பெரும்பாலான மதங்களும் அவ்வாறே கற்பிக்கின்றன. ஆனால், அது எப்படி முடியும்? மூளை செயல்பட்டால்தான் பார்க்கவும் கேட்கவும் சிந்திக்கவும் முடியும். சாகும்போது மூளை செயலற்றுப்போய் விடுகிறது. நம்முடைய நினைவுகளும் உணர்ச்சிகளும் புலன்களும் ஏதோவொரு மர்மமான முறையில் தனித்து இயங்குவதில்லை. மூளை செயலற்றுப்போன பிறகு அவற்றால் தொடர்ந்து இயங்க முடியாது.

சாகும்போது உண்மையிலேயே என்ன நடக்கிறது?

5, 6. இறந்தவர்களின் நிலையைக் குறித்து பைபிள் என்ன கற்பிக்கிறது?

5 சாகும்போது என்ன நடக்கிறது என்பது மூளையைப் படைத்தவரான யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும், அது அவருக்கு மர்மமான விஷயமே அல்ல. இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர் தம்முடைய வார்த்தையான பைபிளில் விளக்குகிறார். அந்தத் தெளிவான விளக்கம் இதுதான்: ஒரு நபர் சாகும்போது, அவர் இல்லாமல் போய்விடுகிறார். வாழ்வுக்கு நேரெதிரானது சாவு. செத்தவர்களால் பார்க்க முடியாது, கேட்க முடியாது, சிந்திக்க முடியாது. உடல் செத்த பிறகு நம்முடைய எந்தவொரு பாகமும் தொடர்ந்து உயிர் வாழ்வது கிடையாது. சாகாத ஆத்துமாவோ ஆவியோ நமக்குள் இல்லை. *

இந்த நெருப்பு எங்கே போனது?

6 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்கள் என்பதைக் குறிப்பிட்ட பிறகு, ‘மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்’ என்று சாலொமோன் எழுதினார். அதுமட்டுமல்ல, அந்த முக்கிய உண்மையின் பேரில் கூடுதலான தகவல்களையும் அளித்தார்; அதாவது செத்துப்போனவர்களால் சிநேகிக்கவோ பகைக்கவோ முடியாது என்றும், “[பிரேதக்குழியிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லை” என்றும் கூறினார். (பிரசங்கி 9:5, 6, 10) அதேபோல், ஒருவர் சாகும்போது ‘அவருடைய யோசனைகள் அழிந்துபோம்’ என்று சங்கீதம் 146:4 சொல்கிறது. நாம் சாகும் தன்மையுடையவர்கள், நம்முடைய உடல் செத்த பிறகு நாம் தொடர்ந்து உயிர் வாழ்வதில்லை. நாம் அனுபவிக்கிற இந்த வாழ்க்கை ஒரு மெழுகுவர்த்தியின் சுடரைப் போன்றது. அந்தச் சுடர் அணைக்கப்படும்போது, அது எங்கேயும் பிரிந்து போவதில்லை. அது வெறுமனே இல்லாமல் போகிறது, அவ்வளவுதான்.

சாவைப் பற்றி இயேசு சொன்ன விஷயங்கள்

7. சாவை எதற்கு ஒப்பிட்டு இயேசு பேசினார்?

7 இறந்தவர்களுடைய நிலையைப் பற்றி இயேசு கிறிஸ்து பேசினார். இறந்துபோன தம்முடைய நண்பரான லாசருவைக் குறித்து தம் சீஷர்களிடம் பேசியபோது, “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்” என்று அவர் குறிப்பிட்டார். லாசரு ஏதோவொரு வியாதியிலிருந்து குணமடைவதற்கு ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பற்றித்தான் இயேசு சொல்கிறார் என அந்தச் சீஷர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது தவறு. “லாசரு மரித்துப்போனான்” என பிறகு இயேசுவே அதற்கு விளக்கமளித்தார். (யோவான் 11:11-14) சாவை நித்திரைக்கும் ஓய்வுக்கும் இயேசு ஒப்பிட்டுப் பேசியதைக் கவனித்தீர்களா? ஆம், லாசரு பரலோகத்துக்கும் போகவில்லை, எரிநரகத்துக்கும் போகவில்லை. தேவதூதர்களையோ மூதாதையரையோ சந்திக்கவும் செல்லவில்லை. இன்னொரு மனிதனாக மறுபிறவியும் எடுக்கவில்லை. கனவுகளே வராத ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல அவர் மரணத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். வேறுசில வசனங்களும் சாவை தூக்கத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றன. உதாரணத்திற்கு, சீஷனாகிய ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டபோது, அவர் ‘நித்திரையடைந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 7:60) அதேபோல அப்போஸ்தலன் பவுலும், தன் நாளில் மரித்த சிலரைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள் “நித்திரையடைந்தார்கள்” என்று எழுதினார்.​—⁠1 கொரிந்தியர் 15:6.

பூமியில் என்றென்றும் வாழ்வதற்காகவே மனிதர்களை யெகோவா படைத்தார்

8. மனிதர்கள் சாக வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமாக இருக்கவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?

8 மனிதர்கள் சாக வேண்டுமென்பது கடவுளுடைய ஆதி நோக்கமாக இருந்ததா? இல்லவே இல்லை! பூமியில் என்றென்றும் வாழ்வதற்காகவே மனிதர்களை அவர் படைத்தார். இந்தப் புத்தகத்தின் முந்தின அதிகாரங்களில் நாம் பார்த்தபடி, அந்த முதல் மனிதத் தம்பதியை மகிழ்ச்சி நிறைந்த ஒரு பரதீஸில் குடிவைத்தார். பூரண ஆரோக்கியத்தைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டுமென்று யெகோவா விரும்பினார். அன்பான எந்தப் பெற்றோராவது, தங்களுடைய பிள்ளைகள் வயதாகி சாக வேண்டுமென்று விரும்புவார்களா? நிச்சயமாகவே விரும்ப மாட்டார்கள்! யெகோவா தமது பிள்ளைகளை நேசித்தார், பூமியில் அவர்கள் முடிவில்லா ஆனந்தத்தை அனுபவித்து மகிழ வேண்டுமென்று அவர் விரும்பினார். ‘நித்திய கால நினைவை மனிதர்களின் உள்ளத்திலே [யெகோவா] வைத்திருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:11, NW) ஆம், கடவுள் நம்மைப் படைக்கும்போதே நித்தியமாக வாழ வேண்டுமென்ற ஆசையை நமக்குள் வைத்திருக்கிறார். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியையும் திறந்துவிட்டிருக்கிறார்.

மனிதர்கள் ஏன் சாகிறார்கள்?

9. ஆதாமுக்கு என்ன நிபந்தனையை யெகோவா விதித்தார், இது ஏன் கடினமான ஒரு கட்டளையாக இருக்கவில்லை?

9 அப்படியானால், மனிதர்கள் ஏன் சாகிறார்கள்? இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க, பூமியில் ஒரு மனிதனும் ஒரு மனுஷியும் மட்டுமே இருந்த சமயத்தின்போது என்ன நடந்ததென்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும் . . . பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்.” (ஆதியாகமம் 2:9) என்றாலும், ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆதாமிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:16, 17) கீழ்ப்படிவதற்கு இது ஒன்றும் கடினமான கட்டளையாக இருக்கவில்லை. ஏனெனில் ஆதாம் ஏவாளுக்குச் சாப்பிட ஏராளமான மற்ற கனி வகைகள் இருந்தன. ஆனால் அந்தக் கட்டளை, பரிபூரண ஜீவனையும் மற்ற எல்லாவற்றையும் கொடுத்திருந்த கடவுளுக்குத் தங்கள் நன்றியைக் காட்டுவதற்கான ஒரு விசேஷ வாய்ப்பை அவர்களுக்கு அளித்தது. அதுமட்டுமல்ல, அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியும்போது, தங்கள் பரலோகத் தகப்பனின் அதிகாரத்தை அவர்கள் மதிக்கிறார்கள் என்பதையும் அவருடைய அன்பான வழிநடத்துதலை விரும்புகிறார்கள் என்பதையும் காட்ட அவர்களுக்கு வாய்ப்பளித்தது.

10, 11. (அ) முதல் மனிதத் தம்பதியர் கடவுளுக்கு எப்படிக் கீழ்ப்படியாமல் போனார்கள்? (ஆ) ஆதாம் ஏவாள் கீழ்ப்படியாமல் போனது ஏன் படுமோசமான செயலாக இருந்தது?

10 வருத்தகரமாக, முதல் மனிதத் தம்பதியர் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். சர்ப்பத்தின் மூலம் ஏவாளிடம் சாத்தான் இவ்வாறு கேட்டான்: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” அதற்கு ஏவாள்: “நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன், நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்றாள்.—ஆதியாகமம் 3:1-3.

11 “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என சாத்தான் சொன்னான். (ஆதியாகமம் 3:4, 5) தடை செய்யப்பட்டிருந்த அந்தக் கனியைச் சாப்பிடுவதன் மூலம் தனக்கு நன்மை கிடைக்கும் என்பதாக ஏவாள் நம்ப வேண்டுமென்று சாத்தான் விரும்பினான். நல்லது எது கெட்டது எது என்பதைத் தீர்மானிப்பதற்கும் இஷ்டப்படி நடந்துகொள்வதற்கும் அவளுக்கு உரிமை இருக்கிறது என மறைமுகமாகத் தெரிவித்தான். அந்தக் கனியைச் சாப்பிடுவதால் வரும் விளைவுகளைப் பற்றி யெகோவா பொய் சொல்லியிருந்ததாகக்கூட அவன் குற்றம்சாட்டினான். சாத்தான் சொன்னதையெல்லாம் ஏவாள் நம்பினாள். அதனால் அந்தக் கனியைப் பறித்து, அதில் கொஞ்சத்தைச் சாப்பிட்டாள். பிறகு தன் கணவனுக்கும் கொஞ்சத்தைக் கொடுத்தாள், அவனும் அதைச் சாப்பிட்டான். அவர்கள் ஏதோ தெரியாத்தனமாக அப்படிச் செய்யவில்லை. செய்யக்கூடாது என்று கடவுள் சொல்லியிருந்ததைத்தான் தெரிந்தே செய்தார்கள். அந்தக் கனியைச் சாப்பிட்டதால் நியாயமான, எளிதான ஒரு கட்டளைக்கு வேண்டுமென்றே அவர்கள் கீழ்ப்படியாமல் போனார்கள். தங்கள் பரம தகப்பனையும் அவருடைய அதிகாரத்தையும் அவமதித்தார்கள். தங்களுடைய அன்பான சிருஷ்டிகரை அப்படி அவமதித்தது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்!

12. ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு விரோதமாக நடந்துகொண்டபோது அவருக்கு எப்படியிருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள என்ன உதாரணம் நமக்கு உதவலாம்?

12 உதாரணத்திற்கு: உங்கள் மகனை அல்லது மகளை நீங்கள் வளர்த்து ஆளாக்கிய பிறகு, அவன்(ள்) உங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அதுவும் உங்களைத் துளிகூட மதிக்காமலும் உங்கள் மீது துளிகூட அன்பில்லாமலும் நடந்துகொண்டால் உங்களுக்கு எப்படியிருக்கும்? மனம் சுக்கு நூறாகிவிடும் இல்லையா? அப்படியானால், ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு விரோதமாக நடந்துகொண்டபோது அவருடைய மனம் எந்தளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்.

ஆதாம் மண்ணிலிருந்து வந்தான், மண்ணுக்கே திரும்பினான்

13. ஆதாம் சாகும்போது அவனுக்கு என்ன நடக்குமென்று யெகோவா சொன்னார், அதன் அர்த்தம் என்ன?

13 கீழ்ப்படியாமல் போன ஆதாமையும் ஏவாளையும் இனி நித்திய காலமாக வாழ வைக்க யெகோவாவுக்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. அவர் சொல்லியிருந்தபடியே அவர்கள் செத்துப் போனார்கள். ஆம், ஆதாமும் ஏவாளும் இல்லாமல் போனார்கள். அவர்கள் ஏதோவொரு ஆவி உலகிற்குச் செல்லவில்லை. இது நமக்கு எப்படித் தெரியும்? கீழ்ப்படியாமல் போன ஆதாமிடம் நேரடியாகக் கேள்வி கேட்ட பிறகு யெகோவா சொன்ன விஷயத்திலிருந்து இது நமக்குத் தெரியும். அவர் இவ்வாறு சொன்னார்: ‘நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்கே திரும்புவாய். . . . நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.’ (ஆதியாகமம் 3:19) ஆதாமைக் கடவுள் மண்ணிலிருந்து உண்டாக்கியிருந்தார். (ஆதியாகமம் 2:7) அப்படி உண்டாக்குவதற்கு முன், ஆதாம் எங்குமே இருக்கவில்லை. எனவே, ஆதாம் மண்ணுக்கே திரும்புவான் என யெகோவா சொன்னபோது, முன்பு போலவே ஆதாம் இனி இல்லாமல் போவான், எங்குமே இருக்க மாட்டான் என்றுதான் அவர் அர்த்தப்படுத்தினார். அவனை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண் எப்படி உயிரற்றதாக இருக்கிறதோ அப்படியே அவனும் உயிரற்றவனாக ஆகிவிடுவான் என்றே அர்த்தப்படுத்தினார்.

14. நாம் ஏன் சாகிறோம்?

14 ஆதாமும் ஏவாளும் இன்றுவரை உயிரோடு இருந்திருக்க முடியும், ஆனால் அவர்கள் செத்துப் போனார்கள். ஏன்? கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்ததால்தான். அப்படியானால் நாம் செத்துப்போவதற்குக் காரணம் என்ன? ஆதாமின் பாவமும் மரணமும் அவனுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் கடத்தப்பட்டதே அதற்குக் காரணம். (ரோமர் 5:12) யாராலும் தப்பிக்க முடியாத ஒரு கொடிய பரம்பரை வியாதியைப் போன்றது அந்தப் பாவம். அதன் விளைவுதான் மரணம் என்ற சாபம். மரணம் என்பது ஓர் எதிரி, நண்பனல்ல. (1 கொரிந்தியர் 15:26) பயங்கரமான இந்த எதிரியிடமிருந்து நம்மை விடுவிக்க மீட்கும்பொருளைக் கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!

சாவைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது நன்மையளிக்கும்

15. சாவைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது ஏன் ஆறுதலளிக்கிறது?

15 இறந்தவர்களின் நிலையைக் குறித்து பைபிள் கற்பிக்கும் விஷயம் ஆறுதலளிக்கிறது. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இறந்தவர்கள் வேதனைப்படுவதுமில்லை, கடுந்துயரத்தை அனுபவிப்பதுமில்லை. அவர்கள் நமக்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது, எனவே அவர்களுக்கு நாம் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு நம்முடைய உதவி அவசியமில்லை, அவர்களாலும் நமக்கு உதவி செய்ய முடியாது. அவர்களோடு நம்மால் பேச முடியாது, அவர்களாலும் நம்மோடு பேச முடியாது. ஆனால், இறந்தவர்களுக்குத் தங்களால் உதவ முடியுமென அநேக மதத் தலைவர்கள் பொய்யாகச் சொல்லிக் கொள்கிறார்கள், அதை நம்பி ஜனங்கள் அவர்களிடம் பணம் கொடுக்கிறார்கள். ஆனால், சாவைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது அத்தகைய பொய்களைக் கற்பிப்பவர்களின் வலையில் விழுந்துவிடாதபடி நம்மைப் பாதுகாக்கிறது.

16. அநேக மதங்களின் போதனைகளைக் கறைப்படுத்தியிருப்பது யார், எந்த விதத்தில்?

16 இறந்தவர்களைப் பற்றி பைபிள் கற்பிக்கிற விஷயத்தை உங்கள் மதம் ஏற்றுக்கொள்கிறதா? பெரும்பாலான மதங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏன்? ஏனெனில், அந்த மதங்களின் போதனைகளைச் சாத்தான் கறைப்படுத்தியிருக்கிறான். உடல் செத்தாலும் ஆவியுலகில் தொடர்ந்து உயிர் வாழ முடியுமென்று பொய் மதங்களின் மூலம் ஜனங்களை அவன் நம்ப வைக்கிறான். இந்தப் பொய்யோடு வேறு பல பொய்களையும் சேர்த்துச் சொல்லி, யெகோவா தேவனிடமிருந்து அவர்களைப் பிரிக்க முயலுகிறான். எப்படி?

17. நித்தியகால வாதனை பற்றிய போதனை யெகோவாவை ஏன் இழிவுபடுத்துகிறது?

17 முன்பு குறிப்பிட்டபடி, ஒருவர் மோசமான வாழ்க்கை வாழ்ந்தால், இறந்த பிறகு நரகத்தில் நித்திய காலமாக வதைக்கப்படுவார் என்று சில மதங்கள் கற்பிக்கின்றன. இந்தப் போதனை கடவுளை இழிவுபடுத்துகிறது. யெகோவா அன்பான ஒரு கடவுள், ஜனங்களை அவர் ஒருபோதும் இப்படித் துன்புறுத்த மாட்டார். (1 யோவான் 4:8) கீழ்ப்படியாத ஒரு பிள்ளையைத் தண்டிப்பதற்காக அதன் கையை நெருப்பில் காட்டிக்கொண்டே இருக்கும் ஓர் ஆளைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அந்த ஆளை நீங்கள் மதிப்பீர்களா? அல்லது அவருடன் பழகத்தான் விரும்புவீர்களா? நிச்சயமாகவே விரும்ப மாட்டீர்கள்! சரியான கொடூரன் என்றே மனதிற்குள் சொல்லிக்கொள்வீர்கள். ஆம், அதுதான் சாத்தானுடைய விருப்பம், ஜனங்களை யெகோவா என்றென்றுமாய் நெருப்பில் வதைக்கிறார் என நாம் நம்ப வேண்டும் என்பதே அவனுடைய விருப்பம்!

18. இறந்தவர்களை வணங்குவது எந்தப் பொய்யின் அடிப்படையில் அமைந்துள்ளது?

18 அதுமட்டுமல்ல, இறந்தவர்கள் ஆவிகளாக மாறிவிடுகிறார்கள் என்றும் அவர்களுக்குத் தக்க மரியாதையும் வணக்கமும் செலுத்தப்பட வேண்டும் என்றும் போதிப்பதற்காக சாத்தான் சில மதங்களைப் பயன்படுத்துகிறான். இந்தப் போதனையின்படி, இறந்தோரின் ஆவிகள் சக்திவாய்ந்த நண்பர்களாக ஆகிவிடலாம் அல்லது பயங்கரமான எதிரிகளாக ஆகிவிடலாம். இந்தப் பொய்யை ஏராளமானோர் நம்புகிறார்கள். இதன் காரணமாக, இறந்தவர்களுக்குப் பயந்து, மதிப்பு மரியாதையோடு அவர்களை வணங்குகிறார்கள். ஆனால் பைபிள் இதற்கு நேர்மாறானதையே கற்பிக்கிறது, அதாவது இறந்தவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ஒரே மெய்க் கடவுளும் நமது படைப்பாளரும் கொடை வள்ளலுமான யெகோவாவை மட்டுமே நாம் வணங்க வேண்டும் என்றும் கற்பிக்கிறது.—வெளிப்படுத்துதல் 4:11.

19. சாவைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது வேறு எந்த பைபிள் போதனையைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது?

19 இறந்தவர்களைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது மதப் பொய்களினால் ஏமாந்துவிடாதபடி உங்களைப் பாதுகாக்கிறது. பைபிளின் மற்ற போதனைகளைப் புரிந்துகொள்வதற்கும் இது உதவுகிறது. உதாரணத்திற்கு, செத்த பிறகு ஜனங்கள் ஆவி உலகிற்குப் போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளும்போது, பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழப்போவதைக் குறித்த வாக்குறுதி உங்களுக்கு இன்னுமதிக அர்த்தமுடையதாகிறது.

20. அடுத்த அதிகாரத்தில் என்ன கேள்வியைச் சிந்திக்கப் போகிறோம்?

20 வெகு காலத்திற்கு முன்னர், நீதியுள்ள மனிதரான யோபு பின்வரும் கேள்வியைக் கேட்டார்: “மனுஷன் செத்த பின் பிழைப்பானோ?” (யோபு 14:14) மரணத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் உயிரற்ற ஒருவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? இதைப் பற்றி பைபிள் கற்பிக்கிற விஷயம் மனதிற்கு மிகவும் ஆறுதலளிக்கிறது. எப்படியென்று அடுத்த அதிகாரத்தில் சிந்திக்கப் போகிறோம்.

^ பாரா. 5 “ஆத்துமா,” “ஆவி” ஆகிய வார்த்தைகளைப் பற்றிய விளக்கத்திற்கு, தயவுசெய்து பக்கங்கள் 208-11- ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.