Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பன்னிரண்டு

கடவுளுக்குப் பிரியமாக வாழ்தல்

கடவுளுக்குப் பிரியமாக வாழ்தல்
  • நீங்கள் கடவுளுடைய நண்பராக ஆவது எப்படி?

  • சாத்தான் விடுத்த சவாலில் நீங்கள் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்?

  • கடவுளுக்குப் பிரியமில்லாத பழக்கவழக்கங்கள் யாவை?

  • கடவுளுக்குப் பிரியமாக வாழ்வது எப்படி?

1, 2. யெகோவா தம்முடைய நெருங்கிய நண்பர்களாகக் கருதிய மனிதர்கள் சிலர் யார்?

எப்படிப்பட்ட நபரை உங்கள் நண்பராகத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களுக்கு இருக்கும் அதே மாதிரியான கருத்துகளும், விருப்பங்களும், ஒழுக்கநெறிகளும் உடைய ஒருவரையே நண்பராகத் தேர்ந்தெடுக்க ஆசைப்படுவீர்கள். அதுமட்டுமல்ல, நேர்மை, நாணயம், கருணை போன்ற தங்கமான குணங்களை உடைய ஒருவரிடமே நீங்கள் கவரப்படுவீர்கள்.

2 ஆரம்ப காலத்திலிருந்தே மனிதர்கள் சிலரை கடவுள் தம்முடைய நெருங்கிய நண்பர்களாகத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார். உதாரணத்திற்கு, ஆபிரகாமை தம்முடைய சிநேகிதன் என யெகோவா அழைத்தார். (ஏசாயா 41:8; யாக்கோபு 2:23) தாவீது தமக்குப் பிடித்தமான நபராக இருந்ததால், ‘என் இருதயத்துக்கு ஏற்றவன்’ என்று சொன்னார். (அப்போஸ்தலர் 13:22) அதோடு, தீர்க்கதரிசியான தானியேலை “மிகவும் பிரியமான” நபராகக் கருதினார்.​—⁠தானியேல் 9:23.

3. சில மனிதர்களை யெகோவா ஏன் தம்முடைய நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்?

3 ஆபிரகாம், தாவீது, தானியேல் ஆகியோரை யெகோவா தம்முடைய நண்பர்களாக ஏன் கருதினார்? அதற்கான காரணத்தை அவரே ஆபிரகாமிடம் சொன்னார்; ‘நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தாய்’ என்றார். (ஆதியாகமம் 22:18) எனவே, யெகோவா சொல்லும் காரியங்களையெல்லாம் யார் மனத்தாழ்மையோடு செய்கிறார்களோ அவர்களிடமே அவர் நெருங்கிச் செல்கிறார். இஸ்ரவேலரிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.” (எரேமியா 7:23) நீங்கள் யெகோவாவுக்குச் செவிகொடுத்தால், அதாவது கீழ்ப்படிந்தால், நீங்களும்கூட அவருடைய நண்பராக ஆக முடியும்!

தம்முடைய நண்பர்களை யெகோவா பலப்படுத்துகிறார்

4, 5. யெகோவா தமது வல்லமையைத் தம்முடைய மக்களுக்கு எவ்வாறு காண்பிக்கிறார்?

4 கடவுளுடைய நண்பராக இருப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ‘தம்மிடம் உத்தம இருதயத்தோடு இருப்பவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணுவதற்காக’ யெகோவா வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் என பைபிள் சொல்கிறது. (2 நாளாகமம் 16:9) யெகோவா தமது வல்லமையை எந்த விதத்தில் உங்களுக்குக் காண்பிக்கலாம்? சங்கீதம் 32:8 ஒரு விதத்தைப் பற்றிச் சொல்கிறது: “நான் [யெகோவா] உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”

5 யெகோவாவுடைய கரிசனையை வெளிப்படுத்துகிற எப்பேர்ப்பட்ட இதயங்கனிந்த வார்த்தைகள்! ஆம், தேவையான வழிநடத்துதலை அவர் உங்களுக்குத் தருவார், அந்த வழிநடத்துதலை ஏற்று நடக்கும்போது அவர் உங்களைக் காத்திடுவார். இக்கட்டுகளிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் உங்களைக் கைதூக்கிவிடுவதற்காக அவர் ஆவலாய் இருக்கிறார். (சங்கீதம் 55:22) எனவே, முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்வீர்களேயானால், சங்கீதக்காரனைப் போலவே நீங்களும் நம்பிக்கையோடு இவ்வாறு சொல்லலாம்: “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.” (சங்கீதம் 16:8; 63:8) ஆம், யெகோவாவுக்குப் பிரியமாக வாழ அவர் உங்களுக்கு உதவுவார். ஆனால், அப்படி வாழ்வதைத் தடுக்க விரும்பும் எதிரி ஒருவன் இருக்கிறான் என்பது உங்களுக்கே தெரியும்.

சாத்தான் விடுத்த சவால்

6. மனிதர்களைக் குறித்து சாத்தான் என்ன குற்றம் சாட்டினான்?

6 கடவுளுடைய ஆட்சியுரிமைக்கு எதிராகப் பிசாசாகிய சாத்தான் எப்படிச் சவால்விட்டான் என்று இப்புத்தகத்தின் 11-ம் அதிகாரம் விளக்கியது. கடவுள் பொய்யர் என்றும், எது நல்லது எது கெட்டது என ஆதாம் ஏவாளைச் சுயமாகத் தீர்மானிக்க விடாமல் அநியாயம் செய்தார் என்றும் சாத்தான் மறைமுகமாகக் குற்றம் சாட்டினான். ஆதாம் ஏவாள் பாவத்தில் வீழ்ந்து, பூமி முழுவதும் அவர்களுடைய சந்ததியால் நிரம்ப ஆரம்பித்தபோது, எல்லா மனிதர்களுடைய உள்நோக்கத்தையும் பற்றி அவன் சந்தேகத்தைக் கிளப்பினான். “கடவுளை நேசிப்பதன் காரணமாக மக்கள் அவருக்குச் சேவை செய்வதில்லை. ஒரு வாய்ப்பு மட்டும் கிடைத்தால், யாரை வேண்டுமானாலும் என்னால் கடவுளுக்கு விரோதமாகத் திசைதிருப்பிவிட முடியும்” என்று சொல்லாமல் சொன்னான். யோபு என்பவரைப் பற்றிய பைபிள் பதிவு அதைத்தான் காண்பிக்கிறது. யோபு யார்? சாத்தானின் சவாலில் அவர் எப்படிச் சம்பந்தப்பட்டிருந்தார்?

7, 8. (அ) அக்காலத்தில் வாழ்ந்தவர்களிலேயே யோபுவை நிகரற்றவராக ஆக்கியது எது? (ஆ) யோபுவின் உள்நோக்கத்தைப் பற்றி சாத்தான் எப்படிச் சந்தேகத்தைக் கிளப்பினான்?

7 சுமார் 3,600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்தான் யோபு. அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார், ஏனெனில் அவரைப் பற்றி யெகோவாவே இவ்வாறு சொன்னார்: “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை.” (யோபு 1:8) கடவுளுக்குப் பிரியமானவராக யோபு வாழ்ந்தார்.

8 கடவுளைச் சேவிப்பதில் யோபுவின் உள்நோக்கத்தைப் பற்றி சாத்தான் சந்தேகத்தைக் கிளப்பினான். யெகோவாவிடம் அவன் இப்படிச் சொன்னான்: “நீர் அவனையும் [யோபுவையும்] அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்.”​—⁠யோபு 1:10, 11.

9. சாத்தான் சவால்விட்டபோது யெகோவா என்ன செய்தார், ஏன்?

9 ஆதாயத்திற்காகத்தான் கடவுளுக்கு யோபு சேவை செய்தாரென சாத்தான் விவாதித்தான். அதுமட்டுமல்ல, சோதனை வந்தால் கடவுளைவிட்டு யோபு விலகிவிடுவார் எனவும் அவன் விவாதித்தான். சாத்தான் இப்படிச் சவால்விட்டபோது யெகோவா என்ன செய்தார்? இந்த விஷயத்தில் யோபுவின் உள்நோக்கம் சம்பந்தப்பட்டிருந்ததால், அவரைச் சோதித்துப் பார்க்க சாத்தானை அனுமதித்தார். இதன் மூலம், யோபுவுக்குக் கடவுள் மீது அன்பு இருந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.

யோபு சோதிக்கப்படுகிறார்

10. யோபுவுக்கு என்ன சோதனைகள் வந்தன, அவர் எப்படிப் பிரதிபலித்தார்?

10 அதன் பிறகு சீக்கிரத்திலேயே யோபுவைப் பல வழிகளில் சாத்தான் சோதிக்க ஆரம்பித்தான். யோபுவிடமிருந்த சில மிருகங்கள் திருடப்பட்டன, மற்றவை கொல்லப்பட்டன, அவருடைய வேலைக்காரர்களிலும் பெரும்பாலோர் கொல்லப்பட்டார்கள். இதனால் அவருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அடுத்து, அவருடைய பத்து பிள்ளைகளும் புயல் காற்றடித்து இறந்துபோனார்கள், இதுவும் அவருக்கு ஒரு பேரிடியாக இருந்தது. ஆனால், இப்பேர்ப்பட்ட பயங்கரமான சம்பவங்கள் நடந்தபோதிலும் “யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப் பற்றிக் குறை சொல்லவுமில்லை.”​—⁠யோபு 1:22.

11. (அ) யோபுவைக் குறித்து சாத்தான் இரண்டாவதாக என்ன குற்றம்சாட்டினான், அப்போது யெகோவா என்ன செய்தார்? (ஆ) வேதனைமிக்க வியாதி வந்தபோது யோபு எப்படிப் பிரதிபலித்தார்?

11 என்றாலும், சாத்தான் விடவில்லை. சொத்துசுகங்கள், வேலைக்காரர்கள், பிள்ளைகள் என எல்லாவற்றையும் இழந்ததை யோபு எப்படியோ தாங்கிக்கொண்டாலும், உடம்புக்கென்று ஏதாவது வந்தால் கடவுளைவிட்டு அவர் விலகிவிடுவார் என சாத்தான் வாதாடினான். எனவே, அருவருப்பான, வேதனைமிக்க ஒரு வியாதியை யோபுவுக்கு வருவிக்க அவனை யெகோவா அனுமதித்தார். ஆனால், அப்போதும்கூட யெகோவா மீதுள்ள விசுவாசத்தை யோபு இழக்கவில்லை. மாறாக, “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என உறுதியாகக் கூறினார்.​—⁠யோபு 27:5.

உத்தம வாழ்க்கை வாழ்ந்ததால் யோபு ஆசீர்வதிக்கப்பட்டார்

12. சாத்தானின் குற்றச்சாட்டு பொய் என்பதை யோபு எப்படி நிரூபித்தார்?

12 தன்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் சாத்தானே காரணம் என்பது யோபுவுக்குத் தெரியாது. யெகோவாவின் பேரரசுரிமையைக் குறித்து சாத்தான் விடுத்திருந்த சவாலைப் பற்றி யோபுவுக்கு எதுவும் தெரியாததால், தன் பிரச்சினைகளுக்கு யெகோவாதான் காரணமாக இருப்பாரோ என நினைத்துக் கவலைப்பட்டார். (யோபு 6:4; 16:11-14) என்றாலும், அவர் தொடர்ந்து உத்தமமாக இருந்தார். யோபு சுயநலத்தோடுதான் கடவுளுக்குச் சேவை செய்தாரென்ற சாத்தானின் குற்றச்சாட்டு பொய் என்பதை அவருடைய உத்தம வாழ்க்கை நிரூபித்தது!

13. யெகோவாவுக்கு யோபு உத்தமமாக இருந்ததால் என்ன நடந்தது?

13 யோபு உத்தமமாக இருந்ததால் சாத்தானின் நிந்தைக்கு யெகோவாவால் சரியான பதிலடி கொடுக்க முடிந்தது. ஆம், யோபு உண்மையிலேயே யெகோவாவின் நண்பராக இருந்தார்; உத்தம வாழ்க்கை வாழ்ந்ததால் அவரை யெகோவா ஆசீர்வதித்தார்.—யோபு 42:12-17.

நீங்கள் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்

14, 15. யோபுவின் விஷயத்தில் சாத்தான் விடுத்த சவால் எல்லா மனிதர்களையுமே உட்படுத்துகிறது என நாம் ஏன் சொல்லலாம்?

14 உத்தமத்தன்மை குறித்து சாத்தான் விடுத்த சவால் யோபுவுக்கு எதிராக மட்டுமே விடுக்கப்பட்ட சவால் அல்ல. அதில் நீங்களும்கூட சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள். “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என நீதிமொழிகள் 27:11-⁠ல் யெகோவா சொல்லியிருக்கும் வார்த்தைகள் அதைத் தெளிவுபடுத்துகின்றன. யோபுவின் மரணத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், சாத்தான் தொடர்ந்து கடவுளை நிந்தித்துக் கொண்டும் அவருடைய ஊழியர்களைக் குற்றம்சாட்டிக் கொண்டும் இருக்கிறான் என்பதைக் காட்டுகின்றன. யெகோவாவுக்குப் பிரியமாக நாம் வாழும்போது, சாத்தானின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்க உதவுகிறோம்; இவ்வாறாக, யெகோவாவின் மனதை மகிழ்விக்கிறோம். இதைக் கேட்கும்போதே உங்களுக்கு எப்படியிருக்கிறது? இதற்காக வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும், பிசாசின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுப்பதில் உங்களுக்கும் ஒரு பங்கு இருப்பது எத்தனை அருமையாக இருக்கும், அல்லவா?

15 சாத்தான் என்ன சொன்னான் என்பதைக் கவனியுங்கள்: ‘தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான்.’ (யோபு 2:4) “மனுஷன்” என்று சொல்வதன் மூலம் யோபுவை மட்டும் சாத்தான் குற்றம்சாட்டவில்லை, எல்லா மனிதர்களையுமே அவன் குற்றம் சாட்டினான் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது மிகவும் முக்கியமான ஒரு குறிப்பு. உங்களுடைய உத்தமத்தைக் குறித்தும் சாத்தான் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறான். கஷ்டங்கள் தலைதூக்கும்போது கடவுளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் போக வேண்டுமென்றும் நீதியான பாதையைவிட்டு வழிவிலகிப் போக வேண்டுமென்றும் அவன் விரும்புகிறான். இதற்காக அவன் எப்படியெல்லாம் முயற்சி செய்யலாம்?

16. (அ) கடவுளிடமிருந்து மக்களைப் பிரிக்க சாத்தான் என்ன வழிகளைப் பயன்படுத்துகிறான்? (ஆ) இவ்வழிகளைச் சாத்தான் உங்களுக்கு எதிராக எப்படிப் பயன்படுத்தலாம்?

16 பத்தாம் அதிகாரத்தில் பார்த்தபடி, கடவுளிடமிருந்து மக்களைப் பிரிப்பதற்காக சாத்தான் பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறான். ஒரு பக்கம், ‘எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி அலைகிற கெர்ச்சிக்கும் சிங்கம் போல்’ தாக்குகிறான். (1 பேதுரு 5:8) எனவே, பைபிள் படிப்பதையும், படித்த விஷயங்களைக் கடைப்பிடிப்பதையும் குறித்து உங்கள் நண்பர்களோ உறவினர்களோ மற்றவர்களோ உங்களை எதிர்க்கும்போது சாத்தானின் செல்வாக்கை நீங்கள் உணரலாம். * (யோவான் 15:19, 20) மறு பக்கம், அவன் ‘ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டு’ தொடர்ந்து ஏமாற்றி வருகிறான். (2 கொரிந்தியர் 11:14) கடவுளுக்குப் பிரியமாக வாழ்வதிலிருந்து உங்களைத் திசைதிருப்புவதற்கும் உங்களை வசீகரிப்பதற்கும் அவன் தந்திரமான வழிகளைக் கையாளலாம். உங்களுக்கு மனச்சோர்வையும் உண்டாக்கலாம், ஒருவேளை கடவுளுக்குப் பிரியமாக வாழவே முடியாது என்பது போல் உங்களை நினைக்க வைக்கலாம். (நீதிமொழிகள் 24:10) சாத்தான் “கெர்ச்சிக்கிற சிங்கம்” போல நடந்துகொண்டாலும் சரி, ‘ஒளியின் தூதன்’ போல வேஷம் போட்டுக்கொண்டாலும் சரி, அவனுடைய சவால் அதேதான்; அதாவது, சோதனைகளை அல்லது சபலங்களை எதிர்ப்படும்போது கடவுளுக்குச் சேவை செய்வதை நீங்கள் விட்டுவிடுவீர்கள் என்று சவால் விடுகிறான். யோபுவைப் போல், இந்தச் சவாலுக்கு நீங்கள் எப்படிப் பதிலடி கொடுப்பீர்கள்? கடவுளிடமுள்ள உங்களுடைய உத்தமத்தன்மையை எப்படி நிரூபித்துக் காட்டுவீர்கள்?

யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்

17. யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கான முக்கிய காரணம் என்ன?

17 கடவுளுக்குப் பிரியமாக வாழ்வதன் மூலம் சாத்தானின் சவாலுக்கு நீங்கள் பதிலடி கொடுக்கலாம். எப்படி? “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” என்று பைபிள் பதிலளிக்கிறது. (உபாகமம் 6:5) கடவுள் மீதுள்ள உங்கள் அன்பு வளர வளர, அவர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிற காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற ஆசையும் உங்கள் மனதில் பெருக்கெடுக்கும். “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். முழு இருதயத்தோடு யெகோவாவிடத்தில் அன்புகூரும்போது, “அவருடைய கற்பனைகள் [அதாவது, கட்டளைகள்] பாரமானவைகளல்ல” என்பதை நீங்களே காண்பீர்கள்.—1 யோவான் 5:3.

18, 19. (அ) யெகோவாவின் கட்டளைகள் சில யாவை? (பக்கம் 122-லுள்ள பெட்டியைக் காண்க.) (ஆ) கடவுள் நம்மிடமிருந்து அளவுக்கு மீறி கேட்பதில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?

18 யெகோவாவின் கட்டளைகள் என்னென்ன? சில கட்டளைகள், நாம் தவிர்க்க வேண்டிய காரியங்களைப் பற்றியவை. உதாரணமாக,  “யெகோவா வெறுக்கிறவற்றை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள்” என்ற தலைப்பில் பக்கம் 122-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியைக் கவனியுங்கள். பைபிள் அறவே கண்டிக்கிற விஷயங்கள் அதில் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை மேலோட்டமாகப் பார்த்தால், அதிலுள்ள சில பழக்கவழக்கங்கள் அப்படியொன்றும் மோசமானவையாகத் தெரியாது. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது யெகோவாவின் கட்டளைகளில் புதைந்துள்ள ஞானம் உங்களுக்குத் தென்படும். உங்களுடைய நடத்தையில் மாற்றங்கள் செய்வதென்பது இதுவரை நீங்கள் சந்தித்திராத மாபெரும் ஒரு சவாலாக இருக்கலாம். என்றாலும், கடவுளுக்குப் பிரியமாக வாழ்வது மிகுந்த திருப்தியையும் சந்தோஷத்தையும் அளிக்கும். (ஏசாயா 48:17, 18) உங்களால் அவ்வாறு வாழவும் முடியும். எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லலாம்?

19 நம்மால் செய்ய முடியாத எதையுமே யெகோவா நம்மிடத்தில் கேட்க மாட்டார். (உபாகமம் 30:11-14) நம்முடைய திறமைகளையும் வரம்புகளையும் பற்றி நம்மைவிட அவருக்கு நன்றாகவே தெரியும். (சங்கீதம் 103:14) அதுமட்டுமல்ல, அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்குத் தேவையான பலத்தையும் அவரால் நமக்குக் கொடுக்க முடியும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13) சோதனைகளில் சகித்திருப்பதற்குத் தமது ‘மகத்துவமுள்ள வல்லமையைக்கூட’ யெகோவா உங்களுக்கு அருளுவார். (2 கொரிந்தியர் 4:7) பலவித சோதனைகளை எதிர்ப்பட்ட பவுல் இப்படிச் சொன்னார்: “என்னைப் பலப்படுத்துகிறவராலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலமுண்டு.”​—⁠பிலிப்பியர் 4:13, NW.

கடவுளுக்குப் பிடித்தமான குணங்களை வளர்த்தல்

20. கடவுளுக்குப் பிடித்தமான என்னென்ன குணங்களை நீங்கள் வளர்க்க வேண்டும், இவை ஏன் முக்கியமானவை?

20 கடவுளுக்குப் பிரியமாக வாழும்போது அவர் வெறுக்கிற காரியங்களை வெறுத்தால் மட்டும் போதாது. அவர் விரும்புகிற காரியங்களை விரும்பவும் வேண்டும். (ரோமர் 12:9) உங்களுக்கு இருக்கும் அதேமாதிரியான கருத்துகளும், விருப்பங்களும், ஒழுக்கநெறிகளும் உடைய ஒருவரிடமாக அல்லவா நீங்கள் கவரப்படுவீர்கள்? யெகோவாவும் அவ்வாறே கவரப்படுகிறார். எனவே, யெகோவா விரும்புகிற காரியங்களை விரும்புவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். அவற்றில் சில, சங்கீதம் 15:1-5-⁠ல் விளக்கப்பட்டுள்ளன; யாரைத் தம்முடைய நண்பர்களாகக் கடவுள் கருதுகிறார் என்பதைப் பற்றி நாம் அங்கு வாசிக்கிறோம். “ஆவியின் கனி” என பைபிள் அழைக்கும் குணங்களை யெகோவாவின் நண்பர்கள் வெளிக்காட்டுகிறார்கள். அதில், “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற குணங்கள் அடங்கும்.—கலாத்தியர் 5:22, 23.

21. கடவுளுக்குப் பிடித்தமான குணங்களை வளர்க்க எது உங்களுக்கு உதவும்?

21 பைபிளைத் தவறாமல் வாசிப்பதும், ஆராய்வதும் யெகோவாவுக்குப் பிடித்தமான குணங்களை வளர்க்க உங்களுக்கு உதவும். அதோடு, அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் கற்றுக்கொள்வது அவருடைய சிந்தைக்கு ஏற்றாற்போல் உங்களுடைய சிந்தையை மாற்றியமைப்பதற்கு உதவும். (ஏசாயா 30:20, 21) யெகோவா மீதுள்ள அன்பை எந்தளவு பலப்படுத்துகிறீர்களோ அந்தளவு அவருக்குப் பிரியமாக வாழ வேண்டுமென்ற ஆசை உங்களுக்குள் எழும்பும்.

22. கடவுளுக்குப் பிரியமாக வாழ்வதன் மூலம் நீங்கள் எதைச் சாதிப்பீர்கள்?

22 யெகோவாவுக்குப் பிரியமாக வாழ்வதற்கு முயற்சி அவசியம். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வது பழைய சுபாவத்தைக் களைந்துவிட்டு புதிய சுபாவத்தைப் போட்டுக்கொள்வது போல் உள்ளது என பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:9, 10) என்றாலும், யெகோவாவுடைய கட்டளைகளைக் “கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 19:11) ஆம், கடவுளுக்குப் பிரியமாக வாழ்வது மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்பதை நீங்களும் உணருவீர்கள். அப்படி வாழ்வதன் மூலம் சாத்தானுடைய சவாலுக்குப் பதிலடி கொடுப்பீர்கள், அதோடு யெகோவாவுடைய இருதயத்தையும் மகிழ்விப்பீர்கள்!

^ பாரா. 16 உங்களை எதிர்ப்பவர்கள் சாத்தானுடைய நேரடியான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறார்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் சாத்தான் இப்பிரபஞ்சத்தின் தேவனாக இருக்கிறான், உலகம் முழுவதும் அவனுடைய ஆதிக்கத்திற்குள் இருக்கிறது. (2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19) எனவே, கடவுளுக்குப் பிரியமாக வாழ்வதைப் பெரும்பாலான ஜனங்கள் விரும்ப மாட்டார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். சிலர் கட்டாயம் உங்களை எதிர்ப்பார்கள்.